கடற்கரையில் ஏன் பனை

        பனை மரம் பொதுவாக நெய்தல் நிலத்திற்கே உரிய மரம் என்றாலும் தமிழக மெங்கும் பல்வேறு நிலப்பகுதிகளில் பனை வளர்ந்து இருப்பதை நாம் காண முடியும், குறிப்பாக கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களிலும், சதுப்பு நிலப்பகுதியிலும், தேரிக்காடுகளிலும் பனை மரங்கள் இருக்கின்றன. மேலும் பனை மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம் வரை தடையின்றி வளர்கின்றன.

  பனையின் வளர்ச்சி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருப்பினும் கடற்கரை பகுதியில் நாம் பனை நடவை மேற்க்கொள்வதற்கான காரணமும் நாம் தான், நாம் உருவாக்கி வைத்த பேரழிவு திட்டங்களால் இன்று இந்தியவின் கடற்கரைகள் மிகவும் அபாய கட்டத்தில் இருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பேரிடர் இழப்புகளே சாட்சியம், பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த கடற்கரைகள் இன்று அதன் சமநிலையை இழக்க தொடங்கியுள்ளன. ( கடுமையான கடல் சீற்றத்தால் காணாமல் ஆக்கப்பட்ட தனுஸ்கோடியின் இன்றைய நிலையே சிறந்த உதாரணம்)

முதலில் கடற்கரைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பெரும்பாலன கடற்கரைகள் பெரும் நதிகள் கொண்டு வரும் மணல் கொண்டே உருவாக்கப்படுகிறது. நதிகள் கடலை அடையும் முன் அதன் கழிமுகத்தில் பெரிய மணல் திட்டுக்களோ அல்லது சதுப்புநில அமைப்போ உருவாக்கப்படுகிறது, அதுவே சதுப்பு நில காடாக உருமாறுகிறது ( சதுப்புநில காடுகளை பற்றி தனி பதிவில் விரிவாக காண்போம்) பொதுவாக இந்தியாவில் இரு பருவ காற்றுகள் இருப்பதை நாம் அறிவோம், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு காற்றுகள் முறையே வருடத்தின் முதல் ஆறு மாதம் கடல் அலைகளை தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் அடுத்த ஆறு மாதம் காற்று அலைகளை வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் கடற்கரை மணலை நகர்த்தும், பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மணல் நகர்வு நடந்து கொண்டே இருந்ததாலே கடற்கரைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கையான மணல் நகர்வால் நம் கடற்கரையில் பல்வேறு இடங்களில் புவியியல் அமைப்புக்கேற்ப மணல் திட்டுக்கள் உருவானது. இந்த மணல் திட்டுகள் தான் கடல்நீர் நிலத்தடிநீருடன் உட்புகாமல் இயற்கை வடிகட்டியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இன்றோ இந்திய கடற்கரைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரமற்ற கட்டுமானங்களால் (தேவையற்ற துறைமுகங்கள், கடற்கரை சொகுசு சுற்றுலா விடுதிகள்....)  கடற்கரையும், மணல் திட்டுகளும் தம் உறுதி தன்மையை வேகமாக இழந்து வருகிறது.

உதாரணமாக:- தென்னிந்தியாவின் அழகிய கடற்கரை நகரமான புதுசேரியின் கடற்கரையில் நாம் இப்போது பார்க்கின்ற அழகற்ற கற்குவியல்களுக்கு பதிலாக ஒருகாலத்தில் அழகான விசாலமான கடற்கரை இருந்தது உண்மையே பின் அந்த கடற்கரைக்கு என்ன ஆனது…? அது ஏன் மறைந்து போனது…? புதுச்சேரி அதன் வர்த்தகத்திற்காக அம்மாநிலத்தின் தெற்கு பகுதியின் கடற்கரையில் ஒரு துறைமுகத்தை கட்டியது, இதனால் நாம் மேற்கூறிய பருவ காற்றுகள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி மணலை செலுத்த முடியாமல் போனது, ஏற்கனவே துறைமுகத்தின் வடக்கில் இருந்த மணலை அலைகள் நகர்த்தி சென்று விட்டதாலும் அதை ஈடு செய்ய தெற்கில் இருந்து புதிய மணல் வராததாலும், புதுச்சேரியின் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை முற்றிலும் அழிந்தே போனது, மேலும் இந்த கடல் அரிப்பு அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் உந்தப்படுகிறது.

    இந்த கடற்கரை கட்டுமானங்கள் ஒரு புறம் அழிவை ஏற்படுத்த மற்றொரு புறம் பல ஆண்டுகளாக கடற்கரைகளில் இயற்கை அரணாக இருந்த பனைமரங்கள் மற்றும் அலையாத்தி காடுகள் இன்று மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன, கடலும் கடல் சார்ந்து வாழும் மனிதர்களின் வாழ்விலும், சூழலியல் சமன்பாட்டை பேணுவதிலும் அளவற்ற பயனை கொடுத்து வந்தது இந்த கடற்கரை காடுகளே. ஆனால் இப்போதும் நீங்கள் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரமும் ஏங்கோ ஒரு பனைமரமும், அலையாத்தி காடும் அழிக்கப்படுத்தான் இருக்கின்றன, அதன் விளைவு நாம் கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் தாக்குதல்களின் ஊடாக அறிய முடிகிறது.

பனை மரங்கள் தன் வேர் அமைப்பை நிலத்தின் அடி ஆழத்திற்கு அனுப்பி மண்ணை இறுக்கமாக பற்றிக்கொள்கிறது இதனாலேயே கஜா போன்ற புயல் தாக்கத்தில் இருந்து சில பனைகளை தவிர்த்து பரவலான பனைகள் தன்னை காத்துக்கொண்டது, பொதுவாக கடற்கரை அல்லது அதனையோட்டி வாழும் மக்கள் போதிய வருமானம் இல்லாமையால் அவர்களின் வீடுகள் பலவீனமான கட்டுமானமாக தான் இருக்கும். அவைகள் சிறிய புயல் காற்றில் கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, அந்த மக்களின் பாதுகாப்பை பனை போன்ற வலிமையான தாவரங்களே உறுதி செய்கின்றன. மேலும் மீன் பிடி தொழிலில் பனை பல்வேறு வகைகளில் தன் பங்களிப்பை கொடுத்துக் கொண்டு தான் வருகிறது. குறிப்பாக மீன் பிடி வலைகளை உலர்த்த பனையை பயன்படுத்தியுள்ளனர். மேலும்  கடற்கரை கழிமுகங்களில் உள்ள பழங்குடி மக்கள் பாரம்பரியமாக இறால் பிடிக்க பறி என்ற பனை ஓலையில் செய்யப்பட்ட சிறிய பையை பயன்படுத்துகின்றனர்.

இப்படியாக கடலும் கடற்கரையும் மக்களும் பன்னேடுங்காலமாக ஒன்றாக இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைய அறிவியல் மனிதன் செய்யும் முறையற்ற செயல்களால் கடற்கரைகள் கறைந்து வருவதை நாம் காண முடிகிறது, இது வெறும் கடற்கரை அழிவு மட்டும் அல்ல ஆயிரம் ஆண்டுக்கும் முன்னமே கிழக்காசிய பிராந்தியத்தையே தம் ஆட்சியின் கொண்டு வந்த தமிழர்களின் தாய் மண்ணின் பரப்பளவு கரைந்து வருகிறது, நம்முடைய கடற்கரைகள் தான் நமக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அவற்றை காக்க நம்மிடம் உள்ள ஆயுதம் தான் பனை. எனவே பனை விதைக்க விரும்பும் நண்பர்கள் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் உள்ள நணபர்கள் கடற்கரைகளில் பரவலாக பனையை விதைத்து நம் தமிழர் எல்லையை காக்க வேண்டுகிறேன்.

--பனைசதிஷ்
9994969088

Comments

Post a Comment

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்