பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்


மல்லசத்திரம் கற்திட்டைகள்

     சில ஆண்டுக்கு முன் ஜவ்வாதுமலையில் உள்ள பெருங்கற்கால கற்படுகைகளுக்கு சென்ற பயணப்பதிவை பார்த்த நண்பர் ஒருவர் கிருஷ்ணகிரி அருகே மல்லசத்திரம் என்ற ஊரிலுள்ள மலையிலும் இது போன்றே நிறைய பெருங்கற்காலச் சின்னங்கள் இருப்பதாக சொல்லியிருந்தார்.

     அப்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் மூன்றாண்டுகளுக்கு பிறகு தான் அவ்விடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

     ஓசூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் இடது புறமாக மல்லசத்திரம் என்ற பெயர் பலகை பார்த்தவுடன் நண்பர் சொல்லியிருந்த கற்திட்டைகள் நினைவுக்கு வந்தது. நிச்சயம் இன்று பார்த்துவிட வேண்டும் என அவ்வூருக்கு வாகனத்தை திருப்பினேன்.

      அவ்வூருக்கு போகிற வழிநெடுக விவசாயம் செழுமையாக இருந்தது. ஆடி மாதத்தின் வேகமான காற்றை கிராமங்களின் ஊடே பயணிக்கையில் உணர முடிந்தது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கி.மீ தொலைவுகளில் மல்லசத்திரம் ஊர் வந்துவிட்டது.

     ஊரை நெருங்கும் முன்னமே வலதுபுற குன்றின் மீது ஒரு கற்திட்டை இருப்பதை காண முடிந்தது. நாம் செல்ல வேண்டியது நிச்சயம் இந்த குன்றாக தான் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள ஊரில் இருந்த அண்ணா ஒருவரிடம் விசாரித்த போது அந்த மலை தான் என்பதையும், அங்கு செல்ல வழியையும் சொல்லியிருந்தார்.

    கண்ணெட்டும் தொலைவில் இருந்த ஆலமரத்தை காண்பித்து அதனருகே வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஒற்றையடிப்பாதையாக மலையேர வேண்டும் என சொல்லியிருந்தார்.

      அவர் அடையாளம் சொன்ன ஆலமரத்தடியில் வாகனத்தை நிறுத்தியதும் எதிரே வீட்டில் இருந்து இரு சிறுமியர் வெளியே வந்தனர் 4 அல்லது 5 வயதே இருக்கும் அவர்களிடம் மலைக்கு எப்படிமா போறதுன்னு வழி கேட்டதும் வாங்க கூட்டிட்டு போறேன்னு ஒற்றையடிப்பாதை ஆரம்பிக்கும் இடம் வரை வந்து வழிகாண்பித்தாள்.
     உடன் இருந்த இன்னொரு சிறுமி என் பையில் இருக்கும் பனையோலையை பிடித்து இழுத்தாள். நானும் உடனே ஓலையை எடுத்து அவர்களுக்கு பனையோலையில் ரோஜா பூ வை செய்து கொடுத்ததும் அதனை வாங்கிக்கொண்டு சிரித்த முகத்தோடு வீட்டில் இருந்த அவங்க அம்மாவை வெளியில் கூட்டி வந்துவிட்டாங்க.

     அந்த அக்காவிடம் சரியான வழியை கேட்டதும், சிறுமி காட்டிய பாதையில் எங்கும் திரும்பாமல் நேராக செல்ல வேண்டும் என்றும், பாதி வழியில் ஆலமரம் வரும் அதற்கு வலது பக்கமாக மலையை ஏற வேண்டும் எனவும் சொல்லியிருந்தாங்க. நானும் அச்சிறிமிகளுக்கு கையசைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.

     சில நாட்களாக பெய்த மழையில் காட்டின் தரை எங்கும் மரவட்டைகள் கூட்டம் கூட்டமாக இருந்தன. அடிக்கடி பறவைகளின் கூக்குரலை கேட்க முடிந்த ஆனால் பறவைகளை பார்க்க முடியவில்லை. மழை பெய்திருந்தும் உள்காட்டில் இன்னமும் சில இடங்களில் காட்டின் தரை ஈரமாகாமல் இருந்தது.

     காட்டில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருந்தது. பெரிதான மலையேற்றம் ஏதும் இல்லை, நிறைய இடங்களில் ஒற்றையடிப்பாதை கற்களால் நிரம்பி இருந்தது. 20 அல்லது 30நிமிட நடையிலேயே அந்த அக்கா சொல்லியிருந்த அடையாளம் வந்துவிட்டது. வலப்புறமும் ஏற்கனவே மக்கள் சென்ற தடம் இருந்தது. எனவே வலப்பக்கம் தான் செல்ல வேண்டும் என்பதை உறுதிபடுத்திக்கொண்டு நடக்கத் தொடங்கிய சில அடிதூரத்திலேயே எதிரே சாய்வான மலையளவு பாறை இருந்தது. முழுவதும் பார்த்த போது அந்த மலையே பெரிய பாறையாகத்தான் இருந்தது.
     கற்திட்டைகள் அமைக்க ஏதுவான மலையமைப்பு. பாமீது ஏறத்தொடங்கினேன். ஓரளவு மூச்சிறைக்ககூடிய ஏற்றம் தான் என்றாலும் எளிதாக மேலேறிவர முடிந்தது.

     மலையின் பாதி பாறையை கடந்ததும், அங்கிருக்கும் கற்திட்டைகள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. அதை பார்த்ததும் வேகமாக மேலே வந்து பார்த்ததும் சுற்றிலும் கற்திட்டைகளாகவே இருந்தது.

     நான் ஜவ்வாதுமலையில் பார்த்த கற்பதுகைகள் போல் அல்லாமல் இங்கிருக்கும் சின்னங்கள் பெரிதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

     நிறைய கற்திட்டைகள் பாறைகளை சரியான அளவில் வெட்டி செதுக்கி வைத்து அடுக்கியது போல் இருந்தது. சிலது ஏற்கனவே சிதைந்தும் இருந்தன. அங்கிருந்த ஒரு கற்திட்டையின் நிழலில் பையை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்திருந்தேன்.

     அங்கு வீசிய குளிர்ந்த காற்றில் தூக்கமே வந்தது. சிறிது நேர ஓய்விற்கு பின் அங்குள்ளவற்றை ஆணப்படுத்த தொடங்கினேன்.

     ஒவ்வொரு கற்திட்டையும் நீளமான பெரிய பெரிய கற்களை செதுக்கு அடுக்கி வைத்தாற் போல் இருந்தது. சிலவற்றில் சரியாக நடுமையத்தில் வட்ட அளவில் ஓட்டை இருந்தது. சிலவற்றில் சில உருவங்கள் வரையப்பட்டு இருந்தன.
     குன்றின் மையத்தில் வட்ட அளவில் கற்களை உயரமாக அடுக்கப்பட்டு நடுவே ஒரு கூடாரம் இருந்தது. அது மற்ற கூடாரத்தில் இருந்து சற்றே வித்தியாசமாகவும் இருந்தது. இதே குன்றின் எதிர் புறத்தில் மேலும் சில கற்திட்டைகள் இருந்தன.

     எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியப்பின் மீண்டும் வந்த பாறை வழியே இறங்கி அந்த அடிவார வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வருகையில் விரைவாக வந்திருந்தேன் அதிகபட்சம் 15 நிமிடங்களிலேயே வந்திருப்பேன். நான் வரும் போது மேலே கிடைத்த மயில் இறகை வைத்திருப்பதை பார்த்த சிறுமியர் வேகமாக என்னருகில் ஓடிவந்து மயில் இறகை வாங்கிக்கொண்டு பெரிய புன்னகையோடு வழியனுப்பினர்.
     மல்லசத்திரத்தில் இருக்கும் இந்த கற்திட்டைகள் பெருங்கற்கால காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும்,  2500ஆண்டுகள் அதன் பழமை இருக்கலாம் எனவும் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் இந்த பழமையான சின்னங்களை அரசு முறையாக பராமரிக்க வேண்டும்.

பனைசதிஷ்
29.07.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3