பனங்கள் தொன்மை பகுதி 2

கள்ளின் தொன்மை

பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைச் சேகரித்து ஒரே இடத்தில் விற்கும் முறை தமிழகத்தில் பழமையான ஒன்றாகும். சங்க நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி மதுரை நகரின் அங்காடித் தெருக்களை வருணிக்கும் போது கள் விற்கும் கடையையும் வருணிக்கிறது.

கள் விற்கும் கடை என்பதை அடையாளம் காட்டும் வகையில் கடையின் மீது கொடிகள் பறந்து கொண்டிருந்ததை, 'கள்ளின் களிநவில் கொடியொடு' (372) என்று குறிப்பிடுகிறது

பதிற்றுப்பத்திலும் (58:9-11) 'கள் கொடி நுடங்கும் (அசையும்) ஆவணம் புக்கு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது (ஆவணம் என்றால் கடைத்தெரு). இங்கு கள் குடிப்போர் காரம் மிகுந்த இஞ்சி அல்லது புளிச்சுவை கொண்ட பழங்களைத் தொடுகறிபோல் பயன்படுத்தியுள்ளனர்.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், தான் நடத்திய போரில் வெற்றி பெற்றதும், கூத்தர்களுக்குக் கொடையாகக் கள் நிரம்பிய குடங்களை வழங்கினான். இச்செய்தியை, பரணர் என்ற கவிஞர் (பதிற்றுப்பத்து 42:10 -13)

இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச்
சாந்து புறத்து எறிந்த தகம்பு துளங்கு
தீம் சேறு விளைந்த மணிநிற
மட்டம் ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்த

என்று வருணித்துக் கூறுகிறார். 

இத்தொடர்களின் பொருள் வருமாறு

இஞ்சியும் பூவும் விரவத் தொடுத்த மாலையினைக் கழுத்தில் கட்டிச் சந்தணத்தை வெளிப்பகுதியில் தெளித்து இருக்கையில் வைக்கப்பட்டுக் களிப்பு மிகுதியில் அசையும் கள்ளுக்குடங்களிலுள்ள நீலமணியின் நிறம் கொண்ட சுவை மிகுந்து விளைந்த மதுவினை ஒம்பாத கொடைப்பண்பினால் மகிழ்ந்து அளித்தாய் (பரிமணம். ஆமா 2003:146).

இச்செய்யுளில் இடம்பெறும் முதல் இரு தொடர்களுக்குப் பழைய உரையாளர் தந்த விளக்கம் மிக நுட்பமான ஒன்று. கள் வைக்கபட்டிருந்த குடத்திற்கு சந்தனம் பூசி, இஞ்சியும் பூவும் கலந்து கட்டிய மாலை சூடப்பட்டிருந்தமைக்கு அவர் தரும் விளக்கத்தின் சாரம் வருமாறு
(பரிமணம். ஆமா 2003:143)

மது அருந்துவோர் இடையிடையே கடித்து இன்புறுதற்காக இஞ்சியும் முகர்ந்து இன்புறுதற்காகப் பூவும் சேர்த்துக்கட்டிய மாலையினைப்பூட்டி அவ்வாறே பயன் பெறுவதற்காகச் சந்தனத்தைப் பானையின் புறத்தே பூசுவர்.

தற்போது நம் 'குடிமகன்கள்' ஊறுகாய் பயன்படுத்துவது போன்று பண்டைத் தமிழர் இஞ்சியைப் பயன்படுத்தியுள்ளனர். புளிப்புச் சுவையுடைய களாப் பழத்தையும், சுடரிப் பழத்தையும், கள் உண்டோர் பயன்படுத்தியதாக புறநானூறு (177:7-9) குறிப்பிடுகிறது.

பதிற்றுப்பத்தில் (42:11) இடம்பெறும் தசும்பு துளங்கு இருக்கை' என்ற தொடரே அச்செய்யுளின் தலைப்பாக அமைந்துள்ளது. இத்தலைப்புப் பொருத்தம் குறித்துப் பழைய உரையாசிரியர்,

களிப்பு மிகுதியால் தன்னை உண்டவரின் உடல் நடுங்குவது போலக் கள் நிறைந்து வைக்கப்பட்ட குடம் ஆடும்படியான இருப்பு என்று விளக்கம் அளித்துள்ளார்.

மலைபடுகடாம் என்ற நூலில் இடம்பெறும் துளங்கு தசும்பு (463) என்ற சொல்லுக்கு 'களிப்பு மிகுதியால் அசையும் மிடா' என்று நச்சினார்க்கினியர் உரையெழுதி உள்ளார். (கள் வைக்கப்பட்ட தடத்தில் நொதித்தல் நிகழும்போது, வெளியேறும் கரியமில வாயுதான் தடம் ஆடும்படிச் செய்கிறது.)

பனையில் மட்டுமின்றி, வீட்டிலும் கள் தயாரிக்கும் முறை சங்ககாலத் தமிழர்களிடம் இருந்துள்ளது.

 'பனை மரமே பனை மரமே' நூல் (186:187)
31.01.21

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்