அகத்திய மலைப்பயணம் - முதல் நாள்

#கானகனின்_கான்
#மேற்கு_தொடர்ச்சி_மலை
#அகத்தியமலை
#அதிருமலை
#அகத்தியர்கூடம்

     சென்னை - திருவனந்தபுரம் - விதுரா - தவயக்கல் அருவி

     காடு, மலை என பயணப்பட தொடங்கிய காலம் முதல் என் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என நினைத்திருந்த மலையேற்றம். 

     தமிழக எல்லைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி, தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை வளமாக்கி, தமிழக கடல் பகுதியிலேயே சென்று சேரும் ஒரே வற்றாத உயிர் ஆறான தாமிரபரணியின் பிறப்பிடமான அகத்திய மலைக்கு சென்ற இப்பயணத்தில் பல்வேறு சவால்களையும், சாகசங்களையும், வலிகளையும் மகிழ்வையும் பெற்றேன். பெருமையாக அனைத்தையும் அசைப்போட முயல்கிறேன்.

     அகத்திய மலை போறதுக்கான பயணத்திட்டம் தயாராகிட்டு நீயும் வரையா மச்சி, என தோழி புவனா கேட்டு இருந்தாள். அப்பயணத்திற்காகவே காத்திருந்த எனக்கு அவள் கேட்டதும் எந்த மறுப்பும் இன்றி உடனே சரி என்றேன்.

     அகத்திய மலைக்கு தமிழகத்தின் பாபநாசம் மலைப்பகுதி வழியே செல்லும் காட்டுப்பாதையை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்த பிறகு தமிழக கான்துறையினர் மூடிவிட்டனர். அதன் பிறகு அவ்வழியில் மலையேற்றத்திற்கு தமிழக கான்துறை யாரையும் அனுமதிப்பதில்லை.

     எனவே அகத்திய மலைக்குச் செல்ல ஒரே வழி கேரளம் தான். கேரளத்தின் போனாக்காடு பேப்பாரா சரணாலயம் வழியாக கேரள கான்துறை அகத்திய மலைக்குச் செல்ல அனுமதியளிக்கிறது. அவ்வழியிலும் மழைக்காலமும், கோடை காலமும் தவிர்த்த ஏனைய மாதங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதி கொடுக்கின்றனர். எப்படி இருந்தாலும் இப்பயணத்திற்கு கேரள கான்துறையிடம் அனுமதி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

     எங்கள் பயணக்குழுவை ஒருங்கிணைப்பு செய்த தம்பி வினேஷ் தான் மூன்று, நான்கு மாத காலமாக மலையேற்றத்திற்கு அனுமதி வாங்க உதவிய ஹேமா என்ற தோழருக்கு தினமும் அழைப்பு கொடுத்து பயணத்திற்கு சில வாரம் முன்னர் கான் துறையின் அனுமதியை உறுதி செய்திருந்தான்.

     சரியாக 28டிசம்பர் முதல் சனவரி 02ஆம் தேதி வரை பயணம் இருக்குமென்பதால் அதற்கான விடுமுறையை அலுவலகத்திலும் உறுதி செய்தாகிவிட்டது. அடுத்ததாக மலையேற்றத்திற்கு உடலை உறுதி செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் இதுவரை நான் பயணித்ததை விடவும் அகத்திய மலையேற்றம் கடும் சவாலாக இருக்கும் என்பதால் உடலை மலையேற்றத்திற்கு தயார் செய்ய வேண்டி இருந்தது.

     பயணத்திற்கு முன்னரான 15நாட்கள், தினமும் மாலையில் 5கி.மீ-க்கும் குறையாமல் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியுமாக இருந்தது ஓரளவு உடலை வலுப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மலையேற்றத்தின் போது நான் மேற்கொண்ட ஓட்டப்பயிற்சியே பெரும் உதவியாக இருந்தது.

     பயணத்திற்கான இரயில் சீட்டும் 28டிசம்பர் மாலை 7.50க்கு என உறுதியானது. எங்கள் பயணக்குழுவில் பலரும் பயணத்திற்கான தேவை என்று நீண்ட பட்டியல் இட்டு அனைத்தையும் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் நீண்ட மலையேற்றம் என்பதால் ஒரு ஜோடி காலணி மட்டுமே புதிதாக வாங்கியிருந்தேன். பயணத்தித்கான தேதி நெருங்கியதும் நிறைய பேர் பயணப்பையை தயார் செய்து புகைப்படங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் நானோ ஒரு நாள் முன்னர் தான் தேவையான துணிகளை, பொருட்களை எடுத்து வைத்தேன்.

     டிசம்பர் 28ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து 6 மணிக்கு எழும்பூருக்கு கிளம்பியிருந்தேன். ஆனால் அன்றைய தினம் தான் நடிகரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் மறைந்திருந்தார். எனவே அம்பத்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தது. ஒரு வழியாக இரயில் தொடங்குவதற்கு சற்று முன்னர் எழும்பூர் இரயில் நிலையம் சென்று சேர்ந்துவிட்டேன்.

     எங்கள் குழுவில் அகத்திய மலைப்பயணத்திற்கு இறுதியாக உறுதி செய்தோர் 33பேர் அதில் பெண்கள் 13பேர். பெரும்பாலானோர் சென்னையில் இருந்தும் சிலர் பெங்களூர் மற்றும் சேலத்தில் இருந்தும் வந்துக்கொண்டிருப்பதாக குழுவில் தகவல் சொல்லியிருந்தனர்.

     இதுவரை நீண்ட இரயில் பயணம் சென்றிடாத எனக்கு அன்றைய இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் இருந்தது. பயணத்தில் வந்த நபர்கள் பலரும் புதிய முகங்கள் என்பதால் அறிமுகப்படுத்திக் கொண்ட பின் மேற்கொண்டு பேச இயலாமல், உடன் பயணத்தோழனாய் எடுத்துச்சென்ற 'தமிழ் ஒரு சூழலியல் மொழி' புத்தகத்தை வாசித்து விட்டு பின்னிரவில் சற்று நேரம் தூங்கினேன்.

     காலையில் எழுகையில் இரயில் ஓரிடத்தில் வெகுநேரமாக நின்றிருந்தது. சன்னலை திறந்து பார்த்த போது, சுற்றிலும் காற்றாலையில் மின்சாரம் செய்யும் காற்றாடிகள் வேகமாக சுழன்றுக்கொண்டிருக்க, தூரத்தில் ஆங்காங்கே சில மலைகள், அம்மலைகளை மோதிக்கொண்டிருக்கும் மேகங்கள், வேகமாக அடிக்கும் காற்று என பார்க்கும் அனைத்தும் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் காற்றின் வேகம் மனதை இதமாக்கியது.
     அந்த இரயில் நிலையத்தில் ஆரல்வாய்மொழி எனும் பெயரை பார்த்ததும் பள்ளிப்பாடப் புத்தகத்தில் காற்றாலையில் உற்பத்தி செய்யும் ஊர் எனப்படித்தது நினைவுக்கு வந்தது.

     நீண்ட காத்திருப்புக்கு பின் இரயில் அங்கிருந்து புறப்பட்டது, நெடுநேரத்திற்கு பிறகு தமிழக எல்லையை கடந்து கேரளத்திற்குள் நுழைந்தது. கேரளா தேசம் என்றால் அதுவரை மூணார் மட்டுமே பார்த்திருந்த எனக்கு இப்பயணத்தில் கேரளத்தின் தென் பகுதியையும், தலைநகரான திருவனந்தபுரத்தையும் பார்க்க முடிந்தது.

     காலை 9.30மணிக்கு திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். மாநிலத் தலைநகரின் முக்கிய இரயில் நிலையம் என்றாலும் நம்முடைய தாம்பரம் இரயில் நிலையம் அளவிற்கே அங்கு கூட்டம் இருந்தது. எல்லோரும் பாதுகாப்பாக இறங்கிய பின் எதிரே பேருந்து நிலையத்தில் இருந்த ஏற்கனவே உடன் வந்த நண்பருக்கு நன்கு தெரிந்த உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டோம். கேரளத்தின் தனிச்சிறப்பான மதிமுகம் (அதிமதுரம் பட்டை) போட்டு காயவைத்த நீரை அவரவர் புட்டிகளில் நிரப்பிக்கொண்டு உணவத்தில் இருந்து வெளியே வந்து விதுரா செல்லும் பேருந்திற்காக காத்திருந்தோம்.

     நான் பார்த்த வரையில் கேரளத்தின் பேருந்துகளில் பெரும்பாலும் கூட்ட நெரிசல் இல்லை. மாணவர்களோ, இளைஞர்களோ எவரும் அப்பேருந்துகளின் படிகளில் தொங்கிக்கொண்டு செல்ல வாய்ப்பே கிடையாது. அனைத்து பேருந்துகளிலும் இரு வழியிலும் கட்டாய கதவு போடப்பட்டு இருந்தது. சிறிது நேர காத்திருப்புக்கு பின் விதுரா செல்லும் பேருந்து வந்தது. எங்கு சென்றாலும் என்னை போன்ற உயரமானவர்கள் அமர பேருந்தின் இருக்கைகள் ஏதுவாத இருப்பதில்லை.

     எல்லா ஊர்களில் இருந்தும் வந்த நண்பர்கள் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றாக சந்தித்து, பின் விதுரா செல்லும் பேருந்தில் ஏறினோம். எங்கள் குழுவில் மொத்தமாக 33பேர் இருந்ததால் விதுரா செல்லும் அப்பேருந்து முழுவதும் நாங்களும், எங்கள் பயணப்பைகளுமாக நிரம்பி இருந்தது.

     கேரளா என்றாலே மலைச்சாலைகளும், பாசிப்படிந்த சாலையோர கட்டிடங்களும், எப்போதும் வீசும் ஈரக்காற்றும் மட்டுமே என நினைத்திருந்த எனக்கு திருவனந்தபுரத்தில் இருந்து விதுரா வரை பார்த்த காட்சிகள் யாவும் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. குளிருக்கு மாறாக ஓரளவு நல்ல வெயில் நிறைந்திருந்தது. மலை கிராமங்களுக்கு பதிலாக பெரும் கட்டிடங்கள் சாலைகளை ஆக்கிரமித்திருந்தன.
      ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பயணித்த பிறகே தூரத்தில் சில மலைகளையும், பச்சையம் நிறைந்த சில இடங்களையும் பார்க்க முடிந்தது. விதுரா நெருங்கும் முன்னரே சாலையோரத்தில் ஏராளமான ஒற்றை ரக மரங்கள் தோப்புகளாக இருந்தன. எங்கள் பேருந்து வேகமாக சென்றுக் கொண்டிருந்ததால் அது என்ன வகை மரமென சரிவர பார்க்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து பல ஏக்கர் கணக்கில் அம்மரங்கள் நீண்ட தூரத்திற்கு இருந்தது. அருகில் இருந்த கேரள வாழ் தமிழரிடம் அம்மரம் குறித்து விசாரித்த போது, அது ரப்பர் மரமெனச் சொன்னார்.

     மேற்குதொடர்ச்சி மலையும் அதனையோட்டிய பகுதிகளும் தேயிலை மற்றும் ரப்பர் மரங்களுக்காக சூறையாடப்படுவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

     நீண்ட பயணத்திற்கு பிறகு 12.30 மணியளவில் விதுரா வந்தடைந்தோம். கேளரத்தின் குளிரான பகுதிகளை மட்டுமே பார்த்த எனக்கு விதுராவின் வெயில் சற்றே வியப்பையும், சோர்வையும் கொடுத்தது. ஓரளவு சற்றே பெரிய நகரமாக விதுரா இருந்தது.

     நாங்கள் ஏற்கனவே தங்கும் விடுதியை முன்பதிவு செய்திருந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி அவரவர் பைகளை தூக்கிக்கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியில் நான்கு பேருக்கு ஒரு அறை என ஒதுக்கிகொடுத்ததும் அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுத்தோம்.

     அகத்திய மலைக்குச்செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து விதுரா வழியாக போனக்காடு சென்று தான் செல்ல முடியும். போனாக்காடு மலை கிராமம் விதுராவில் இருந்து 1மணி நேர பயணத்தொலைவில் இருக்கிறது. ஆனால் அங்கு சில வீடுகளும் 25ஆண்டுக்கு முன்னர் மூடிய போனாக்காடு தேயிலை தொழிற்சாலையை தவிர தங்கும் விடுதிகள் ஏதும் கிடையாது. எனவே மலைப்பயணத்திற்கு முந்தைய நாள் விதுராவில் தான் தங்க வேண்டி இருந்தது. மேலும் அழகிய மலைகிராமமும், மலைச்சுற்றுலா தலமுமான பொன்முடிக்கும் விதுராவில் இருந்து தான் செல்ல முடியும்.
     விதுராவில் இருந்து 2கி.மீ தொலைவில் தவயக்கல் என்ற சிறிய அருவி உள்ளதாகவும், விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு முன்னர் அங்கு செல்லலாம் என தம்பி விக்னேஷ் ஏற்கனவே சொல்லியிருந்தான். அதன் படி எல்லோரும் மாற்றுத்துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு விடுதி அருகில் கிடைத்த தானியில் (ஆட்டோ) ஏறி தவயக்கல் அருவிக்கு சென்றோம்.

     ஆறு எனச்சொல்லும் அளவுக்கான ஓரளவு பெரிய ஓடை தான். ஆற்றின் குறுக்கே இயற்கையாக அமைந்த பாறையின் மீதிருந்து விழும் நீர், சிறு அருவியை போன்றே இருந்தது. சில இடங்களில் ஆழமாகவும், சில இடங்களில் பல ஆண்டுகளாக நீர் கொட்டி, கொட்டி பாறைகளை குடைந்து குகைப்போல ஆக்கியிருந்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும் பயமின்றி குளிப்பதற்கு ஏதுவான இடமாகவே இருந்தது.

     14 மணி நேர இரயில் பயணம், 2.30 மணிநேர பேருந்து பயணம் என நீண்ட பயணச் சோர்வோடு இருந்ததால், ஆற்றின் நீரை பார்த்ததும் குதுகலத்தில் இறங்கி குளிக்கத் தொடங்கிவிட்டோம். உடன் வந்திருந்த பெரும்பாலானர் புதிதாக பழகியிருந்தாலும் ஆண்கள், பெண்கள் என எவ்வித தயக்கமும் இன்றி அனைவரும் ஒன்றாகவே குளித்துக் கொண்டிருந்தோம்.

     ஆற்றில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக குளித்து முடித்த பின் பசியின் தூண்டுதலால் எல்லோரும் அங்கிருந்து கிளம்பினோம். விடுதியில் இருந்து வரும்போது ஆட்டோவில் வந்திருந்தோம் ஆனால் திரும்ப விடுதிக்கு போகும் பாதை தெரிந்ததால் ஆற்றில் இருந்து விடுதிக்கு நடந்தே செல்லலாம் என முடிவு செய்து நானும், சில நண்பர்களும் சுற்றியிருக்கும் இடங்களைப் பார்த்துக்கொண்டே விடுதியை நோக்கி நடந்துக் கொண்டிருந்தோம்.

     ஆற்றங்கரையின் இருபுறமும் ஏராளமான ரப்பர் மரத்தோப்புகள் நிறைந்திருந்தது. விதுரா நகரிலும் நிறைய ரப்பர் பதப்படுத்தும் தொழிற்கூடங்களை காண முடிந்தது. பின்னர் விடுதிக்கு போகிற வழியிலேயே தரமான அசைவ உணவை முடித்துவிட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.
     அடுத்த நாள் விதுராவில் இருந்து போனக்காடுக்கு (அகத்தியமலைக்கு செல்லும் கேரள கான்துறையின் சோதனைச்சாவடி உள்ள இடம்) செல்லும் பேருந்து அதிகாலை 5.30மணிக்கு வந்திவிடும் என்பதால் அனைவரும் விரைவாக தூங்கச்சென்றோம்.

     கால் வைக்கும் இடமெல்லாம் யானைகளின் சாணக்குவியல், திரும்பும் திசையெங்கும் அடர்ந்த காடு, ஒவ்வொரு 10,20 நிமிடத்திற்கும் பார்த்த அருவிகள், ஓடைகள், நீண்ட புல்வெளிக்காடு, தூரத்தில் மேகங்கள் மறைத்த உயர்ந்த மலைகள் என வாழ்வில் மறக்கவே முடியாத பயணம் அனுபவத்தை முழுநாள் மலையேற்றம் குறித்து அடுத்தப் பதிவில் அசைப்போடுகிறேன் காத்திருங்கள்.

பனை சதிஷ்
28, 29/12/2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்