சத்தியமங்கலம் கானுலா - பகுதி 7


எனக்கான நாள் - 7

#SathyamangalamForest #பெரியசாமி #யானை #பங்காளி #விபத்து #மரணம்

     கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சத்தியமங்கலம் காட்டுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு சத்தியமங்கலம் காடுகளில் பழங்குடி குழந்தைகளுக்காக பணி செய்யும் நண்பர் சதிஸ் அழைப்பு கொடுத்திருந்தார்.

     தோழர் குன்றி மலையில் உள்ள நிறைய குழந்தைகள் உங்களை கேட்டதாக சொல்ல சொல்லியிருந்தனர். நீங்கள் வந்து பனையோலையில் பொருட்கள் செய்து கொடுத்ததில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் விரைவில் குழந்தைகள் சார்ந்த நிகழ்விற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார்.

     அவர் அப்படி சொன்னதில் இருந்தே மீண்டும் சத்தியமங்கலம் மலைக்கு செல்லவிருக்கும் நாளுக்காக மனம் ஏங்க  ஆரம்பித்தது.

     சில வாரங்கள் கழித்து தோழரிடம் இருந்து அழைப்பு வந்தது. தோழர் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்கள் கடம்பூர் அடுத்துள்ள உகினியம் மலைகிராமத்தில் இருக்கும் தொடக்க நிலைப்பள்ளியை சீரமைக்க இருக்கிறார்கள், ஒரு வாரம் நடக்கவிருக்கும் அந்நிகழ்விற்கு  நீங்கள் அவசியம் வரவேண்டும் என்றார்.

     மலைக்கு செல்வதற்காகவே காத்திருந்த நான், அவரிடம் நிச்சயம் வந்துவிடுவதாக உறுதியளித்தேன்.

     கடந்த வாரம் நண்பரின் திருணத்திற்காக ஊருக்கு (ஆரணி) வரும் போது மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பனையோலைகளையும் கூடவே கொண்டு வந்திருந்தேன். நண்பரின் திருமணம் முடிந்த அடுத்த நாள் சத்தி கிளம்புவதாக திட்டம்.

     முந்தைய நாள் தோழர் சதிஸ் அழைப்பு கொடுத்து குமாரபாளையத்தில் இருந்து ஐயா தாமரைச்செல்வன் உடன் இணைந்து கொள்வார், அவர் குழந்தைகளுக்காக காகிதமடிப்பு கலையை பயிற்றுவித்து வருவதாக தகவல் சொல்லி வரும் வழியில் அவரையும் உடன் அழைத்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

     சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கினேன். குளிர்காலம் ஓரளவு கடந்திருந்தாலும் அதிகாலையில் குளிர் இன்னும் குறையாமல் இருந்தது. எனக்கோ சனிக்கிழமை அலுவலக விடுப்பு கிடைக்காததால் போகிற வழியிலேயே அங்காங்கே வாகனத்தை நிறுத்தி அலுவலக பணிகளை செய்து கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
     அரூர் தாண்டி செல்கையில் ஏதோ அவசர வேலைக்காக அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. உடனே நெடுஞ்சாலை அருகே இருந்த தென்னந்தோப்பில் வாகனத்தை நிறுத்தினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பணியை செய்ய வேண்டி  இருந்ததுது, இதற்கிடையில் ஐயா தாமரைச்செல்வன் தொடர்புக்கு வந்து கொண்டிருந்தார், அவரிடம் வந்துசேர தாமதமாகவிடும் மேலும் அருகே வருகையில் அழைக்கிறேன் எனச்சொல்லிவிட்டு கூடுமான வரை பணிகளை விரைந்து முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

     இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் குன்றி மலைக்கு செல்லும் போது இதே பாதையில் தான் பயணித்திருந்தேன் அப்போது ஓரளவு குளுமையாக இருந்த நீப்பத்துறை,  தீர்த்தமலையின் தரைக்காடுகளும், ஏற்காடு, கள்வராயன் அடிவார மலைகளும் கோடை தொடங்கும் முன்னமே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது.

      வழியில் பல இடங்களில் குரங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் சாலையோரம் அலைந்து கொண்டிருந்ததை காண முடிந்தது. கோடை உச்சத்தை தொடுகையில் நிலைமை இன்னம் மோசமாகலாம்.

     நெடுஞ்சாலையில் தொடர்ந்து அனல் காற்று வீசிக்கொண்டே இருந்தது. நிறைய இடங்களில் நின்று இளநீர் குடித்து தாகத்தை தணித்துக்கொண்டே வாகனத்தை ஓட்ட முடிந்தது. மதிய உணவு நேரத்தை கடந்தும் வாகனத்தை ஓட்ட வேண்டிருந்தது.

     குமாரபாளையம் வந்த பின் ஐயாவுட உணவு அருந்தலாம் என திட்டமிட்டேன் ஆனால் ஐயா வர தாமதமாகியது. ஐயாவை அழைத்துக்கொண்டு பவானி கூடுதுறையை தாண்டி சென்றுக்கொண்டிருந்தோம். மீண்டும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. வாகனத்தை விரைவுபடுத்தினேன் அத்தாணி சந்திப்பு தாண்டி பவானி ஆற்றங்கரையோரம் இருந்த உணவகத்தில் மதிய உணவை முடித்தோம்.

     கோடையிலும் ஓரளவு நீர் சென்று கொண்டிருந்த பவானி ஆற்றை பார்த்துக்கொண்டே அலுவலக பணியையும் தொடர்ந்தேன்.
      உணவு முடிந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கும் சதிஸ் அழைத்திருந்தார். தோழர் கடம்பூர் தாண்டி உகினியம் வருகையில் உள்ள காட்டுப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் நீங்கள் முடிந்தளவு மாலைக்குள் இங்கு வந்து விடுங்கள் என்றார். அப்போது தான் நேரத்தை கவனித்தேன் மணி மாலை நான்கு ஆகியிருந்தது. அவசர அவசமாக அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

     கடந்த முறை கடம்பூர் மலைப்பாதையில் நிறைய ஓடைகள் சாலையை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. இம்முறை ஒரே ஒரு இடத்தில் மல்லியம்மன் காட்டு கோவில் இருக்கும் பகுதியில் மட்டும் மிகக்குறைவான அளவில் நீர் கசிந்து கொண்டிருந்தது. ஐயாவும், நானும் குளிர்ச்சியும் மூலிகை வாசமும் கொண்ட அந்த ஓடை நீரில் முகம் கழுவிக்கொண்டு பின் நீரை குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கடம்பூர் வந்து சேரும் போது மணி மாலை 5.15 ஆகியிருந்தது.

    கோடை காலமென்பதால் மலையில் இன்னும் சில மணி நேரத்திற்கு வெளிச்சம் இருக்கும் அதற்குள் நாம் போக வேண்டிய மலை கிராமத்திற்கு சென்றுவிடலாம் என சொல்லிக் கொண்டே இருவரும் எலுமிச்சை புதினா போட்ட தேனீரை குடித்துக் கொண்டிருந்தோம்.

     ஐயா சில ஆண்டுக்கு முன் உகினியம் மலைகிராமத்திற்கு சென்றிருந்ததாக சொன்னார். ஆனால் அங்கு செல்லும் வழி ஓரளவு தான் நினைவு இருப்பதாக சொன்னார். நானும் இதுவரை அங்கு சென்றதில்லை, போகிற வழியில் யாரிடமாவது வழி கேட்டு போகலாம் என்றால் தாமதமாகிவிடும். எனவே Google Map செயலியில் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட சில மலை கிராமங்களை Offline Map ஆக Download செய்து வைத்துக்கொண்டு கடம்பூரில் இருந்து Navication போட்டுக்கொண்டு பெரிதாக யாரிடமும் வழிகேட்காமல் உகினியம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம்.
    கடம்பூரில் இருந்து இடபுறமாக நிறைய மலை கிராமங்கள் வழியாகவே செல்ல வேண்டியிருந்தது. நிறைய சிற்றூர்களை கடந்து சென்ற பின் பவளக்குட்டை என்ற ஓரளவு பெரிய மலை கிராமம் (10,20வீடுகள் இருக்கும்) வந்தது. இங்குள்ள தொடக்கப் பள்ளிக்கும் தான் வந்திருப்பதாக ஐயா சொல்லிருந்தாங்க.

       உசப்பாளையம், காணகுந்து என காட்டை ஒட்டியுள்ள கிராமங்களை கடந்தோம் அடுத்து உகினியம் மலைகிராமம் வரையிலும் 10 கி.மீ  தொலைவுக்கு அடர்ந்த வனப்பகுதி தான்.

     கோடையின் உக்கிரத்தை இந்த காட்டிலும் காண முடிந்தது. சுற்றிலும் இருந்த மலைகளில் காட்டு ஓடைகள் வருகிற இடத்தை தவிர்த்துள்ள பெரும்பாலான மரங்கள் ஏற்கனவே காய்ந்து விட்டிருந்தது. மலைப்பாதையும் காய்ந்த இலைச் சருகளால் மூடப்பட்டும், மரங்களில் இருந்து தொடர்ந்து காய்ந்த இலைகள் தரையில் வீழ்ந்து கொண்டும் இருந்தது.

     மலையில் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்தது. கோடை காலத்தில் நீருக்காக வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க காட்டில் பல இடங்களில் வனத்துறையால் குட்டை, குளங்கள் அமைக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.

      காணங்குத்து மலைகிராமத்தை தாண்டி பாங்காட்டிற்குள் சில கி.மீ பயணித்த போது காட்டின் வலது பக்கம் மலையில் இருந்து நீர் வழிந்தோடி வந்து தேங்கும் இயற்கையாக அமைந்த குட்டையை தூர்வாரி அலப்படுத்தி இன்னும் சில மலைகளில் இருந்து மழை நீர் வந்து தேங்கும் விதமாக பெரிய குளம் வெட்டப்பட்டு இருந்தது. மழை அல்லாத காலங்களில் இங்குள்ள பல விலங்குகளின் தாகத்தை தணிக்கும் அளவு இருந்தது அந்த குளம்.

பெரிய சாமி (யானை/ஆன)

     வாகனத்தில் வரும் போதே குளத்தின் எதிர் கரையில் இருண்ட பெரிய உருவங்கள் அசைந்து கொண்டிருப்பதை கண்டு கொண்டேன். ஐயா… ஆனை ஆனை எனப் பதட்டத்தோடு சொல்லிக் கொண்டே வாகனத்தை நிறுத்தினேன்.

     மலைச் சாலையின் வலுபக்கம் இருந்த குளத்திற்கு எதிர் கரையில் இரண்டு இளம் ஆண் யானைகள் குளத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. (இந்த குளத்தை இப்பகுதியில் உள்ள ஊராளி பழங்குடிகள் "காக்கரை" என்றும் யானையை "பெரிய சாமி" என்றுமே அழைக்கின்றனர்).
     எங்களைச் சுற்றிலும் விலங்குகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் வாகனத்தை விட்டு கீழ் இறங்கி யானைகள் எங்களை பார்த்துவிடாத படி மெதுவாக குளக்கரை மேட்டின் அருகே சென்ற போது இன்னுமொரு ஆச்சரியம்.

     வளர்ந்த மூன்று காட்டு மாடுகள் ஒரு குட்டியுடன் தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தன. அடுத்த சில நிமிடங்களில் எதிர் கரையில் இருந்த இரு யானைகளில் ஒன்று மட்டும் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு வெளியேறி தரையில் இருக்கும் புற்களை பீய்த்து அதை தன் காலில் அடித்து சுத்தப்படுத்தி சாப்பிட்டு கொண்டிருக்க மற்றொரு ஆண் யானை எங்களை கண்டு கொண்டது போல் தண்ணிர் குடிப்பதை நிறுத்திவிட்டு இரு முறை எங்களை பார்த்துவிட்டு அதுவும் கரைக்கு திரும்பியது.

     யானையிடம் இருந்து தொலைவில் இருந்தாலும் அதனுடைய பார்வையில் நாங்கள் நேர் எதிர் திசையில் நின்று கொண்டிருந்தோம்.

     ஐயா மேற்கொண்டு இங்கு இருக்க வேண்டாம் உடனே கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பும் முன்னர் காட்டு மாடுகளும் எங்களை பார்த்துவிட்டிருந்தது.

     அடுத்த சில கி.மீ தொலைவு பாங்காட்டில் படபடப்பாக சென்ற பின் மிகக்குறைந்த வீடுகளே கொண்ட உகினியம் மலை கிராமத்தின் பள்ளியை வந்தடைந்தோம். தொடக்கப்பள்ளியாக இருந்தாலும் நன்கு விசாலமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளியில் இருந்து பார்க்கையும் சுற்றிலும் மலைகளும் காடுகளுமே தெரிந்தது.
     வாழ்வில் முதல் முறையாக காட்டில் யானையை பார்த்த மகிழ்வை யாரிடமாவது சொல்லியாக வேண்டுமே என்று மனம் துடித்துக் கொண்டிருந்தது. மலையில் Airtel Sim இணைப்பு இருக்காது என்பதால் கடந்த முறை குன்றி மலைக்கு செல்லும் போதே Jio Sim வாங்கியிருந்தேன். (Jio Network மட்டுமே இங்கு வேலை செய்கிறது).

     உடனடியாக தோழர் சதிஸ்க்கு அழைப்பு கொடுத்து தகவலை சொன்னேன். தோழர் நீங்கள் வந்த பாதையில் தான் நானும் உங்களை கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் உங்களையோ, யானையையோ நான் பார்க்க தவறிவிட்டேன் என வருத்தப்பட்டார்.

     பண்ணாரி அம்மன் கல்லூரியின் இந்த நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி வருண் தான் எங்களை வரவேற்றார். சில நிமிடங்கள் ஓய்வெடுத்த பின் அங்கிருந்த மாணவ மாணவிகளிடம் தம்பி பேச சொல்லியிருந்தார். துறை பேராசிரியரும் வந்து சேர்ந்த பின் மேற்கு தொடர்ச்சி மலை பற்றிய சிறிய உரையாடலை தொடங்கினேன்.

     உரையாடல் தொடங்கி பேசியக்கொண்டிருக்கும் போது துறை ஆசிரியர், சார் மன்னிச்சுக்கோங்க நீங்கள் சொல்றது மிக முக்கியமான செய்திகள் எனவே இங்குள்ள மொத்த மாணவர்களையும் இரவு ஒன்று கூட்டி அங்கு நீங்கள் இத்தரவுகளை பகிர்ந்தால்  அனைத்து மாணவ/மாணவியரும் பலன் அடைவார்கள் எனச்சொன்னதால் அறிமுக உரையாடலை விரைவாக முடித்துக்கொண்டு பேராசிரியருடன் உகினியம் பள்ளியை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
     அப்போது என்னுடைய Mobile Internet On செய்த போது ஊர் நண்பர்களிடம் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் தவறிய அழைப்புகள் வந்து கொண்டிருந்தது.

     அவர்கள் எப்போதும் இது போல் விளையாடுவது தான் என்பதால் பதட்டமடையாமல் Jio வில் இருந்து அழைப்பு கொடுத்த போது புதிய எண் என்பதால் அவர்கள் அழைப்பை துண்டித்தனர். மீண்டும் அழைத்து பேசிய போது அவர்கள் சொன்னது மலையில் இடிவிழுந்து போல் இருந்தது.

     என்னுடைய கடுமையான நாட்களில் எல்லாம் என்னோடு இருந்து என்னை ஆற்றுப்படுத்தியவன் இன்று மாலை வாகன விபத்தில் இறந்துவிட்டான் என்ற பேரதிர்ச்சியான செய்தியை கேட்டதும் மனம் அதனை நம்ப மறுத்தது அவன் இருக்கிறான் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன்.

     அடுத்த அண்ணனுக்கு அழைத்து தகவலை கேட்ட போது ஆம் உண்மை தான் நீ எங்க இருக்க சீக்கரம் கிளம்பிவா என்றான்.

     வெள்ளிக்கிழமை மாலை அவனிடம் பேசும் போது கூட நாளை சத்தியமங்கலம் போறேன்டா கூட வரியா பங்காளி எனக்கேட்ட போது, இல்ல டா வங்கி வேலையா நான் சென்னை போக வேண்டி இருக்கு என்றான்.

     அது தான் அவனோடு கடைசியாக பேசியது. அடுத்த நாள் மாலையில் அவன் விபத்தில் இறந்துவிட்டான் என்ற செய்தி வருகிறது. நான் என்ன செய்வது எனத்தெரியாமல் பதட்டத்தோடு தோழர் சதிஸ்க்கு அழைப்பு கொடுத்து தகவலை சொனேன். அவரும் என்ன ஆருதல் சொல்வது என முடியாமல், மனதை தேற்றினார். சரிங்க தோழர் நீங்க இன்றைய நாள் முழுவதும் வாகனத்தை ஓட்டிட்டு வந்து இருக்கீங்க, உடல் கலைப்பாக இருக்கும் அதும் இல்லாமல் இரவில் பதட்டமா வண்டி ஓட்ட வேண்டி இருக்கும் என இன்று தங்கிவிட்டு காலையில் ஊருக்கு செல்லுங்கள் என்றார்.

     நான் மறுத்துவிட்டு உடனே கிளம்பி செல்ல வேண்டும் தோழர் என அவரை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்த நாட்டு நலப்பணி பேராசிரியரிடமும் தகவலை சொல்விட்டு கிளம்பினேன்.

     இரவு சரியாக 8.30 இருக்கும் உகினியம் பள்ளியில் இருந்து பாங்காடு முடிந்து மலை கிராமங்கள் ஆரம்பிக்கும் இடம் வரை கல்லூரி வாகனத்தில் இரு இளைஞர்களுடன் ஐயா உடன் வந்து வழியனுப்பி வைத்தனர்.

     வாழ்வின் மிகக்கடினமான நேரங்களில் என்னோடு தோல் கொடுத்து நின்றவனை தவறவிட்டுட்டோமே என்ற எண்ணமும், பல முறை என்னோடு காட்டுப்பயணத்தில் உடன் இருந்தவனின் துணை இல்லாமல் இனி எப்படி பயணப்படப் போகிறேன் என்ற கவலையோடுமே இரவு முழுவதும் வாகனத்தை ஓட்டி அதிகாலை 3 மணியளவில் வீடு வந்து சேர்ந்தேன்.


     இனி எப்போதும் உன்னோடு பயணிக்க முடியாத படி, பயணத்தை மொத்தமாய் முடிச்சிட்டேயே டா , பங்காளி… உன்னோடு பயணித்த நாட்கள் என்றேன்றும் நீங்காத நினைவுகள். 

பனை சதிஷ்
26.02.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்