பனங்கள் தொன்மை

கள்ளின் தொன்மை

#பனங்கள் தமிழர்களின் பாரம்பரியமான மதுவாகும். "தீம்பிழி' என்ற சொல்லால் சங்க இலக்கியங்கள் கள்ளைக் குறிப்பிடுகின்றன

'இரும்பனம் தீம்பிழி'

என்று நற்றிணையும்(38:3), 

'பிணர்ப் பெண்ணைப்பிழி' என்று

பட்டினப்பாலையும் (வரி. 89) 

'பழம்படுதேறல்' என்று சிறுபாண் ஆற்றுப்படையும் (வரி. 58) கள்ளை அழைக்கின்றன.

மற்றொரு பக்கம் கடுங்கள் (புறம். 68:15) இன்கடுங்கள்' (புற, 80:1, நற் 10:5, குறு, 298: 5. அகம். 76: 3) என்ற சொல்லாட்சிகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கொடுமணலில் நடந்த அகழ்வாய்வில் மட்பாண்டங்கள், தாழிகள் என்பன முழுமையாகவோ உடைந்த பகுதிகளாகவோ கிடைத்துள்ளன. இவற்றில் தமி(ழ் பிராமி)ழி எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. இது குறித்து சுப்பராயலு (2008:191)

இந்த எழுத்துப் பொறிப்புகள் எல்லாமே கலங்கள் சுட்டபின் இடப்பட்டவை. ஆகவே மண்கலையங்களைச் செய்த குயவர்கள் இவற்றைப் பொறிக்கவில்லை. யாவும் அவற்றைப் பயன்படுத்தியவர்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொறிப்புகள் பலருடைய கைகளால் செய்யப்பட்டவை என்பது இவ்வெழுத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும். எல்லாவற்றிற்குள்ளும் ஒரு சீர்மை இருக்கிறது என்று கூறவியலாது, என்று கூறுகிறார். 

இம்மட்கலங்களில் மனிதர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன இப்பெயர்கள் யாரைச் சுட்டுக்கின்றன என்பது தொடர்பாக, 'இப்பெயர்கள் யாவுமே அந்தந்த மண்கலங்களும் உரிமையாளரைக் குறித்தன என்பது உண்மை ' என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார் (மேலது: 193)

இச்செய்தியின் பின்புலத்தில் கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் காணப்படும் எழுத்துப் பொறிப்பைக் காண வேண்டும். உடைந்துபோன பானை ஓடு ஒன்றில்

ய தண் வெண் நிர் அழி இ தடா

என்ற தமி(ழ் பிராமி)ழி எழுத்துப் பொறிப்பு இடம்பெற்றுள்ளது. இத்தொடர் தொடங்கும் பகுதியில் சுடுமண் கலம் உடைந்துள்ளது. 

தொடக்கத்தில் உள்ள 'ய' என்ற எழுத்து ஓர் ஆள் பெயர் எனலாம். 

இதன் தொடர்ச்சியாகக் குளிர்ந்த வெள்ளிய நீரால் நிரம்பிய தடா (பாத்திரம்) என்று அய்ராவதம் மகாதேவன் இத்தொடருக்குப் பொருள் கொண்டுள்ளார். 

இதே தொடரை சுப்பராயலு (2010:242-243) பின்வருமாறு வாசித்துள்ளார்

இப்பொறிப்பில் தொடக்கத்தில் ஒரு சொல்லின் இறுதியில் 'ய' உள்ளதைப் பார்க்கலாம். மற்ற பொறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முதல் சொல் ஒரு ஆள் பெயருக்குரியது எனலாம். 'நிர்' என்பதை 'நீர்' என்று படிக்கலாம். ‘தண் பெண் நீர்' என்பதை நேரடியாகப் பொருள் கொண்டால், குளிர்ந்த வெள்ளையான நீர் என்று பொருள் தரும் இத்தொடர் அக்காலத்தில் மிக விரும்பிப் போற்றப்பட்ட #கள்ளை இடக்கரடக்கல் முறையில் சுட்டுகிறது என்றால் தவறாகாது

சுப்பராயலுவின் இவ்வாசிப்பு பொருத்தமானது என்று கருதியதால் 'குளிர்ந்த வெள்ளிய நீர்' என்ற வாசிப்பை மாற்றி, இத்தொடர், கள்ளைக் குறிக்கிறது என்ற சுப்பராயலுவின் வாசிப்பை, அய்ராவதம் மகாதேவன் (2014:50) பின்னர் பின்பற்றியுள்ளார். 

கள்ளின் பயன்பாடு தமிழகத்தில் மிகவும் பழமையான ஒன்று என்பதற்கு கிறித்துவிற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இப்பானை ஓட்டுப் பொறிப்பு சான்றாக உள்ளது.

('பனைமரமே பனைமரமே' நூலில், "கள்ளும் பதநீரும்" இயலில் இருந்து) பனங்கள்ளின் தொன்மை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

பனை சதிஷ்
29.01.21

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்