கள்ளின் தொன்மை பகுதி - 3

     பனை மரத்தைக் குறிக்க மிகுதியான சொற்கள் இருப்பது போல (பி.இ. அதிலிருந்து பெறும் கள்ளைக் குறிக்கவும் சொற்கள் பல வழக்கில் இருந்துள்ளன இச்சொற்களை நிகண்டு நூல்கள் தொகுத்தளித்துள்ளன. அந்நூற்பாக்கள் வருமாறு

கள்ளின் பெயர்

இக்கு, நனை, தேன், முருகு, தோப்பி நறவு, பிரசம், தணியல், சுரை, படு வேரி, மட்டு, தேறல், சாறு பானம், வடி, பிழி, மது, வழி, தொண்டி , (ஆன) அரிட்டமும், சாதியும், கள் ஆகும்        (திவாகரம்: 111)

(அருகிக்) கௌவையும், விளம்பியும் (ஆகும்)      (திவாகரம்: 112)

பாலி, சுமாலி, ஆலி, மருட்டம் மாலி, முண்டகம், சாலி, மாரி பாடலி, மௌலி, சிக்கர், ஞாளி பாணி, குந்தி, மதுகரம், கவிகை ஆசவம், ஆம்பல், அம்பி, அம்பதை, மேதை, கஞ்சா, விகுணி. சுலோகி (பேத வகைகள் (பெயர் என அறைவர்)   (திவாகரம்: 6:113)

பாலி, பிழியே, படு, மது, தணியல் சாலி, ஆலி, ஆலை, சாறு, மாதவம், சாதி, கரையே, மாரி, மதுவம், வேரி, தொப்பி, தேறல், நாவு, பிரசம், ஆம்பல், இரேயம், தொண்டி, நனை, மாலி, அரிட்டம், ஆசம், கௌவை, கவிகை, கலோகி, கண்டை, வெறியே, அம்மியம், வாருணம், பானம் அயே, மேதை, முண்டகம், பாரி, மட்டு, காலி, சாயனம், காதம், MR. எலி, வாணிதம், கொங்கு, மகரந்தம், சாதி, சொல்விளம்பி, அருப்பம், களிலே, கல்லியம், சமாலி, ஞாளி, தேமும், நாற்றம், வடி, நறை, மதுகரம், கள்ளே.    (பிங்கலந்தை : 55)

பழையும், மந்திரமும் (பகரப்படுமே)    (பிங்கலம்: 6; 46)

அரியல், பாடலி, தேன், மட்டே அரிட்டமே, கண்டை, தொண்டி முருகு, சாயனமே, கௌமே, முண்டகம், சாதி, சாலி, பிசம், மாதவமே, மேதை பிழி, சேறு, தணியல், மாரி சுரை, மது, சுமாலி, மாலி சலோகியே, சொல் விளம்பி.    (சூடாமணி. 6:29)

நறவொடு, ஆசவமே, தொப்பி, நனை, இக்கு, ஞானி, குந்தி, வெறி, வெடி, சாறு, பானம் விகுணியே, சோபம், வேரி, 

மறவி, தேம், சுவிகை, தேறல், மகரந்தம், மதிரை, ஆம்பல்

(அறிவு அழி) படு, (ஆறெட்டும்) கள்ளினுக்கு அமைந்த பேரே)     (சூடாமணி: 6:29)



இந்நூற்பாக்களில் இடம்பெறும் சொற்கள் அனைத்தும் பனை தரும் கள்ளை மட்டும் குறிப்பன அல்ல. தினை, அரிசி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கள்ளைக் குறிப்பனவும் ஒன்றிரண்டு உண்டு. சிலது தேனைக் குறிப்பன அமரர் புராணம் (1901) என்ற நூலில் பனஞ்சாறைக் குறிக்கும் 120 சொற்கள் இடம்பெற்றுள்ளன (இம்மானுவேல் 2002: 74), கள் குறித்த இப்பெயர்கள் கள்ளின் பரவலான பயன்பாட்டையும் அதன் வகைகளையும் நாம் உணரச் செய்கின்றன.

     பனையில் மட்டுமின்றி, வீட்டிலும் கள் தயாரிக்கும் முறை சங்ககாலத் தமிழர்களிடம் இருந்துள்ளது. அரிசியிலிருந்தும் புன்புலத்தில் விளையும் தினை' என்ற தானியத்திலிருந்தும் இக்கள்ளைத் தயாரித்துள்ளனர். 'தோப்பி என்ற பெயருடைய அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கள், 'தோப்பிக்கள்' எனப்பட்டது. இல்லில் தயாரிக்கப்பட்டது அடிப்படையில் 'இல்லடுகள்' என்ற பெயரும் உண்டு.

      பனங்கள் பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. அதியமான் இறந்தபோது, வருந்திப் பாடிய அவ்வையார் சிறிய கள் பெரினே என்ற தம் கவிதையைத் தொடங்குகிறார். இங்கு இடம் பெறும் சிறிய, பெரிய என்ற அடைமொழிகள் கள் கிடைத்தலின் அளவைச் சுட்டுவனவாக உரையாசிரியர்கள் பொருள் உரைக்கின்றனர். இதன்படி பார்த்தால்
கிடைப்பருமையான பொருளாகக் கள் இருந்தமை புலனாகிறது. கள் நுகர்வோரின், எண்ணிக்கை மிகுதி இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

     கள் குடிக்க விரும்புவோர், கள் கடைக்குச் சென்று அங்கு அது கிடைக்காத நிலையில் பனை மரத்தை நோக்கிப் பயணித்தனர். அங்கும் அது கிடைக்காத நிலையில் நுங்கை வெட்டி எடுத்து வந்த செயல் குறுந்தொகையில் (293:1) இடம்பெற்றுள்ளது. கள் தேடிச் சென்ற பயணத்தைக் 'கள்ளிர் கேளிர் யாத்திரை என்று குறிப்பிட்டமையால் இக்கவிதையைப் பாடிய கவிஞர் கள்ளிலாத்திரையன்' என்று அழைக்கப்படலாயினார் என்ற கருத்து உண்டு. உ.வே.சா (2014:1-IV) அத்திரி குலத்தில் பிறந்தமையால் ஆத்திரையன் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவார்

     கள் விற்பனையில் பெண்களும் ஈடுபட்டிருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. கள் விற்கும் பெண்ணிடம் கடனுக்குக் கள்வாங்கிக் குடித்த வீரன் ஒருவன் அக்கடனைத் திருப்பி அடைக்காத நிலையில், மீண்டும் கடனுக்குக் கள் கேட்டான். அவ்வாறு தர, 'கள்விலையாட்டி' (கள் விற்பவள்) மறுக்கவே, கள் வாங்குவதற்காக ஆநிரை கவர, அவ்வீரன் சென்றதை சிலப்பதிகாரம் (12:13)

கள்விலை யாட்டி மறுப்பப்
பொறாமறவன் கைவில் ஏந்திப்
புள்ளும் வழிபடரப் புல்லார்
நிரைகருதிப் போகும் போலும்

என்று குறிப்பிடுகிறது. 'கள்நொடை ஆட்டியர்' என்ற சொல்லாலும், கள் விற்கும் பெண்களைச் சிலப்பதிகாரம் (5:24) குறிப்பிடுகிறது. ‘நொடை' என்ற சொல் விலை கூறலைக் குறிக்கும். விலை கூறிக் கள் விற்பதனால் 'கள்நொடை ஆட்டியர்' என்று குறிப்பிட்டுள்ளது. 'கள்பகர் மகடூஉ' என்ற செல்லால் பெருங்கதை (40:83) குறிப்பிடுவதும் இதே பொருளில்தான்

     பதநீர் விற்பனையில் பெண்கள் இன்று ஈடுபட்டுள்ளது போன்று பண்டைக் காலத்தில் கள் விற்பனையில் பெண்கள் ஈடுபட்டிருந்ததை இச்சொற்கள் உணர்த்துகின்றன

கள் விற்போரைக் குறிக்க 'கள்ளோார்' என்ற சொல்லை மதுரைக்காஞ்சி (அடி: 662) பயன்படுத்துகிறது. பிற்கால நிகண்டு நூல்களான, திவாகரம் (கி.பி எட்டாம் நூற்றாண்டு), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (கி.பி. எட்டு அல்லது பத்தாம் நூற்றாண்டு) ஆகியன. 'கள் விலைஞர்' (கள் விற்போர்) குறித்த பெயர்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளன. 

பழையர், துவசர், படுவர்   (திவாகரம் 2:15)

செளண்டிகர், துவசர், பிழியர், படுவர்   (சூடாமணி 2:35)

பழையர், துவசர், படுவர்      (பிங்க லம் 5:88)

     குறிப்பிட்ட தொழில் ஒன்று ஒரு நாட்டில் பரவலாக நிகழ்ந்தால் அது நிகழும் நிலப் பகுதிகளில் வெவ்வேறு வகையான பெயர்களில் அத்தொழில் புரிவோரை அழைப்பது மரபு. இதன் அடிப்படையில் கள் விற்போரைக் குறிக்கும் மேற்கூறிய பெயர்கள் உருவாகி இருக்க வேண்டும் கள் விற்பனையானது பரவலாகவும், தொடர்ச்சியாகவும் தமிழகத்தில் நிகழ்ந்து வந்துள்ளதை இத்தொழிற் பெயர்கள் வாயிலாக அறிய முடிகிறது.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்