ஜவ்வாது மலை கானுலா - 4


ஜவ்வாது மலை காட்டுப்பயணம் வித் தம்பி

   அன்பு நிறைந்த உள்ளங்களையே காடுகள் எப்போதும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது. அப்படி காடுகளோடு தன்னையும்  இணைத்துக் கொள்ள தம்பி சந்தோசு சென்னையில் இருந்து நீண்ட தூரம் பயணித்து சனிக் கிழமை காலை 25.10.20 ஆரணி வந்து சேர்ந்தான்.

     முதலில் அவனை கூட்டிக் கொண்டு சவ்வாது மலை தொடரில் உள்ள படைவீடு அடுத்த கோட்டைமலைக்கு செல்வதாக தான் திட்டம் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்யும் கடும் மழையால் மலை பாதை சேதாராம் ஆகியிருக்கும் எனவே வாகனத்தில் அங்கு செல்ல இயலாது. அதனால் போளூர் வழியாக சவ்வாதுமலையில் ஏறுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். தம்பி புதிதாக ஊருக்கு வந்ததால் வழியில் பார்த்த சிறுசிறு குன்றுகள், குட்டிக் காடுகள், ஆள் இல்லாத நெடுஞ்சாலை, கருமேக நிழல் சூழ்ந்த வயல்வெளிகள் என அவன் பார்த்த அனைத்தும் அவன் உள்ளங்களை கவர தவறவில்லை, சென்னை வாசியான அவனுக்கு வழியில் சாப்பிட்ட 10ரூபாய் இளநீர் கூட ஆச்சரியத்தையே கொடுத்து இருந்தது.

   ஒரு வாரமாக பெய்யும் மழையால் ஜவ்வாதுமலை எங்கும் பச்சை போர்த்தியது போன்று புற்கள் நீண்டு இருந்தது. அதிக உயரம் இல்லாத மலைகள் தான் ஆனாலும் மேலே செல்ல செல்ல மேற்கு தொடர்ச்சி மலைகளின் குளுமையை இங்கும் நாம் உணரலாம். தம்பி சித்த மருத்துவம் படித்துள்ளதால் நாங்கள் வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்த இடங்களில் எல்லாம் அவன் கண்ணில் ஏதேனும் ஒரு முலிகைச்செடி தெரிந்தது, உண்மையில் நமக்கு கிடைத்த முக்கிய அறிவு பொக்கிசம் தம்பி கூறிய மூலிகை செடிகள் பற்றிய தரவுகள், இந்த மலை தொடர் முழுக்க இன்னும் யாரும் பார்த்திடாத எண்ணற்ற மூலிகைகள் இருக்கலாம் அவற்றை ஆவணபடுத்த நிச்சயம் அடுத்த முறை தம்பியை அழைச்சிட்டு போகனும்.


   மதியம் 2மணி இருக்கும் ஜமுனாமரத்தூர் டவுன் சென்று சேரும் போது. கொரானா குறித்த எந்த பீதியும் இல்லாமல் வழக்கம் போல இருந்தன கடை வீதிகள். காவலூர் செல்லும் சாலையில் இருந்த கடையில் சிக்கன் பிரியாணி (சுமாராக தான் இருந்தது) சாப்பிட்டு, பீமன் அருவிக்கு சென்றோம் ஆனால் அங்கு இன்னமும் அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. பிறகு காவலூரில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட வைணு பாபு வான்வெளி ஆராய்ச்சி நிலையம் சென்றோம் ஆனால் அங்கும் அனுமதி இல்லை. கடைசியாக ஜமுனாமத்தூரில் உள்ள கோமுட்டேரியின்  கரையில் அமர்ந்து உரையாட தொங்கினோம். மணி 4 ஆகியது இதற்கு மேல் இருந்தால் கீழ் இறங்கும் முன் இருட்டிவிடும் என்பதால் கிளம்ப தயாரானோம். வந்த வழியே அல்ல இதுவரை பார்த்திடாத போகாத வழியில்.

     என் காட்டுப்பயண நண்பர் அன்பு ஒரு முறை செங்கத்தில் இருந்து தென்மலை, புலியூர் வழியாக சென்ற போது அத்திப்பட்டு ஜமுனாமரத்தூர் செல்லும் சாலை அடர்ந்த காட்டு பாதையாகவும், நீர் ஓடைகள் அதிகம் உள்ள பகுதி எனவும் செல்லியிருந்தார், இம்முறை நிச்சயம் அவ்வழியே செல்லலாம் என முடிவெடுத்தோம், ஆனால் மலை ஏற்கனவே இருட்ட ஆரம்பித்துவிட்டது. பயணம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே தெரிந்த ஆம் இது நண்பர் கூறியது போன்றே அழகான மலைப்பாதை தான் வாகன நெரிசல்கள் இல்லாமல் தனிமையில் இருந்தன, அடுத்த காட்டுப்பயணம் நிச்சயம் இந்த மலைப்பாதையாக தான் இருக்க வேணும் மதன் பங்காளி, வழி நெடுக நீர் ஓடைகள், மரங்கள் அடர்ந்த மலைகள், தனிமையான பாதை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இன்பத்தை கொடுத்தது. சூரிய கதிர்கள் அடர்ந்த மரங்களின் உள் புகுந்து வந்துசேர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது, புதிய பாதையில் சென்றதால் இருட்டுவதற்கு முன் மலையை விட்டு இறங்க வேண்டும் என்பதால் பெரிதாக எங்கெயும் இறங்கி பார்க்காமல் ஒரு சில இடங்களில் மட்டும் ஓடைகளை பார்த்து விட்டு மாலை 6மணிக்கு செங்கம் வந்தடைந்து தேநீர் குடித்துவிட்டு வரும் வழியில் தூரத்தில் தெரிந்த இதுவரை போய் பார்த்திடாத பர்வமலையை ஏக்கத்தோடு பார்த்துகடந்து வீடு வந்து சேர்ந்தோம்.

சமண கற்படுக்கை (ஆசீவக் குகை) 26.10.20


இந்த பயணத்தில் தம்பி விரும்பி பார்க்க வேணும் என்ற இடம் தான் பூசிமலைக்குப்பம் சமண இருளர் போங்கு (ஆசிவக் குகை). பல முறை அந்த குகைக்கு சென்று வந்துள்ளோம் ஆனால் என்றைக்கும் இல்லாதது போல் வெயில் அன்று சன்று கடினமாகவே இருந்தது, ஆனால் குளிர்ந்த காற்று களைப்பு இல்லாமல் செய்தது. உடலை கீறும் முள்புதர்கள் உள்புகுந்து, நீண்ட காட்டு நடைக்கு பின் குகையை வந்தடைந்தோம். மேலும் தம்பி சொன்னான் எங்கெல்லாம் சமண கற்படுகைகள் உள்ளனவோ அவை அனைத்தும் ஏதோவொரு ஆசிவக் எச்சமாக தான் இருக்கும் என்பது பேரா.நெடுஞ்செழியனின் கூற்று என.  சில நேரம் அந்த குகையில் இருந்தும் பாறை உச்சிக்கு சென்று மொத்த காட்டையும் சுற்றி பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

சில மனஇறுக்கத்திற்கு இடையே தம்பியோடு இருந்த இரண்டு நாள், காட்டிற்குள் நடை, மலையேற்றம், ஓடை, மலைப்பாதை என தம்பியோடும் காடுகளோடும் அழகாக கழிந்தன வார இறுதி நாட்கள்.

   காட்டுப்பயணம் எப்போதும் புதிய அனுபவங்களை கொடுக்க தவறுவதில்லை, இந்த பயணத்தில் தம்பி சொன்ன மூலிகைச்செடிகளின் மருத்துவ குறிப்புக்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை அவைகளை பற்றி தனியாக ஒரு தேடலை நாம் முன்னேடுக்க வேணும். நன்றி மீண்டும்  காட்டினுள் சந்திப்போம்.


பனைசதிஷ்

25.10.20

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்