பனையும் புறம்போக்கும்

           இயற்கையை நாம் எவ்வாறு காண்கிறோமோ அவ்வாறே அதன் தோற்றமும் பயனும் நம்மில் புதைந்து விடுகிறது. அவ்வாறாக பனையை வெறும் மரமாக மட்டுமே பார்க்கும் பார்வையை சற்று விளக்கி பார்த்தால் தான் அதன் சூழலியல் கட்டமைப்பு புலப்படும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண்

எனும் குறளின் அர்த்தம் யாதெனில்:- தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே ஒரு நாட்டின் அரண்களாகும்.

ஏறக்குறைய இந்த குறளின் மையக்கருத்துடன் ஒத்துப்போவது தான் பனை. பனை மரம் என்றும் இம்மண்ணுக்கான அரண் தான், அது நீர் மேலாண்மையிலும் சரி, தரிசு நிலங்களிலும் சரி, பனை காடுகளிலும் சரி அது அரணாக இருந்து இம்மண்ணையும் மக்களையும் காக்கிறது. எல்லாவற்றிலும் மேலாக நீர் தான் உலகில் வாழும் அத்துனை உயிர்களுக்கும் அடிப்படை ஆதாராமாக இருப்பது. ஆகையால் தான் உண்ணாவிரதம் இருப்பவர்கள் கூட தண்ணீர் அருந்தி கொள்கின்றனர், மனித முயற்சியால் அல்லது அறிவியலால் ஒருபோதும் உற்பத்தி செய்ய முடியாத வளம் தான் நீர், அப்படியான முக்கியத்துவம் வாய்ந்த நீரை வியாபார வணிகமாக்கும் அறிவை தான் மனித இனம் பெற்றுள்ளது… நாம் அழித்ததெல்லாம் போக நம்மிடம் எஞ்சி இருக்கின்ற நீர்நிலைகளை நாம் எவ்வாறு காக்க போகிறோம்,…

ஆம், இங்கு தான் பனை தாயின் சேவையை நாம் உணர வேண்டும், ஒரு கிணற்றை சுற்றி பத்து பனை மரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது… வற்றவும் விடாது… அப்படியான பனை மரமே கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறி கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள் - இது நம்மாழ்வாரின் கூற்று. வேர் முதல் நுனி வரை இம் மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் பனையின் வேர் அமைப்பை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது, மற்ற எந்தவோரு மரத்திற்கும் இத்துணை தனித்துவமான வேர் அமைப்பு உள்ளதா என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். மூன்று வகையான வேர் அமைப்பை கொண்டு தான் பனை என்பதை பல்வேறு தாவரவியல் அறிஞர்களின் கூற்று, மேல் பக்கத்தில் உள்ள சல்லி வேர் அமைப்பு தான் பனை எவ்வித புயல் காற்றிலும் நிலைத்து நிற்கும் உறுதியை கொடுக்கிறது, இந்த வேர் சல்லடை பின்னல்களை போன்று மண்ணை இறுக்க கவ்வி புடித்து கொள்ளும் தன்மையுடையது, இதனாலேயே பெரும்பாலன நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த வேண்டியும், மழை நீரை வேகமாக கொண்டு செல்ல குழாய் அமைப்பாகவும் இருந்து பனையை வலுப்படுத்துகிறது. இதனால்
பனை நிறைந்துள்ள பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் வேகுவாக உயர்வதை நாம் காண முடிகிறது, நீரோட்டம் இருப்பதாலயே பல்வேறு உயிரினங்கள் பனையை தம் வாழ்விடமாக மாற்றியுள்ளது. பனையேறி என்பவன் ஓர் முக்கியமான சூழளியளாலன் என்பதை எவ்விதம் உணர்வேண்டும்...அவர்களிடம் உரையாடினாலே போதும், அவர்கள் எவ்வளவு நுட்பமாக இந்த உயிர்சூலை காண்கிறார்கள் என்று, இங்கு எல்லா உயிர்க்கும் அடிப்படை உணவான நீரை நிலத்தில் உறிஞ்சு எடுக்காதே அதை வானில் இருந்து வரவைக்க வேண்டும் என்றார் நம்மாழ்வார், அதை மெய்ப்பிக்கும் விதமாக பனை மரங்களில் இருந்து பாளையை சீவும் போது வெளியேறும் சில்வர் நைட்ரேட் என்ற வாயு மழை மேகங்களை உருவாக்கும் என்கிறது இன்றைய அறிவியல், ஆனால் இதை பல நூறு ஆண்டுக்கு முன்னமே எம் பனையேறிகள் கண்டுணர்ந்தனர்.

புறம்போக்கு நிலத்தில் பனை:-

புறம்போக்கு என்ற சொல்லாடல் தேவையற்ற அல்லது பயன்படாதது என்பதையே குறிக்கும் ஆனால் புறம்போக்கு என்ற நில அமைப்பு இல்லையேனில் நாம் நிலத்தடிநீரையோ விவசாய வேளாண் முறைமைகளையோ கிராம பொருளியலையோ சரியாக முன்னேடுத்து கொண்டு வந்திருக்க முடியாது, மேற்கூறியவை தவிர்த்தும் பல்வேறு வகைகளில் நாம் அன்றாடம் புறம்போக்கு நிலங்களை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம், பனை மற்றும் நீர் மேலாண்மையில் புறம்போக்கு நிலத்தின் பங்கு நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் அபரிவிதமாக உள்ளது, சொந்த நிலமற்ற பனையேறிகள் கருப்பட்டி காய்ச்சவும், பனையோலைகளை பதப்படுத்தவும், ஓலைகுடில் அமைக்கவும் ஏனைய பனையின் பல்வேறு பொருளியல்களை புறபோக்கு நிலங்களில் இருந்து தான் பொருளாதாரத்தில் ஓரளவேனும் அவர்கள் பயன்பெற முடிகின்றது.

குறிப்பாக பனை - உடை - ஆடு என்ற சுற்றுச்சூழல் உயிர் சங்கிலி இன்று அறிதான ஒன்றாகி வருகிறது, பன்நெடுங்காலமாக வறண்ட நிலப்பகுதிகளில் மனிதனை வாழவைத்தது பனை-உடை-ஆடு என்ற ஒருங்கிணைந்த சூழ்நிலை ஒருங்கிணைப்பே (Integrated biological chain)ஆகும். பனை குடிசை அமைக்க உதவியது, குடிசைத் தொழில் மூலம் கருப்பட்டி தயாரிக்க பனை பதநீரை சுரந்தது, உடை மரம் இத்தொழிலுக்கு எரிபொருள் தந்தது மற்றும் நெற்றுக்களை உதிர்த்து ஆடு வளர்க்க உதவியது. பனை, உடை ஆகிய மரங்களின் கீழ் புற்களும் வளர்ந்து, ஆடுகளுக்கு இப்புற்கள் தீவனமாகியது, ஆடுகள் இந்த மரங்களுக்கு உரமிட்டன பணத்தேவையை ஆடும் கருப்பட்டியும் பூர்த்தி செய்தன. இந்த அருமையான சுற்றுசூழல் சங்கிலியைச் சீமைக் கருவேல், வேலிக்கருவேல் ஆகியவை சிதைத்துவிட்டன, வேலிக்கருவேல் நிழலில் புல் கூடவளருவதில்லை. ஆனால் நமது நாட்டு பூர்வீக மரமான வெள்வேல் உடையின் நிழலில் பனை உட்பட அனைத்து தாவரங்களும் வளரும்.

  தமிழக நில பகுதியில் மட்டுமே எண்ணிக்கை அளிவில் பார்த்தால் கூட 4லிருந்து 5கோடி பனைகள் இருக்கும் இவற்றில் நாம் 10% சதவித பனையை மட்டுமே நாம் பொருளாதாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் பயன்பாட்டில் இல்லாத கோடிக்கணகான பனைகள் பெரும்பாலும் புறம்போக்கு நில அமைப்பிலேயே உள்ளது, அவைகளின் ஊடே சூழலியல் சமன்பாட்டை சரி செய்ய முடிகிறது ( மேற்கூறிய மழை மேகங்கள் குறித்த சில காரணிகள்), குறிப்பாக இந்தியா போன்ற விவசாயத்தை பிரதானமாக கொண்டிருக்கும் நாட்டில் கிராம பொருளாதார கட்டமைப்பை நாம் மேலும் வலுபடுத்த வேண்டியுள்ளது, மகாத்மா காந்தி கிராம பொருளாதாரத்தில் தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளதென்று குறிப்பிட்டுள்ளார், மேலும் காந்தியின் தனி செயலாளரும் சிறந்த பொருளாதார மேதையுமான ஜே.சி.குமரப்பாவும் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தினால் தான் இந்திய பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் என்றார், அப்படியான கிராம பொருளாதாரத்திலும் சரி வேலை வாய்ப்பிலும் சரி புறம்போக்கு நில அமைப்பு சார்ந்துள்ள பனை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

புறம்போக்கு அல்லது மானாவாரியில் உள்ள பனை மரங்கள் மூலம் சராசரியாக ஒரு வருடத்துக்கு ஒரு மரத்தின் மூலம்:-

180 லிட்டர் பதநீர், 25 கிலோ கருப்பட்டி,   20 கிலோ பனை நார்,10 கிலோ விறகு,     6 பாய், 2 கூடை போன்ற பொருட்களை கொடுக்கிறது இவற்றின் மூலம் நாம் குறைந்தபட்சம் ஒரு மரத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு 15லிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானத்தை ஈட்டி தரவள்ளது. சூழலியல் பாதுகாப்பிலும் பொருளாதார மேம்பாட்டிலும் புறம்போக்கு என்ற நில அமைப்பு இருப்தாலே இவ்வளவு நன்மைகள் கிடைக்கபெறுகிறது.

ஆனால் இன்றைய நவீன உலகம் புறம்போக்கு என்றதும் அதை தேவையற்ற நிலம் என கருதி அவைகளை ஆக்கரமிக்கும் வேலைகள் தான் தமிழகமெங்கும் நடந்து வருகிறது புறம்போக்கு நிலம் இல்லையேல் பனை இல்லை, பனை இல்லையேல் நீர்நிலைகளில் நீர் இல்லை, நீர் இல்லையேல் உலகம் என்னவாக மாறும் என்பதை உங்களின் கற்பனையில் விடுகிறேன், பனையையும் புறபோக்கு நிலங்களையும் பாதுகாப்போம் சூழலியல் சமன்பாட்டை உறுதி செய்வோம்.

பனைசதிஷ்
9994969088

Comments

  1. மிகச் சிறப்பாக புறம்பபோக்கு நிலத்தையும் பனையையும் ஒப்பிட்டு கூறினீர்கள்... பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த பதிவு..

    ReplyDelete
  2. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தோழரே...

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை தோழர்

    ReplyDelete
  4. பனை மீண்டும் உயிர் பெரும் உன் முயற்ச்சியால்.....
    பனைகிழங்கு, பனை வெல்லம், பனை பதநீர், பனை ஓலை கை வினை பொருட்கள்,
    நானும் பனையின் ரசிகைதான்.....
    இந்த பனை புரட்சி நன்றே.....
    மாற்றத்தை நோக்கி உன் பயணம்....
    வாழ்த்துக்கள் பனை சதீஷ்������....

    ReplyDelete
  5. பனையின் முக்கியத்துவத்தை கூறி பனை மீதான காதலை மேலும் அதிகரிக்க செய்துள்ளீர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்