ஜவ்வாதுமலை கானுலா - 15


     சில மாதங்களுக்கு முன்  ஜவ்வாதுமலை காட்டிற்குள் இருக்கும் ஒரு சிற்றருவியை தேடிச் சென்ற போது உடன் வந்து வழிகாட்டிய சிறுவனின் அப்பாவிடம் காட்டுக்குள் இதே போல் வேறு எங்கவெல்லாம் அருவிகள் இருக்கிறது என கேட்டு இருந்தேன்.

     அவர், சில மலை கிராம ஊர்களை சொல்லி அங்கு அடர்ந்த காடுகளுக்குள் உள்ள சில அருவிகளின் இடத்தையும், அங்கு எந்தெந்த ஊர் வழியாக செல்ல வேண்டும் எனவும் அந்த பழங்குடி அண்ணா சொல்லியிருந்தார். அவர் சொல்ல சொல்ல அப்போது அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.

    நீண்ட நாட்களுக்கு பின் ஊருக்கு வந்ததும், அந்த பழங்குடி அண்ணா சொல்லியிருந்த ஜவ்வாதுமலையில் நான் பார்த்திடாத, சென்றிடாத அருவிகள் நினைவுக்கு வர அவ்விடங்களை பட்டியலிட்டு அதில் உஜ்ஜலாறு என்ற சிற்றருவிக்கு செல்வது என முடிவு செய்து கிளம்பினேன்.

     சில வாரங்களாக வாட்டியெடுத்த வெயில் அன்று பெரிதாக இல்லாமல் வானம் மேகங்களால் நிரம்பி இருந்தது. கிளம்புவதற்கு சற்று முன்னர் சில நிமிட தூரல்.

     வெயிலின் தாக்கம் பெரிதாக இன்றி ஜவ்வாதுமலையின் காட்டுப்பாதையில் வாகனத்தை மெல்ல செலுத்தினேன்.

     எப்போதும் செல்லும் மலைப்பாதை தான் என்றாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக காட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு. மலைப்பாதையில் வாகனங்களின் இரைச்சல் இல்லாததால், வண்டுகளின் ரீங்காரத்தையும், பறவைகளின் ஓசையையும் தெளிவாக கேட்க முடிந்தது.

     மலையின் கடைசி கொண்டை ஊசி வளைவான ஐந்தாவது வளைவுவை தாண்டியதும் அருகில் இருக்கும் அடுக்கடுக்கான பாறைகள் உள்ள மலைக்கு செல்ல வேண்டும் என பலமுறை நினைத்திருக்கிறேன்.

     இம்முறையும் அந்த அடுக்கு பாறையுள்ள மலையை பார்த்துக்கொண்டே கடந்து சென்றேன். ஆனால் ஏனோ இன்று அந்த பாறைகள் இருக்கும் மலை உச்சிக்கு சென்றிட வேண்டும் என மனம் விரும்பியது. வானகத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு அந்த அடுக்கு பாறைகள் இருக்கும் மலைக்கு நடக்க தொடங்கினேன்.

     சில அடி தூரம் சென்றதுமே அவ்விடம் செல்ல பாதையே கிடையாது என்று புரிந்தது. ஆகையால் நாம் தான் செல்லும் பாதையை நினைவு வைத்துக் கொண்டு வழி தவறிவிடாமல் திரும்ப வேண்டும் என்பதால் போகிற வழியில் இருந்த செடிகளையும், சிறிய மரக்கிளைகளையும் அடையாளத்திற்கு உடைத்துக்கொண்டே சென்றேன்.

     வாகனத்தை நிறுத்திய இடத்தில் இருந்து 20 நிமிட நடையிலேயே அந்த அடுக்கடுக்கான பாறைகள் உள்ள மலைக்கு வந்து சேர்ந்தேன்.

     அம்மலைக்கு வந்து சேர்ந்ததும் சுற்றிலும் மலை பள்ளத்தாக்குகள் என அழகான காட்சி. தென்கிழக்கில் அத்திமூர் பெரியமலையும், பொத்தரை மலையும், தும்பைக்காட்டின் நீண்ட பள்ளத்தாக்கும் வடமேற்கில் ஜமுனாமரத்தூர் செல்லும் பிரதான மலைப்பாதையும், வாலியம்பாறை என்ற குள்ளர் குகையுள்ள கீழ்சிப்பிலி, மேல்சிப்பிலி மலைகளும் என தொடுவானம் வரை மலையும், காடுமாய் பரவியிருந்தது.

     மலையின் குளிர்ந்த காற்றில் சிறிது நேர ஓய்விற்கு பின் அங்கிருந்து கிளம்பி வந்த வழியின் அடையாளத்தை பின்தொடர்ந்து வாகனம் இருந்த இடத்தை அடைந்த பின் உஜ்ஜளாறு செல்லும் குட்டக்கரை சாலை சந்திப்புக்கு வந்து சேர்ந்தேன்.

      இதுவரையான மலைப்பாதை நான் எப்போதும் சென்ற வழி தான், இனி செல்லப்போகும் குட்டக்கரை மலைப்பாதை இதுவரை சென்றிடாத காட்டுப்பாதை. தொடர்ந்து பயணம் கடுமையாக இருக்க போகிறது என நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை. மேற்கொண்டு பயணத்தை தொடர்வதில் நிறைய சிக்கல் வந்தன.

     இந்த காட்டுச்சாலையில் சரிவர பாதை இல்லாததால் நன்கு வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களால் மட்டுமே கரடுமுரடான இந்த மலைப்பாதையில் செல்ல முடியும். மலைச்சரிவுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட தார் சாலை பெயர்ந்து போய் இருந்ததால் வாகனம் சில இடங்களில் தடுமாறியது.

     சில கி.மீ தொலைவு அடர்ந்த காட்டுப்பாதையில் தனித்து பயணித்ததும், பட்டறவைக்காடு மலைகிராமம் வந்தது. அங்குள்ள பழங்குடிகள் மலையை சமன்படுத்தி கொண்டே அங்காங்கே தங்களது தோட்ட வேலையை செய்து கொண்டிருந்தனர். அம்மலைகிராமம் முடிந்ததும் மீண்டும் காட்டுப்பாதை ஆரம்பித்தது.

      ஆனால் அடுத்தடுத்து வந்த பாதைகளோ மாடுகள் மட்டும் நடந்து செல்லும் அளவுக்கான ஒற்றையடிப் பாதையாக இருந்தது. மேலும் மழையால் மலை மண்ணில் வாகனம் சில இடங்களில் ஊன்றி நின்றது.

     அனைத்தையும் கடந்த பிறகு செங்காடு என்ற மலைகிராமம் வந்தது. மலையின் சரிவுகளில் சில வீடுகளே இருந்தன. அங்குள்ள பழங்குடி மக்களிடம் அருவிக்கு செல்லும் பாதையை உறுதிப்படுத்திய பின் அவர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

     செங்காடு அடுத்த காட்டுப்பாதை ஏற்ற, இறக்கமான மலைத் திருப்பங்களுக்கு பின் குட்டக்கரை மலைகிராமத்தினை அடைந்தேன்.
அக்கிராமத்தில் நுழைந்தும் நம்மை வரவேற்றது குட்டக்கரை தொடக்கப்பள்ளி. பள்ளி விடுமுறை காலம் என்பதால் சில சிறுவர்கள் மட்டும் அங்கிருந்த மாமரத்தில் மாங்காய் பறித்து தின்றுக்கொண்டிருந்தனர்.

     குட்டக்கரை சற்றே பெரிதான மலைகிராமம். ஆனால் பெரும்பாலான வீட்டின் கதவுகள் பூட்டுப்போடப்பட்டு இருந்தது. கிராமத்தின் தெருக்கள் மிகக்குறுகளாகவும், வெறிச்சோடியும் இருந்தன. இவ்வூரை தாண்டி சென்றால் தான் அருவிக்கு செல்ல முடியும். ஆனால் இதுவரை வந்த மலைப்பாதை இந்த ஊரில் இருந்த ஒரு வீட்டின் பின்புற கொல்லையோடு முடிந்துவிட்டது. மேற்கொண்டு பயணிக்க அங்கு சாலையே இல்லை. சுற்றி சுற்றிப் பார்த்தும் எங்கும் வழி இருப்பது போல் தெரியவில்லை.

     நேரம் ஆக ஆக மனம் சோர்வானது. இருப்பினும் இவ்வளவு தூரம் வந்துவிட்ட பின் திரும்பி செல்வதா.? வேண்டாம்… நிச்சயம் ஏதேனும் வழி இருக்கும் என நினைத்து அருகில் இருந்த சிறுமியர்களிடம் வழிகேட்ட போது, நீங்க தானே வண்டியில வரீங்க, நாங்களா வண்டி ஓட்டுறோம் ஏன் எங்ககிட்ட வந்து வழி கேக்குறீங்க என நல்லா வசைபாடிவிட்டு ஓடிவிட்டனர்.

      சிறுமிகளிடம் திட்டுவாங்கி கொண்டே வாகனத்தை திருப்பி தொடக்கப் பள்ளியில் இருந்த அந்த சிறுவர்களிடம் பசிக்கு மாங்காய் வாங்கி தின்று கொண்டே வழியை கேட்டேன்.

      அவர்களோ அண்ணா அந்தா வீடுங்க தெரியுதுல அது பக்கத்துல சந்து இருக்கும் பாருங்க அது வழியா தான் போகனும் என்றனர்.

     சரிடா, எப்படி ஆச்சும் இந்த ஊரை தாண்டி என்னை கூட்டிக்கொண்டு போய்விட வாங்க என்றதும் மூவரும் வாகனத்தில் ஏறிக்கொண்டனர்.

     கிராமத்தில் ஒவ்வொரு வீடும் மற்ற வீட்டில் இருந்து சற்றே உயரமாய் மேல் அடுக்கடுக்காய் இருந்தது. வீடுகளுக்கு இடையே ஒரு ஆள் மட்டுமே செல்லும் அளவே இடைவெளி இருந்தது. அந்த குறுகிய இடைவெளியில் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும். 

      ஒரு சின்ன தவறும் வாகனத்தோடு நம்மையும் கீழே விழ வைத்துவிடும். மிக கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டி இருந்தது. ஒரு இடத்தில் திருப்பம் மிகவும் மேடாக இருந்ததால் வாகனத்தை விட்டு இறங்கி தள்ள வேண்டி இருந்தது.

     மேற்கொண்டு செல்லவே முடியாது என நினைத்த குட்டக்கரையின் குறுகளான பாதையை தாண்டியாயிற்று. இவ்வழியே தான் நாள்தோறும் பழங்குடி மக்கள் தத்தம் அன்றாட வேலைகளுக்கு வாகனத்தில் செல்கின்றனர் என நினைக்கும் போது பெரும் வியப்பாக இருந்தது. உடன் வந்து வழிகாட்டி உதவிய சிறுவர்கள் தமிழ்மாறன், வெற்றி, ப்ரதீஷ் உடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தேன்.

     பல முறை ஜவ்வாதுமலையின் மலை கிராமங்களில் பயணித்த எனக்கு இந்த மலைகிராமத்து பயணம் ஒரு சாகச பயணமாகவே இருந்தது.

     குட்டக்கரையை தாண்டியதும் சிறிது தூரத்திலேயே உஜ்ஜளாறு அருவிக்கு செல்லும் ஓடையும் மலைப்பாதையின் ஊடாகவே வந்தது. அடுத்து சில வீடுகளே இருந்த மலைச்சிற்றூர் வந்தது. அவ்வூரில் உள்ள பழங்குடி மக்கள் மலையை மிக நேர்த்தியாக அடுக்கடுக்காய் செதுக்கி வேளாண்மை செய்து வருவது சிறப்பாக இருந்தது.

      ஜவ்வாதுமலையில் முதல் முறையாக இது போன்ற அடுக்கடுக்கான வேளாண் முறையை காண்கிறேன்.

     ஒருவழியாக குட்டக்கரை மலைகிராமத்தில் இருந்து 30 நிமிட பயணத்தில் உஜ்ஜளாறு அருவிக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது.

       சில நாட்களாக மலையில் பெய்த கோடை மழையால், கோடை காலத்திலும் ஓடையில் நீர் ஓரளவு சென்றுக் கொண்டிருந்தது.

     ஜவ்வாதுமலையில் நான் எப்போதும் பார்த்து வியப்பது இங்குள்ள ஓடைகளில் கடும் மழை காலத்தை தவிர்த்து ஏனைய காலங்களில் ஓடையிர் நீர் மிகத் தெளிவாக ஓடிக்கொண்டிருப்பதை தான்.

     உஜ்ஜளாறு ஓடையின் நீர் மலையின் பாறைகளில் உரசிக்கொண்டே வழிந்தோடி அடிவாரத்தில் இருக்கும் குட்டை போன்ற இடத்தை சென்று சேர்ந்தது. 50 அடிக்கு மேல் பாறைகளின் ஓரமாக மலையில் கீழ் இறங்கினால் ஓடையின் நீர் வந்து சேரும் குட்டையை அடையலாம்.

     கடுமையான பயணத்திற்கு பின் மலையில் இது வரையில் பார்த்திடாத இடத்திற்கு வந்து ஒடையில் இறங்கி பாறையில் சாய்ந்து கொண்டே இளைப்பாறினேன்.

     குட்டக்கரையில் இருந்த சிறுவர்கள் கொடுத்து அனுப்பிய மாங்காய் தான் மதிய உணவாக இருந்தது. 

     உஜ்ஜளாறுக்கு வரும் வழியில் பழங்குடி அண்ணா ஒருத்தங்க, உஜ்ஜளாறில் இருந்து மூட்நாட்டூர் போகிற மலைப்பாதை நல்ல தார் சாலை தான் எனவே அந்த பக்கமே போய்டுங்க தம்பி என்றார். எனவே மீண்டும் குட்டக்கரை வழியாக செல்ல வேண்டாம் வடக்கேயுள்ள மூட்நாட்டூர் மலைகிராமம் வழியே அமிர்தி சென்று பின் அங்கிருந்து வீட்டிற்கு செல்வது முடிவு செய்து கிளம்பினேன்.

      மூட்நாட்டூர் நோக்கி மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது ஓய்வுக்காக இருள் அடர்ந்த அந்த காட்டுக்குள் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றிலும் இருந்து வந்த பறவைகளின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்த போது. நீண்ட இடைவெளிக்கு பின் கறுத்த தலையுடன் வெள்ளை போர்வையை போர்த்தி அரசர்களின் நீண்ட உறைவாலை கொண்டது போன்றதொரு தோற்றத்தை கொண்ட வேதிவால்/அரசவால் எனப்படும் குருவியை கண்டேன்.

     2021ல் ஒரு முறை அமிர்தி வழியாக ஜமுனாமரத்தூர் சென்ற போது மண்டப்பாறை காட்டுப்பாதையில் முதல் முறை இந்த குருவியை பார்த்திருந்தேன். அதன் பின் இந்தாண்டு தொடக்கத்தில் ஜமுனாமரத்தூரின் பீமன் அருவியுள்ள காட்டுப்பகுதியில் பார்த்திருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இப்பறவையை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில நொடிகளில் அடர்ந்த மரங்களுக்குள் அது மறைந்து போனது.

     உஜ்ஜளாற்றில் இருந்து 10கி.மீ பயண தூரத்தில் உள்ள மூட்நாட்டூர் மலைகிராமத்திற்கு வந்த பின் அங்கிருந்து நம்மியம்பட்டு மலைகிராமத்தை அடுத்து அமிர்தி செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகேயிருந்த பள்ளத்தாக்கில் தெரியும் ஆவாரன்குடிசை கிராமத்தையும், எதிர்மலையிலுள்ள முருகமோந்தை மலைகிராமத்தையும் பார்த்துக்கொண்டே இன்றைய பயணத்தை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன்.

     தேடலுக்கும், பயணத்திற்கும் முடிவு ஏது…  இயற்கை மனம் வைத்தால் ஜவ்வாதுமலையில் நான் பார்த்திட அடுத்த இயற்கையின் கொடையை விரைவில் காண்போம்.

பனை சதிஷ்
21.05.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்