ஜவ்வாதுமலை கானுலா - 6


ஜவ்வாது மலைக்காட்டு பயணம்
     தூவான பொழுதில் ஜவ்வாது மலையின் மடியில் தவழந்த அற்புத தருணம்.

     புயல் மழையால் கடந்த இரு வாரமாக ஜவ்வாது மலைக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த நேரத்தில், எங்களுக்காகவே வானம் மேகங்கக் கூட்டங்களை சற்று களைத்து விட்டது போலும். மழை எந்நேரமும் வந்துவிடும் என்பதால் அருகில் உள்ள காட்டுக்கு போவோம், தூரமாக செல்ல வேண்டாம் என பங்காளி மதன் சொன்னான் அதனால் ஆரணியில் இருந்து 15கி.மீ மேற்கில் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இருக்கும் படைவீடு பகுதிக்கு  செல்வதாக முடிவு செய்தோம்.

     இந்த புயலில் கிடைத்த பெருமழையால் காட்டாற்று வெள்ளமும் அதனால் ஏரிகள், குளங்கள் ஒவ்வொரு ஊரும் நீரால் நிரம்பி வழிந்தது, முதலில் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் பகுதியில் உள்ள ஏரியின் உபரி நீர் பல மதகுகளை கடந்து வெளியே ஓடிவருவது பார்க்க ரம்மியமாக இருப்பதால் அந்த பகுதியே சிறிய சுற்றுலா தலம் போல் மாறியிருந்ததை செய்திகளில் பார்த்து பின் முதலில் அங்கு சென்று பிறகு அங்கிருந்து படைவீடு செல்வோம் என முடிவு செய்தோம், ஏரி நீரில் ஆட்டம் போட்டு விட்டு கிளம்பும் போது அமிர்தி காட்டுபகுதி அருகில் தானே இருக்கு அங்கு போவோமா என கேட்டேன் ஆனால் நிவர் புயல் போது வந்த கடுமையான மழையால் அமிர்தியில் உள்ள நாகநதியில் காட்டாற்று வெள்ளம் சாலையை துண்டித்ததால் அந்த காட்டு பகுதியை கடந்து செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது என்பது நினைவுக்கு வந்தது. அதனால் அங்கிருந்து கிளம்பி படைவீடு செல்ல பயணமானோம், ஏற்கனவே பலமுறை இந்த பாதையில் வந்திருக்கிறோம் ஆனால் இம்முறை மழையும், மலையும், காடும், வயலும் என அற்புதமான பாதையாக மாறியிருந்தது படைவீடு செல்லும் சாலை. 
    ஒரு இடத்தில் சாலையோரம், இரண்டரை அடி உயரம், ஒன்னரை அடி அகலம் இருக்கும் ஒரு கல்லில் மஞ்சள் புடவை சுற்றி கட்டி இருந்தது, பார்த்ததும் நிச்சயமாக அது கல்வெட்டாக தான் இருக்கும் என நினைத்தேன் ஆம் அது பழமையான கல்வெட்டு  தான் அதை பற்றி பிறகு விரிவாக பார்ப்போம்.

     கடந்த முறை ஜவ்வாதுமலையில் உள்ள தென்மலை அத்திப்பட்டு காட்டு அருவிக்கு செல்வதற்காக Google Satellite Mapல் அந்த அருவியை தேடும் போதும் பலமுறை காட்டு பயணங்களின் போதும் சில ஊர்களின் எல்லை புற கற்பலகையில் பார்த்த கனமழை ஊராட்சி இந்த படைவீடு பகுதிக்கு பின்புறம் உள்ள மலைக்கு மேல் தான் இருக்கிறது என்பது தெரிந்தது, அதிலிருந்து எப்படியாவது அந்த கனமழை மலைகிராமத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்தோம் ஆனால் இம்முறையும் கடுமையான மழையால் மண் பாதையை கொண்ட மலைமீது வானகத்தில் செல்வது இயலாது ஆனால் அந்த காட்டு பாதையின் அடிவாரம் வரையயாவது சென்று பார்த்துவிட்டு வருவோம் என கிளம்பினோம், பிரதான சாலையில் இருந்து இரண்டு கி.மீ குறைவான தூரத்திலேயே காடு ஆரம்பித்து விடுகிறது. அங்கு எதிரே வந்த பெரியவரிடன் விசாரிக்கையில் மேலே போகும் பாதை முற்றிலும் சேரும் சகதியுமாக இருக்கும், 100மீ தூரத்தில் ஒரு காட்டு ஓடையில் இருந்து நீர் கொட்டுவதை வேண்டும் என்றால் பார்த்துட்டு திரும்பிடுங்க என்று சொல்ல, காட்டுக்கு கொஞ்சம் உள்ளே சென்றோம்.

     அவர் சொல்லியது போலவே அதிக வேகத்தோடு ஒரு காட்டு ஓடை காட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வருகிறது, அந்த ஓடையோடு சிறிது நேரம் விளையாடி விட்டு படைவீடு வந்து சேர்ந்து, எப்போதும் பிரியாணி சாப்பிடும் உமர் பாய் கடையில் சாப்பிட்டு வீடு திரும்பினோம், படைவீட்டில் இருந்து சந்தவாசல் வழியாக எங்கள் கிராமத்திற்கு செல்வது தான் பக்கம் அதனால் அந்த வழியே 5கி.மீ சென்றிருப்போம். அப்போது தான் நினைவுக்கு வந்தது செண்பகத்தோப்பு அணை பார்க்காமல் வந்து என்பது, மீண்டும் திரும்பி குறுக்கு வழியில் மூகக்காடு மலைப்பகுதியை ஒட்டி செல்லும் பாதையில் அணைக்கு சென்று கொண்டிருந்தோம். வழியில் இரு இடங்ளில் சாலையை ஊடறுத்து காட்டு ஓடை தன் வேகத்தை குறைக்காமல் ஓடிக்கொண்டிருந்தது, ஊர்காரர்களின் உதவியோடு ஓடையை கடந்து அணையை வந்தடைந்தோம், செல்கின்ற வழிநெடுக மலைகளில் மோதும் மூடுபனி பார்ப்பதற்கு அவ்வளவு மனநிறைவான காட்சியை கொடுத்தது. சென்ற முறை பார்க்கும் அணையில் நீர் இருப்பு குறைவாக தான் இருந்தது, ஆனால் இப்போது மழையால் அணை நிரம்பி வழிகிறது. அணையின் அடிக்கணுவில் இருந்து பெருத்த வேகத்தோடு கட்டுக்கடங்காமல் பொங்கி வரும் நீரையே பார்த்துக் கொண்டே இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை.
     மாலை நெருங்கிவிட்டது, தூவானமும் தொடங்கி விட்டது. வீடு வந்து சேர்கையில் மழையோடு வந்து சேர்ந்தோம்.

06.12.2020
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்