பனையும் சுட்டியானையும்


#மலை_அழைக்கிறது
#ஜவ்வாதுமலை
#பனையும் #சுட்டியானையும்

       சென்னை புத்தக திருவிழாவில் குழந்தைகளுக்கு நாம் பனை ஓலை பொருட்கள் செய்வதை உடன் இருந்து பார்த்த ஆற்றல் பிரவின் அண்ணா, தம்பி இன்னும் சில வாரங்களில் சுட்டியானை மாத இதழ் மூலமாக  ஜவ்வாதுமலையில் குழந்தைகள் முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கோம், நீங்கள் குழந்தைகளுக்கு பனை ஓலையில் பொருட்களை செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டு இருந்தார். பனை ஓலையில் பொருட்களை குழந்தைகளுக்கு செய்து மட்டுமே கொடுத்த எனக்கு, பனை ஓலை பொருட்களை செய்ய கற்றக் கொடுக்கும் நிகழ்வு புது அனுபவத்தை கொடுக்கும் ஆகையால் மறுமொழி பேசாது அண்ணாவிடம் சரி என்றேன்.

      மார்ச் 20,21 தேதிகளில் நிகழ்வை நடத்துவது என்று முடிவானது, நிகழ்வு நடக்கும் வலசை வாழ்வியல் பள்ளி (பண்ணை) ஜமுனாமரத்தூரில் இருந்து மேற்கே காவலூருக்கு அருகில் மலைரெட்டியூர் எனும் மலை கிராமத்தில் மலை, காடு, மா தோப்புகள் சூழ்ந்த  அரணுக்குள் உள்ள ஒருங்கிணைந்த பண்ணை. அதன் நிறுவனரான ஐயா முருகேசனது அற்பணிப்பு அளப்பரியது, அவ்வூரின் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக அன்பாலயம் அமைத்து அங்கு தினமும் உணவு வழங்குகின்றனர். மேலும் அப்பகுதி கணிணி கற்றல் மையம் அமைத்து அதன் மூலம் ஊர் இளையஞர்களுக்கு கணிணி வழி கல்வி பயிற்சியும் கொடுக்கின்றனர். இது தவிர இன்னும், இன்னும் ஏராளமான நற்செயல்களை செய்துவரும் ஐயா முருகேசன் இந்த சமூகத்திற்கு தேவையான மனிதர். 

     20.03.2021 சனிக்கிழமை காலை நிகழ்வு ஆரம்பித்துடும் அதனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் முந்தைய நாளே அங்கு சென்று விட்டுடோம், ஒரு வாரத்திற்கு மேல் அலைந்தும் ஓலையில் பொருட்கள் செய்ய பதப்படுத்தப்பட்ட பனை ஓலைகள் மிகக்குறைவான அளவே கிடைத்தது, அதனால் செய்முறை பயிற்சியை தென்னை ஓலையில் செய்துகொள்ளலாம், சில பொருட்களை மட்டும் பனை ஓலையில் செய்து அவர்களுக்கு கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டோம்.
        காலையில் குழந்தைகள் அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, நிகழ்வின் நோக்கம் பற்றி நண்பர்கள் ஜெகதீஷ், பிரவின் மற்றும் அசோக் அவர்கள் விளக்கிய பின் சமீபத்தில் மறைந்த சமூக மருத்துவர் ஐயா ஜீவாவிற்கான நினைவு அஞ்சலியோடு நிகழ்வு ஆரம்பித்தது, நான் நினைத்ததை விட அதிக குழந்தைகள் வந்து இருந்தனர், அதில் பெரும்பாலானோர் நகரத்தில் வசிக்கும் குழந்தைகள்.

      ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்த பின் குழந்தைகளை குழுக்களாக பிரித்தோம், சரிபாதி குழந்தைகள் என்னோடு பனை ஓலை பொருட்களை கற்கவும் மற்ற குழந்தைகள் களிமண்ணில் விளையாட்டு பொருள் செய்யவும், ஓவியம் வரையவும் சென்றனர், ஒவ்வொரு குழுவும் தங்கள் பயிற்சியை முடித்தவுடன் அடுத்தடுத்த குழுக்களில் இணைந்து கொண்டனர்.
      முதலில் பனை குறித்து உரையாடலை குழந்தைகளிடம் முன் வைத்தோம், பனையை பற்றி அவர்களுக்கு தெரிந்ததை சொல்லுமாறு கேட்கவுடன் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தவற்றை ஒவ்வொன்றாக சொல்லினர், சில குழந்தைகளுக்கு நுங்கை தவிர வேறு ஏதும் தெரியவில்லை, சில குழந்தைகள் கருப்பட்டி, பனம் பழம், நுங்கு வண்டி என இன்னும் சிலவற்றை சொல்லி இருந்தனர். முதலில் பனை கொடுக்கும் உணவில் ஆரம்பித்து பனையின் பயன்பாடுகள், அதன் தேவைகள் குறித்து ஓரளவுக்கு குழந்தை தன்மையோடு சொல்லிருந்தேன். நிச்சயம் அவர்கள் அதனை உள்வாங்கி இருக்க வேண்டும், அது அவர்கள் தொடர்ச்சியாக கேட்ட கேள்வியில் இருந்து உணர முடிந்தது.

    பனையை பற்றிய உரையாடல் முடிந்து, பனை ஓலையை தண்ணீரில் நனைத்து எடுத்து அளவாக வெட்ட சொல்லிய பின் அவர்களுக்கு முதலில் ஓலையில் "கை கடிகாரம்" செய்வது எப்படி என சொல்ல ஆரம்பித்தேன், எதிர்பார்த்ததை விட அனைவரும் விரைவாக கற்றுக்கொண்டு பின் அவர்களே செய்து முடித்தனர். ஒவ்வொருவரும் இரண்டு மூன்று முறை கை கடிகாரம் செய்து இருப்பர். அதன் பின் ஓலையில் "கிரீடம்" செய்ய கற்றுக் கொடுத்தோம், சிலருக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கடைசியில் அனைவரும் செய்து முடித்தனர். 
 
     முதல் அமர்வு முடிந்ததும் மதிய உணவு சாப்பிட்டு அடுத்த குழுவுக்கும் இதே போன்ற கை கடிகாரம் மற்றும் கிரீடம் சொல்லிக்கொடுத்தேன், முதல் குழுவை விட கற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டனர் ஆனாலும் அனைவரும் செய்து முடித்தனர்.  அவர்களிடம் பேசும்போது தான் நாம் இன்னும் எப்படி எளிமையாக சொல்லிக் கொடுக்க முடியும் என கற்றுக்கொள்ள முடிந்தது.

     சில குழந்தைகள் இரண்டு நாள் நிகழ்வு முடித்து போகிற நேரம் வரை ஓலையை கையில் வைத்துக் கொண்டு கிரீடம் கொண்டிருந்தனர். பனையை குழந்தைகளிடம் தெளிவாக கடத்தும் போது அது எம்மாதிரியான செயலை பிரதிபளிக்கிறது என்பதை கண் கூடாக அங்கு பார்கக்க முடிந்தது.

      அதனை தொடர்ந்து இரவு நெருப்பு மூட்டி பறையோடு நடனம், நிலா வெளிச்ச நடை அடுத்த நாள் காலை பறவை கண்டறிதல், சேற்று குளியல், கிணற்று குளியல், காடரிதல், பண்ணை வலம், நிழற்பாவை கூத்து என இரண்டு நாள் நிகழ்வுகள் அனைத்தும் குழந்தைகளுக்கு நிறைவான வாழ்வியல் அனுபவத்தை கொடுத்தை அவர்களே இறுதியான அனுபவ பகிர்வில் சொல்லிவிட்டனர்.

     இந்நிகழ்வில் பனை பொருட்கள் கற்றுக்கொடுக்க வாய்ப்பளித்த சுட்டி யானைக்குழுவுக்கும், வலசை வாழ்வியல் பள்ளிக்கும், வந்திருந்த சுட்டியானை குழந்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

     பனையை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கடத்தி கொண்டு செல்ல இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தமிழகம் முழுக்க முன்னெடுக்க பட வேண்டும்.
மேலும், குழந்தைகளுக்கு தொடர்ந்து பனை ஓலை விளையாட்டு பொருட்கள் பயிற்சியை (உரையாடல்) கொண்டு சேர்க்க விரும்புகிறேன், நிகழ்வை முன்னேடுக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்க.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்