ஜவ்வாதுமலை கானுலா - 11 (பகுதி 2)


ஜவ்வாதுமலை கானுலா - இரண்டாம் நாள்
"ஆசியாவின் பெரிய (நீர்மத்தி) அடி மரமும் - பெருங்கற்கால ஈமை சின்னங்களும்"
 

     நேற்று இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் எங்கள் கூடாரம் ஏறக்குறைய தண்ணீரில் மிதந்து கொண்டு தான் இருந்தது. கடுமையான குளிரால் இரவு சில மணி நேரமே தூங்க முடிந்தது. அதிகாலையில் மீண்டும் அருவிக்கு சென்று அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்கலாம் என இரவு திட்டமிட்டு இருந்தோம் ஆனால் இரவு பெய்த கடும் மழையாலும், மேகமூட்டத்தாலும் அருவிக்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் குளிர் நடுக்கத்தில் இருந்து மீளமுடியாமல் எல்லோரும் காலையில் எழுந்து கொள்ளவே 8மணிக்கு மேல் ஆனது, தோழி சாரு மலை கிராமத்தில் யார் வீட்டிலோ இருந்து கொண்டு வந்த கருப்பட்டி காபி அந்த குளிருக்கு இதமான சூட்டை கொடுத்தது.

     நேற்று வாகன பழுது பார்த்துக் கொண்டு வந்த நண்பர் சதிஷ் அந்த மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது ஊர் மக்களிடம் தங்குவதற்கான இடமும்,  மாற்று பாதுகாப்பு ஏற்பாடும் பேசி வைத்திருந்தார். நேற்று அவர் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததும் எங்களை காண அருவி வழியே இரண்டு மூன்று முறை வந்து பார்த்துள்ளார், ஆனால் பாதி தொலைவுக்கு மேல் அவராலும் மேற்கொண்டு தொடரமுடியாமல் மீண்டும் கிராமத்திற்கே வந்து காத்திருந்தார்.

     காலையில் ஊர் மக்களிடம் இருந்து கிடைத்த கருப்பட்டி காபி குடித்துவிட்டு மழை சாரல் அந்த அழகிய மலை கிராமத்தை நானும், தம்பி திவாகர், மாணிக்கம் மற்றும் தங்கைகள் உமா, அபியும் சுற்றி நடக்கலானோம். எங்களை பார்த்ததும் வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருந்து இரு சிறுமிகளை அழைந்து தங்கை உமா பேசிக் கொண்டிருந்தாள். அந்நேரம் என் கைகள் பனை ஓலையில் கிரீடமும், பறவையும் செய்து கொண்டிருந்தது, பனை ஓலையில் செய்த கீரிடத்தையும், பறவையையும் அதே வெட்கத்தோடு வாங்கி கொண்டனர்.


     காலை மணி 10ஆகிருக்கும் ஆனாலும் மலையில் மேகமூட்டத்தால் சூரிய வெளிச்சம் இன்னமும் வந்துசேரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு பயண அனுபவத்தை கொடுத்த அந்த மலை கிராமத்தில் இருந்து கிளம்பி அடுத்து மேல்பட்டு கிராமத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய அடிபாகத்தை கொண்ட நீர்மத்தி எனப்படும் நீர்மருது மரத்தை பார்க்க சென்றிருந்தோம். மேல்பட்டு கிராமம் சென்றதும் எதிரில் வாகனத்தில் வந்தவர் எங்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வணக்கம் சதிஷ் என்றார். எனக்கு ஆச்சரியமாக போக அவர் தலைக் கவசத்தை கழட்டியதும் தான் தெரிந்தது நீண்ட நாள் முகநூல் நண்பரான எழில் என்று. நேற்றே எங்களுடன் பயணத்தில் இணைய வேண்டியவர் அலுவலக வேலையால் தாமதமாக இன்று தோழியும் ஆசிரியருமான பிரியாவுடன் பயணத்தில் இணைந்து கொண்டார்.

     நான் பல முறை இந்த மரத்தை பார்க்க இங்கு வந்துள்ளதால் எனக்கு ஆச்சரியம் இல்லை, ஆனால் உடன் வந்த அனைவரும் முதல் முறையாக இப்படி ஒரு பிரம்மாண்டமான மரத்தை நேரில் பார்ப்பதால் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். சில மணி நேரம் மரத்தில் ஏறி குழந்தைகள் போல விளையாடியதில் மதிய உணவு நேரம் வந்துவிட்டதை கூட நாங்கள் உணரவில்லை.
      ஜமுனாமரத்தூரில் இருந்து அமிர்தி செல்லும் வழியில் இருக்கும் ஒரு கிராமத்தில் பழங்கற்கால சின்னங்கள் இருப்பதை ஏற்கனவே ஆவணபடுத்தி இருந்தோம், அடுத்து அந்த கற்கூடாரங்களை பார்க்க வேண்டி விரைவாக கிளம்பினோம். போகிற வழியில் இருந்த உணவகத்தில் காலை, மதிய உணவை சேர்த்து அங்கேயே முடித்துக்கொண்டு கிளம்ப தயாரானோம். சாப்பிட்டு முடித்த ஓய்வு நேரத்தில் தங்கை உமா கேட்டிருந்த பனை ஓலை கிலுகிலுப்பை செய்து கொடுத்ததில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி.

    ஜமுனாமரத்தூரை கடந்து அமிர்தி - வேலூர் செல்லும் வழியில் தொடர்ந்தோம். 1மணி நேர பயணத்தில் அடுத்த பார்க்க வேண்டிய கற்திட்டைகளுக்கு போகும் மலைகிராமத்தின் சந்திப்பிற்கு வந்து சேர்ந்து மற்ற அனைவரும் வரும் வரை காத்திருந்த பிறகு பிரதான சாலை சந்திப்பில் இருந்து 5கி.மீ சென்ற பின் தார் சாலை முடிந்து மலை பாதை ஆரம்பித்தது. 

     நான் சென்ற முறை இவ்விடம் வருகையில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது, இம்முறை முழுமையாக வாழ்தோம்பை என்ற கிராமம் வரை தார் போடப்பட்டு இருந்தது, ஆனால் நாம் செல்ல வேண்டிய மலைக்கொல்லை கிராமத்திற்கு செல்லும் பாதை முழுக்க மண் பாதை தான். அம்மலைகிராமத்திற்கு செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு மலையேற தொடங்கினோம்.
     30நிமிட மலை ஏற்றத்திற்கு பின் மலைக்கு மேல் வந்துவிட்டோம், எப்போதும் போல் அமைதியே சூழ் கொண்டிருந்தது 5 வீடுகளே கொண்ட அந்த மலை கிராமம். அங்கு ஏற்கனவே அறிமுகமான நண்பரின் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு அடுத்து கற்திட்டைகள் (கூடாரம்) உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். தங்கை உமா முதல் முறையாக இவ்வாறான பயணத்திற்கு வருவதால் கொஞ்சம் சோர்வாகவே உணர்ந்தாள், ஆனாலும் அவள் பயணத்தை நிறுத்தாமல் எங்களோடு நடந்து கொண்டே இருந்தாள்.

     பெருகற்கால ஈமை சடங்கின் அடையாள சின்னங்களான இந்த கற்திட்டைகளை சங்க இலக்கியத்தில் "உவல் இடு பதுகை" என குறிப்பிடுவதாக முனைவர் வசந்தா அம்மா ஒரு முறை சொல்லிருந்தார். நண்பர்களுக்கு இவ்விடம் பற்றிய புராதான குறிப்புகளை பகிர்ந்த பிறகு சிலர் என்னோடு ஓய்வு எடுக்க அடுத்த பாறை மலைக்கு வந்தனர் சிலர் Karthi KN உடன் அங்கயே தொட்டில் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தனர்.
     அடுத்து இருந்த பாறை மலையின் உச்சிக்கு போக போக காற்றில் குளிர்ச்சியும் வேகமும் கூடிக்கொண்டே இருந்தது. மேலிருந்து பார்க்கையில் ஜவ்வாதுமமையின் வடகிழக்கு பகுதியை முழுமையாக பறவையின் கோணத்தில் இருந்து நாம் பார்க்க முடியும். அழகிய அந்த காட்சிகளை கண்களும், உள்ளமும் ஆசை தீர கண்டுகளித்த பிறகு அங்கயே சிறிது நேரம் தூங்கிவிட்டு பின் மலைக்கொல்லை கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
    காலையில் மேல்பட்டு கிராமத்தில் இருந்து கிளம்பும் போது சாப்பிட்டது தான் அதன் பிறகு யாருக்கும் உணவு இல்லை, பசியோடு மலை ஏறி இறங்கியதில் எல்லோருக்கும் கடும்பசி. நாம் முதலில் தண்ணீர் வாங்கி குடித்த நண்பரின் வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு சாப்பிட பழைய கஞ்சி ஏதும் கிடைக்குமா என கேட்டேன் அவர் காலையிலேயே தீர்ந்து விட்டதாக சொன்னார், ஆனால் மரத்தில் ஒரு பலா பழம் நல்லா பழுத்து இருக்கு வேண்டுமா என கேட்டார், பசியில் எதை கொடுத்தாலும் சாப்பிடும் நிலையில் இருந்ததால் எல்லாரும் கேட்டுக் கொண்டதும் உடனே மரம் ஏறி ஒரு பெரிய பலா பழத்தை பறித்து, அதை அவரே உரித்தும் கொடுத்தார், தேனை விடவும் இனிப்பான அந்த பலா சுலைகள் நாவில் வைத்ததும் தானாக நழுவி உள்ளுக்குள் இறங்கின. போதும் போதும் என சொல்லும் அளவுக்கு பழங்களை உறித்து கொடுத்துக் கொண்டே இருந்தார். எல்லோரும் வயிறார சாப்பிட்டதும், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி,
     அமிர்தி வனப்பகுதி வழியாக மலையில் இருந்து கீழ்இறங்கி கண்ணமங்கலத்தை வந்தடைந்தோம். தம்பி விஜய்யும், சரவணனும் அலுவலக வேலையால் சீக்கரம் கிளம்பிவிட மற்ற அனைவரும் இரவு உணவு முடித்து கிளம்பும் போது எதிர்பாராத விதமாக கார்த்திக் வாகனம் மீண்டும் பழுது ஏற்பட்டதால் நண்பர் சதிஷ், சாரு தம்பி திவாகர் மற்றும் தங்கை அபி மட்டும் சென்னைக்கு கிளம்ப, நான் கார்த்திக், மாணிக்கம் உமா மற்றும் தம்பி சித்தார்த் மட்டும் வாகன பழுது நீக்கும் இடத்தில் காத்திருந்தோம். நேரம் 9மணிக்கு மேல் ஆனது எனக்கு இரவு பணி உள்ளதால் கார்த்திக்கிடம் என் வீட்டு முகவரிகளை கொடுத்துவிட்டு ஒரு வேலை வாகனம் சரியாகவில்லை எனில் அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டு அடுத்த நாள் காலையில் சென்னைக்கு போங்க என சொல்லிய பின் நானும் வீடு வந்து சேர்ந்து அவர்களின் வருகைக்காக காத்திருந்தேன்.

     தம்பி மாணிக்கத்திடம் இருந்து அழைப்பு அண்ணா கார்த்திக் வாகனம் சரியாகிடுச்சி நாங்க அனைவரும் சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்றான்.
   ஒரு பயணம் அதுவும் காட்டு பயணம் எத்தனை எத்தனை உறவுகளை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டது. எல்லோரையும் மீண்டும் எப்போது பார்ப்பேன் என தெரியாது ஆனால் மிக நிச்சயம் எல்லோரையும் இன்னோரு காட்டு பயணத்தில் சந்திப்பேன் என்ற மன நிறைவோடு என் அலுவலக இரவு பணியை தொடர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்