அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பாகம் 1


#கானகனின்_கான்
#மேற்கு_தொடர்ச்சி_மலை
#அகத்தியர்மலை
#அதிருமலை
#அகத்தியர்கூடம்

விதுரா - போனக்காடு மலை கிராமம் - கான்துறையின் சோதனைச்சாவடி - மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடு - காட்டு அருவிகள் - மலையேற்றம் - அருவிக்குளியல்

     அகத்தியர் கூடம் செல்ல அனுமதி வாங்கியிருந்தாலும் போனக்காடு மலை கிராமத்தில் உள்ள கான்துறையின் சோதனைச்சாவடியில் நம்மையும், நாம் கொண்டுச் செல்லும் பையையும் முழுவதுமாக பரிசோதித்த பின்னரே காட்டிற்குள் அனுமதிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நெகிழிகள் எடுத்து செல்லக்கூடாது என்பதற்காக இந்த கடுமையாக நடைமுறை என நாம் நினைத்தால் அது உண்மையல்ல. (இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக சொல்கிறேன்)

     திருவனந்தபுரத்தில் இருந்து போனக்காடுக்கு செல்லும் நேர் பேருந்து விதுரா வழியாக தான் போகும். விதுராவில் அதிகாலை 5.30க்கு வரும் அந்த பேருந்திற்காக நாங்கள் அனைவரும் முன்னமே வந்து காத்திருந்தோம். ஏனெனில் அந்த பேருந்தை விட்டால் அடுத்த பேருந்திற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

     எனவே முந்தைய நாள் இரவே மலையேற்றத்திற்கும், அங்குள்ள முகாமில் தங்குவதற்கும் என தேவையான பொருட்களை மட்டும் பைகளில் எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை விடுதியிலேயே வைத்திவிட்டோம். அகத்தியர் கூடத்திற்கு கொண்டு செல்லும் பையில் கூடுமான வரை எடையைக் குறைத்துக் கொண்டால் மலையேறும் போது சிரமமில்லாமல் இருக்கும் என எங்கள் விடுதியின் உரிமையாளர் ஏற்கனவே அறிவுரை சொல்லியிருந்தார்.

     விதுராவிற்கு 20நிமிட தாமதமாக போனக்காடு செல்லும் பேருந்து வந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து வருவதால் ஏற்கனவே பொது மக்கள் நிறைய பேர் அப்பேருந்தில் இருந்தனர். நாங்கள் அவரருக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.

     விதுராவில் இருந்து பேருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் காலை உணவுக்காக பேருந்தை நிறுத்தியிருந்தனர். ஆனால் தம்பி விக்னேஷ் போனக்காடு மலைக் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்தில் எல்லோருக்குமான உணவை முன்கூட்டியே சொல்லியிருந்தான். 15நிமிடங்களில் பேருந்து அங்கிருந்து கிளம்பியது. அடுத்தடுத்த சில கிராமங்களை கடந்ததும் மலைப்பாதையில் பேருந்து பயணிக்க தொடங்கியது.

     மலைப்பாதையில் இருபுறமும் அடர்ந்திருந்த தாவரங்களில் இருந்து வரும் காற்று நம்மை உரசிய போது, கேரளத்தின் ஈர வாசத்தை உணர முடிந்தது. அம்மலையிலும் ஒரு சில இடங்களில் சுற்றுலா விடுதிகளும், ஓரிடத்தில் நீண்ட தொலைவுக்கு கானகத்தை அழித்து கட்டப்பட்டிருந்தது ஒன்றிய கல்வி மையம். அதை கடந்து சென்றதும் வழவந்தோல் என்ற அருவியும் போனக்காடு செல்லும் வழியில் தான் வந்தது.
     பழமையான மலைச்சாலை என்றாலும் பல திருப்பங்களில் வாகனத்தை இலகுவாக வளைத்துக் கொண்டிருந்தார், அனுபவமிக்க அந்த பேருந்தின் ஓட்டுனர்.

     மலைக்கு மேலே பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு பெரும் மரமொன்று சாலையை மறித்து விழுந்து கிடந்தது. ஏற்கனவே அங்கு வந்திருந்த கான் துறையினர் சில வேலையாட்களைக் கொண்டு சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். நாங்களும் பேருந்திலிருந்து இறங்கிச்சென்று அம்மரத்தை அப்புறப்படுத்தி பேருந்து செல்ல வழி செய்தோம்.

     அம்மலைச்சாலை போன்று பல இடங்களில் பல பயணங்களில் முன்பு நான் பார்த்திருந்தாலும், நீண்ட தூரத்திற்கு அமைதியான அடர்ந்த காட்டை ஜன்னல் இறுக்கையில் அமர்ந்து கொண்டு பார்த்தது பயணத்தில் மகிழ்வாக இருந்தது. மேலும் தூரத்தில் மலையடிவாரத்தில் பேப்பார அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் தெரிந்தன. ஆங்காங்கே சில உயரமான மலைகளையும் பார்க்க முடிந்தது. அதில் எந்த மலை நாம் போகவிருக்கும் அகத்தியர் கூடம் மலை என உடன் வந்த நண்பர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

     அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து மரங்கள் அற்ற ஓரளவுக்கு நல்ல வெளிச்சம் இருக்கும் மலைச்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. சில இடங்களில் தேயிலையை போன்றதொரு செடிகளையும் காண முடிந்தது.

     ஒரு வழியாக போனக்காடு மலைகிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்து சேர்ந்த பகுதிக்கு இன்னும் மேலே மலைகளில் சில வீடுகளை பார்க்க முடிந்தது. நாங்கள் போனக்காடில் இறங்கிய பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே தான் உணவகமும் இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதும் காற்றின் குளிரை உணர முடிந்தது. சுற்றியிருக்கும் மலைகளை அவ்வப்போது மழைமேகங்கள் சூழத்தொடங்கின.
     25 ஆண்டுக்கு முன்னர் இப்பகுதியில் பல நூறு ஏக்கரில் போனக்காடு தேயிலைத்தோட்டம் இருந்ததாகவும்,  அதன் உரிமையாளருக்கு ஏற்பட்ட கடன் நெருக்கடியால் இவ்விடம் முழுவதும் இப்போ அரசு கையகப்படுத்திக் கொண்டதாகவும், இங்கு வசித்த பழங்குடி மக்கள் பலர் பட்டம் படித்து வெளி வேலைகளுக்கும், இன்னமும் சில பழங்குடி மக்கள் வெளி வேலைகளுக்கும், சிலர் அகத்தியர் கூடம் மலையேற்ற குழுவினருக்கு வழிகாட்டியாகவும் பணி செய்வதாக அந்த உணவுகத்தின் உரிமையாளர் அக்கா சொல்லியிருந்தார். இதே தகவலை எங்களோடு பேருந்தில் வந்த காணிப்பழங்குடியான தேவசகாயம் வழிக்காட்டி அண்ணாவும் சொல்லியிருந்தார்.

      பலநூறு ஏக்கரில் பயிரப்பட்டிருந்த தேயிலைகள் பராமரிப்பு இல்லாததால் நன்கு வளர்ந்து பெரிய மரமாகவே ஆகிருந்தன. பேருந்தில் வரும் போது காட்டின் இடையில் பார்த்த தேயிலை செடிகள், உண்மையில் காடுமாறி ஆகியிருந்த தேயிலை மரங்களுக்கு இடையில் வளர்ந்தவை.

     போனாக்காடு நிறுத்தத்தில் இருந்த அந்த சிறிய பழமையான உணவகத்தில் அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு மதியத்திற்கான உணவையும் எடுத்துக்கொண்டு 2கி.மீ தொலைவில் உள்ள போனக்காடு கான்துறையின் சோதனைச்சாவடியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். வழிகாட்டி தேவசகாயம் அண்ணாவும் எங்களோடே அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

     சிறிது தூரத்தில் கைவிடப்பட்ட போனாக்காடு தேயிலை தோட்ட தொழிற்சாலையை பார்த்தோம். கட்டிடம் முழுவதுமாக பாழடைந்து, பேய் பங்களா போன்றிரருந்தது. தொழிற்சாலையின் பெரும் பொருட்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன. சில கனமான இரும்புச் சாமான்களை தவிர வேறேதும் இல்லாமல் வெற்று கட்டிடமாக இருந்தது.

     அகத்தியர் கூடத்திற்கு செல்ல முடியாவிட்டாலும் போனாக்காடில் உள்ள சிற்றருவியில் குளிப்பதற்கு அவ்வப்போது பொது மக்கள் இங்கு வருவதுண்டு என வழிகாட்டி அண்ணா அருகே தெரிந்த சிற்றருவியை காண்பித்து சொல்லியிருந்தார்.
     பல தலைமுறைகளுக்கு முன்னர் தேயிலை தோட்ட வேலைகளுக்காக குடியமர்த்தப்பட்ட பழங்குடி மக்கள் தொழிற்சாலை மூடிய பின்னரும் அங்கேயே வசிக்கின்றனர். ஆனாலும் சொற்பமான அளவிலேயே வீடுகளும், மக்களும் அக்கிராமத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. ஆரம்பத் தொடக்க பள்ளி ஒன்றும், தபால் துறை நிலையம் ஒன்றும் அங்கு இயக்கத்தில் இருந்ததை காண முடிந்தது.

     உடன் வந்துக்கொண்டிருந்த வழிகாட்டி அண்ணா சாலையோரம் இருந்த ஒரு மரத்தை காண்பித்து அதன் இலைகளை கொஞ்சம் கையில் கசக்கி முகர்ந்து பாருங்க என்றார். நானும் ஆவலாக சில இலைகளை பறித்து வந்து கையில் வைத்து கசக்கி முகர்ந்த போது ஏற்கனவே நன்கு தெரிந்த வாசம் தான் ஆனால் பெயர் உடனே வரவில்லை என்றேன், கிராம்பு வாசனை வருகிறதா என அவர் கேட்டபோது தான் அது கிராம்பு மரமென்று புரிந்தது.

     விதுராவில் இருந்து போனக்காடிற்கு புதிதாக சாலையும் அரசால் போடப்பட்டுக் கொண்டிருந்தது. அதை பார்த்து ஏற்கனவே இங்க இருக்கிற சாலையையே பயன்படுத்த ஆள் இல்லாத போது புதிய சாலை எதற்கு எனப் புரியவில்லை என்று வழிகாட்டி அண்ணாச் சொல்லி புலம்பினார்.

     அந்த கிராம்பு மரத்தை பார்த்தற்கு முன்னர், மலைச்சாலையை கடந்து சென்றது அருகில் இருக்கும் மலைகளில் இருந்து வரும் பெரும் காட்டு ஓடை அது உண்மையில் பார்க் சிறிய அருவி போன்று இருந்ததால் அவ்விடத்தை சுற்றாலா தளமாக மாற்ற வேண்டி இங்கு புதிய சாலை மேற்கொள்ளப் படலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

     பயணத்தில் வந்த புதிய முகங்கள் இன்று நன்கு பழகிய முகங்களாகி இருந்தன. உணவு முடித்து நடக்கத்தொடங்கியதும் உடன் வந்தோரிடம் கலகலப்பாக பேசிய படியே எந்த சிக்கலும் இல்லாமல் சில மலைத் திருப்பங்களை கடந்து போனக்காடு கான்துறையின் சோதனைச்சாவடியை அனைவரும் வந்தடைந்தோம். என்ன மலையேற்றம் ஈசியா இருக்கே என உடன் வந்துக்கொண்டிருந்த யாரோ ஒரு தங்கை சொன்ன போது அங்கு சிரித்த யாருக்குமே தெரியாது உண்மையான மலையேற்றம் இனி தான் ஆரம்பமாக போகிறது என்பது.

     சோதனைச்சாவடியில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு நெகிழி பைக்கும் 100ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்பதால் பயணப் பையில் தேவையற்ற நெகிழிகளை தனியாக எடுத்து ஏற்கனவே விடுதியில் வைத்துவிட்டோம்.

     ஆனால் எதிர்பார்த்த கண்டிப்பு இல்லாமல் பெயரளவுக்கே பைகளை சோதித்தனர். ஒவ்வொரு 5நபருக்கும் ஒரு வழிகாட்டி என பிரித்தனர். ஒவ்வொரு குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் பயணத்திற்கான அனுமதியை கான் துறை வழங்கியது. அந்த அனுமதியை அடுத்து 16தொலைவில் நாங்கள் தங்கவிருக்கும் அகத்தியர்மலை முகாமில் கொடுக்க வேண்டும், அப்படி நாங்கள் கொடுக்கிற போது அதில் குறிப்பிட்ட அனைவரும் அங்கிருந்தால் தான் உடன் வந்த வழிகாட்டிக்கு அந்த நாளுக்கான ஊதியம், இல்லையேல் பயணச்சீட்டில் குறிப்பிட்ட அனைவரும் வரும் வரை அந்த வழிகாட்டி தான் பொறுப்பு. உண்மையில் வழிகாட்டிகளின் கடினமான வேலையை அடுத்த நாளில் உணர்ந்தேன். அது குறித்து விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிடுகிறேன்.

     கான்துறையின் சோதனைச்சாவடியில் கிடைத்த கம்புகளை அவரவர் தேவைக்கு ஏற்றார் போல் எடுத்துக்கொண்டு மலையேற்றத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் சில கி.மீ க்கு சமமாகவும், சில இடங்களில் குறைவான ஏற்ற இறக்கங்களோடு மலைப்பாதை இருந்தது. அவற்றை கடந்த போது சரி மலையேற்றம் நிச்சயம் பெரிய சிரமமாக இருக்காது என நானும் தப்பு கணக்கு போட்டேன்.

      மலையேற்றம் தொடங்கிய அடுத்த 10 நிமிடங்களில் காட்டு ஓடை ஒன்றைப் பார்த்து மகிழ்வாக இருந்தது. முதலில் பார்த்த சிறிய ஓடையே இன்னும் மகிழ்வாக இருக்கையில் காட்டில் அடுத்தடுத்து தொடர்ந்து பல ஓடைகள் அதில் நிறைய பெரிய ஓடைகளாகவும் இருந்தது. ஒவ்வொரு ஓடையின் அருகே செல்லும் போதும் யானைகளின் சாணக்குவியலை காண முடிந்தது. அதில் முக்கியமாக எந்த ஓடையிலும் அல்லது ஓடையின் பாறைகளிலும் யானைகளின் சாணமோ அல்லது மற்ற விலங்குகளின் சாணமோ ஏதும் இல்லை. காட்டு விலங்குகளின் சாணங்கள் யாவும் ஓடைக்கு 15,  20 அடிக்கு தொலைவிலேயே இருந்தது.

     தங்களுக்கான நீரை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதில் காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது வேலை செய்வது போல் இருந்தது அவற்றின் செயல்.
     மதிய உணவை காலை போனக்காடில் இருந்த அந்த உணவகத்திலே வாங்கிக்கொண்டு கிளம்பியிருந்தோம். நாங்கள் ஒவ்வொரு ஓடையை கடக்கும் போதும் உடன் வரும் வாழிகாட்டியிடம் அண்ணா இங்க சாப்பிடலாமா, இப்ப சாப்பிடலாமா எனக் கேட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால் அவரோ 8கி.மீ தொலைவில் ஒரு பெரிய அருவி இருக்கு அங்கேயே குளிச்சிட்டு சாப்பிடலாம் என சொல்லிவிட்டார்.

      அடுத்தடுத்து வந்த மலைப்பாதைகள் கடும் சவாலாகவே இருந்தது. கால் வலியை விட பசி தான் நம்மை விரைவாக சோர்வடைய செய்தது.  மலையேற்றம் ஆரம்பிக்கும் போது இருந்த புத்துணர்வு அடுத்த சில மணி நேரங்களில் மெல்ல குறைந்து கொண்டே வந்தது. காலை உணவை இங்கேயே நல்லா சாப்பிட்டு போங்க தம்பி போனாக்காடில் பார்த்த கடைக்கார அக்கா சொன்னது ஏன் என இப்போது தான் புரிந்தது.

      காட்டில் பல இடங்களில் உயர்ந்த பழமையான மரங்கள் பாதையின் குறுக்கே விழுந்திருந்தன. காட்டில் தொடர்ந்து வீசும் அதீத காற்று வயதான முதிர்ந்த உயரமான மரங்களை மண்ணில் சாய்த்து விடுகிறது. மரம் விழுந்த இடத்தில் சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால் காட்டில் புதிய தாவரங்கள் விரைவாக முளைவிடுவதை கண்ணெதிரே பார்த்தேன்.

     குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் காட்டின் பல இடங்களில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. காற்றின் இசைக்கேற்ப மரங்களும் ஆடிக்கொண்டிருந்தன. மதிய நேரமாக இருந்தாலும் தாவரப் போர்வையால் மூடப்பட்டிருந்த அந்த காட்டில் சூரிய வெளிச்சம் குறைவாகவே இருந்தது. ஓரிடத்தில் மரத்தின் நிழலை பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றுவிட்டேன். உடன் வந்தவர்களை முன்னே செல்லவிட்டு நெடுநேரம் அங்கேயே நின்று வீசும் காற்றிற்கு ஏற்ப நடனமாடும் மரங்களின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். 

     வெகு தூரத்தில் மரங்கள் அற்ற புல்வெளிக்காடுகளை கொண்ட மலைகளைப் பார்க்க முடிந்தது. அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் மீது ஏறி நின்று பார்த்த போது அம்மலைகள் நன்றாகவே தெரிந்தது. நீண்ட நாள் கனவான புல்வெளிக்காட்டுப் பயணம் இம்முறை நிறைவேறப் போகிறது என்ற குதூகலத்தில் அங்கிருந்து விரைந்து நடக்கத் தொடங்கினேன்.
     நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு பெரும் ஓடையை கடக்க வேண்டியிருந்தது. அப்போது வெகுநேரமாக தான் காட்டில் தனியாக நடந்து கொண்டிருக்கிறேன் எனப்புரிந்தது.  எனக்கு முன்னேயும் பின்னரும் ஆட்கள் யாரையும் காண முடியவில்லை. காட்டில் யாரும் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அம்புகுறிட்டு வைத்திருந்தனர். அந்த அடையாளங்களை பின்பற்றி முன்னர் வழிகாட்டி அண்ணா சொல்லியிருந்த சாப்பிடும் இடமான அந்த பெரிய அருவிக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னர் சென்ற என் குழுவும் ஏற்கனவே சென்ற எங்கள் குழுவினரும் ஓடையில் குளித்துக்கொண்டும், உணவருந்திக் கொண்டும் இருந்தனர்.

     நீண்ட மலையேற்றத்தில் களைத்திருந்த எனக்கு அந்த பெரும் ஓடையை பார்த்த மகிழ்வைக் கொடுக்க துணிகளை களைந்துவிட்டு அருவியில் குளிக்கத் தொடங்கினேன். குளிர் நிறைந்த அந்த காட்டு ஓடை உடலின் சோர்வை நொடிகளில் போக்கி விட்டது. குளிக்க, குளிக்க அங்கேயே இருந்திட வேண்டும் என மனது ஆசைப்பட்டது ஆனால் நாம் இருட்டுவதற்குள் தங்குமிடம் செல்ல வேண்டும் என்று உடன் வந்த வழிகாட்டிகள் ஒவ்வொருவரும் தங்களின் குழுக்களை விரைவாக கிளம்ப சொனன்னார்கள். குளித்து முடித்த பின் கொண்டு வந்த உணவு பொட்டலத்தை அங்கிருந்த ஒரு பாறையின் மீதுக்கொட்டி சாப்பிட்டோம். வாழையிலையை தவிர யாரும் எந்த நெகிழிகளையும் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னே அங்கிருந்து அனைவரும் நகர்ந்தோம்.

     நீண்ட புல்வெளிக்காட்டையும், அடர்ந்த சோலைக்காடுகளையும், புவியீர்ப்பு விசைக்கு எதிராக இருந்த பறக்கும் நீர்விழுச்சியையும் இரண்டாம் நாளின் அடுத்த பதிவில் காண்போம், காத்திருங்கள்.

பனை சதிஷ்
30.12.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்