ஒக்கேனக்கல் காட்டு பயணம்


ஒகேனக்கல் பயணக் கட்டுரை

"அடர்ந்த காட்டில் யாருமற்ற ஏகாந்தத்தில் மழையோடு நனைந்து கொண்டே பயணிப்பது போன்றதொரு இனிமை வேறெங்கும் கிடைத்திடாது"

       ஒகேனக்கல் அருவிக்கு செல்ல வேண்டும் என நீண்ட  நாட்களாக நினைவில் இருந்த பயணம் இம்முறை நிறைவேறியது.

     கடந்த முறை ஓசூர் வந்த போதே திட்டமிட்ட பயணம் ஆனால் அப்போது பெய்திருந்த கடும் மழையால் ஒகேனக்கலுக்கு செல்ல முடியாமல் போனது. இம்முறை மழை வந்தாலும் பரவாயில்லை நிச்சயம் பயணத்தை தொடர வேண்டும் என முடிவெடுத்தே கிளம்பினேன். 

     ஓசூரிலிருந்து பயணத்தை தொடங்கிய போது ஓரளவு நல்ல வெயில்நிறைந்திருந்தது ஆனால் தேன்கனிக்கோட்டையை அடைந்த போது வானம் கருமேகங்களால் சூழத் தொடங்கியது.

     அடுத்த பயணத் திட்டத்தில்  வைத்திருக்கும் பஞ்சபள்ளி அணை, பெட்டமுகிலாம் செல்லும் பாதை இடது பக்கமாக திரும்பியது. வீட்டிலும் பெட்டமுகிலாம் சென்று விட்டு வருகிறேன் என்று தான் சொல்லியிருந்தேன். ஆனால் நான் ஒகேனக்கல் செல்வது வீட்டில் தெரியாது.

      தமிழ்நாட்டில் யானை பெருமளவில் கூட்டமாக வலசை செல்லும் காட்டுப்பகுதி என்பதால் கவனத்தோடே பயணித்தேன். தேன்கனிக்கோட்டையை தாண்டியதும் சுற்றிலும் மலைகள், முகடுகள் என யானைகள் வலசை செல்லும் பகுதி என்பதை நினைவுப்படுத்தின. பல முறை செய்திகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக கடக்கும் காட்சிகள் யாவும் தேன்கனிக்கோட்டையை ஒட்டியுள்ள இந்த மலைகளின் வழியாகவே இருந்திருக்கும்.

காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயம்

     தேன்கனிக்கோட்டையை தாண்டியதும் அடுத்த சில கி.மீ தொலைவுகளில் காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயம் தொடங்கிவிடுகிறது. முதல் முறையாக இச்சரணாலயத்தின் ஊடாக  பயணிக்கிறேன். கோடை முடிந்து பின்னர் வரும் மழைகாலத்தினை எதிர் நோக்கிக் கொண்டிருந்தன இக்காட்டின் தாவரக் கூட்டம்.

     அடர் வனத்திற்கே உரிய ஈரக்காற்று நம்மை வருடிக்கொண்டே இருந்தது. அஞ்சட்டி என்ற மலைகிராமத்தினை அடையும் முன்னர் வனத்தில் யானைகளும், பிற காட்டு விலங்குகளும் நீர் அருந்த காவேரியின் கிளை ஓடை ஒன்றின் ஓரமாக சிறிய அளவில் குட்டைகள் வெட்டப்பட்டு இருந்தன. சமீபத்திய மழையால் அக்குட்டைகளில் ஓரளவு நீர் நிரம்பியிருந்தது.

     ஈரமான காற்று சட்டென முடிந்து சற்று வெதுவெதுப்பான காற்று வீசியதுமே அஞ்சட்டி கிராமத்திற்கு அருகில் வந்துவிட்டோம் என உணர முடிந்தது. பல மலைகிராமங்களுக்கு செல்ல அஞ்சட்டி தான் பிரதான பகுதி. மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் கர்நாடக மாநில எல்லைப்புற காடுகளை கடந்துள்ள மலைகிராமத்திற்கும், தெற்கில் ஒகேனக்கல் செல்லவும் அஞ்சட்டி தான் வழி.

     ஓரளவு வீடுகளும் அமைதியான சில தெருக்களும் கொண்ட அஞ்சட்டியில் சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து விவசாய வேலைகளுக்கு செல்வோர் எதிர்வரும் பேருந்துக்காக காத்திருந்தனர். அங்கு சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.

     அஞ்சட்டியில் இருந்து காட்டுப்பாதையில் தெற்கே ஒக்கேனக்கல் நோக்கி பயணித்த போது அடுத்தடுத்து சில மலை கிராமங்களும் இறுதியாக நாட்டறம் பாளையம் என்ற மலைகிராமமும் வந்தது. சுற்றிலும் அடர்ந்த காடுகள் உயர்ந்த மலைகளுக்குள் இக்கிராமம் இருந்தது. 

     அங்கிருந்த ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்த போது நாட்டறம்பாளையத்தில் இருந்து 30,35 கி.மீ காட்டுப்பாதையாக போனால் அடிவாரப்பகுதியான பென்னகரத்தை அடையலாம் என்றார்.

     அவ்வழி முற்றிலும் அடர்ந்த வனப்பகுதியும், சாலை வசதியும் சரிவர இல்லாததால் அவ்வழியே செல்வது கடினம் என உணரமுடிந்தது. மேலும் அப்பகுதி காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதி.

     நாட்டறம் பாளையத்தை கடந்ததும் மீண்டும் காட்டுப்பாதையும், மலையில் ஏற்ற இறக்கமும் ஆரம்பமானது. அருகே நீண்ட பள்ளத்தாக்குகளையும், உயர்ந்த மலைகளையும் காண முடிந்தது. எந்த நேரமும் யானையோ, பிற காட்டு விலங்கோ வந்துவிடும் என்ற அச்சவுணர்வோடே பயணமானேன்.

     நாட்டறம் பாளையம் வனப்பகுதியை கடந்த பின் வானம் சட்டேன இருள ஆரம்பித்தது. சில நிமிடங்களில் மழையும் தொடங்கியது. அடர்ந்த வனப்பகுதியில் யாருமற்ற ஏகாந்தத்தில் மழையோடு நனைந்து கொண்டே பயணிப்பது தான் எத்தனை இனிமையானது.

     ஒரு மலைப்பாதையின் வளைவில் இருந்து பள்ளத்தாக்கை பார்க்கும் போது தூரத்தில் எதோ மினுமினுப்பது போல் இருந்தது.

     ஆம், அவள் தான் நம் பொன்னி நதி தான். வெகு தூரத்தில் இருந்து பார்த்த போது காவேரி ஆறு முழுவதும் மலையின் மேலே உள்ளது போன்ற உணர்வு.

     மலையில் இருந்து இறங்கும் போது தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டு வனப் பகுதியையும், தூரத்தில் காவேரி ஆறு தமிழக வனத்திற்குள் நுழைந்து ஓடி வருவதையும் காண முடிந்தது. பிலிகுண்டுவை கடந்த பிறகான பயணம் ஒகேனேக்கல் வந்து சேரும் வரை காவேரி ஆற்றின் ஊடாகவே இருந்தது.

     மலை, காடுகளுக்கு நடுவே அமைதியாக வரும் காவேரியின் அழகை வார்த்தைகளில் வர்ணனை செய்யவே முடியாது. ஆற்றின் கரையோரத்தில் அங்காங்கே 'ஆற்றில் முதலைகள் இருக்கிறது நீரில் இறங்க வேண்டாம்' என்ற எச்சரிக்கை பதாகையும் காண முடிந்தது.

     ஓர் இடத்தில் ஆற்றின் இரு கரையும் நன்றாக தெரிந்ததால், அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு காவேரியின் அழகை ரசித்துக்கொண்டே இருந்தேன். காட்டில் தனிமையில் இருப்பதாலும்,  முதலைகள் எச்சரிக்கை என்ற பதாகையை பார்த்ததாலும் ஏற்பட்ட லேசான அச்சவுணர்வால் அவ்விடத்தில் அதிக நேரம் செலவழிக்காமல் விரைவாக கிளம்பினேன்.

     காட்டுப்பாதையின் வலது பக்கம் பார்த்த போது காவேரி நம்முடனே வந்து கொண்டிருந்தாள்.

     இறுதியாக ஒக்கேனக்கலுக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. வார நாள் என்பதால் அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்தது.

     ஒக்கேனக்கல் வந்து சேர்ந்ததும், வானத்தை கருமேகங்கள் சூழ தொடங்கியிருந்தது. நிச்சயம் மாலையில் மழை இருக்கும் என்பதால் விரைவாக பார்த்துவிட்டு சென்றிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

     நான் பெரிதும் எதிர்பார்த்து வந்த எண்ணெய் குளியிலுக்கு முதலில் தயாரானேன். அங்கு உள்ளே சென்றதும் மீன் உணவு சமைத்து தர, படகு சவாரிக்கு செல்ல, எண்ணெய் குளியிலுக்கு என அருவியை காண வரும் அனைவரையும் அங்கிருப்போர் வருசையாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.

     எண்ணெய் குளியிலுக்கு தேவையான எண்ணெயை நாம் தான் வாங்கி செல்ல வேண்டும். ஏற்கனவே எண்ணெய் குளியில் முடித்து வந்த ஒரு அண்ணாவிடம் விசாரித்த போது அவர் எப்போதும் செல்லும் நபரிடம் என்னை கை காட்டி விட நானும் எண்ணெயை வாங்கிக்கொண்டு அவரிடம் சென்றேன்.

     ஆற்றின் கரையோரம் இருக்கும் பாறையின் மீது நம்மை படுக்க வைத்து உடலில் எண்ணெய் ஊற்றி மிக நேர்த்தியாக மசாஜ் செய்து விடுகின்றனர். அவரிடம் பேசிக்கொண்டே இருக்க அரைமணி நேரத்திற்கும் அதிகமாக மசாஜ் செய்துவிட்டு 200 மட்டுமே வாங்கினார்.

     எல்லாம் முடிந்த பின் எண்ணெய் தேய்த்த உடலோடு அருவியில் குளிக்க சில மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஆற்றின் நீர் கொட்டும் இடத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக வழியமைத்து வைத்திருந்தனர்.

     நீரின் வேகம் அதிமாக இருந்ததால் கவனத்தோடே குளித்துக் கொண்டிருந்தேன். எதிரே ஆற்றில் இரு நீர் பறவைகள் அழகாக குளித்துக் கொண்டிருந்தன.

     மழை வருவது போல் இருந்ததால் அருவியில் விரைவாக குளித்து முடித்துவிட்டு எதிரே இருந்த தொங்கு பாலத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். அங்குள்ள அருவிகளை ஓரளவுக்கு நாம் இந்த தொங்கு பாலத்தில் இருந்து முழுமையாக பார்க்க முடிந்தது. அங்கிருந்தே மேற்கில் கர்நாடக பகுதி ஆரம்பமாகிறது. எல்லாம் பார்த்து முடித்துவிட்டு மீண்டும் வந்த காட்டுப்பாதை வழியே ஓசூருக்கு வந்து கொண்டிருந்தேன்.

     மீண்டும் அஞ்சட்டி காட்டுப்பகுதியில் வந்த போது மழை ஆரம்பித்தது, இம்முறை அடைமழை. காட்டில் மழைக்கு ஒங்க முடியாததால் கடும் மழையோடு வாகனத்தை பொறுமையாக செலுத்திக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

     யானைகள் இயல்பாக சுற்றித்திரியும் இப்பகுதியின் காடுகளில் இந்த பயணத்தில் சில மயில்கள், பறவைகள், நிறைய சாலையோர குரங்குகள், பல வண்ணத்துப்பூச்சிகளை மட்டுமே காண முடிந்தது.

     ஒக்கேனக்கலில் காவேரி ஆற்றில், அருவியில் என எங்கு பார்ப்பினும் ஏராளமான நெகிழி குப்பைகளை காண முடிந்தது மனதுக்கு வேதனையாக இருந்தது. அதை ஒழுங்கு படுத்தினால் நல்லது.

இந்த நிறைவான பயண அனுபவத்தை, அடுத்த பயணம் வரை பொறுமையாக அசைப்போட்டுக் கொள்கிறேன்.

பனைசதிஷ்
11.08.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்