பனை தொழிலை அவமானபடுத்தும் தமிழக காவல்துறை



     சில நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பனையேறிகள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் "கொரோனா" மற்றும் "கள்ளச்சாராயம்" விழிப்புணர்வு கூட்டம் என்று எழுத்தப்பட்டது தான் பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

     மேற்கூறிய அந்த கிராமம் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள கிராமங்கள் முழுக்க பனையேறிகள் வாழக்கூடிய பகுதிகள். அவர்கள் பல தலைமுறைகளாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பிரதான தொழிலே பனைமரம் ஏறுவதும், பனங்கள் இறக்குவதும் தான். பனங்கள் பருவம் இல்லாத காலங்களில் சிலர் ஈச்சம், தென்னங்கள் இறக்குவர், சிலர் கூலி வேலைகளுக்காக வெளியூர் செல்வர்.

      தமிழக அரசு கள்ளுக்கு தடைவிதித்ததால் கடந்த 30ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அவர்கள் சொல்லன்னா துயரத்தை சந்தித்து வருகின்றனர். நிலைமை இப்படி  இருக்கையில் பனங்கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும்,  எரிசாராயம் வைத்திருந்ததாகவும் பொய் வழக்கு பதிவது தொடர் கதையாக இருக்கிறது. (தமிழகம் முழுமைக்கும் இது தான் நிலை)

      எவ்வித கலப்படமும் இன்றி நியாயமான முறையில் பனங்கள் இறக்கும் அவர்கள் மீது கள்ளசாராயம் காய்ச்சியதாக பொய் வழக்கு பதியும் காவல்துறையினர் இன்று தங்கள் செயலை நியாயப்படுத்தும் விதமாக, நடந்து முடிந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பனையேறிகளிடம் கள்ளச்சாராயம் ஒழிப்பு பற்றி பேசியுள்ளனர். (கள்ளச்சாராயத்திற்கும் பனையேறிகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது..?) மேலும் பனங்கள் இறக்கினால் கடுமையான எதிர்வினை இருக்கும் என வாய்வழியாக மிரட்டியும் சென்றுள்ளனர்.

     தமிழக காவல்துறையினரிடம் கேட்பது ஒன்று தான் பறையேறிகளை நிம்மதியாக தொழில் செய்ய விடுங்கள் அல்லது பனங்கள் இறக்கியதாக ஒரு பனையேறியை கைது செய்வீர்கள் எனில் அவர்கள் மீது பதியப்படும் வழக்கையும் பனங்கள் இறக்கினார்கள் என்றே பதியுங்கள், பிறகு சட்டப்படி நாங்கள் போராடிக்கொள்கிறோம்.

     ஆனால் அவர்கள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பொய் வழக்கு பதிவது அவர்களுக்கு பெரும் உளவியல் தாக்கத்தை கொடுக்கிறது. ஏற்கனவே இது போன்ற பொய் வழக்கு செயல்களால் கடந்த காலங்களில் பல பனை குடும்பங்கள் பனை தொழிலில் இருந்து வெளியேறி கூலிகளாக மாறிவிட்டனர் (மாற்றப்பட்டனர்). அவர்கள் தங்களின் வாழ்வை முன்நகர்த்த வழியின்றி தவிக்கும் நிலைமை, இனியும் பனையேறிகளுக்கு நடந்திட கூடாது.

     * தமிழக அரசு பனங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

     * தமிழக காவல்துறை இயக்குனர் பனங்கள் இறக்கும் பனையேறிகள் மீது கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பதியும் பொய் வழக்குகளை நிறுத்த வேண்டி சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.

மி.கு: கடந்த 10.01.22 அன்று தமிழக காவல் தலைமை இயக்குனரிடம் இருந்து வந்த சுற்றறிக்கையில் "காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், இயற்கை பானமான, பதனீர் இறக்குபவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள், இது சார்ந்த பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும்" என உத்தரவிட்டுருந்தார், அதற்கு அடுத்த நாளே (11.01.22) இந்த "கள்ளச்சாராய விழிப்புணர்வு கூட்டம்" நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பனை சதிஷ்
15.01.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்