சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3



      எங்க ஊர் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 4km தொலைவில் பூண்டி எனும் சிறிய கிராமத்தில் சமண கோவில் இருப்பதை ஏற்கனவே நாம் கூறியிருந்த #சமணமும்_தமிழும் என்ற புத்தகத்தின் மூலமும் சில நண்பர்கள் மூலமும் தெரிந்துகொண்டோம். சமண தேடலில் கடந்த பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வாரம் அவ்விடத்தை பார்க்க செல்வோம் என பங்காளி மதன் கூறியிருந்தேன்.

          காலையில் மிக தாமதமாகவே கிளம்ப முடிந்தது, கடுமையான வெயில் ஆனாலும் அங்கு சென்று பார்த்துவிட வேணும் என்ற எண்ணம் திடமாக இருந்தது, ஊரில் இருந்து 15நிமிட பயண தூரத்தில் தான் அவ்விடம் இருக்கிறது ஆனால் இதுநாள் வரை அங்கு சென்று பார்த்தது இல்லை.

      சோழ கட்டிடகலையின் நுட்பதோடு அழகாக இருந்தது பொன்னெழில் நாதர், பாசுவநாதர் கோவில். கோவிலுக்குள் மிக நேர்த்தியாக பாசுவநாதர், ஆதிநாதர் (ரிஷபதேவர்), நவதேவதா, சந்திரபிரபு, தர்மதேவி சிலைகள் மேலும் ஒரே கல்லில் அமைய பெற்ற 24தீர்த்தங்கர்களின் உருவங்கள் என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.

          பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையில் உள்ளார். மேலும் சக்கரேஸ்வரி, பத்மாவதி போன்ற பெண் தெய்வங்களுக்கும், பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி போன்ற இந்து சமயக் கடவுளர்க்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜ்வாலா மாலினி பெண் தெய்வத்திற்கு தனிக் கருவறை இக்கோயிலில் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் கோட்டங்கள் அமைந்துள்ளன. ஆனால் அவை வெற்றுக் கோட்டங்களாகவே உள்ளன. விமானத்தின் தள உறுப்புகளில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் சுதையால் ஆனவை.

        கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இங்கிருந்த பொன்னிநாதர் என்ற சமணப் பெரியோர், வீர வீரன் என்னும் சம்புராய அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின் படி சம்புராயர்கள் இக்கோயிலை அமைத்து கொடுத்ததாகவும், அதனால் வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டும், சில கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று இங்குள்ள ஆசிரியப்பா கூறுகின்றது.

        கி.பி 11 நூற்றாண்டை சேர்ந்த  சம்புவரார்களின் பாடல் கல்வெட்டொன்று இக்கோயிலை “வீர வீர ஜீனாலயம்” எனக் குறிப்பிடுகிறது. நாட்டுப்பிரிவு முதல், எல்லை கூறி கல் நடுதல் வரை முழுமையும் பாடலால் அமைந்த கல்வெட்டு இங்கு காணப்படுகின்றது. 
  
        நாங்கள் செல்கையில் அங்கு புரணமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்து,  தற்போது இக்கோவிலை நிர்வகிக்கும் சமண குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருந்தனர், எங்களின் வருகை அறிந்து அந்த கோவிலை பற்றியும் இங்கு சமண வரலாறு பற்றியும் அவர்களின் பாணியில் விரிவாக விவரித்தனர். அதில் சமணர்களது வரலாறு, அவர்களின் தற்போதைய பழக்க வழக்கங்கள், சமண முனிகளின் விரதங்கள், அவர்களின் உணவு பழக்கங்கள், இன்றும் கடைபிடிக்கப்படும் நெறிகள் என விரிவாக நம்மிடம் பேசினர். நமக்கு அருகிலேயே இருந்த 1000ஆயிரம் ஆண்டுகால வரலாற்று தொன்மத்ததை பார்த்தது ஆவணப்படுத்தியது அதை பற்றி ஏதும் தெரியாமல் சென்று பின் முழுமையாக தெரிந்து கொண்டது என இப்பயணம் மனநிறைவை கொடுத்தது. தேடல் தொடங்கும்.
        மதிய உணவு முடித்த பின் 20km தொலைவில் ஆரணி - வந்தவாசி சாலையில் இருந்த கிளைப்பனையை பார்க்க கிளம்பினோம், அதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

30.08.20
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

"அழிவின் விளிம்பில் அதிசய கிளைப்பனை"