ஜவ்வாதுமலை கானுலா - 10


#குள்ளர்குகை
#கற்திட்டைகள்
#நடுகற்கள்
#ஜவ்வாதுமலை
#கிழக்குதொடர்ச்சிமலை

     நம்முடைய காட்டுபயணங்களை பார்த்து மகிழ்ந்து போன தங்கை சுவேதா சில மாதங்களாகவே, அண்ணா எங்களையும் உங்களோடு காட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டு இருந்தா, பல வாரங்கள் கழித்து தம்பி, தங்கைகளை ஜவ்வாதுமலை காட்டுக்கு அவர்களை அழைத்து செல்ல நேரம் கிடைத்தது.

     திட்டமிட்ட படி தம்பி கிஷோரும், தங்கை சுவேதாவும் சனி கிழமை (27.03.21) இரவே நம் வீட்டுக்கு வந்து விட்டனர். அடுத்த நாள் ஞாயிறு காலை விரைவாக மலைக்கு போக முடிவு செய்து சீக்கரம் கிளம்பினோம். கோடை நெருங்கிவிட்டதால் மலைக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் கூடிய வரை விரைவாக மேலே சென்றுவிட எண்ணினேன். 

     அவர்கள் இருவரும் முதல் முறையாக ஜவ்வாதுமலைக்கு வருவதால் எந்த இடத்திற்கு அழைத்து செல்வது என்று யோசித்து, பிறகு ஜவ்வாதுமலையில் உள்ள சில தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லலாம் என முடிவு செய்து கொண்டேன்.  அதன் படி வீட்டில் இருந்து கிளம்பி போளூரில் இருந்து அத்திமூர் காட்டு பாதை வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மலை ஏறினோம். விரைவாக வந்ததால் காலை நேர சூரிய ஒளி மலைகளை கடந்து தும்பைக்காடு பள்ளத்தாக்கு காட்டின் தரையில் விழாததால் காடு இருண்ட அறை போல இருந்தது.


      மலை பாதையும், காடும் பேரமைதியை கொடுத்தது. காட்டின் அமைதி கூட நமக்கு உள்ளூர நடுக்கத்தை கொடுப்பவையாக தான் இருக்கிறது. சில மர வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்து காடு நிசப்பதமாக இருந்தது. வெகு நேரம் கழித்தே உணவு தேட செல்லும் பறவைகளின் ஓசைகள் கேட்க முடிந்தது. 

     மலைக்கு மேலே அதாவது ஐந்து கொண்டை ஊசி வலைவுகளையும் கடந்து மலைக்கு மேல் வந்த பிறகு வலதுபக்கம் மக்களுக்கான ஒரு பார்வை கோபுரம் இருக்கும் இடத்தில் அவர்களை கூட்டிச் சென்று நாம் வந்த காட்டு வழி இது தான் என தும்பைக்காட்டு பள்ளத்தாக்கின் முழு அழகையும் காட்டினேன்.

     போளூரில் இருந்து வருகையில் முதலில் வருவது அத்திமூர் காடு அடுத்து தானியாறு அதற்கடுத்து தும்பைக்காடு பிறகு மூலக்காடு வழியாக மூன்று மலைகளை கடந்து தான் ஜவ்வாதுமலைக்கு மேல போக முடியும். பார்வை கோபுரத்தில் இருந்து கிளம்பி அடுத்து அரை கி.மீ தொலைவில் மற்றொரு பார்வை இடத்தில் நின்று எதிரே தெரியும் உயரமான மலைகளை காண்பித்து அங்கு தான் நாம் செல்லப் போகிறோம் என சொல்லிட்டு இருக்கும் போது அண்ணா காடும், மலைகளும், அடர்ந்த மரங்களை கொண்ட பள்ளத்தாக்கும் அழகா இருக்குண்ணானு தங்கை சுவேதா சொலிட்டே இருந்தா.. வா மா இன்னும் உள் காட்டில் செல்ல செல்ல காடு தன்னுடைய வசீகர அழகை நமக்கு காட்டும் என அவளிடம் பேசிக்கொண்டே நகர்ந்தோம்.
     முதலில் கீழ்சிப்பிலி, வாலியம் பாறையில் உள்ள குள்ளர்குகை என உள்ளுர் மக்களால் சொல்லப்படும் பழங்கால கற்திட்டைகளை அவர்களுக்கு காட்ட அழைச்சிட்டு போனேன். ஜவ்வாது மலைக்கு மேல் வந்ததும், பட்டறைக்காடு மலைகிராமத்தை அடுத்து புதூர் என்ற கிராமம் வரும் அதுவரை போளூர் - ஜமுனாமரத்தூர் சாலை தரமான தார் சாலையாக இருக்கும். ஆனால் புதூரில் இருந்து இடதுகை பக்கமாக மலை சரிவில் ஏறி எதிரே இருக்கும் மலைகளை கடந்து செல்ல வேண்டும். கீழ்சிப்பிலி மலை கிராமத்திற்கு செல்லும் பாதை வரை முழுவதும் கடினமான மண் சாலை தான்.

     ஆரம்பத்தில் தம்பி கிஷோருக்கு ஏற்ற இறக்கமான மலைபாதையில் வாகனம் ஓட்டுவது சிரமாக தான் இருந்தது பிறகு சமாளித்து இரண்டு மலைகளை ஏறி, இறங்கி கீழ்சிப்பிலி மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
      நான் குள்ளர் குகைக்கு (கற்திட்டைகள்) கடைசியாக வந்து பார்த்தது 6 மாதத்திற்கு மேல் இருக்கும், அதனால் வாலியம்பாறை மலைமீது செல்லும் ஒற்றையடி பாதையை ஊர் மக்களிடம் கேட்க அங்கிருந்து ஒரு பெண் பாதி தொலைவு எங்களோடு வந்து வழிகாண்பித்தார், அரைமணி நேர மலை ஏற்றத்தில் குள்ளர் குகை என்ற கற்திட்டைகள் நிரம்பி இருக்கும் வாலியம்பாறைக்கு வந்து சேர்ந்தோம்.

     தம்பியும், தங்கையும் முதல் முறையாக இப்படியான மலை ஏற்றத்தையும், தொல்லியல் இடங்களையும் பார்க்கின்றனர், ஆகையால் அவர்களுக்கு அங்கு காண்பது அனைத்தும் பிரம்மிப்பாகவே இருந்தது. நாங்கள் வாலியம்பாறை மலைக்கு மேலே வரும் போதே மதிய உச்சி வெயிலை நெருங்கியது. முதலில் நிழலான ஓர் இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தோம்.
     மலைக்கு மேல் பாறை சரிவில் வளர்ந்த பெரிய புங்கை மர நிழலில் அமர்ந்தோம், சில்லென வீசும் அதன் தென்றல் காற்று நம்மை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் ஈர்த்தது. அங்கேயே அமர்ந்து உரையாடலை தொடங்கினோம், ஜவ்வாதுமலை பற்றி எனக்கு தெரிந்த விடையங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன், ஆனால் உரையின் நீட்சி சங்க இலக்கியத்தோடு பயணித்து தமிழர்களின் மரபு வழிபாட்டு முறைமைகளான நடுகல் பற்றி வந்தும் நினைவுக்கு வந்தது நாம் அடுத்து செல்லப்போகும் ஆசியாவிலேயே பெரிய அடிமரமான நீர்மருது மரம் இருக்கும் மேல்பட்டு கிராமத்திற்கு முன் உள்ள கிராமத்தில் ஒரு நடுகலை கடந்த முறை செங்கம் மரபு நடையின் போது பார்த்து இருந்தேன், எனவே நாம் அதையும் பார்க்க செல்வோம் என கூறி இருந்தேன்.
     பிறகு அங்கிருக்கும் கற்திட்டைகளை காணொளி பதிவு செய்து கொண்ட பின் அங்கிருந்து கிளம்பினோம். பாதி மலையை கடந்து ஒரு இடத்தில் ஓய்வெடுக்கும் போது சிலர் மலை மீது ஏறி வரும் சத்தம் கேட்டது. நான்கு பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் உள்ளூர் வழிகாட்டி மற்ற மூவரும் வெளிநாட்டினர்.  மிகுந்த ஆச்சரியம் மூவரில் இரு பெண்கள் இருவரும் தமிழ் அழகாக பேசினர்.

     அவர்கள் பிரான்சு நாட்டில் இருந்து தற்போது பாண்டிசேரியில் உள்ள ஆரோவிலில் தங்கி இருந்து இது போன்ற தொல்லியல் இடங்களை பார்வையிட்டு வருகின்றனராம். இந்த இடத்தை பற்றி நாம் சொல்ல சொல்ல நம்மோடு ரொம்ப நெருங்கிவிட்டனர். அவர்களுக்கும் ஜவ்வாது மலை பற்றி விவரித்து கூறியதை ஒவ்வொன்றாக பதிவு செய்து கொண்டனர். நீண்ட உரையாடலுக்கு பின் அவர்களோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பிறகு அங்கிருந்து கிளம்பி மீண்டும் அந்த கடினமான மலை சரிவுகளில் வாகனத்தை கவனமாக ஓட்டிக் கொண்டு புதூர் கிராமத்தின் போளுர் - ஜமுனாமரத்தூர் சாலையில் இணைந்து ஜமுனாமரத்தூர் வந்தடைந்தோம்.

      அடுத்து மதிய உணவுக்காக ஜமுனாமரத்தூர் சென்று சாப்பிட்டு பின் அங்கிருந்து 30கி.மீ தொலைவில் உள்ள மேல்பட்டு கிராமத்திற்கு கிளம்பினோம். அத்திப்பட்டில் இருந்து செங்கம் வரை செல்லும் இந்த மலைப்பாதை எனக்கு ரொம்பவும் பிடித்த மலைபாதை. இந்த வழி நெடுக நீர் ஓடைகள், சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பலா பழத்தின் வாசனை, பசுமையான வயல் வெளிகள், மலைகிராமங்கள் என அனைத்தும் மனதிற்கு சுகத்தை கொடுக்கும். ஆச்சரியமாக இந்த கோடையிலும் ஒரு சில ஓடைகளில் தண்ணீர் போய்க் கொண்டிருந்தது. 
     புலியுர், பெருமுட்டத்தை அடுத்த அழகிய மலைகிராமம் மேல்பட்டு. செங்கம் செல்லும் அந்த சாலையின் இடதுபக்கம் கம்பீரமாக இப்போதும் உயிர்போட இருக்கும் முதாய் மரம் தான் ஆசியாவின் பெரிய அடிபாகத்தை கொண்ட நீர்மத்தி மரம். சுவேதாக்கு அந்த மரத்தை பார்த்ததும் பெருத்த ஆச்சரியம் இவ்வளவு பெரிய மரங்களை நாம் படத்தில் தானே அண்ணா பார்த்திருக்கோம் என்றாள். 

     தங்கை சுவேதா கொண்டு வந்திருந்த Inch Tape கொண்டு மரத்தின் சுற்றளவை தோராயமாக அளவெடுத்தோம், அது 50அடிக்கு கிட்ட வந்தது, கொஞ்ச நேரம் அந்த மரத்தின் நிழலிலேயே ஓய்வெடுத்த பின் அங்கிருந்து திரும்பி ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் இரண்டு கி.மீ தூரத்தில் வலது பக்கம் செல்லும் குறுக்கு சாலையில் பயணித்தால் இடது பக்கமாக இருக்கும் வயல்வெளிகளை கடந்து சரியான அளவாக வெட்டப்பட்ட ஒரு பாறை பாதி மண்ணில் புதைந்து இருப்பதை பார்க்க முடியும். பாதி உருவம் மட்டுமே தெரியும் அந்த நடுகல் வீரனின் உருவத்திற்கு வலது, இடது பக்கத்தில் சிறிய அளவிலான உருவங்களும் இருந்தது. அது என்ன வகையான நடுகல் என்பது பற்றி சரியாக நினைவு இல்லை.

  (திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய சங்கப்புகழ் செங்கம் மரபு நடையில் தான் முதல்முறையாக இந்த இடத்திற்கு வந்து நடுகல்லையும் அடுத்துள்ள பழங்கால ஆயுதங்களை கூர்
தீட்ட பயன்பட்ட பாறை அடையாளங்களையும் பார்த்திருந்தோம்)

     நடுகல்லை பார்த்த பிறகு இறுதியாக அத்திப்பட்டில் இருந்து போளூர் செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் கோவிலூரில் இருக்கும் சோழர்காலத்து சிவன் கோயிலையும் அங்கிருந்த நடுகல்லில் வீரன் ஒருவன் புலி போன்ற ஒரு விலங்கை கொல்வது போன்ற உருவம் இருந்ததையும் காட்டினேன். (இங்கயும் செங்கம் மரபுநடையின் போது தான் முதன் முதலாக வந்தது) அனைத்தையும் பார்த்துவிட்டு வீடு வந்து சேர இரவு 9மணி ஆகிவிட்டது. தம்பியும் தங்கையும் அடுத்த நாள் அலுவலக செல்ல இருப்பதால் இரவே சென்னைக்கு கிளம்பினர். அவர்களை வழியனுப்பி வைத்துட்டு இரவு உணவை முடித்து, பொறுமையாக பயண அனுபவத்தை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
     உண்மையில் மழைகாலம் மட்டும் அல்ல கோடை காலத்திலும் காடு தன் அதி அற்புதமான வசீகர அழகை காட்டுகிறது.

பனைசதிஷ்
28.03.2021

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்