தடா அருவி - காட்டுப்பயணம்


மீண்டும் கானகம்

     தமிழகத்தை தாண்டி முதல் முறையாக ஆந்திரா காட்டிற்குள் குடும்பமாக காட்டு பயணம்.

நான் அதிக சிரம் எடுத்து ஏறிய மலைகளில் கொல்லிமலையின் கோரக்கர் குகைக்கு சென்ற மலை ஏற்றத்தை எப்போதும் நினைவு கொள்வேன். அம்மாதிரியான நினைவின் தொடர்ச்சியில் இணைந்து கொண்டது, தாடா அருவியின் மலைகள்.

அதிக பட்சம் 650மீட்டரே கொண்ட உயரம் மிகக்குறைவான மலை தான் என்றாலும் மலைப்பாதை சரிவர இல்லாமல் முழுக்க பாதை முழுக்க பாறைகள் இருந்ததாலும், முந்தைய இரவு அலுவலக பணியால் தூங்காமல் அடுத்த நாள் காலை 100கிலோ மீட்டருக்கு மேல் வாகனம் ஓட்டியதாலும் மிகுந்த சோர்வோடு தான் மலையேற்றதை தொடங்கினோம்.

சில வாரத்திற்கு முன் வாலண்டீனா அக்கா வீட்டில் திருமணத்திற்கான முக்கறி (ஆடு, மாடு, கோழி) விருந்தை முடித்து பின் நீண்ட நாட்களாக திட்டமிட்டுக்கொண்டு இருந்த பருவதமலை பயணத்தை பற்றி பேச தொடங்கி கொலுக்குமலை சென்று இறுதியில் அடுத்த ஒரு வாரத்தில் தடா அருவிக்கு செல்வது என்று உறுதியானது.

சென்னையில் இருந்து 95-100 கிலோ மீட்டருக்குள் இருப்பதாலும் ஓர் நாளில் சென்று திரும்பி வர ஏற்ற இடமாகவும்  இருப்பதால், தற்போது தடா செல்வது எனவும் வாய்ப்பு கிடைத்தால் விரைவில் பருவதமலைக்கும், கொலுக்குமலைக்கும் பயணமாவது எனவும் பேசிக்கொண்டோம். (இந்த பதிவை போடும் நேரத்தில் என்னை விட்டுவிட்டு பருவதமலைக்கு போனவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்).

திட்டமிட்ட படி கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயணத்தை தொடங்கும் முன்னர் சென்னையின் உள் பகுதிகளில் திடீர் மழையால் பயணம் சற்று தாமதமானாலும் காலை 9மணிக்குள் தடா சென்று சேர்ந்துவிட்டோம்.

தமிழக எல்லையான கும்முடிபூண்டியை கடந்து ஆந்திர எல்லைக்குள் செல்ல செல்ல சாலையோரம் பல இடங்களில் பனங்களை குடங்களில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். பல்வேறு இடங்களில் சாலையோரம் இருக்கும் பனை மரங்களில் கள்ளிற்கான கலையம் கட்டி வைத்திருந்தனர். ஏக்கத்தோடு அவற்றை கடந்து சென்றேன்.

தடா அருவி இருக்கும் காட்டு பகுதியை ஒட்டி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தையில மரங்கள் ஆக்கரமித்து இருந்தன. காடு ஆரம்பம் ஆகும் இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை இருந்தது. எல்லாவற்றையும் கடந்து தடா அருவிக்கு செல்ல நுழைவு சீட்டை பெற்றுக்கொண்டு உள் சென்றோம். உள்ளே சில கிலோமீட்டர் தூரத்திற்ருக்கு வாகனத்தில் செல்ல அனுமதிக்கின்றனர். பின்னர் அனைத்து வாகனங்களும் வாகன நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு காட்டில் நடக்க தொடங்கினோம்.
நாங்கள் சென்றது வார இறுதி நாளோ அல்லது விடுமுறை நாளோ அல்ல வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ஆனால் காட்டிற்குள் ஏராளமான மனித தலைகள் நிரம்பி வழிந்தது. அதைவிட காட்டிற்கு வந்தவர்கள் தூக்கி ஏறிந்து சென்ற பிளாஸ்ட் பாட்டில்கள் காடெங்கும் சிதறி கிடந்தது.

வாகன நிறுமிடத்திற்கு அருகில் காட்டு ஓடையை தடுத்து பெரிய தடுப்பணை கட்டியிருந்தனர், அருவிக்கு வந்த பெரும்பாலான மக்கள் இந்த தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தனர், நாங்களும் மக்களோடு மக்களாய் குளித்து முடித்து மேற்கொண்டு நடக்க தொடங்கினோம்.

சிறிது தூரம் நடந்து சென்றதும் கண்ணில் பட்டது காட்டின் முதல் ஆச்சரியம், ஓர் இடத்தில் காட்டு ஓடையின் மிக அருகில் நீர் ஊற்று மிகக்தெளிந்த நீராக வந்து கொண்டிருந்தது. அருவிக்கு செல்லும் பலர் அதை காணாமல் கடந்து சென்று கொண்டிருந்தனர், ஆனால் எம்மால் கடக்கவியலாமல் உடன் வந்தோருக்கு தகவலை சொல்லி அதனை பதிவு செய்து கொண்ட பின் பலரும் அந்த ஊற்று தண்ணீரை பருகினோம்.

கட்டிற்குள் பல இடங்களில் வெண்மை நிற பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக திரிந்து கொண்டிருந்தன. அந்த காட்டில்  மனிதனின் அத்தனை கழிவுகளுக்கு மத்தியிலும் சுந்திரமாய் பூக்களையும் ஈரமான நிலத்தையும் தேடி பறந்து கொண்டிருந்தன.

காட்டின் உட்பகுதிக்குள் இருக்கும் காட்டு கோவிலுக்கு ஏராளமான மக்கள் டிராக்டர் வண்டியில் வந்திருந்தனர், அனைவரும் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதும், கிடாவெட்டி சமைப்பதுமாக இருந்தனர்.

காட்டு கோவிலை சுற்றி ஏராளமான நெகிழி கழிவுகள் இருந்தன, காட்டிற்கு வருவோர், அதிலும் கோவிலுக்கு வருவோர் சுயகட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

காட்டு கோவிலை கடந்த பின் அருவிக்கு செல்ல சரியான பாதை கிடையாது என்பதால், காட்டு ஓடையை பின் தொடர்ந்தே செல்ல வேண்டி இருந்தது. பெரிய பெரிய பாறைகள் மீது ஏற வேண்டி இருந்தது, சில இடங்களில் பாறை வழுக்கலாவும், சில இடங்களில் காட்டு ஓடையின் குறுக்கேயும் கடந்து சென்று கொண்டிருந்தோம்.

பயணத்தின் சரிபாதி தொலைவை கடந்த பின் பலரும் சோர்வடைய தொடங்கினர். அருவிக்கு செல்லும் வழியில் பல இடங்களில் சிறிய அளவிலான குட்டை இருந்தது. இதற்கு மேலும் நடக்கவியலாது என நினைத்தவர்கள் நாங்கள் கடைசியாக பார்த்த காட்டு ஓடையின் குடையில் குளித்து கொள்ள, நானும் உடன் 10 நண்பர்களும் எப்படியாவது அருவியை பார்த்துவிடுவது என முடிவு செய்து மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
ஆனால் எங்கள் யாருக்கும் அருவிக்கு செல்லுகிற பாதை தெரியாது. ஏற்கனவே அருவியில் குளித்துவிட்டு எதிர் வந்தோர் சொன்ன தகவலை கேட்டுக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம், முதல் இடமே சிக்கலாக இருந்தது. பெரிய பாறையின் உச்சியில் இருக்கும் மரத்தின் வேரை மட்டுமே பிடித்துக்கொண்டு மேலே ஏறவேண்டி இருந்தது. உடன் வந்த தங்கை காயத்திரி கொடுத்த அசாதாரணமான ஊக்கத்தில் நாங்கள் மேற்கொண்டு தொடர்ந்தோம்.

சில இடங்கள் செங்குத்தான மலையேற்றமாகவும் சில இடங்கள் சறுக்கும் மணற்பரப்போடும், சில இடங்களில் முட்புதரும் இருந்தது, அனைத்தையும் கடந்து செல்லும் போதே காடு குறித்தும், காட்டில் நாம் என்ன உணர வேண்டும், காட்டை நாம் எவ்விதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டே முன்னேறி சென்ற போது அருகில் பலமான சத்தத்தோடு காட்டின் உட்பகுதியில் இருந்து நீர் கொட்டிக்கொண்டு இருந்தது.

அருவிக்கு வெகு அருகில் வந்துவிட்டோம், இது வரை மலையேற்றமாக இருந்தது இப்போது மலைக்கு சற்று இறக்கமாக செல்ல வேண்டி இருந்தது. அருவிக்கு அருகில் செல்ல செல்ல காடு தன்னுள் மறைத்து வைத்துள்ள அதிசயங்கள் புரிய தொங்கியது. என்னுடன் வந்தவர்களில் யார் இதை பார்த்தார்கள் என தெரியவில்லை ஆனால் நான் நீண்ட நேரமாக அந்த அற்புதத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். வழியில் பல வண்ணங்களில் ஓணான்களை பார்க்க முடிந்தது, இந்த மலைகளின் பாறைகளும் மிக வித்தியாமாக இருந்தன.

சரியாக ஓடைக்கு சற்று அருகில் ஒரு இடத்தில் பாறையில் மேல் படர்ந்து இருக்கும் மரத்தின் வெளிப்புற வேர் வழியாக நீர் வந்து கொண்டிருந்தது ஆனால் அந்த மரத்திற்கு மேலே எவ்வித நீரும் வந்து சேர்வது இல்லை ஆனால் வேரில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது. மற்றொரு இடத்தில் பாறையின் உட்பகுதியில் இருந்து நீர் நேராக கசிந்து கொண்டிருந்தது.

பசி, தலைவலி, உடல் சோர்வு, கடுமையான மலையேற்றம் என எல்லாவற்றையும் கடந்து கடைசியில் அருவியில் குளிக்கும் போது கிடைத்த சுகம் இருக்கே.... அடடா வார்த்தைகளால் சொல்லிட இயலாத இன்பம்.

இந்த கோடையிலும் காட்டு ஓடையில் நீர் ஓடிக்கொண்டு இருக்கிறது, அதைவிடவும் காட்டு ஓடையின் நீர் மிக மிகத்தெளிவாக இருந்தது தான் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. சில மணிநேரம் அருவியில் குளித்து விட்டு கிளம்பும் போது அங்கு ஏற்கனவே இருந்த சில உள்ளூர் நண்பர்கள் இன்னும் மேலே சென்றால் ஒரு பெரிய குளம் இருப்பதாகவும் அங்கிருந்து தான் நீர் இந்த அருவிக்கு வருகிறது எனவும் சொல்லியிருந்தார், ஆனால் ஏற்கனவே எங்கள் அனைவருக்கும் கடுமையான பசி மேலும் அப்போது நேரம் மதியத்தை கடந்து இருந்ததால் மேற்கொண்டு நேரத்தை விரயம் செய்யாமல் அருவியின் நீரை மட்டும் பல புட்டிகளில் பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

முதலில் சொன்ன அந்த காட்டு கோவிலுக்கு அருகில் எங்களுக்காக அனைவரும் காத்திருந்தனர், எல்லாருமாக மீண்டும் அந்த முதல் தடுப்பணையில் குளித்துவிட்டு, நிறைவான இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தமிழக எல்லையை நெருங்கும் வரை மீண்டும் சாலையோரங்களில் பனங்கள் குடங்களை வைத்து பெண்கள் விற்றுக்கொண்டு இருந்தனர். சில பனையேறிகள் மரமேறிக் கொண்டிருந்தனர். தமிழக எல்லைக்குள்ளும் பனைமரங்கள் ஏராளமாக இருந்தது ஆனால் அதனை அரவணைக்க யாரும் இல்லாமல் வெறுமையோடு இருந்தன.

விரைவில் மற்றுமொரு காட்டிற்குள் நுழைந்து செல்வோம்.

06.06.2022
பனை சதிஷ்


Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்