ஜவ்வாதுமலை கானுலா - 11


ஜவ்வாதுமலை கானுலா - முதல் நாள்
"தேனருவியும் - நீண்ட மழை இரவும்"

     கொரானா இரண்டாம் அலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என கடந்த 6மாத காலமாக காட்டுப்பயணமோ, மலையேற்றமோ இல்லாமல் வெறுமையாக இருந்த போது தான் Karthi KN இருந்து அழைப்பு வந்தது, சகோ இந்த வர இறுதியில் நண்பர்களோடு ஜவ்வாதுமலைக்கு வர திட்டம் இருக்கு நீங்களும் வரீங்களான்னு கேட்டதும் இதற்காக தானே காத்திருக்கோம்ன்னு உடனே சரின்னு சொல்லிட்டே.

     ஜவ்வாது மலையில் எங்கு செல்லப்போகிறோம். என்ன என்ன பார்க்கப்போகிறோம். இரவு மலையில் எங்கு தங்க போகிறோம் என்பதெல்லாம் முன்னமே பேசி முடிவு செய்துவிட்டோம்.

     சனிக்கிழமை காலை 10மணிக்குள் ஆரணி வந்த பின் அங்கிருந்து எல்லோரும் ஒன்றாக போளூர் வழியாக மலைக்கு செல்ல திட்டம் இருந்தது, வழக்கம் போல் வெள்ளி இரவு பணி முடித்துவிட்டு சனி கிழமை காலையில் மலைக்கு செல்ல தயாராக இருந்த போது கார்த்தி அழைப்பு, சகோ உடன் வந்தவங்க வழி மாறி போய்டாங்க, நீங்க நேரா போளூர் வந்துடுங்க நாங்க எல்லாரும் அங்க வந்து விடுகிறோம் என்றான்,  நானும் போளூர் சென்று காத்திருந்தேன். நீண்ட காத்திருப்புக்கு பின் கார்த்திக் உடன் தங்கை உமா மட்டுமே வந்து சேர்ந்தனர். வழிமாறி போன நண்பர்கள் வேறு ஒரு வழியில் மலைக்கு மேல் ஏறி விட்டதாக தகவல் வந்தது, மேற்கொண்டு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவே நாங்கள் விரைவாக மலையில் ஏற தொடங்கினோம். 

     மதிய நேரம் தான் ஆனாலும் கருமேகங்கள் மலையை சூழ தொடங்கி இருந்தது, நிச்சயம் இன்றிரவு கடும் மழை இருக்கும் என ஊகித்தேன். மலைக்கு மேல் செல்ல செல்ல குளிர் காற்று கடுமையாக இருந்தது. சரியாக ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு கடந்ததும் எல்லோரும் எங்களுக்காக காத்திருந்தனர். பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து கிளம்பினோம், யாரும் பின் தங்கி மீண்டும் வழி மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

      ஜவ்வாதுமலையில் கடந்த சில வாரமாக தொடர்ந்து பெய்யும் மழையால் அத்திப்பட்டில் இருந்து செங்கம் செல்லும் மலைப்பாதையில் பார்க்கும் இடமெங்கும் புதிது புதிதாக சிறிய காட்டு ஓடைகள். மலையரசியின் அனைத்து வசீகரங்களையும் பார்த்துக்கொண்டே போக வேண்டிய கிராமத்தின் சந்திப்பிற்கு வந்து சேர்ந்தோம். ஆனால் வருகிற வழியில் நண்பர் சதிஷ் வந்த வாகனத்தில் பழுது ஏற்பட்டமையால் அவரால் தொடர்ந்து வரமுடியவில்லை என தகவல் வந்தது, எங்களுக்கு நேரமும் குறைவாக இருந்ததால் அவருக்கு வந்து சேரவேண்டிய மலை கிராமத்திற்கான அடையாள குறிப்புகளை அனுப்பிய பின் நாங்கள் அந்த மலை கிராமத்தை நோக்கி நகர்ந்தோம்.

     இது வரை வந்தது ஓரளவு நல்ல தார் சாலையில் ஆனால் இதற்கு பிறகு மலை கிராமத்திற்கு செல்லும் பாதை முழுக்க சேதமான சாலை தான், நான் ஏற்கனவே இந்த மலை கிராமத்திற்கு ஒரு முறை வந்துள்ளேன் கார்த்திக்கும் வந்துள்ளான் ஆனாலும் ஒரு திருப்பத்தில் பாதையை  தவற விட்டு மீண்டும் சரியான பாதையை கண்டறிந்து மலை கிராமத்தை வந்தடைந்தோம்.

     அந்த கிராம மக்கள் எப்போதும் போல் சிரித்த முகத்தோடும் ஆச்சரிய கண்களோடும் எங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். மழை பெய்ததால் விவசாய பணிக்காக மலைசரிவுகளை சீர் செய்யும் டிராக்டர்கள் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. ஊர் சிறுவர்கள் வெளியில் வந்து பார்ப்பதும் வீட்டுக்குள் ஓடுவதுமாக இருந்தனர். 

     இந்த மலை தொடரில் எந்த மலை கிராமத்திற்கு சென்றாலும் எந்த காட்டிற்கு சென்றாலும் அங்கு பலா, கொய்யா, சீத்த, புளியன் மரங்களை காண முடியும்.

     மாலை நேரம் நெருங்கி கொண்டிருந்ததால் எல்லாரும் வாகனங்களை நிறுத்தி விட்டு விரைவாக அருவியை பார்க்க காட்டுக்குள் பயணமானோம்.

     நான் முதல் முறை இங்கு வந்த போதும் மழை பெய்திருந்தது இம்முறையும் கடும் மழை அதனால் அருவிக்கு செல்லும் ஒற்றை அடிபாதை கடுமையாக சேறு நிறைந்திருந்தது. அந்த மலை கிராமத்தில் இருந்து அருவிக்கு செல்லும் இடம் வரை முற்றிலுமாக அடர்ந்த காட்டு பாதை தான், முன்பை விட இப்போது காடு நன்கு குளிர்ந்து இருந்தது. மரங்கள், செடி, கொடிகள், தரையில் உள்ள புற்கள் என அனைத்தும் செழிப்பாக வளர்ந்து இருந்தது.

     நடந்து கொண்டே இந்த காட்டை பற்றியும் இங்குள்ள புராதான இடங்கள் பற்றியும் எனக்கு தெரிந்தவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு, காட்டு ஓடையும் அடுத்து கற்கோவிலும் என அருவிக்கு செல்லும் ஒவ்வொரு அடையாளங்களையும் பார்த்து கடந்து முன்னேறி சென்றோம். நாங்கள் நடக்க ஆரம்பித்து 30 அல்லது 40 நிமிட மலை ஏற்றத்தில் அருவியை வந்தடைந்தோம்.
     அருவியின் கீழ் இருந்து குளிப்பது ஒரு சுகம் என்றால் அருவியின் மேல் முனையில் இருந்து எந்த தடையும் இன்றி வேக வேகமாக கீழே குதிக்கும் அருவியை பார்ப்பது இன்னொரு சுகம். அருவியின் சத்தமும், குளிர்ந்த காற்றில் வரும் காட்டின் வாசமும் ஏற்கனவே காட்டின் வசீகரத்தில் மயங்கி போய்ருந்தவர்களை அருவிக்கு மேல் இருந்து பார்த்த காட்சிகள் மேலும் மேலும் மயக்கி கொண்டிருந்தது.

     எங்களால் முடிந்தளவு ஓடையின் நீரோடு ஒன்றாகிவிட்டோம். ஆனால் கதிரவன் ஏற்கனவே மேற்கு மலையில் இறங்கி இருந்தான், அதனால் காட்டிற்குள் வெளிச்சம் மெல்ல மங்க தொடங்கியது. எனவே அருவியிடம் பிரியா விடையை பெற்றுக்கொண்டு திரும்ப கிராமத்தை நோக்கி நடந்தோம். வருகிற போது பாதையில் கார்த்திக் நன்னாரி செடியை பார்த்ததும் அதை எடுத்து வாயில் கடிக்க கொடுத்ததும் ஓரளவு தண்ணீர் தாகம் குறைந்தது.

     அருவியை பார்த்துவிட்டு மலை கிராமத்திற்கு வந்து சேர முன்னிரவு நேரம் ஆகிவிட்டது, வந்து சேர்ந்ததும்  எல்லாருக்குமே ஆச்சரியம் வாகனம் பழுதாகி வரமுடியாமல் போன நண்பர் சதிஷ் அவரது தோழியும் நாங்கள் சொன்ன அடையாளங்களை பின் தொடர்ந்து வந்து சேர்ந்திருந்தனர். நல்ல பசியால் கொண்டு வந்த பழங்களையும் சப்பத்திகளையும் சாப்பிட்டு முடித்ததும். உடனடியாக கூடாரத்தை போட ஆரம்பித்தோம்.

     என்னுடைய ஜவ்வாதுமலை பயணத்தில் மலையில் இரவு தங்குவது இது தான் முதல் முறை. எல்லாம் முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

     நான் எனக்கு தெரிந்த தேன் மற்றும் விதை சிறுகதைகளை கதையாடலாக சொன்னேன், கதைகள் முடிந்ததும் மழை தூவ ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மழை லேசான தூரலாக இருந்தாலும் நேரம் ஆக ஆக அது கடும் மழையானது. காற்று நாலா புறத்திலும் இருந்து சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்தது. தங்கைகள் அபி மற்றும் உமா தங்கிருந்த கூடாரத்தில் தண்ணீர் புகுந்து முற்றிலும் சேதகமாக அவர்கள் மற்ற கூடாரங்களில் சென்று தங்க வேண்டியதாக இருந்தது. நானும் தம்பி திவாகர் தங்கிருந்த கூடாரமும் தண்ணீரில் அடித்து செல்ல முனைந்தது ஆனால் நான்கு பக்கமும் இறுக கயிறு கட்டி இருந்ததால் தப்பித்தது மற்ற கூடாரங்கள் மேட்டில் போடப்பட்டதால் அன்று இரவு கடுமழையை எந்த சிக்கலும் இன்றி கடந்தோம்.

     அடுத்த நாள் காலையில்…

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்