சிறகடிக்கும் சிட்டுக்கள் - சுட்டியானை


     குழந்தைகளோடு பனை சார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள்  என்பது எப்போதும் மனநிறைவை தரக்கூடியது தான்.

      ஜவ்வாதுமலை முக்கூடல் தோட்டத்தில் கடந்த ஆண்டு சுட்டியானை, வலசை வாழ்வியல் பள்ளி முன்னேடுத்த குழந்தைகள் முகாமில் குழந்தைகளிடம் இருந்து கிடைத்த அனுபவம், தொடர்ந்து அவர்களுக்காக பனையோலையில் புதிய புதிய பொருட்களை செய்ய தூண்டியது.

     இந்த ஆண்டும் ஜவ்வாதுமலை, மலைரெட்டியூரில் உள்ள முக்கூடல் தோட்டத்தில் குழந்தைகள் முகாம் நடத்த இருக்கிறோம் பனையோலை பயிற்சி கொடுக்க முடியுங்களா என பிரவின் அண்ணா கேட்டு இருந்தாங்க. எவ்வித முன் யோசனையும் இன்றி நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன்.

    இணையரிடம் குழந்தைகள் நிகழ்வு இருக்கு போகனும் என்றதும் நானும் வரே கூட்டிட்டு போங்க என்றாள், என்னவளுடன் கலந்து கொள்ளும் முதல் பனை சார்ந்த நிகழ்வு என்பதால் கூடுதல் மகிழ்வோடு சென்னையில் இருந்து இரு தினத்திற்கு முன்னமே ஊருக்கு வந்து விட்டோம். நிகழ்வு அன்று (19.03.22) காலை 8 மணிக்குள் போளூர் வந்து அங்கிருந்து அத்திமூர் - ஜமுனாமரத்தூர் காட்டுப்பாதையில் பயணத்தை தொடர்ந்தோம்.
     கடந்த ஆண்டும் இதே மார்ச் மாதம் தான் குழந்தைகள் முகாம் நடந்திருந்தது, அப்போது மலையும், காடும் கடும் வரட்சியோடு இருந்தது, ஆனால் இம்முறை பயணப்படும் போது மலை அடிவாரத்தில் இருக்கும் அத்திமூரில் காட்டு ஓடையில் தண்ணிர் ஓடிக்கொண்டு இருந்தது, மலையும், காடும் இன்னமும் கோடையின் உக்கிரத்தை தொடாமல் பசுமையாகவும், குளுமையாகவும் இருந்தன.

முதல் நாள்:-
     
     நிகழ்விற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து குழந்தைகளும் பெற்றோரும் வந்திருந்தனர். நிகழ்வு தொடங்கும் முன் சிவா அண்ணா சுமையான மாங்காய் பானகத்தை தயார் செய்து கொடுத்தார். நிகழ்வை சிறார் பாடலுடன் அசோக் தொடங்கி வைத்ததும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம்.

ரவீந்திரன் அண்ணா உரையாடல்:- 

     காலை அமர்வில் கிழக்கு தொடர்ச்சி மலைகள், காடுகள் பற்றி பிரவீன் அண்ணா அறிமுகத்தை கொடுத்த பின் ரவீந்திரன் அண்ணா நம்மை சுற்றி இருக்கும் பறவைகள் பற்றியும், வலசை வரும் பறவைகள்  பற்றியும், தமிழக பறவைகள் பற்றியும் விரிவான விளக்கத்தை கொடுத்தார். குழந்தைகளுக்கு புரிகிற மொழியில் மிக அழகாக அண்ணா சொல்லிருந்தார், அண்ணா வலசை ச
செல்லும் பறவைகளை பற்றி பேசும் போது, " அவை பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு கூட வலசை செல்கின்றன", அப்படி அவை வலசை செல்லும் போது திசைகாட்ட உதவியாக இருப்பது அதன் காந்தபுல ஈர்ப்பு மட்டும் அல்ல, தன் வழியில்  இருக்கும் மலைகளையும், நீர்நிலைகளையும் காடுகளையும் அவை அடையாளமாக நினைவில் வைத்துக்கொண்டு தான் பயணிக்கும். காடுகள், மலைகள், நீர்நிலைகள் தொடர்ந்து அழிக்கப்படுவது பறவைகள் வலசை செல்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது என்றார். இப்போது வரை என் நினைவில் அவர் கூறிய வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
     காலையில் இரண்டாவது அமர்வில் என்னுடைய பனை நிகழ்வை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது ஆனால் முதல் அமர்வு முடியவே மதியம் 1.30 மேல் போனது (இடையில் ஒரு பையன் சாப்பாடு எப்ப தா போடுவீங்க என கேட்டு விட்டான் 😂)

     மதிய உணவில் சாம்பார், ரசம், காய்கறி பொரியல் என முக்கூடல் பண்ணையிலேயே விளைந்த அனைத்தும் மதிய உணவுக்கு பயன்படுத்திக் கொண்டோம். மலைவாழ் மக்களின் உணவு செய்முறை அட்டகாசமாக இருந்தது.

     குழந்தைகள் அதிகமாக இருந்ததால் பனை நிகழ்விற்கும், நண்பர் அழகு ராஜாவின் ஓவிய நிகழ்விற்கும் என குழந்தைகளை பிரித்துக் கொண்டோம்.

     முதலில் பனை என்றால் என்ன என்ற கேள்வியை முன் வைத்திருந்தேன், பொதுவாக நான் செல்லும் நிகழ்வில் கேட்கும் கேள்வி  தான் ஆனால் இம்முறை குழந்தைகளின் பதில்கள் எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு பையன் பதனீர், நுங்கு கொடுக்கும் னு சொல்ல, இன்னொரு பெண் குழந்தை அதான் பூமிக்குள்ள தண்ணிய சேமிச்சு வைக்குன்னு சொல்ல எனக்கு வியப்பிற்கு மேல் வியப்பு.

     நான் சொல்ல வேண்டியதை அனைத்தும் அவர்களாகவே எனக்கு அறிமுகம் செய்தனர், பிறகு பனை பற்றிய அடிப்படையான விசயங்களை பகிர்ந்து கொண்டு ஓலை (தென்னை) பொருட்களை செய்யத் துவங்கினோம்.

     குழந்தைகள் நான் நினைத்ததை விட மிக ஆர்வமாக ஓலை பொருட்களை கற்றுக்கொண்டனர், அதிலும் சசி அவர்களின் மூத்த மகள் ரியா தான் கற்றுக்கொண்ட ஓலை கை கடிகாரம், கிரீடம், கண்ணாடி போன்றவற்றை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

     மறுபுறம் பாதம் மர ஓலையை காய வைத்து அதில் அழகழகான ஓவியங்களை குழந்தைகள் செய்து கொண்டிருந்தனர்.

     மாலையில் திருப்பதூரை சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம் குமார் அண்ணா, முக்கூடல் பண்ணையை சுற்றி இருந்த மூலிகைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார், ஒவ்வொரு மூலிகையாக எடுத்து அதன் சிறப்புகளையும், எதற்கு, எவ்விதம் சாப்பிட வேண்டும் என்பதையும் குழந்தைகளும், பெற்றோர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார்.
     ஒவ்வொரு முறை மூலிகை பற்றி சொல்லி முடித்ததும், குழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு மூலிகை இலைகளை பிடுங்கி சாப்பிட்டது, கலகலப்பாக இருந்தது.

     முக்கூடல் பண்ணையின் வடகிழக்கு மூலையில் இருக்கும் பெரும் பாறையின் மீது அனைவரையும் அமர வைத்து விக்ரம் அண்ணாவும் ரவீந்திரன் அண்ணாவும் அங்கு சுற்றித்திரியும் பறவைகளை பற்றி விரிவாக விளக்கினர்.

     மாலையில் குழந்தைகளே உருவாக்கிய நிழல் பாவைக்கூத்தில் தங்களின் படைப்புகலோடு அவர்களே நடித்தும் காட்டியது பெரும் நிறைவாக இருந்தது.

     இரவு உணவுக்காக பண்ணையில் இருந்து 800மீட்டர் தொலைவில் இருக்கும் உணவு கூடத்திற்கு விளக்குகள் பாதையில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகளை அழைத்து சென்றது அவர்களுக்கு புது அனுவத்தை கொடுத்தது. உணவு முடித்ததும் நெருப்பு மூட்டப்பட்டது பிறகு நானும் நண்பர் அசோக்கும் பறை அடிக்க குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஆனந்தமாக ஆட்டம் போட்ட பின் இரவு தூக்கத்திற்கு சென்றோம்.

     இரண்டாம் நாள்:-

     இரவு பறையுடன் ஆட்டம் போட்டதால் எல்லாருமே காலை எழுந்திரிக்க நேரம் ஆனது, காலையில் மீண்டும் சிவா அண்ணாவின் பானகம். அடுத்து அருகில் இருக்கும் பீமன் குளத்திற்கு எல்லோரையும் அழைத்து சென்று அங்கிருக்கும் நீர்பறவைகளை குழந்தைகளுக்கு அடையாளம் காண்பித்தார் ரவி அண்ணா.

     பறவைகளை பார்த்து முடித்து எல்லோரும் முக்கூடலுக்கு வந்த பின் அவரவர் ஆசைக்கு ஏற்ப, பண்ணையில் உள்ள கிணற்றிலும், பம்ப் செட் குழாயிலும் ஆனந்தமாக குளித்தனர்.

     காலை உணவு முடித்த பின் நேற்று யாரேல்லாம் பனை நிகழ்வில் இருந்தனரோ அவர்களை ஓவிய நிகழ்விற்கும், நேற்று ஓவியம் செய்தவர்களை பனை நிகழ்விற்கும் மாற்றினோம். ஆனாலும் சில குழந்தைகள் நான் ஓவியம் தான் பண்ண போறேன், இல்ல நான் பனை ஓலை பொம்மை தான் செய்ய போறேன்னு அவங்களே மாறிட்டாங்க.

     முந்தைய நாள் கை கடிகாரம், மூக்கு கண்ணாடி செய்தவங்களுக்கு இன்று கிரீடம் செய்ய சொல்லி கொடுத்தோம். எல்லாவற்றையும் என்னவள் உடன் இருந்து கற்றுக்கொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்தது பேருதவியாக இருந்தது.

      எல்லா குழந்தைகளும் பனை ஓலை பொம்மைகளும், ஓவியம் செய்து முடிச்சிட்டாங்க, பிறகு ஒவ்வொருத்தருக்கும் மீன், பறவை, நண்டு, கிரீடம் என அவங்க விரும்பும் ஓலை பொருட்களை செய்து கொடுதோம். எல்லோருக்கும் செய்து கொடுத்த பின் நிகழ்வை இறுதி செய்து, குழந்தைகளின் அனுபவ பகிர்வை கேட்டோம். அவர்களின் அனுபவத்தில் இருந்து இந்த இரண்டு நாளும் அவர்கள் முற்றிலுமாக வேறு ஒரு உலகத்தில் இருந்ததை உணர முடிந்தது. கடைசியாக வந்த அனைத்து குழந்தைகளையும், தன்னார்வலர்களையும் ஊக்கப்படுத்த சு.டியானை இதழையும், ஐயா சுல்தான் இஸ்மாயில் குழந்தைகளுக்காக எழுதிய மண்புழு புத்தகமும் பரிசளிக்கப்பட்டது.

     எல்லா குழந்தைகளும் சந்தோசமாக கிளம்பினர், ஒரு பையன் மட்டும் பறவை மாமா வை பார்க்கனுன்னு அழுதுட்டே இருக்க, ரவி அண்ணாவுக்கு போன் செய்து அந்த குழந்தையை சமாதானம் செய்து அனுப்பினோம்.

     ஒவ்வொரு குடும்பமாக கிளம்ப கடைசியில் நானும் இணையரும் கிளம்பினோம். ஜமுனாமரத்தூர் போகும் முன்னரே எனக்கு ஜவ்வாது பலா பழம் சாப்பிடனும் போல இருக்கு வாங்கி கொடுங்க என கேட்க. அப்போது தான் மண்டபாறை என்ற மலை கிராமத்தில் இருந்து சந்தைக்கு வந்து இறங்கிய பலா பழங்களில் ஒன்றை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.


     ஒவ்வொரு முறை நிகழ்விலும் ஏராளமான அன்பு நிறைந்த சொந்தங்கள் கிடைத்து விடுகிறது. இம்முறையும் பல உறவுகள் கிடைத்த மகிழ்ச்சியில் நானும் இணையரும்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்