கொடக்கரை காட்டு பயணம்


பனை - காடு - மலை - மழை - யானை- பயணம்

'இனிது இனிது ஏகாந்தம் இனிது' என்றார் ஒளவை.

     நிச்சயம் ஔவையும் காடோடியாக இருந்து தான் இதை சொல்லியிருப்பார். ஏகாந்தத்தின் இன்பத்தை அவர் காட்டில் தான் அனுபவித்திருப்பார்.

     சமீபமாக நான் ஓசூர் வரும் ஒவ்வொரு முறையும், வார இறுதி நாட்களில் கிழக்கு மலைகளில் யானைகளின் முக்கிய காடான காவிரியின் (வடக்கு) காடுகளுக்குள் பயணப்படும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

     அப்படியாக கடந்த மாதம் ஓசூர் வந்திருந்த போது வடக்கு காவிரி வன உயிரின சரணாலயத்தின் காட்டு பாதையில் முதல் முறையாக பயணித்து ஒக்கேனக்கல் அருவிக்கு சென்றிருந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்.

     அப்பதிவை பார்த்திருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த அக்கா ஒருவர் பெட்டமுகிலாம் மலைக்கு செல்ல வாய்ப்பிருந்தா அந்த மலைக்கும் போய்ட்டு வாங்க என சொல்லியிருந்தார்.

     அவர் சொல்லியத்தில் இருந்தே பெட்டமுகிலாம் மலைப்பகுதியை தேடத் தொடங்கினேன். அப்பகுதியின் வரைபட அமைப்பை பார்த்ததும் அடுத்த பயணம் நிச்சயம் பெட்டமுகிலாம் மலைக்கு சென்று பின் பஞ்சபள்ளி அணைக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன்.

     பெரும்பாலும் தனித்தே அமையும் என் பயணங்கள் இம்முறையும் அப்படியாகவே தொடர்ந்தது.

     செப்டம்பர் மாதத்தின் முதல் நாளான வெள்ளி (01.09.23) அன்று காலையே கிளம்ப திட்டமிட்டு, தாமதமாகி பிறகு முற்பகலில் ஓரளவு மிதமான வெயில் நேரத்தில் தான் பயணத்தை தொடங்கினேன்.

பனை தரிசனம்

     ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் சில கி.மீ தொலைவுகளிலேயே சாலையோரம் கிட்டதட்ட 100,150 பனைகள் ஒரே தொகுப்பாக இருப்பதை கடந்த முறை ஒக்கேனக்கல் பயணத்தின் போது தான் பார்த்திருந்தேன். ஒரு முழுமையான பனங்காட்டை பார்த்தது இந்த பயணத்தை மேலும் செழுமைப்படுத்தியது.

     ஓசூர் - தேன்கனிக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலை சாலையில் இருந்தே இப்பனைகளை காண முடியும்.

     அங்கிருந்த பனைகள் பயன்பாட்டில் இருக்கிறதா, பனை சார் மக்கள் அருகிள்ள ஊர்களில் இருக்கின்றனரா என்பதை அடுத்த பயணத்தின் போது உறுதிப்படுத்தனும். குறிப்பாக அங்குள்ள பெரும்பாலான பனை மரங்களின் தண்டுப்பகுதி ஒல்லியாக இருந்தது வியப்பளித்தது.

     அந்த பனங்காட்டின் ஓரம் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புறப்படும் முன் பெட்டமுகிலாம் செல்லும் மலைபாதையை பார்த்துக் கொண்டிருக்கையில் குறுக்கே கொடக்கரை என்ற தனித்த ஒரு மலை கிராமத்திற்கு செல்லும் வழி இருப்பதை பார்த்தேன். பெட்டமுகிலாம் செல்லும் வழி என்பதால் அங்கு போகும் முன் கொடக்கரை மலை கிராமத்தை பார்த்துவிட்டு செல்லலாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது தேன்கனிக்கோட்டை நகரத்தை கடந்திருந்திருந்தேன்.

     தேன்கனிக்கோட்டையிலிருந்து பாலக்கோடு செல்லும் சாலையில் ஹனுமந்தபுரத்திற்கு முன்னர் வலது பக்கமாக (நேராக சென்றால் பஞ்சபள்ளி அணைக்கு செல்லலாம்) திரும்பி சென்று பெட்டமுகிலாம் போகும் அடுத்த பிரதான சாலையை அடைந்தேன். அங்கிருந்து அடுத்தது திம்பசந்திரம், நெம்ரெல்லி, உன்னிசெட்டி எனும் அழகான மலையடிவார கிராமங்கள் வந்தன.

அய்யூர் காட்டுப்பகுதி

     நெம்ரெல்லியில் இருந்து சில நிமிட பயணத்திலேயே அய்யூர் காடு ஆரம்பமாகிவிடுகிறது. காட்டின் தொடக்கத்திலேயே 'வடக்கு காவிரி வன உயிரன சரணாலயம்' என்ற பதாகையில் யானைகளை அழகாக வரைந்து வைத்திருந்தனர்.

     காட்டினுள் நுழைந்ததும் வனத்துறையால் நடத்தப்படும் அய்யூர் சூழல் சுற்றுலா மையமும், வாகன சோதனைச்சாவடியும் இருந்தது. இங்கிருந்து கொடக்கரை மலை கிராமத்திற்கு வனத்துறையின் வாகனத்தில் சூழல் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள். கட்டண விபரம் தெரியவில்லை.

     ஏனைய சோதனைச்சாவடிகளை போலவே இங்கும் நான்கு சக்கர வாகனங்களை மட்டும் பெயரளவுக்கே சோதனை செய்கின்றனர். மற்ற வாகனங்களை பரிசோதனைக் கூட செய்வதில்லை. (நிறைய மலை கிராமங்கள் உள்ள மலைச் சோதனைச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து சோதனை செய்வதில் சில நடைமுறை சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது) அதனால் காட்டில் ஏற்படும் விளைவுகளை இந்த பயணத்தில் கண்ணெதிரே பார்த்தேன், அதை இங்கு கடைசியாக விவரிக்கிறேன்.

     அய்யூர் சோதனைச்சாவடியை தாண்டியதும் முழுமையான காட்டுப்பகுதி ஆரம்பித்து விடுகிறது. இருபுறமும் அடர்ந்த தாவர தொகுப்பு இருந்ததால் மலை ஏற்ற சாலையை அடையும் முன்னமே காற்றில் குளிர் தன்மையை உணர முடிந்தது.

     காட்டுச் சாலையின் ஓரம் ஆங்காங்கே பெரிய கற்களில் இக்காட்டில் வாழும் யானை, கரடி, நரி போன்ற விலங்குகளையும், பறவைகளையும் வரைந்து வைத்திருந்தனர்.

     சிறிது நேரத்தில் காட்டின் சாலையோரம் முழுவதுமாக நீர் நிரம்பிய ஒரு பெரிய நீர்த்தேக்கமும் அதன் கரையோரம் வனத்துறையின் காட்சி கோபுரமும் இருந்தது.

     யானைகள், மான்கள் என காட்டு விலங்குகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் இடம் என்பதை அங்கிருந்த பல்வேறு விலங்குகளின் சாணக்குவியல் மூலம் புரிந்து கொண்டேன்.

      காட்டின் அடர்ந்த தாவரங்களால் சூழப்பட்ட அந்த நீர்தேக்கத்தின் அமைவிடம் யானைகளுக்கான பெரிய குளியல் தொட்டி போல இருந்தது. அங்கு சாலையோரமாக ஓய்வெடுத்துக் கொண்டு விலங்குகள் ஏதும் வருகின்றனவா என வெகு நேரம் பார்த்த பிறகு ஒரு நீர்ப்பறவையின் அழகான தரிசனத்தை மட்டுமே பெற முடிந்தது.

     அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஒரு குறுகலான மலைச்சாலையின் வளைவில் சாலையோரம் ஒற்றை யானையின் சாணத்தை பார்க்க முடிந்தது, அதுவும் வெகு சில மணி நேரத்திற்கு முன்னர் இட்ட சாணமாக இருந்தது.

     வாகனத்தை மேதுவாக செலுத்தி சுற்றிலும் பார்த்து அருகில் யானை இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே அங்கிருந்து முன்னேறினேன்.

     மலைப்பாதையில் ஏற்றம் மெல்ல ஆரம்பமானது. பல இடங்களில் வளர்ந்த கீரிகள் வேகமாக சாலையை கடந்து போவதையும், பல்வேறு பறவைகளின் ஓசைகளையும் தொடர்ந்து கேட்டது.

     மலைக்கு மேலே செல்ல செல்ல வடக்கு காவிரியின் அடர்ந்த காடுகள் நீண்ட பள்ளத்தாக்கு எங்கும் பரவி இருந்ததை பார்க்க முடிந்தது.

     மலைச் சாலையோரம் இருந்த சிறிய ஓடையின் நீரில் எரிந்த மரத்தின் கறி சாம்பல்கள் கலந்திருந்தது. அதனை வியப்போடு பார்த்துக்கொண்டே மலைக்கு மேலே வந்த போது அங்கு பார்த்த காட்சி என்னை திகைக்க வைத்துவிட்டது. எதிரே இருந்த அந்த பெரிய மலை முழுவதுமாக எரிந்து மரங்கள் அற்று எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. ஒரு சில மாதங்கங்களுக்கு முன்னரே இந்த மலை முழுவதும் எரிந்து போயிருக்கலாம். ஆனால் எரிந்த காட்டின் சாம்பல்கள் இன்னமும் படர்ந்து கொண்டே இருந்தது.

      ஏன், எதனால், எப்போது எரிந்தது என தெரியவில்லை. ஆனால் அதன் காட்சி நம்மை உடைய வைத்துவிட்டது. அங்கிருந்து இன்னமும் சில மலை திருப்பங்கள் மேலே சென்றதும் கொடக்கரைக்கு செல்லும் பாதை வலதுபுறமாக திரும்பியது.

     அவ்வழியே தொடர்ந்து சென்ற போது காட்டின் தாவர அடர்த்தி மாறி மாறி இருந்தது. ஓரிடத்தில் மலையின் இடது பக்க சரிவில் அடர்ந்த காட்டினுள் கால்பந்தாட்ட மைதானம் போல் நிறைந்த புல்வெளிக்கு மத்தியில் மாதேஸ்வரன் கோவில் இருந்தது. அதனை கண்ட போது சட்டென  நான் சென்றிருந்த மற்றொரு காட்டுப்பயணத்தின் மலை கிராமங்கள் நினைவுக்கு வந்தது.

     அக்கோவிலை கடந்து செல்கையில் வனத்துறையின் மற்றொரு காட்சி கோபுரம் இருந்தது. வனத்துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாதவாறு அந்த காட்சி கோபுரம் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

     அங்கு வாகனத்தை திருத்திவிட்டு அருகே இருக்கும் பள்ளத்தாக்குகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றை பார்க்கும் போது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜவ்வாதுமலையின் பள்ளத்தாக்கு காடுகளை பார்ப்பது போன்றதொரு உணர்வு இருந்தது.

     பள்ளத்தாக்குகளை கடந்து எதிரே இருக்கும் மலையில் ஒரே ஒரு மலைகிராமம் மட்டும் தனித்து இருப்பது தெரிந்தது. அது என்ன கிராமம் என தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு நாள் அங்கு செல்லலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

     அந்த காட்சி கோபுரம் இருக்கும் மலையில் இருந்து பார்த்தால் நீளமான மலைப்பாதை, கொடக்கரை கிராமம் இருக்கும் மலைக்கு செல்வது தெளிவாக தெரிந்தது.

     அடுத்தடுத்த மலைப்பாதை கரடுமுரடாக இருந்ததால் கவனமாக வாகனத்தை ஓட்டவேண்டி இருந்தது. ஓரளவுக்கான மலையிறக்கம் வந்தபோது குறுக்கே இருந்த ஓடையில் குறைவான அளவில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அப்பகுதியில் நிறைய பறவைகளின் ஓசைகளையும் தெளிவாக கேட்க முடிந்தது. ஓடையைக் கடந்து செல்கையில் ஒரே நேரான மலையேற்றத்தில் கொடக்கரை இருக்கும் மலைப்பகுதியை அடைந்தேன்.

     இம்மலையில் இதுவரை வந்ததை விடவும் மலைச் சாலையில் இருபுறமும் சூரிய ஒளிக்கூட ஊடுருவ முடியாத படி தாவரங்கள் அடர்த்தியாக இருந்தது.

     அப்பகுதியை கடக்கும் போது நேரம் மதியம் 3மணி இருக்கும் அந்த காட்டுச் சாலையின் வலது பக்கமும், இடது பக்கமும் இருந்த அடர்ந்த தாவரங்களால் அங்கு சில அடி தொலைவுகளில் மட்டுமே வெளிச்சம் இருந்தது. அதன் பின்னரான காட்டுப்பகுதி முழுவதிலும் இருளே அடர்ந்திருந்தது.

      கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 3000 - 3500அடி உயரத்தில் இந்த காடுகள் இருப்பதாலும், திடீரென வானிலை மாறியதாலும் மலைக்கு மேலே செல்லும் முன் மழை வந்துவிட வாய்ப்பிருப்பதை முன்னரே உணர்ந்திருந்தேன்.

     எதிர்பார்த்து போலவே மழைத்தூரல் ஆரம்பமானது…

     முதலில் குறைவான தூரலாக இருந்தது, ஒரு கட்டத்தில் அடைமழையாக மாறியது. கொடக்கரை மலை கிராமம் அடுத்த ஒரு சில கி.மீ தொலைவுகளில் இருக்கலாம். ஆனால் அடை மழையால் மேற்கொண்டு வாகனத்தை செலுத்த முடியவில்லை.

     காட்டுச்சாலையில் எனக்கு முன்னரும், பின்னேயும் யாரும் இருப்பதாக தெரியவில்லை. சாலையின் ஓரம் இருந்த புளியமரத்தின் பாதுகாப்பில் வாகனத்தை நிறுத்துவிட்டு, காட்டுத் தரையில் வேகமாக வந்து முட்டும் மழையை வெகுநேரம் ரசித்துக் கொண்டிருக்கையில் மழை ஓரளவு ஓய்ந்திருந்தது.

     அடை மழையால் ஏற்பட்ட குளிரால் கைகள் நடுங்கின. குளிராலும், மழையின் மேகங்களாலும் மூடப்பட்ட காட்டுப்பாதையில் மேற்கொண்டு வாகனத்தை செலுத்தவே பெரும் சிரமமாக இருந்தது.

     மலையின் காட்டுப்பகுதி முடியும் இடத்தில் இருந்து பார்த்த போது சுற்றிலும் இருந்த மலைகளில் அடுக்கடுக்காக விவசாயமும் ஆங்காங்கே சில வீடுகளும் இருந்தது. நாம் கொடக்கரை மலைகிராமத்திற்கு வந்துவிட்டோம் என்பதை புரிந்து கொண்டேன்.

     சாலையின் இருபுறமும் புற்கள் நீண்ட தூரத்திற்கு செழிப்பாக வளர்ந்திருக்க அதனை சில எருமைகள் பெய்யும் மழையையும் கண்டுகொள்ளாமல் மேய்ந்து கொண்டிருந்தது.

     மலையில் தொடக்கத்தில் சில வீடுகளும், சில குடிசைகளும் இருந்தன. அவற்றை கடந்து செல்கையில் மலைக்கு இன்னும் சற்றுமேலே சில வீடுகளும், அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றும் இருந்தது.

      மேலே சென்று பள்ளிக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்கையில், சுற்றிலும் இருக்கும் பள்ளமான இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த இடம் அழகாக காட்சியளித்தது. அதிலும் மழைத்தூரல் அந்த வயல்களின் மேலே விழும் காட்சி மன அமைதியை மேலும் கூட்டியது.

     அங்கிருந்த பழங்குடி அண்ணா ஒருவரிடம் ஊரில் தேனீர் கடை ஏதும் இருக்கிறதா எனக்கேட்ட போது, பள்ளிக்கு அருகேயுள்ள ஒரு சந்தில் இருப்பதாக சொல்லி அவ்விடத்தை கைக்காட்டினார்.

     அந்த தேனீர் கடைக்கு சென்ற போது அங்கு ஊரின் வயதான பெரியவர்கள் தேனீர் குடித்துக் கொண்டிருக்க, ஊருக்கு புதிதாக வந்த என்னிடம் பழங்குடிகளுக்கே உரிய வாஞ்சையோடு என்னை பற்றி விசாரித்தனர்.

     அவர்களிடம் இயல்பாக பேசிய பின் கொடக்கரை மலை பற்றி கேட்ட போது, அவர்கள் நிறைய தகவல்களை சொல்லியிருந்தனர்.

     அவர்களின் கன்னடம் கலந்த மொழியும், இந்த மலை கிராமத்தின் அமைவிடங்களும், அவர்களின் விவசாய முறைகளும் நான் சத்தியமங்கலம் குன்றி மலையில் பார்த்தது போன்ற நினைவு வந்தது.

     இம்மலையிலும் லிங்காயித் மலை மக்களும், ஊராளி பழங்குடி மக்களும், ஒரு சில வேற்று சமூக குடும்பங்களும், சில கிருத்துவ மதத்தை சார்ந்த மக்களும் இருப்பதாக சொல்லியிருந்தார் அந்த தேனீர்கடையில் இருந்த ஊர் பெரியவர்.

     அவர்கள் கூறிய ஊர் பழக்க கட்டுப்பாடுகள், பேசுகிற மொழியின் ஒலிக்குறிப்புகள் என அனைத்தும் குன்றி மலை மக்கள் போன்றே இருந்தது. குறிப்பாக இந்த கொடக்கரை மலை கிராமத்திலும் ஊருக்கு தென்மேற்கில் பெரிய அளவில் மாதேஸ்வரன் கோவிலும், அதற்கடுத்து புதிதாக கட்டப்படும் மாரியம்மன் கோவிலும் இருந்தது.

      அந்த தேனீர் கடை நடத்தும் அண்ணாவிடம் அருகில் அருவி ஏதும் இருக்கா என கேட்ட போது, ஆமாங்க தம்பி இருக்கு என அங்கிருந்த ஒரு வழியை காண்பித்து, இந்த வழியே காட்டுக்குள்ள 2 கி.மீ போனால் நேரா அந்த அருவிக்கு தான் போகும் என சொல்லியிருந்தார்.

     மழையால் விரைவில் மலை இருட்டிவிடும் என்பதால் இப்ப போக முடியாது, அடுத்தமுறை வாங்க நானே கூட்டிட்டு போகிறேன் என்றார்.

     அவர்களிடம் பேசிக்கொண்டே தேனீர் குடித்து முடித்து அதற்கான விலையை கேட்டபோது மிகுந்த அதிர்ச்சி. அவர் எனக்கு கொடுத்த தேனீரின் விலை வெறும் 2 ரூபாய் தான். நான் 2,3 முறை அவரிடம் அண்ணா உண்மையாவே டீ இரண்டு ரூபாய் தானா என வியப்போடு கேட்டிருந்தேன்.

     அங்கிருந்து கிளம்பும் முன் போகிற வழியில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது பார்த்துவிட்டு போங்க என்றார் அந்த ஊர் பெரியவர். அங்கு சென்று பார்த்த போது கோவிலின் அமைவிடம் அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. அருகிருந்து மலையின் சில பள்ளதாக்கு பகுதிகளையும் அங்கிருந்தே பார்க்க முடிந்தது.

     கிளம்பும் போது மீண்டும் மழை தொடங்கியிருந்தது. மழையில் நனைந்து கொண்டே வாகனத்தை பொறுமையாக ஓட்டிக்கொண்டு ஒவ்வொரு மலை திருப்பத்தையும் கவனமாக கடந்துவந்தேன்.

     கொடக்கரையிலேயே நேரம் அதிகமாகிவிட்டதால் இம்முறை நிச்சயம் பெட்டமுகிலாம் செல்ல முடியாது என்பதை புரிந்து கொண்டே மலையில் இருந்து கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தேன்.

     பெட்டமுகிலாம் செல்லும் மலைச் சாலை சந்திப்பில் இருந்து கொடக்கரைக்கு செல்லும் மலைச்சாலையில் அடர்ந்த காட்டில் மாதேஸ்வரன் கோவில் இருந்ததை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருப்பேன். சரியாக அவ்விடம் வந்து கொண்டிருக்கையில் வலது பக்க மலையின் மேட்டு புதரில் இருந்து வளர்ந்த பெரிய நாய் போன்ற உருவம் ஒன்று திடீரென சாலையை கடந்து இடது பக்கமிருந்த சரிவான காட்டுப் புதருக்குள் சென்று மறைந்தது.

     சில வினாடிகளுக்கு பிறகே அது நரியாக தான் இருக்கக்கூடும் என்பதை உணர முடிந்தது.

     அவ்விடத்தை மிகுந்த கவனமாக கடந்து வந்து கொண்டிருக்கையில் எதிரே வனத்துறையின் சூழல் சுற்றுலா செல்லும் வாகனம் கடந்து சென்றது. அடுத்து முறை வனத்துறையினரிடம் இந்த சூழல் சுற்றுலா குறித்து விசாரிக்க வேண்டும்.

     இப்பயணத்தில் ஒரே ஒரு மனக்கவலை என்னவெனில், இம்மலையை சுற்றிப்பார்க்க வருபவர்கள் சிலர் சாலையோரம் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர், சிலர் மது பாட்லை அங்கேயே உடைத்தும் போட்டு இருந்தனர்.

     யானைகள் பெருமளவு நடமாடும் இந்த காட்டுப் பகுதியில் இவர்களின் செயல் மிகுந்த வேதனையளிப்பதாக இருந்தது.

     அய்யூர் சோதனைச்சாவடியில் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யாததன் விளைவு தான் இது.

     மேலே யானைச் சாணம் பார்த்த காட்சியை விவரித்து இருப்பேன் அந்த யானைச் சாணத்திற்கு பக்கத்திலேயே ஒரு மது பாட்டிலும் இருந்தது, கொடுமையிலும் கொடுமை. அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து வாகனத்தில் வைத்துக்கொண்டு வந்து மலையை தாண்டிய பிறகு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பின் வீடு வந்து சேர்ந்தேன்.

     சில மணி நேரமே இருந்தாலும் இந்த புதிய காட்டுப்பகுதியும், மலைப்பாதையும், கொடக்கரை மலை கிராம மக்களும் கொடுத்த அனுபவம் நிச்சயம் பெரும் மகிழ்வை கொடுத்தது.

மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

பனை சதிஷ்
01.09.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்