சமண தொன்மங்கள் தேடல் பயணம் 4


சமண கற்படுக்கைகள்
ஜவ்வாது மலை தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலைகள்

     ஜவ்வாது மலை அடிவாரச் சாரலில் சில மாதங்களுக்கு முன் நண்பர்களோடு செல்கையில் வழியில் சமீபத்தில் இருந்த மஞ்சள் நிற அறிவிப்பு பலகையை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி அதை உற்று கவனித்தேன், அதில் சமண கற்படுக்கைகள் என்று எழுதி இருந்ததை குறித்துக்கொண்டு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போது அங்கு சென்று பார்க்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

     நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியான வார இறுதியின் காலை நேரத்தில் வாகனத்தை எடுத்துக் கொண்டு நாம் அன்று சென்ற அதே ஜவ்வாது மலை அடிவார பாதையில் பயணிக்கும் போது அன்று குறிப்பெடுத்த சமண கற்படுக்கைகள் நினைவுக்கு வர வாகனத்தை திருப்பி கொண்டு அந்த இடத்தை நோக்கி செல்லும் போதே மேகங்கள் இருண்டு சிறு மழை துளிகளை கொட்டிக் கொண்டு இருந்தது இடையே வீசிய சாரல் காற்று பயணத்தில் இதமான இன்பத்தைக் கொடுத்தது.

     பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சமண சின்னம் பற்றிய அறிவிப்பு பலகையை பற்றி ஊர் மக்களிடம் கேட்டால் அவர்களுக்கு சரியான விவரம் தெரிவதில்லை, இங்கும் அதே நிலை தான். ஆனாலும் உள்ளூர் வழக்கு மொழியில் விசாரித்துக் கொண்டு அந்த கற்படுகை இருக்கும் மலைக்குன்றுக்கு வந்து சேர்ந்தேன்.

     நெடும் உயரம் இல்லை, முழுமையாக பெரிய பெரிய பாறைகள் மட்டுமே இருந்த சிறிய குன்று தான். வாகனத்தை ஓரம் நிறுத்திவிட்டு விரைவாகவே குன்றின் மேல் ஏறிவந்த பிறகு கற்படுக்கைகளை தேடினேன். தேடுவதில் அதிக சிரமம் இருந்திடவில்லை, குன்றின் கீழ் இருந்து பார்த்தாலே பாறைகள் சில இடங்களில் குகை போன்று இருப்பதை பார்க்கலாம். அதில் ஏதோவொரு குகை போன்ற இடத்தில் தான் நாம் தேடிச்செல்லும் கற்படுக்கைகள் இருக்க வேண்டும் என உறுதிபடுத்திக் கொண்டு முன்னேறி நடந்தேன்.
     குன்றின் இறுதியில் இருந்த பெரும் பாறையின் இடுக்கில் நாம் தேடிவந்த சமண கற்படுக்கைகள் பல படிநிலைகளாக இருப்பதை கண்டேன். ஆச்சரியம் என்னவெனில் எங்கள் பகுதியை சுற்றி இதுவரை நான் பார்த்த சமண கற்படுக்கைகளில் இது தான் வித்தியாசமாக படிநிலைகளில் அமைந்து இருந்தது. கெடுவாய்ப்பாக அங்கிருந்த கற்படுக்கைகளில் இளைஞர்கள் சிலர் தங்கள் காதல் காவியங்களை நவின கல்வெட்டாக செதுக்கி இருந்ததை பார்க்க முடிந்தது. அதனாலே அந்த கற்படுக்கையில் எங்கும் கல்வெட்டு குறிப்புகள் காணயியலவில்லை, இந்த கற்படுக்கையின் ஆண்டும் அதன் மேலாதிக விவரங்களும் நம்மால் சரிவர உறுதிபடுத்த முடியவில்லை, ஒரு வேலை ஆய்வில் நபர்கள் உடன் வந்தால் நிச்சயம் இன்னும் சில தகவல்களை நாம் காணலாம்.
     அந்த சிறிய குன்றின் மேல் இருந்து பார்த்த தூரத்தில் ஜவ்வாதுமலையின் முழு அழகும், நீர் நிரம்பிய வயல் வெளிகளும் கண் கொள்ளாத காட்சிகள் தான்.

     ஏதொ ஒரு நாள் சாலையின் ஓரமாக இருந்த மஞ்சள் நிற அறிவிப்பு பலகையில் நாம் பார்த்த சமண கற்படுக்கைகளை நேரில் தேடிச் சென்று பார்த்தது மனநிறைவான ஒரு தேடல் அனுபவத்தை கொடுத்தது. மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
இடம்:  சேதராம்பட்டு, திருவண்ணாமலை.

வழி: வேலூரில் இருந்து திருண்ணாமலை செல்லும் சலையில் கண்ணமங்கலம் அடுத்து 10கி.மீ தொலைவில் கிழக்கு பக்கமாக சென்றால் சேதராம்பட்டு என்ற கிராமத்தில் இந்த சிறிய மலைக்குன்றை காணலாம்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்