ஜவ்வாது மலை கானுலா - 5


#குள்ளர்_குகை (megalithic site)

     ஜவ்வாது மலை பல ஆச்சரிய, அதிசயங்கள் நிறைந்த இடம், மலையேற்றத்திற்கும், மலை பயணத்திற்க்கும் ஏதுவான இடம், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை மட்டும் ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு ஏற்ற இடம். இந்த மலைக்கு கிழக்கே 30-40 கி.மீ தூரத்தில் தான் எங்கள் ஊர் (ஆரணி) உள்ளது, எனவே தான் இந்த கொரோனா காலத்தில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் மலைக்கு போக முடிந்தது, ஆனால் ஒவ்வொரு முறை இந்த மலைக்கு போகிற போது பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு பார்க்க முடியாமல் இருந்த இடம் தான் கீழ்சிப்பிலியில் இருக்கும் குள்ளர் குகைகள், ஆனால் எப்படியும் இந்த முறை பயணத்தில் குள்ளர் குகையை பார்த்தே தீர வேணும் என்ற வேட்கையோடு பங்காளி மதன் உடன் காலை 8.30ணிக்கு ஊரில் இருந்து கிளம்பினோம்.

குள்ளர் குகை:-

     2300 - 2500 ஆண்டுக்கு முன் பெருங்கற்காலத்தில் (megalithic period) வாழ்ந்த குள்ள மனிதர்களால் கட்டப்பட்டதாகவும், முன்பு மலைகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இறந்த தம் முன்னோர்களை அடக்கம் செய்ய அமைக்கப்பட்ட ஈமச் சின்னம் என்றும் வரலாற்று ஆய்வாளார்களால் சொல்லப்படகிற சிறிய அளவிளான கற்கூடாரம் தான் இந்த குள்ளர் குகைகள். 

குள்ளர் குகைக்கு செல்லும் வழி:- 

     ஆரணியில் இருந்து போளுர் வழியாக ஜமுனாமரத்தூர் போகும் மலைப் பாதையில் சென்றால் பட்டறைக்காடு என்ற சிறிய மலை கிராமத்திற்கு அடுத்து இடது பக்கமாக உள்ள புதூர் என்ற கிராமத்தில் இருந்து 7 - 8 கி.மீ சவால் நிறைந்த மலை பாதை வழியே சென்றால் கீழ்சிப்பிலி என்ற மலைகிராமம் வரும் அங்குள்ள வாலிப்பாறை என்ற மலையின் மேல் ஏறினால் குள்ளர் குகையை காணலாம். இதை படிக்கும் பாதை எளிதானது தோன்றலாம்.
 
     ஆனால் நாம் நினைப்பது போல் இந்த மலைப்பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. சில நாட்களாக இந்த பகுதியில் பெய்யும் கடுமையான மழையால் மலைப் பாதையின் ஏற்ற, இறக்கமான மண் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது. (கோடை காலத்தில் சென்றால் பாதை ஓரளவு சரியாக இருக்க வாய்ப்புண்டு). சில இடங்கள் பாதை பெரிய ஏற்றமாக இருந்தது அதுவும் வழுக்கிவிடும் மண் சாலை தான் எனவே ஒரு கட்டத்தில் திறம்பிவிடலாம் என நினைத்தோம், ஆனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி வழுக்கி விழுந்த பின் நிச்சயம் முன்னேறி சென்றே ஆகவேண்டும் என்று தான் தோன்றியது.

     கீழ்சிப்பிலி செல்லும் மலைப் பாதையில் வழி நெடுக இருந்த சிறு சிறு நீர் ஓடைகள் மனதிற்கு கொஞ்சம் உத்வேகத்தை கொடுத்தது. அங்காங்கே சில மலை கிராமங்களை பார்த்த பிறகு தான் நாம் காட்டுப் பாதையில் தனித்துவிடப்படவில்லை என்பதை உணர்ந்தோம். ஒரு வழியாக கடல் மட்டத்தில் இருந்து 800 - 900மீ உயரத்தில் இருக்கும் கீழ்சிப்பலி மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்த ஒரு மலையேற்றம் ஆனால் அது நடந்து தான் போக முடியும். கீழ்சிப்பிலி கிராமத்திற்கு தெற்கே தெரியும் வாலியம்பாறை என்ற மலையில் ஏற வேண்டும்.

     ஆனால் அங்கு செல்ல முறையான வழி ஏதும் இல்லை மலையில் நீர் வழிந்தோடிய தடத்தின் வழியை பார்த்து தான் மேல் செல்ல முடியும் போல் இருந்தது அது கூட சரியாக இல்லை, பிறகு அங்கு இருந்த மலை மக்களிடம் பாதையை கேட்டுக்கொண்டு மேலே ஏறினோம். அடர்ந்த மரங்கள், பாறைகள் இருக்கும் மலையில் ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வழி தெரியாமல் மலையின் மீதே அலைந்து கொண்டு இருந்தோம், அப்போது நேரம் பார்க்கையில் மணி உச்சி பகல் 1.30 தான் கடந்து இருந்தது, ஆனாலும் மரங்களின் கொப்புகளில் உட்புகுந்து மிககுறைந்த சூரிய ஒளியே காட்டுத் தரையில் விழுந்தது. பாதையை விரைவில் இருள் சூழ்ந்துவிடும், ஆனால் அதற்குள் ஒரு வழியாக கிராம மக்கள் சொல்லி அனுப்பிய பாறையை பார்த்துவிட்டோம், அடுத்த சிக்கல் அந்த பாறை மீது ஏறுவதற்கு வழியில்லாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தோம் அதனால் நேரமும் விரயம் ஆனது, வெளிச்சமும் குறைந்து கொண்டே வந்தது.

      பிறகு காட்டு புதர்களை விலக்கி கொண்டு ஓரளவு முன்னோக்கி சென்றோம், மலைக்கு மேலே பட்டாசு வெடிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்து. அந்த சத்ததை பின் தொடர்ந்தே மேலேறினோம், மேல் பாறைக்கு வந்த பின் எதிரே மலை கிராமத்தை சேர்ந்த சில சிறுமிகள் புத்தாடையோடு பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தனர், அவர்களிடம் விசாரிக்கையில் குள்ளர் குகை இருக்கும் இடத்திற்கு தான் தாங்களும் செல்வதாக கூறினர், அவர்களோடு பல கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இருந்தனர், அவர்களை பின் தொடர்ந்தோம். ஆனால் மலைக்கு மேல் வந்தும் நீண்டு சென்றது அடர்ந்த காட்டுப்பாதை.

     கடைசியாக எதற்காக இவ்வளவு சவால்களையும், வலிகளையும் தாங்கி கொண்டு வந்தோமோ, அந்த குள்ளர் குகையை நேரில் கண்கிறோம். உண்மையில் இந்த குகைகளை யார் பார்த்தாலும் குள்ள மனிதர்கள் வாழ்ந்து இருப்பார்களோ என்ற ஐய்யம் தான் தோன்றும். ஒவ்வொரு குகையும் அவ்வளவு நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தது. முழுக்க முழுக்க கற்களை கொண்டு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அந்த வாலியம்பாறை மலையை சுற்றிலும் இருந்த பள்ளத்தாக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கவிதைகளை சொன்னது. மேலே கண்ட காட்சிகள் அனைத்தையும் முடிந்த அளவிற்கு ஆவணப்பதிவு செய்து கொண்ட பின் ஓய்வெடுத்தோம். பிறகு அந்த சிறுவர்கள் கிளம்பும் போது அவர்களோடே கீழ் இறங்கி வந்தோம். நாங்கள் மேலே ஏறிய வழி வேறு கீழ் இறங்கிய வழி வேறு, இறங்கும் போது அந்த மலை கிராம சிறுவர்களோடு சரியான வழியில் வந்தால் விரைவாக மலையில் இருந்து இறங்கிவிட்டோம்.

     மேலிருந்து விரைவாக வந்தது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அடுத்த சவால் மீண்டும் அதே சேறும் சகதியும் நிறைந்த மலைப்பாதையில் சென்றாக வேண்டியுள்ளதால் சற்று மனச்சேர்வு. ஆனால் இந்த காடும், மலையும், மரங்களும் நம் எண்ணத்தை உணர்பவை அவைகளே நம்மை வழிநடுத்துபவை. எங்கள் பாதுகாப்பை அவற்றிடம் கொடுத்தோம், எந்த பாதிப்பும் இல்லாமல் விரைவாக ஜமுனாமரத்தூர் செல்லும் மலையை வந்து சேர்த்துவிட்டது. இப்பவும் மலைக்கு மேல் தான் இருப்பதால் இதமான குளுமை. பிறகு நாம் சென்ற பயணப்பதிவில் பார்த்த ஜமுனாமரத்தூர் - அத்திப்பட்டு - செங்கம் மலைப்பாதையில் போக வேண்டும் என பங்காளி மதன் ஆசைப்பட்ட அந்த வழியாக கீழ் இறங்கி வந்தோம் வருகிற வழியில் இருந்த ஆசியாவிலேயே 1000 ஆண்டுகள் பழமையான மேல்பட்டு கிராமத்தில் இருக்கும் நீர்மருது மரத்தை பார்த்தோம். பிறகு மலை பாதையில் இருந்த நீர் ஓடைகளில் ஓய்வெடுத்து பின் ஒரு வழியாக முன்னிரவு 9மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்...
இந்த பயணத்தில் உடன் இருந்த பங்காளி மதன், இந்த இடத்தை பற்றி அறிமுகத்தை கொடுத்த திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவ ஒருங்கிணைப்பாளர் பாலா அண்ணன் அவர்களுக்கும், மலையில் வழிகாட்டிய அந்த குட்டி தேவைகளுக்கும், மேலும் எங்களை அரவணைத்த இந்த காட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள். காட்டோடு பயணம் தொடர்வோம்.

பனைசதிஷ்
14.11.2020

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்