ஜவ்வாது மலை கானுலா - 7


ஜவ்வாதுமலைக் காட்டுப் பயணம்

      பயணம் செல்வது அதுவும் காடுகளுக்குள் பயணமாவது போன்ற அதீத மன கிளர்ச்சியை வேற எது கொடுத்திடும் என்பதை பற்றி நான் சிந்திப்பது கூட கிடையாது, காடுகள் அழைக்கின்றன நான் உள் செல்கிறேன், அதனோடு உரையாடுகிறேன் இதுவே இந்த பிணைப்பு போதுமானதாக இருக்கிறது.

     ஜவ்வாது மலையில் பார்த்திடாத, அறிந்திடாத மர்மங்கள் இன்னும் எவ்வளவு இருக்கோ என்ற கேள்வி தான் இந்த பயணத்திலும் என்னுள் கேட்டது. 

     ஞாயிறு அன்று பனிமூட்டதினோடு பயணித்து காலை 7க்குள் பங்காளி மதன் உடன் பனையேறி ராஜிவ் காந்தி அண்ணா ஊருக்கு சென்று அவரை சந்தித்தோம், அப்போது இந்த பருவத்தில் தான் இறக்கிய முதல் பனம்பாலை எடுத்து கொடுத்தார், அதை பருகிய பின் பனையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து நெடுநேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி, சென்ற வாரமே போக வேண்டும் என திட்டமிட்டு இருந்த ஜவ்வாது மலையின் கிழக்கு எல்லைப்புற மலை கிராமமான கனமழை ஊராட்சி நோக்கி பயணமானோம்.

     சென்ற வாரம் போகும் போது அந்த மலையின் அடிவாரம் வரை தான் செல்ல முடிந்தது, அப்போது புயல் காரணமாக பெய்த கடுமையான மழையால் மலைப்பாதை முழுக்க சேறும், சகதியுமாக இருந்தது அதனால் வானத்தில் மேற்கொண்டு செல்ல இயலாமல் திரும்பி வந்துவிட்டோம்.

       இந்த ஒரு வாரம் மழை இல்லாததால் மலைப்பாதை காய்ந்து சீராக இருக்கும் என நினைத்து கிளம்பிவிட்டோம். ஆனால் நினைத்தது போல மலைப்பாதை அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. மலைப்பாதை முழுக்க கடும் மழையால் அறுக்கப்பட்டுள்ளது, மேலும் பாதை முழுவதும் சிறிய சிறிய பாறைகள் கற்கள் என வாகனத்தை முன்னோக்கி செலுத்த முடியாமல் திணறினோம். (இரு இடங்களில் தவறியும் விழ நேர்ந்தது)

     ஆனால் போகிற வழியில், மழை நீர் மரங்களின் அடியில், பாறைகளில் தேங்கி அங்கிருந்து மரங்களின் வேர் மூலம் துளி துளியாக கீழ் இறங்கி ஓடையாக மாறும் அந்த அற்புத அமைப்பை வழி நெடுக நேரடியாக பார்க்க முடிந்தது.

     ஒரு வழியாக மலைக்கு மேல் வந்துட்டோம் தூரத்தில் சில குடிசைகள் தெரிகிறது, ஆனால் ஒரு இடத்தில் பாதை முற்றிலுமாக சேறு நிறைந்து இருந்தது ஏற்கனவே அந்த வழியாக சென்ற அந்த மலை கிராம நபரின் வாகனமும் சேற்றில் மாட்டிக் கொண்டு இருந்தது, அவருக்கு உதவி செய்து வாகனத்தை மேல் தூக்கிவிட்டோம். அதுவே பெரிய சிரமமாக இருந்தது எனவே எங்கள் கனத்த வாகனத்தோடு இதற்கு மேல் கொண்டு செல்ல முடியாது, நேரமும் மதியம் 1.30கிட்ட ஆகிவிட்டது சரி திரும்பிவிடுவோம் என்று மேலிருந்து கிளம்பிட்டோம். விரைவாக திரும்பியதற்கு காரணமும் இருக்கு.

     காரணம்:- மலையின் அடிவார காட்டின் உள் நுழைந்ததும் நம்மை வாஞ்சை அழைத்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது அழகிய காட்டு ஓடை, பாறைகளை முட்டி மோதும் அதன் சத்தம் அவ்விடத்தை வசீகரித்துக் கொண்டிருந்தது, அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை சலசலக்கும் இந்த ஓடை மலைக்கு மேல் போகும் வரை கூடவே வரும் என்று.

     கனமழை கிராமம் கடல் மட்டத்தில் 700மீட்டர் மேல் உயரத்தில் தான் இருக்கும் அந்த கிராமத்திற்கு செல்லும் மலைப் பாதை முழுக்க முழுக்க இந்த காட்டு ஓடையின் ஓரமே அமைந்திருந்தது. ஓடை நீர் சில இடங்களில் மட்டும் மரங்கள், புதர்களுக்குள் புகுந்து வந்து கொண்டிருந்தது, ஆனாலும் அதன் சத்தம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. 

     ஓடை சில இடங்களில் பெரிய பாறைகளை தாண்டி குதித்துக் கொண்டு இருந்தது, பார்ப்பதற்கு சிறிய சிறிய அருவி போன்றே இருந்தது, அதனால் மேலே செல்லும் போதே முடிவு செய்துவிட்டோம் நிச்சயம் திரும்பி வரும் போது இங்கு ஆட்டம் போட்டுவிட்டு தான் போக வேணும் என்று.

     பல மாதங்கள், பல பயணங்கள் கழித்து மீண்டும் ஒரு அழகான காட்டு ஓடையோடு நேரம் போவது தெரியாமல் விளையாடிவிட்டு பின் மாலை வீடு வந்து சேர்ந்தோம். சந்திப்போம் மீண்டும் காட்டினுள்.

13.12.2020
பனைசதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்