அதிகாலை (கள்)

       அன்றைய இரவு நேர பணியும் மற்ற நாட்களை போலவே கடந்து கொண்டிருந்தது, இரவு உணவு முடித்து வேலையை தொடங்கும் முன் நண்பனிடம் இருந்து குருஞ்செய்தி, ஊருக்கு வந்துட்டியா என்று. உலகம் முழுமைக்கும் பாதிப்பையும் பயத்தையும் ஒரு சேர கொண்டு வந்து சேர்த்த கொரோனா தொற்று நோயின் காரணத்தால் எங்கள் அலுவலத்தில் அனைவரும் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய பணிக்கப்பட்டோம்.


        நானும் நீண்ட மாதங்களுக்கு பின் ஊருக்கு போக ஆயத்தமானேன், வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நோய் தொற்று பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட நான் என் வடலியில் (என் இரு சக்கர வாகனம்) என்னுடைய கிராமத்திற்கு பயணப்பட்டேன். அச்சம் கொள்ள வைக்கும் ஆள் அரவமற்ற காய்ந்த சருகுகளை கொண்ட காட்டு பாதை போல காட்சி அளித்தது அந்த தேசிய நெடுஞ்சாலை, மிக பொருமையாகவும் மிரட்சியுடனும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சாலையின் மீது ஏறி ஓடி கொண்டிருந்தாள் வடலி.


 ஜன்னல் ஓர இருக்கை தான் வேண்டும் என அடம்பிடித்து அண்ணனிடம் சண்டையிட்டு சிறுவயதில் இதே நெடுஞ்சாலையில் பேருந்தில் நான் பார்த்த காட்சிகள் இன்றும் கண் முன் நினைவோடியது.


கால சக்கரம் எவ்வளவு வேகமானது நொடிகளில் அனைத்தையும் நிழல் படமாய் என் முன் நிறுத்திவிட்டது, ஒரு முறை பள்ளி முழு ஆண்டு விடுமுறை தினத்தில் இதே போன்று ஜன்னல் இருக்கையில் அமர்ந்து பாட்டி ஊருக்கு சென்றதை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை, அப்போது உடன் இருந்த என் அம்மா எனக்கு பறக்கும் விமானம், சாலையில் ஊர்ந்து செல்லும் நான் விளையாடி மகிழ்ந்த கார்கள், கூடவே ஓடிவரும் மரங்கள் என அனைத்தையும் காட்டி என்னை சமாதானம் படுத்த முயல்கிறாள் ஆனால் என் மனம் எவற்றையும் ஏற்கும் நிலையில் இல்லை, நான் தவிக்கிறேன், துடிக்கிறேன் ஒரு கட்டத்தில் தேம்மி அழுகிறேன் ஏனெனில் அப்போது எனக்கு மிக அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. இன்றும் எப்போதெல்லாம் பேருந்துகளில் ஜன்னல் இருக்கைகள் கிடைக்கிறதோ என் நினைவிற்கு சட்டென வந்து நிற்கும் நிகழ்ச்சி இது, காலம் கடந்தும் அந்நிகழ்வுகளை நினைவு கூர்ந்து புன்னகைத்துக் கொள்கிறேன்.


 அந்த சிறு வயது பேருந்து பயணங்களில் நான் கண்ட சாலையேர பெரிய புளியன் மரங்கள் இப்போது அகண்டு நீண்ட சாலைகளுக்காக வெட்டப்பட்டு இருந்தது, (சிறுவயதில் அந்த மரங்களை பார்க்கும் போதேல்லாம் ஓடி சென்று அணைத்து கொள்ள வேண்டும் என நினைத்து இருக்கிறேன், இப்போதைய என் வயது ஒத்த நான்கு பேர் கை கோர்த்து நின்றால் தான் அந்த மரங்களை அணைக்க முடியும் அவ்வளவு பெரியது), சிறிய கிராமங்கள் இப்போது பரபரப்பான நகரங்களாக உருமாறி இருந்தது, அன்று இருந்ததை விடவும் நிறைய தொழிற்சாலைகள் முளைத்து விட்டது, இதில் இன்றும் மாறாதது என் நினைவுகளில் சேர்மானம் ஆன காட்சிகள் மட்டும் தான், சீறிப்பாயும் கப்பலை நிலை நிறுத்தும் நங்கூரமாய் அந்த சிறு வயது ஜன்னல் ஓர பயண நினைவுகள் மனதில் ஆழ புதைந்துவிட்டது. 


என் வடலி பயணதூரத்தில் பாதியை கடந்திருப்பாள் அவளுக்கும் எனக்கும் ஓய்வு தேவைபட்டது, வடலியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த பனை மர நிழலில் அமர்ந்தேன் மேலே  இரண்டு பச்சைக் கிளிகள் உயர்ந்த பனைமரத்தின் ஓலைகளில் அமர்ந்து சண்டை இட்டு கொண்டிருந்தது, அவைகள் தன் இணை தேவைக்காக தான் அடித்து கொண்டிருக்க வேண்டும் ஏனெனில் அருகில் இருந்த மற்றோரு பனை மரத்தில் இருந்து இன்னோரு கிளி இவைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. அப்போது சாலைகளில் காகங்கள் தாழ பரந்து கொண்டிருந்தது, அணில்கள் சாலையின் குருக்கே இங்கும் அங்கும் ஓடிக்கொடிருந்தது, மாடுகள் சாலையோர புல்லை எவ்வித பயமும் இன்றி மேய்ந்து கொண்டிருந்தது ஏனெனில் எந்த அதிகாரமும், அரசும், ஊரடங்கும் அவைகளின் அசைவுகளை நிறுத்த போவதில்லை. 


 எங்கள் கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் வடலியை நிறுத்தினேன் அங்கு வந்ததும் இனம் புரியாத உணர்வு, ஆண்டு தோறும் மழை காலங்களில் நுரையோடு பொங்கி வரும் ஆற்று நீரில் குதித்து விளையாடி இடத்தில் இப்போது நுரையும் இல்லை ஆறும் இல்லை. ஊரில் உள் நுழைந்ததும் வழக்கமான கிராமத்தின் வாசம் மாறி வேப்பிலையும் மஞ்சளையும் நீரில் கரைத்து கிருமி நாசினியாக ஊர் முழுக்க தெளித்து வைத்திருந்தனர். எந்நேரமும் திண்ணைகளில், பள்ளி சுவர்களில் அரட்டை அடிக்கும் கூட்டம் காணாமல் போயிருந்தது, தேநீர் கடைகள் மூடப்பட்டு கடையின் நாற்காலிகள் தலைகீழாக திருப்பி போடப்பட்டு இருந்தது. வடலியின் கம்பீர வருகையை வரவேற்க கிராமத்தில் யாரும் இல்லை, அரிதாக இருந்த ஒரு சில தெரிந்த முகங்களும் அச்சத்துடனே பார்த்தன நோய் தொற்றின் பீதியில் மிரண்ட கண்களுடன்.


வீட்டுக்கு வந்ததும் குளித்து முடித்து உணவருந்தி தூங்கி விட்டு மாலையில் வழக்கமான இரவு பணியை தொடர்ந்தேன், பகலில் தூக்கமும் இரவில் வேலையுமாக நாட்கள் சென்றன, கடந்த வெள்ளி இரவு உணவு வேளையில் நண்பனிடம் இருந்து குறுஞ்செய்தி ஊருக்கு வந்துட்டியாடா, உரையாடலின் போது நாளைக்கு பொன்னம்பலத்துக்கு போகலாமா என்று கேட்க அவனும் மறு மொழி பேசாமல் சரி என சொல்லிவிட்டான்.


பொன்னம்பலம் பற்றி சொல்லியாகனும் 

வட தமிழகத்தில் பனை மரங்கள் பரவலாகவும் அடர்த்தியாகவும் உள்ள செய்யார் வட்டத்தின் அருகில் ஆரணி (எங்க ஊருக்கு) செல்லும் சாலையில் உள்ளது பொன்னம்பலம் பனை கிராமம், விவசாயமும், பனை ஏற்றமும் பல ஆண்டுகளாக அம்மக்களின் அன்றாட வாழ்வாதாரமாக இருந்து வருகிறது, குறிப்பாக எந்த கலப்படமும் இன்றி தூய பனம்பால் (பனங்கள்) இங்கு மட்டும் தான் கிடைக்கும்  என்பது கிட்டதட்ட 30கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து ஊர் மக்களுக்கும் நன்கு தெரியும். நான் கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் செய்யாரு ஆற்றின் ஊடாக ஏழெட்டு கிலோமீட்டர் நடந்தே பொன்னம்பலதிற்கு சென்று கள் குடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்கு நடந்தே வந்த அனுபவம் உண்டு, பின்பு நீண்ட இடைவெளி அந்த பனைகளையும், பனம்பாலையும் பருகும் வாய்ப்பு இல்லாமல் போனது.


சல்லிகட்டு முடிந்து நான் பனை சார்ந்த பணியில் ஈடுபடத் துவங்கிய காலம், பனை மரங்களை தேடி செல்வதில் மிகுந்த ஆவலோடு இருந்த நேரம், கோடையின் உக்கிரம் உடலில் ஏறாமல் பார்த்து கொள்ளும் இயற்கையின் அதிசிறந்த கொடையான பனம்பால் வழக்கம் போல் அந்தாண்டும் சுறந்தது, ஒரு முறை என் ஊர் நண்பர்களுடன் எதர்ச்சையாக அந்த பொன்னம்பலத்திற்கு சென்றேன், அங்கிருந்த பனையேறி தான் நான் சந்தித்து உரையாடிய முதல் பனையேறி, பனையை பற்றிய தன் அனுபவ அறிவை ஆழமாக கூறினார், இப்போதேல்லாம் ஏப்ரல் மாத காலங்களில் அவரை பார்ப்பதற்காகவே அந்த கிராமத்திற்கு சென்று விடுகிறேன், ஒவ்வொரு முறையும் அந்த பனைகள் எனக்கு புதிதாகவே தெரிந்தது, ஒவ்வொரு முறையும் பனையின் தனித்த பரிமாணத்தை அவரின் பேச்சுகளின் ஊடாக தெரிந்து வருகிறேன். இத்தனை ஆண்டுகள் அங்கு சென்றும் அதிகாலையில் இறக்கப்படும் பனம்பாலை அருந்தும் வாய்ப்பு மட்டும் கிட்டாமல் இருந்தது, அந்த ஏக்கமும் அதிகாலை பனம்பால் குறித்த கனவும் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது.


எதிர்பாராத தருணங்களில் ஏக்கத்தோடு நினைத்து கொண்டிருப்பவை கிடைத்தால் வாழ்வில் அதை விடவும் உன்னதமான தருணம் வேறு என்ன இருந்திட முடியும், ஆம் கனவுகள் மெய்படும் நேரம் வந்தது, தெரிந்தோ தெரியாமலோ இந்த கொரோனா நோய் தொற்றால் இந்தாண்டு சரியாக பனம்பால் சுரக்கும் தருணத்தில் நான் வீட்டில் இருந்த வேலை பார்க்கும் படி பணிக்கப்படேன், அப்போது தான் சரியாக நண்பனும் குறுஞ்செய்தி அனுப்பி என் கனவுகளுக்கு தீணி போட்டு கொண்டிருந்தான். நாங்கள் திட்டமிட்டோம், காலை 6 மணிக்குள்ளாக அங்கு சென்று விடுவது என்று. மற்ற நாட்களை விடவும் அன்றைய இரவு நேர பணியை மிக கடுமையாக உணர்ந்தேன் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுவற்றில் மாட்டி இருந்த பெரிய கடிகாரத்திற்குள் என் கண்கள் உலாவிக் கொண்டிருந்தன, நீண்ட இரவுக்கு பின் அதிகாலை பொழுது புலர்ந்தது, அணில்களும் குயில்களும் கூவும் சத்தம், தூக்கனாங் குருவியும், தவிட்டு குறுவியும் சுறுசுறுப்பாக உணவு தேடும் சத்தம், சில வீடுகளின் வாசலில் சாணமும் இன்னும் சில வீடுகளில் தண்ணீரும் தெளிக்கும் பெண்களின் கொலுசு சத்தம், கறவைக்காக செல்லும் பசு மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட செம்பு மணிகளின் சத்தம் என இயல்பாக பார்த்து பழகிய அனைத்தும் அன்றைய பொழுதில் புதிதான தோற்றத்தை கொடுத்தது.


எங்க கிராமத்தில் இருந்து ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய ஒதுக்குப்புற கிராமம் தான் பொன்னம்பலம். காலையில் சரியாக 6.40 மணிக்குள்ளாக நாங்கள் அங்கு சென்றுவிட்டோம்.  ஊரடங்கு அமலில் உள்ள காலம் என்பதால் மிகுந்த கவனத்தோடு செல்ல வேண்டி இருந்தது, தினமும் தொலைகாட்சிகளில் காவல்துறை வெளியில் செல்வோரை வெளுத்து வாங்கும் காட்சிகள் தான் கண்முன் வந்து வந்து போனது. சரியாக பொன்னம்பலம் கிராம சாலைக்கு முன் காவல்துறையால் தடுப்புவேலியும் போடப்பட்டு இருந்தது, ஏனெனில் அவர்களுக்கு தெரியும் நிச்சயம் இங்கு ஆட்கள் பனங்கள் பருக வருவார்கள் என்று, அதை பார்த்ததும் மனதில் சின்ன கவலை இவ்வளவு தூரம் வந்து கண்முன்னே தெரியும் பனங்காட்டுக்கு போக முடியாமல் ஆகிவிடுமோ என்று, அதே நேரம் அந்த நேர் சாலையின் வலது பக்கம் தூரத்தில் விவசாய வேலை செய்யும் பெண்கள் கூட்டம் வரப்புகளில் உட்புகுந்து செல்வதை கண்டோம், நிச்சயம் அங்கு வழி இருக்கும் என நினைத்து அவர்களை பின் தொடந்தோம், நாங்கள் பின்வதற்கான காரணத்தை நன்கு அறிந்த அவர்கள் எங்களை பார்த்து ஓய் பங்களா இந்த பக்காமா போக முடியாது, அந்தால தெரியுல அந்த வரப்பு வழியா மேல போனா ஊரு வந்துடும்ன்னு வழிகாட்டி விட நொடியும் தாமதிக்காது சிட்டாக பறந்தாள் வடலி.


ஊரில் இருந்த பனங்காட்டு மரங்கள் எங்களை அள்ளி அணைத்து கொண்டதை போன்ற உணர்வு, நீண்ட நாட்களுக்கு பின் அந்த பனையேறி அண்ணாவின் சந்திப்பும் தேவையானதாக இருந்தது. நாங்கள் வருவதை முன்கூட்டியே அவருக்கு சொல்லி வைத்ததால் எங்களுக்காக கட்டி வைத்த பனை மரத்தில் நொடிகளில் ஏறி கலையத்தில் இருந்த பனம் பாலை தன் குடத்திற்கு மாற்றி பின் கலையத்தை துடைத்து பாலையை நேர்த்தியாக சீவி விட்டு கலையத்தை மீண்டும் பாலையுனுள் மாட்டிவிட்டு அடுத்த நொடிகளில் கீழே இறங்கினார், அங்கு பெரும்பாலானோர் பிளாஸ்டிக் குடுவைகளில் பனம்பாலை குடித்து கொண்டிருக்க எங்களுக்காக சிறிய பனை மரத்தில் இருந்து பச்ச ஓலையை வெட்டி பட்டை எனப்படும் குடிப்பதற்கு ஏற்ற பனை ஓலை குடுவை செய்து கொடுத்தார். ஒரு பட்டையை நானும் இன்னொரு பட்டையை நண்பனும் கைகளில் ஏந்தி பிடிக்க, வடி கட்டிய பனம்பாலை சிந்தாமல் எங்கள் பட்டைகளில் ஊற்றினார்.


வெள்ளி மேகங்கள் மலைகளில் முட்டி தான் சுமந்த அத்துணை நீர் துளிகளையும் கொட்டி தீர்ப்பது போல் எங்கள் பட்டைகளில் பனம்பால் வந்து சேர்ந்தது, அடுத்த சில மணி நேரங்களில் காலை சூரியன் தன் உக்கிரத்தை காட்ட தொடங்கிவிடும், ஆனால் ஏனோ எங்களின் பட்டைகள் சுமந்து நின்ற பனம்பால் அவ்வளவு குளுமையோடு விரல்களை வருடியது. நீண்ட பசியோடு இருப்பவன் உணவை கண்டதும் தன்னிலை மறந்து நாவில் உமிழ் சுரப்பதை போன்ற தொரு மயக்கம்.


       அதிகாலை கள் என்ற கனவு மெய்பிக்கபட்டது.


      வெடிப்புற்ற காய்ந்த நிலம் பெய்த மழை நீரை மொத்தமாக அறுவடை செய்யும் அதை போன்ற தொரு ஏக்கத்தோடு இருந்த என் நாக்கின் சுவை அரும்புகள் எந்த சலனமும் இன்றி பட்டையில் இருந்த பனம் பாலின் கடைசி சொட்டு வரை உறிஞ்சியது, கண் திறந்து பார்கையில் அடுத்த கலயத்தில் பனம் பால் எங்கள் முன் தயாராக இருந்தது.

-- பனை சதிஷ்

Comments

  1. பனையின் பயணம் அருமையாக இருக்கிறது சதீஷ்...

    ReplyDelete
  2. Payanagal epodhum uyirpikkum thiravukol. Eluthukalukku nandri❤💌

    ReplyDelete
  3. ரொம்ப நாள் கழித்து ஒரு அழகான கட்டுரை படித்த மன நிறைவு. அழகான வார்த்தை கொர்வைகள். வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  4. உங்களது வரிகள் வாசிக்கும் என்னையும் சேர்த்து உங்களோடு பயணிக்க வைக்கிறது. கண்டிப்பாக அந்த ஊருக்கு பயணிக்க வேண்டும். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க நிச்சயம் பயணப்படுவோம்

      Delete
  5. அருமையான பதிவு சதீஷ். எப்பொழுதும் போல் இந்த முறையும் உன்னோடு பயணப்பட வைத்துவிட்டாய்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும்💜

      Delete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்