சமண தொன்மங்கள் தேடல் பயணம் 2

      

     சமீபத்தில் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய #சமணமும்_தமிழும் புத்தகத்தை படித்திருந்தேன், அதில் வடாற்காடு பகுதியில் இருந்த சமணர்கள் பற்றியும் அவர்கள் வாழ்ந்த இடங்களை பற்றியும் சொல்லியிருந்தார். 

       குறிப்பாக எங்கள் ஊர் ஆரணிக்கு அருகில் பல சமண கோவில்களும், கல்வெட்டுகளும், குகைகளும் இருப்பது தெரிந்தது. நம்ம ஊர் பக்கத்திலேயே இவ்வளவு வரலாற்று தொன்மையான இடங்கள் இருப்பதை படித்த பின் இயல்பாக அவற்றை பார்க்க வேண்டும் என்ற ஆர்வும் தோற்றிக் கொண்டது. பங்காளி மதன் சில வாரங்களாக இதை பற்றியே கேட்டுட்டு இருந்தான் கடைசியில் கிளம்பியாச்சி.

       ஆரணியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ஆற்காடு செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சபாண்டவ மலை என்னும் திருப்பான் மலை சமண குகை கோவில். 

     ஆற்காடு சாலையின் அருகிலேயே ஒரு பெரிய பாறை அதன் அடியில் சமண குகைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.  சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் சர்பத் வாங்கி குடித்துக் கொண்டே கடைக்காரிடம் மலையை பற்றிய சில தகவல்களை கேட்டறிந்தோம். உள் நுழைந்தது நீர் நிரம்பிய தாமரை அல்லி குளம் நம்மை வரவேற்கிறது. அதை கடந்து சென்றால் எதிரில் 12 தூண்களை கொண்ட அழகான குகை மண்டபம். அந்த மண்டப பாறைக்கு மேல் சிறிய அளவில் சமண சிற்பம் என படித்த அனைத்தும் கண் முன் காட்சியாய் தெரிந்தது.

      அந்த 12 தூண்களும் இயற்கையாக இருந்த பாறையை குடைந்து செதுக்கியுள்ளனர். அதனுள் 6 மாடங்கள் சிலைகள் ஏதும் இன்றி காலியாக உள்ளது. குகையின் அமைப்பு பல்லவர் காலத்து குடவரை பாணியில் உள்ளது. அங்கு முடிந்த வரை முழுமையாக ஆவண பதிவு செய்துவிட்டு மலையின் மேல் உள்ள சமண சின்னங்களை பார்க்க மலை ஏறினோம். தனித்த படிகள் இல்லை ஆனால் ஏறுவதற்கு ஏதுவாக சிறிய சிறிய படிக்கட்டுகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.
      மலையின் மேல் ஆற்காடு நவாப் காலத்தில் நிறுவிய தர்கா ஒன்று உள்ளது. அதற்கு எதிரே உள்ள பாறையில் நிர்வாண நிலையில் ஒரு சமண முனிவரும் அவருக்கு அருகில் நாய் அல்லது நரி போன்ற அமைப்பில் ஒரு விலங்கும் புடை சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் ராஜராஜ சோழன் காலத்து லாடரசன் எனும் வீர சோழனின் 13 வரிகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. 

      பாறைக்கு பின் பக்கம் ஒரு இயற்கையான சுணை உள்ளது அதன் மேல் உள்ள பாறையில் மகாவீரர் தியான நிலையில் உள்ள புடைச் சிற்பம் காணப்படுகிறது. அருகில் யக்சி என்ற பெண் துறவியும் நான்கு சமண முனிவர்களின் உருவங்களும் புடை சிற்பங்களாகக் காணப்படுகின்றன. அந்த சிற்பங்களுக்கு மேல் நந்திவர்மனின் மூன்று வரிகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. அந்த பாறையின் அடியில் சமணக் குகை மற்றும் சமணப்படுக்கைகள் காணப்படுகிறது. வெயிலும் பசியும் அதிகமாக இருந்ததால் விரைவாக மலையில் இருந்து விரைவாக இறங்கிவிட்டோம்.

      ஆற்காடு பக்கம் வந்துட்டு பிரியாணி சாப்பிடாம போனா அப்புறம் பிரியாணியே நம்மை கோவித்து கொள்ளும், பிரியாணிக்கு பிரபலமானது ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகள். என கண்ணமங்கலம் போகிகிற வழியில் பிரியாணி சாப்பிட்டு செல்ல நினைத்தோம், சாலை ஓரம் தள்ளுவண்டி கடையில் சுட சுட சிக்கன் பிரியாணி கிடைத்தது, சாப்பிட்டு ஊர் வந்து சேர்ந்தோம், வரும் போது கண்ணமங்கலம் காப்புகாட்டு பகுதியை கடந்து வந்தோம் சுற்றிலும் அழகான மலைகளும், அடர்ந்த காடுகளும் இருந்ததை பார்த்தாச்சி நிச்சயம் அடுத்த முறை மலையேறிட வேண்டியது தான்.

பனை சதிஷ்
26.08.20

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்