சமண தொன்மங்கள் தேடல் பயணம் 1

   

  சமணர்கள் வாழ்ந்த தொல் எச்சங்கள் தமிழகம் முழுவதும் நாம் பரவலாக காணலாம், குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் 15கிமீ தொலைவில் திருமலை என்ற ஊரில் இருக்கும் சமண கற்படுக்கைகள் (நேமிநாதர் ஆலயம்) மிக பழமையானது. இது போன்று எங்க மாவட்டத்தில் வேறு சில ஊர்களிலும் சமண கற்படுக்கைகள் இருக்கின்றன.

     ஆனால் பெரிதும் வெளியில் தெரியாத யாரும் எளிதில் அணுகாமல் இருந்த சமணர் கற்படுக்கைகள் எங்கள் ஊரின் அருகில் இருப்பதாக  சமீபத்தில் தோழி பேசும் போது சொல்லி இருந்தாள், ஆனால் அந்த இடம் பற்றிய சரியான குறிப்பு அவளிடம் இல்லை, ஊர் பெயரை மட்டும் தெரிந்தது. அவள் சொன்ன அந்த ஊருக்கு கடந்த வாரம் என் நண்பருடன் போய்ருந்தேன், அவருக்கு ஏற்கனவே இது பற்றி தெரியும் ஆனால் அவருக்கும் அந்த இடத்தின் வழி தெரியாது, அந்த ஊரின் மக்களும் கூட முன்னுக்கு பின் முரணான தகவலே கூறினர். அதனால் கடந்த வாரம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

      இம்முறை எப்படி ஆயினும் அந்த சமண குகை, கற்படுக்கைகளை பார்த்து விட வேண்டும் என்ற வேட்கையில் நானும் என் பயண தோழன் பங்காளி மதன் கிளம்பினோம். கடந்த வாரம் சென்ற போது அவனால் வர முடியவில்லை அப்போது நான் பார்த்த செம்மரக்காட்டை பற்றி அவனிடம் சொல்லியிருந்தேன், அவனும் ஆர்வத்தோடு இம்முறை நிச்சயம் இரண்டு இடத்தையும் பார்க்க வேண்டும் என முடிவோடு இருந்தான், காலை உணவு முடிச்சிட்டு கிளம்பினோம்.

    மழை மேகங்கள் வேகமாக பறந்து கொண்டிருக்க நாங்களும் அதன் வேகத்திற்கு ஈடாக போய்க் கொண்டிருந்தோம். எங்கள் கிராமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பூசிமலைகுப்பம் காட்டு பகுதியில் தான் அந்த சமண குகை இருக்கு. அதற்கு முன்னால் செம்மரக்காடு. விரைவாகவே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம், எங்கள் பெரியப்பா வனதுறையில் அதிகாரியிக இருந்தபோது அவரின் மேற்பார்வையில் தான் இந்த செம்மரக்காடு உருவாக்கப்பட்டது என வீட்டு வந்த பிறகு அப்பா சொல்லி தெரிந்து கொண்டேன், நேரம் தாமதிக்காமல் விரைவாக அந்த சமண குகையை பார்க்க கிளம்பினோம்.

      அந்த அடர்ந்த காட்டினுள் ஏதோ ஒரு மலையில் தான் நாங்கள் தேடி வந்த குகை இருக்க வேண்டும், எந்த மலை என தெரியவில்லை ஆனால் நிச்சயமாக பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. கடந்த வாரம் வந்த போது எங்களுக்கு அந்த மலை பற்றி சில குறிப்புகளை சொன்ன அதே அண்ணன் எதிர் பட்டார். அவரிடம் மீண்டும் பேசிய போது கூடுதலாக சில தகவல்கள் கிடைத்தது. எங்கள் முன் இருந்த சராசரி உயரம் கொண்ட இரு  மலைகளுக்கு பின் உள்ள மலையில் தான் அந்த இருளபோங்கு (சமணர் குகை) இருக்கிறது என்பது உறுதியாகியது. மலையில் ஏறி செல்வது சிரமம் நீங்கள் காட்டு வழியாக மலையை சுற்றி போங்க அங்க ஆடு, மாடு மேய்ச்சலில் இருப்பாங்க அவர்களிடம் கேட்டு கேட்டு போங்கன்னு சொல்லி அனுப்பினார்.

      அவர் குறிப்பு சொல்லிய வழி வந்தது அதற்கு மேல் வண்டியில் போக முடியாது என்பதால் மலை அடிவாரத்தில் வண்டிய நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம், கொஞ்ச தூரத்தில் சில இளைஞர்கள் வந்தாங்க, அவர்களும் மலை சுற்றி சொல்லும் வழியே செல்லினர். காட்டில் ஆங்காங்கே மாடுகள் போட்ட சாணம் காயாமல் ஈரத்தோடு இருந்ததால் அதை மேய்ப்பவர்கள் அருகில் இருப்பார்கள் என நினைத்தோம் ஆனால் பக்கத்தில் யாரையும் பார்க்க முடியவில்லை. கொஞ்ச தூர பயணத்தில் வித்தியாசமாக சில கற்கள் வட்ட வடிவில் இருந்தது இது போன்று ஒரு முறை Youtube யில் பார்க்கும் போது கல்வட்டம் என்று சிலர் சொன்னது நினைவுக்கு வந்தது, இறந்த தம் முன்னோர்களின் நினைவாக அமைக்கப்படும் இது போன்ற தொன்மையான கல்வட்டங்கள் தமிழ் நிலம் முழுவதும் காணலாம். அதை ஆவண பதிவு செய்துட்டு தொடர்ந்தோம். ஆனால் சில தொலைவில் நாங்கள் வந்த அந்த சிறிய காலடி தடங்கள் கூட முடிந்துவிட்டது, சுற்றிலும் மரங்களும் மலைகளும் தான் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் காட்டில் தனித்து விடப்பட்டோம் அப்போது,..

     காட்டிற்குள் இருந்து வந்த சலசலப்பின் பக்கம் திரும்பி பார்த்த போது இரு பெண் பிள்ளைகள் காட்டில் மேய்ச்சலுக்கு வந்த தங்கள் மாட்டை தேடி கொண்டிருந்தனர், அவர்களிடம் குகை பற்றி கேட்டதற்கு ஒரு பெரிய பாறை இருந்த மலைக்கு வழிகாட்டி கொண்டே எங்கள் முன் நடந்து சென்றனர்.  வேள்பாரி நாவலின் தொடக்கத்தில் கபிலர், நீலன் உரையாடலில் நீலன் பேசிக்கொண்டே கபிலரை கடந்து வேகமாக போய்க்கொண்டு இருப்பான் அது போல சிறு பிள்ளைகள் காலில் செறுப்பு கூட அணியாமல் கரடுமுரடான அந்த மலை பாதையில் எங்கள் முன் போய் (ஓடி) கொண்டு இருந்தனர், அவர்களை பின் தொடர்வதே பெரும் சவாலாக இருந்தது, உடனே அவர்களிடம் பேச்சு கொடுத்து கபிலர் நீலனின் வேகத்தை தடுத்தது போல இவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் தூரத்தில் தெரியும் சில வீடுகளை காண்பித்து அது தான் தங்கள் ஊர் என்றனர், அவர்களின் மாடு அந்த பெரிய பாறை மலைக்கு பின் பக்கம் சென்றுவிட்டது போலும் ஆனால் அவர்கள் எங்களுக்கு வழிகாட்டவே உடன் வந்தனர். பெரியவள் கோபிக்கா ஆறாம் வகுப்பு, சிறியவள் சர்மிலா முதல் வகுப்பு.

       அரைமணி நேர காட்டு பாதையில் நாங்கள் பார்க்க வந்த மலைக்கு வந்து சேர்ந்தோம் உடன் வந்து வழிகாட்டிய தேவதைகள் மலையில் இருந்து தொலைதூரத்தில் தெரிந்த தங்களின் வீட்டை காண்பித்து நேரம் இருந்தா வீட்டுக்கு வாங்கண்ணே என்று கிளம்ப தயாராகினர், அவர்கள் கொண்டு வந்த தங்கள் கிணற்று நீரை குடிக்க கொடுத்து பின் வந்த வேகத்தில் கீழ் இறங்கி சென்றனர்.
       தேடி வந்த வரலாற்று தொன்மம் எங்கள் முன் இருந்தது, பெரிய குகை நீளமாகவும் நடுவில் தூண் போன்ற தாங்கியுடனும், இடது பக்கம் இரண்டு கற்படுக்கைகள் என அழகாக செதுக்கியுள்ளனர். சில இடங்களில் பாறை குறியீடுகளை பார்க்க முடிந்தது, ஆனால் அங்கு முன்னர் வந்த சில நல்ல உள்ளங்கள் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இவ்விடத்தில் தங்கள் காதல் சின்னங்களை கிறுக்கி இருந்தனர். இதனால் அங்கு இருந்த சில பாறை எழுத்துக்களும் அழிந்து இருந்தது, சிறிது நேரத்தில் அவ்விடத்தை முழுமையாக ஆவணம் செய்துவிட்டு ஓய்வெடுத்தோம், குளிர்ந்த தென்றல் காற்று எங்களை வருடிவிட சமணர்கள் படுத்துறங்கிய அதே பாறையில் தலை சாய்த்து சிறிது நேரம் உறங்கிவிட்டு கிளம்பினோம்.

     எங்கு இருக்கிறது என்று தெரியாத ஒரு இடத்தை தேடி கண்டறிந்து சென்று பார்த்தது மனதிற்கு நிறைவான தொரு பயணமாக முடிந்தது. மீண்டும் காட்டில் சந்திப்போம்.

09.08.2020
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்