கள்ளின் தொன்மை பகுதி - 4


கள்ளின் தொன்மை பகுதி - 4

     பனை மரத்தின் சிறப்பான பயனாக அமைவது அதன் பாளைகளிலிருந்து பெறும் இனிப்பான சாறு ஆகும். இதுவே 'கள்' என்றும் 'பதநீர்' என்றும் அழைக்கப்படுகிறது. இது பனையின் பாளையிலிருந்து இயல்பாகக் கிடைப்பதில்லை. சில கருவிகளின் துணைகொண்டு பாளையை நசுக்கி இது பெறப்படுகிறது. இது குறித்து,

- பனை மரத்திற் பாளைவருங்காலம் பருவம் பார்த்ததைத் - தாழரி
திடுக்குத் தடிகொண்டு இடுக்கிப் பிழையால் அடித்து நுனியை அறிந்து - மடக்கியே முட்டிவாய் வைத்து முடித்துவிடின் மெல்லவே மட்டுவாங் கள்கூறி வந்திருக்கும்.

என்று தாலவிலாசம் விவரிக்கிறது.

     பனையில் கிடைக்கும் சாறு அமிர்தத்துக்கு ஈடானது என்று கூறும் 'சான்றோர் குலமரபு காத்தல்' என்னும் நூல், அதை மரத்திலிருந்து சேகரித்து, இறுமாந்து நிற்கும் காட்சியை,

அந்தக் கற்பக விருட்சத்தின் மீது ஏறி அதன் மட்டையில் சிம்மாசனபதி போல் இருந்து கொண்டு, அதன் சிரசைச் சிங்காரஞ்செய்து, அதன் இனிய பாளைகளைச் சிக்குநீக்கி வெளிப்படுத்தி வித்தைப் பிரயோயங்கள் பண்ணி, புது அமுதக் கலசங்களில் வடிக்கின்ற தெள்ளமிர்தத்தைக் கும்பத்தில் வடித்துக் கொண்டு அவ்விருட்சத்தின் நடுவில் துளிர்க்கின்ற செங்குருந்தில் இரண்டு மூன்று மடல்களைச் சேர்த்துக் கொய்து, அத் தொன்னையில் புத்தாம்புது அமுதத்தை வார்த்து சிம்மாசனபதியாக வீற்றிருந்து கொண்டு என்று வருணிக்கிறது.

வழிபாட்டில் 'கள்'

சங்ககால நடுகல் வழிபாட்டில் படையல் பொருளாக, கள் இடம் பெற்றுள்ளது.

நடுகல் வீரனின் உருவத்துடன் கூடிய நடுகற்கள் சிலவற்றில் 'கள்' அடங்கிய பாத்திரம் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் நாகசாமியும் (1972:9) சாந்தலிங்கமும் (1989:28) கருதுகிறார்கள்.

நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது.

‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார். ஆநிரைகளையுடைய கோவலர் உயர்ந்த வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமாலை சூட்டி நடுகல்லை வணங்கினர் என்று புறநானூறு கூறுகிறது.

ஊர் நனியிகந்த பார் முதிர் பறந்தலை.
ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினை"


     நாட்டார் தெய்வக் கோவில் திருவிழாவின் போது 'கள்' அடங்கிய குடத்தை வைத்து வழிபடும் வழக்கம் சில ஊர்களில் இருந்து வந்துள்ளது. மதுவிலக்கு அறிமுகமான பின் இது மறைந்துவிட்டது. சில ஊர்களில் காவல்துறையின் வாய்மொழி அனுமதி பெற்று படையல் பொருளாகக் கள்ளைப்படைத்துள்ளார்கள். நாட்டார் தெய்வங்களுக்குக் கள்படைத்து வழிபட்டதை தந்தனர் சாஜீத்திரக் கீர்த்தனை, 'மதுக்குடம் பிசிதம் வைத்து அருந்தியே வணங்குவாயே', 'கள்ளு சுள்ளுடன் பூசைகள் போடு' என்று நந்தணரை நோக்கி வேதியர் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.

     வழிபாட்டில் மட்டுமின்றி இறப்புச் சடங்கிலும், பிணத்தின் முன் சோறு, கள்படைத்துள்ள செய்தியை புறநானூறு (360:16-19) குறிப்பிடுகிறது. சுடுகாட்டில் பிணத்தின் முன்பு தர்ப்பைப்புல் விரித்து அதன் மீது சோற்றுடன் கள்ளும் படைத்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்