பனை கனவுத் திருவிழா


பனை கனவுத் திருவிழா

     தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் பனை திருவிழாவில் ஒன்றுகூட வாருங்கள்.

     உலகில் உள்ள எல்லா வகையான சமூக பண்பாட்டு படிமலர்ச்சியையும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வைத்திருக்கும் தமிழகத்தின் சமூக பண்பாட்டு, தொடர்ச்சியின் பேர் ஆவணமாக இருக்கும் பனையை கொண்டாட ஒன்றிணைவோம்.

     ஒரு மரம் தன்னுடைய எல்லா உறுப்புகளையும் மானுட பயன்பாட்டிற்கு கொடுக்கிறது என்றால் அது பனை மரமாக தான் இருக்கும். ஒரு பனை மரம் தன் மொத்த வாழ்நாளையும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அற்பணிக்கிறது.

     தமிழ் கழக காலத்திற்கு முன்பில் இருந்தே பனைசார் பொருட்கள் தமிழக மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எளிய மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக பனைசார் பொருட்கள் இருந்தமையால் ஏறக்குறைய எல்லா தமிழ் கழக நூல்களிலும் பனையின் உணவுகளை அதன் பாகங்களை நேரடியாகவும், உவமையாகவும் அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றும் தமிழக நிலமெங்கும் பனைசார்
முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதில் நிச்சயமாக பனங்காடு பனைசார் முன்னெப்பின் மிக முக்கிய மையமாக இருக்கும்.

     தமிழகத்தின் பொருள்சார் பண்பாட்டில் எப்போதும் தனக்கான தனித்த இடத்தை கொண்டிருக்கும் பனை அன்னையின். தமிழ் மொழியையும், தமிழ் சமூகத்தின் பண்பாட்டையும் ஒருசேர கொடுத்த பனை அன்னையின். இம்மண்ணின், வரலாற்றின் எல்லா கால கட்டங்களிலும் மக்களுக்கான மரமாக துணை நிற்கும் பனை அன்னையின். இந்நிலத்தின் உணவு, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், விழுமியங்கள், பெருங்கதையாடல்கள் என அனைத்து நிலைகளிலும் தன் இருப்பை கொண்டுள்ள பனை அன்னையின் கனவுத் திருவிழாவை கொண்டாட வாருங்கள்.

     முக்கியமாக பனை கனவுத் திருவிழாவில் பனை உணவுகள், பனையோலை கைவினை பொருட்கள் அங்காடி, மாவோளி சுற்றுதல், கருப்பட்டி காய்ச்சுதல், பனை விளையாட்டுகள், பனை கருத்தரங்கம், பனையேற்றம், பனையோலை பின்னல் பயிற்சி, பனை சுற்றுலா என பனையின் அனைத்து அம்சங்களும் பனங்காட்டில் திரளான மக்கள், பனையேறிகள் உழைப்பில் நடைபெற இருக்கிறது.

      இனி வருங்காலங்களிலும் மக்களால் தொடர்ந்து பேசப்படும் சூழலியல் நிகழ்வாக தான் பனை கனவுத்திருவிழா இருக்க போகிறது. எண்ணங்கள் செயல்களாக மாறி இருக்கும் பனங்காட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பனைத் திருவிழாவில் அனைவரும் இணைவோம் வாருங்கள்.

பனை நம் அடையாளம், நம் அடையாளங்களை பாதுகாப்போம்.

பனை சதிஷ் 17.06.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்