அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பகுதி 2


#கானகனின்_கான்
#மேற்கு_தொடர்ச்சி_மலை
#அகத்தியர்மலை
#அதிருமலை
#அகத்தியர்கூடம்

 அடர்ந்த கானகம் - வானில் பறந்த அருவி - காட்டு ஓடைகள் - சவாலான மலையேற்றம் - நீண்ட புல்வெளிக்காடு - - மழைக்காடு - அகத்தியர்கூடம் தங்கும் முகாம்

     அருவியில் குளித்து முடித்து உணவு அருந்தியது உடலுக்கு தெம்பைக் கொடுக்க, அடுத்தடுத்த மலைகளை நாங்கள் விரைவாக கடந்தோம். ஆனாலும் தொடர்ந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் மீண்டும் மூச்சிரைக்க செய்தன.

     நாங்கள் அருவியில் உணவு சாப்பிடும் போதே மணி மதியம் 2-ஐ கடந்திருந்தது. உடன் வந்த வழிகாட்டிகள் சீக்கரம் கிளம்புங்க நாம இருட்டுவதற்குள் முகாமுக்கு போக வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக எங்களின் மலையேற்றக் குழுவில் ஆண், பெண் என பலரும் முதல் முறையாக மலையேற்றத்திற்கு வந்திருந்திருந்தனர். ஆனாலும் அவர்களில் பலர் பொறுமையாகவும், உற்சாகமாகவும் மலையேறிக் கொண்டிருந்தனர்.

     ஒவ்வொரு முறை காட்டு ஓடைகளின் சத்தம் கேட்கும் போதும், மலைப்பாதை கீழிறங்கி மீண்டும் மேடேறிச் ஏறிச்சென்றது. ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து சிறிதும், பெரிதுமான ஏராளமான ஓடைகளை கடக்க வேண்டியிருந்தது. சிறு, சிறு ஓடைகளில் கான்துறையினர் கற்களை கொட்டி நடக்க வழி அமைத்திருந்திருந்தனர். சில ஓடைகளில் பாறைகளின் மீது ஏறியும், சில இடங்களில் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடித்தும் ஓடைகளை கடந்தோம்.
     சாப்பிட்டு முடித்து எங்கும் நிற்காமல் தொடர்ந்து 2மணி நேரமாக மலையேறியதில் உடலில் சோர்வை உணர முடிந்தது. ஆனால் தொலைதூரத்தில் தெரிந்த உயரமான மலையில் இருந்த அருவி, காற்றின் வேகத்தால் தரைக்கு வராமல் மீண்டும் வானினை நோக்கிச் செல்வதை பார்த்ததும் மீண்டும் புத்துணர்வு வந்தவனாய் அங்கிருந்து மேலேறிப் நடந்துக் கொண்டிருந்தேன்.

     ஒரு கட்டத்தில் மீண்டும் நான் தனியாக பயணிக்க தொடங்கி இருந்தேன். மலையேற்றத்தில் யாரிடமும்  பேசாமல் சுற்றியிருக்கும் மலைகளை, காடுகளை நின்று பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற நினைப்பு என்னை குழுவிலிருந்து விலகியே நடக்க வைத்தது. ஆனால் உறுதியாக எனக்கு முன்னரும், பின்னரும் வழிகாட்டிகள் வந்து கொண்டிருப்பது தெரிந்த பின்னே தனித்து பயணிக்க தொடங்கினேன்.

      அருவியில் குளித்து முடித்து அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்த காட்டில் காற்று பலமாக வீசிக்கொண்டே இருந்தது. மீண்டும் மலைப்பாதையில் பழமையான பெரிய மரங்கள் விழுந்து கிடப்பதை பார்த்தேன். சில இடங்களில் விழுந்த மரங்களின் மீது பாசிகள் படிந்து மூடியிருந்தது. பாசி படிந்த அந்த மரத்தினை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது தான் கவனித்தேன் என்னுடைய இரு காலிலும் ஏற்கனவே சில அட்டைகள் ஒட்டி இரத்தம் குடித்துக் கொண்டிருந்தது.
     வீட்டில் இருந்து கிளம்பும் போது மலையேற்றத்தில் அட்டைக்கடியில் இருந்து தப்பிக்க கல்லுப்பை எடுத்து வைத்திருந்தேன். ஆனால் விதுரா, விடுதியில் இருந்து கிளம்பும் போது உப்பு பொட்டலத்தை தவற விட்டுருக்கேன். அதனால் அட்டைகளை பிடுங்கி எடுக்க நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. நீண்ட தூரம் நடப்பதாலும், மலையேற்றத்தில் ஏற்ற, இறக்கங்களில் நடந்ததாலும் வெகு நேரமாக அட்டை கடித்த இடத்தில் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.

      போனாக்காடு கான்துறை சோதனைச்சாவடியில் இருந்து கிளம்பும் போதுதே, உடன் வந்த வழிகாட்டியிடம் அட்டைகளை பற்றி விசாரித்தேன், நாங்கள் உணவருந்திய அருவிக்கு பிறகான காட்டுப்பகுதியில் தான் அட்டைகள் நிறைய இருக்கும் கவனமாக வர வேண்டும் என எச்சரித்திருந்தார்.

     அட்டை கடித்ததிலிருந்து அடிக்கடி கால்களையும், முதுகையும் தொட்டுப்பார்த்து அட்டைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதனால் பயணம் சற்று தாமதமானது. நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த தொலை தூரத்தில் தெரிந்த அந்த பறக்கும் அருவியையும், புல்வெளிக்காடுகளையும் இப்போது ஓரளவு தெளிவாக பார்க்க முடிந்தது.
    புல்வெளிக்காடு ஆரம்பிக்கும் முன்னரே காற்றில் வேகத்தை உணர முடிந்தது. அடுத்தடுத்து வந்த மலைப்பாதையில் மரங்கள் குறைவாகவும், புற்கள் ஒரு ஆள் உயரதிற்கும் இருந்ததை பார்த்த போது நாம் புல்வெளிக்காட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் எனப்புரிந்தது. 

     புல்வெளிக்காடுகளின் ஊடாக நடக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு, அது கண்ணெதிரே நடந்து கொண்டிருந்தது.

     யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவும், புலிகளும் பிற வேட்டை விலங்குகளும் மிகச்சரியாக மறைந்து கொள்ளும் அளவிற்கான கட்டமைப்பும் கொண்டது இந்த புல்வெளிக்காடுகள். குறிப்பாக மழைகாலங்களில் மேகங்களின் இருந்து கிடைக்கும் நீர் துளிகளை சேகரித்து வைக்கும் காட்டின் மிகப்பெரியே நீர் ஆதாரங்கள் இந்த புல்வெளிக்காடுகள். ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டே மெல்ல ஏறிச்செல்லும் போது, எவ்வித சலனமும் இல்லாமல் நிறைய நீரோடைகள் புல்வெளிகளை ஊடறுத்து ஓடிக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

     அந்த புல்வெளிக்காடுகளின் நடுவே தூரத்தில் ஒரு சிறிய கூடாரம் ஒன்றிருந்தது. சரி, நாம் தங்குமிடம் வந்துவிட்டோம் என நினைத்துக்கொண்டே மேலேறி அந்த கூடாராத்தின் அருகே வந்த போது, அவ்விடத்தை கடந்தும் குழுவினர் மேலே தூரத்தில் நடந்து கொண்டிருந்தனர். கூடாரத்தின் அருகே சென்ற போது அது கான்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தங்கும் முகாம் என எழுதியிருந்தது. அம்முகாமில் இருந்து மலைப்பாதை புல்வெளிகள் ஊடாக செங்குத்தாக சென்றது. மழைக்காலம் என்றால் நிச்சயம் அந்த செங்குத்தான பாதையை பயன்படுத்த முடியாது என நினைத்தேன்.
     உடலின் சோர்வும், மூச்சிரைப்பும் ஓய்வை விரும்பியதால், ஒருகட்டத்தில் புல்வெளிக்காட்டு மலைப்பாதையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துவிட்டேன். காற்று சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருந்ததால் புல்வெளியிகளின் ஊடாக வரும் அதன் சத்தம் அதிகமாக இருந்தது. முன்னே செல்லும் குழுவினரை கூப்பிட்டால் கூட கேட்காத அளவிற்கு காற்றின் வேகம் இருந்தது. அதிலும் அந்த புல்வெளிகளின் ஊடே உரசி வரும் காற்றின் சத்தம் காதுகளை ஊசியை போல் துளைத்தது. ஆனாலும் அந்த மரத்தினடியில் அமர்ந்து வெகு நேரம் சுற்றி இருந்த புற்களையும், உயர்ந்த மலைகளையும்  பார்த்துக் கொண்டிருந்தேன்.

     எனக்கு வெகு தூரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த குழுவினர் இப்போது என்னை கடந்து செல்லும் சத்தம் கேட்ட பிறகே எழுந்தேன். மாலை நெருங்கிக் கொண்டிருந்ததால் நானும் அவ்விடமிருந்து விலக மனமில்லாமல் மேற்கொண்டு நடக்கத் தொடங்கினேன். தூரத்தில் இருந்து பார்த்த போது புல்வெளிக்காடு ஒரே நேர் செங்குத்தாக இருந்தது. ஆனால் அருகே செல்லச் செல்ல புல்வெளிக் காடுகளுக்குள் பல ஏற்ற இறக்கங்களும், மலைகளும் இருப்பது தெரிந்தது. எனக்கு பின்னே வந்து கொண்டிருந்த வழிகாட்டி அண்ணனிடம் இன்னும் எவ்வளவு தொலைவு போக வேண்டும் எனக்கேட்ட போது தூரத்தில் இரண்டு, மூன்று மலைகளைக் கடந்துள்ள சோலைக்காட்டை காண்பித்து அங்க போய்விட்டால் தங்குமிடம் தெரியும் தம்பி என்றார்.

     அவர் காண்பித்த சோலைக் காட்டுப்பகுதி வெகு தொலைவில் இருந்தாலும், தங்குமிடத்தை பார்த்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஆங்காங்கே கிடைக்கும் ஓடை நீரை குடித்துக்கொண்டு மேலேறினோம். அவர் என்னிடம் சொல்லி ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்திருப்போம் ஆனாலும் நாங்கள் இன்னமும் புல்வெளிக்காட்டிலேயே தான் இருந்தோம்.

     அகத்தியர் இருப்பது அந்த மலை தான் என தூரத்தில் தெரியும் முன்னர் நாம் குறிப்பிட்ட அந்த பறக்கும் அருவி இருக்கும் மலையை காண்பித்து உடன் வந்த வழிகாட்டி அண்ணா சொல்லியிருந்தார். நீண்ட நேரமாக தூரத்தில் பார்த்த அந்த பறக்கும் அருவியை இப்போது தெளிவாக பார்க்க முடிந்தது. உயரத்தில் இருந்து கொட்டுவதாலும், காற்றின் அதீத வேகத்தாலும் அருவியின் நீர் தரையை வந்தடைய முடியாமல் மீண்டும், மீண்டும் மலைக்கு மேலே தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மேலே உந்தப்படும் அருவியின் நீர் காற்றில் பயணித்து வடக்கு பக்கமாக உள்ள மலைகளின் மீது கச்சானாக (தூரலாக) விழுந்து கொண்டிருந்ததை அடுத்த நாள் தங்குமிடத்தில் இருந்து அகத்தியர் மலைக்கு செல்லும் மலைப்பாதையில் தெளிவாக பார்த்தேன்.

     பெரும் வலிகளோடு ஓரளவு புல்வெளிக்காட்டினை கடந்து மேலேறி வந்து திரும்பி பார்த்த போது நாங்கள் வந்த புல்வெளிக்காட்டினையும், ஆங்காங்கே உள்ள சோலைகளையும் தெளிவாக பார்க்க முடிந்தது. மேலே வந்துவிட்டாலும்  தங்குமிடம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அங்கே இல்லை. நம்மை விரைந்து அழைத்துவர வழிகாட்டிகள் நம்மிடம் சொல்லும் உத்தி என்பதும் புரிந்தது. உண்மையில் அவர்கள் இப்படி சொல்வதில் காரணம் இருக்கத்தான் செய்கிறது. மலையேறிக் கொண்டிருந்தவர்கள் பலரும் முதல் முறையாக காட்டையும், மலையேற்றத்தையும் சந்திக்கின்றனர். எனவே அவர்கள் கேட்கும் போது நீண்ட தூரம் செல்ல வேண்டும் என சொன்னால் நிச்சயம் சோர்வடைந்துவிடுவர் எனத்தெரிந்து தான், நாம் கேட்கும் போதெல்லாம் அருகே வந்துவிட்டோம் இன்னும் கொஞ்ச தூரம் தான் என அவர்கள் சொல்கிறார்கள்.

     இந்த முறையைத் தான் நான் என்னுடைய ஜவ்வாதுமலை பயணங்களில் உடன் வருவோரிடம் நான் சொல்லும் கதை, இன்று அது என்னிடமே மீண்டும் வந்தது.

     போனக்காடு கான்துறையின் சோதனைச்சாவடி உள்ள காட்டுப்பகுதி ஓரளவு நம் தமிழக வெப்பமண்டல காடுகளைப் போலவும், அடுத்து உயரமான அடர்ந்த மரங்களை கொண்ட காடும், அடுத்து புல்வெளிக்காட்டையும் பார்த்தேன். ஆனால் புல்வெளியை தாண்டி வந்த மலைப்பகுதி முழுமையான சோலைக்காட்டுப் பகுதியாக இருந்தது. உண்மையில் அதனை உயிரோட்டமான ஓர் மழைக்காடு என்றே குறிப்பிட வேண்டும்.

     நாங்கள் சென்றுக் கொண்டிருந்த மலையில் மழை ஏதும் பெய்யவில்லை ஆனாலும் மரங்களில் இருந்து மழைப்போல நீர் துளிகள் தரையில் வீழ்ந்து கொண்டிருந்தன. கால் வைக்கும் ஒவ்வொரு இடமும் வழுக்கும் பாறைகளாக இருந்தது. ஏதேனும் ஓர் மரத்தினை பிடித்து மேலே ஏறலாம் என நினைத்தால் இரத்தம் குடிக்கும் அட்டைகள் கைகளில் ஒட்டிக்கொள்கின்றன. பாறைகள், மரங்கள், பாதைகள் என எங்கு பார்ப்பினும் ஈரநிலமாகவே இருந்தது. ஒரு பெரும் உயிர்ச்சூழலைக் கொண்ட மழைக்காட்டில் நடக்கிறோம் என்பதை மட்டும் முழுமையாக உணர்ந்தேன்.
     சோலைக்காட்டினை அடைந்த போது மணி மாலை 4 தான் ஆகியிருந்தது. சோலையின் மரங்கள் நெடும் உயரமாகவும், பரந்து விரிந்த கிளைகளையும் கொண்டிருந்ததால் முழு காட்டையும் தாவர போர்வையால் மூடிவிடுகின்றன. அதனால் வெகு விரைவில் காட்டில் இருள் சூழ்ந்து விடுகிறது. காட்டின் பெரும்பாலான தாவரங்கள் பாசிப்படிந்து கருப்பாக மாறியிருந்ததாலும், காட்டில் இருள் சூழத்தொடங்கியதாலும் மேற்கொண்டு பயணிப்பது சவாலாக இருந்தது. அருகே இருந்த பாறையின் இடுக்குகளில் யானைக் கூட்டத்தின் சமீபத்தைய சாணமும், காற்றில் இருந்த சிறுநீர் வாசமும் பதட்டமடைய வைத்தது. எனக்கு முன்னர் தொலைவில் ஒரு சிலரும், வெகு தூரத்தில் கீழே புல்வெளிக்காட்டில் சிலரும் வந்து கொண்டிருந்தனர். இருள் சூழவிருக்கும் இந்த காட்டில் தனித்திருப்பது ஆபத்தாகலாம் என்பதால் உடல் வலியையும் கடந்து வழிகாட்டிகள் பார்வை தொலைவில் இருக்கும் வரை மேலேறி நடக்கத் தொடங்கினேன்.

     காட்டுப்பாதையில் சில இடங்களில் முகாமிற்கு செல்லும் பாதையை குறிக்க அம்புகுறிகள் இருந்தது. மேலே செல்லச் செல்ல ஓரளவு சமதளமான பாதையும் வந்தது. தூரத்தில் நிறைய பேர் பேசும் சத்தம் கேட்ட போது நாம் நிச்சயம் தங்குமிடத்திற்கு அருகே வந்துவிட்டோம் என நினைத்தேன். மேலே செல்ல, செல்ல காட்டு தாவரங்களின் அடர்த்தி குறைந்து சூரிய வெளிச்சத்தை காண முடிந்தது. காட்டின் இருளும் மெல்ல விலகியது. மனிதர்களின் சத்தம் இப்போது அதிகமாக கேட்டது. தூரத்தில் நிறைய பேர் நின்றிருந்தனர். அருகே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த கற்கால மனிதர்களின் கல்லாயுதங்களை  வழிபட்டு கொண்டிருந்தனர்.

     அது போன்ற பழங்காலத்திய கல்லாயுதங்களை ஜவ்வாதுமலையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். மலைகள் தான் பூர்வகுடிகளின் தாய்நிலம் என்பதை ஒவ்வொரு மலையிலும் காணப்படும் தொல் எச்சங்களை கொண்டே உணர முடியும்.
     அவ்விடத்தில் இருந்து மேற்கொண்டு முன்னேறிச் சென்றபோது தூரத்தில் நீலநிற தகரம் போட்ட கூடாரங்களை காண முடிந்தது. ஒரு வழியாக நீண்ட மலையேற்றத்திற்கு பிறகு தங்குமிடத்தை அடைந்தாகிவிட்டது. எங்கள் குழுவில் சிலர் ஏற்கனவே முகாமை அடைந்திருந்தனர். பலர் இன்னமும் மலையேற்றத்தில் இருந்தனர். எங்களுடன் பயணத்தை தொடங்கிய தோழி ஜெயப்பிரியாவின் அப்பா (50+வயதிருக்கும்) எங்களுக்கு முன்னர் முகாமை அடைந்திருந்தார்.

      அகத்தியர் இருக்கும் மலை இது தான்,  நாளைக்கு அங்கு தான் செல்லவிருக்கிறோம் என்று தூரத்தில் மேகங்கள் மூடிய உயர்ந்த மலையை  எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்த வழிகாட்டி அண்ணா காட்டினார். தங்குமிடம் வந்ததும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கொடுத்திருந்த கூடாரத்தில் மிகுந்த கனமாக இருந்த எங்கள் பயணப் பைகளை இறக்கி வைத்த பின் தங்குமிடத்தில் பணி செய்யும் காணிப்பழங்குடியினர் கொடுத்த சூடான தேனீர் மனதை புத்துணர்வு அடையச்செய்தது.

     சூரிய வெளிச்சம் மறையும் வரை ஏனோ அகத்தியரின் மலையையும், அம்மலையை மோதிச்செல்லும் மேகங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
     குழுவினர் அனைவரும் வந்து சேர இரவு 7 ஆகிவிட்டது. எல்லோரும் வந்த பின்னர் இரவு முகாமில் கொடுத்த உணவை முடித்துக்கொண்டு, வானில் தெளிவாக தெரிந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டு, பனிபடர்ந்த அந்த இருளில் நீண்ட நேரம் நண்பர்களோடு சிரித்து பேசி மகிழ்ந்திருந்தோம்.

     உண்மையில் அந்த காரிருள் அனைவரையும் ஒருங்கிணைத்துவிட்டது. அவ்விருள் புதிதாக பார்த்த எல்லோரையும் நெருங்கிய நண்பர்களைப் போல் உரையாட வைத்தது. அடுத்த நாள் காலை 7மணிக்கு அத்தியரை காணும் மலையேற்றத்தை தொடங்க வேண்டி இருந்தது. ஆனாலும் அன்றைய இரவு நீண்ட நேரம் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

     அனைத்தையும் பேசி சிரித்து, களித்த பின், நள்ளிரவிலேயே எல்லோரும் தூங்கச்சென்றோம்.

அடுத்த நாள் முழுமையாக 12மணி நேர மலையேற்றம், தாமிரபரணி உற்பத்தி ஆகும் மலைப்பகுதி, ஈர நிலம், மூடுபனி போர்த்திய மலைப்பாதை, தொடர் அருவிகள், கயிறை பிடித்து மலையேறியது, அகத்தியரின் தரிசனம் என பெரும் சவாலை கொடுத்த மூன்றாம் நாள் மலையேற்றத்தை அடுத்த பதிவில் விவரிக்கிறேன். காத்திருங்கள்.

பனை சதிஷ்
30.12.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்