ஜவ்வாதுமலை கானுலா - 9


#நடுகற்கள்
#கற்திட்டைகள்
#ஜவ்வாதுமலை
#கிழக்குதொடர்ச்சிமலை

     நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜவ்வாதுமலை காட்டுக்குள்

     சில மாதங்களுக்கு முன் ஜவ்வாது மலையில் நாம் சென்று பார்த்த கற்திட்டைகள் எனும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை பார்க்க சேலத்தில் இருந்து தொல்லியல் ஆர்வலர் ஐயா மோகன் மற்றும் செய்யாரில் இருந்து மருத்துவர் நண்பர் ஒருவரும் வந்திருந்தனர்.

     ஐயா மோகன் தமிழகத்தில் உள்ள நடுகற்கள், சமண படுக்கைகள், தொல்லியல் இடங்கள் என தம் தொடர்ச்சியான பயணங்களில் ஆவணப்படுத்தியுள்ளார். ஜவ்வாதுமலையில் உள்ள கற்திட்டைகளை பார்க்கவே அவர் சேலத்தில் இருந்து வந்தார்.

     நாங்கள் முதலில் ஜவ்வாதுமலை கற்திட்டைகள் மற்றும் பூசிமலைக்குப்பம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சமண கற்படுக்கைகளை பார்ப்பதாக திட்டமிட்டோம், நேரம் இருந்தால் போகிற வழியில் சில நடுகற்களை பார்த்துவிடலாம் என நினைத்தோம். 

     கடந்த சனி கிழமை (13.03.21) காலை எங்கள் ஊருக்கு இருவரும் வந்து சேர்ந்தனர், முதலில் எங்கள் ஊரில் உள்ள சமண ஆலயத்தை பார்த்த பிறகு, வேலூர் சாலையில் கண்ணமங்கலத்தில் இருந்து அமிர்தி வனப்பகுதி வழியாக ஜவ்வாதுமலையில் பயணத்தை ஆரம்பித்தோம்.

     காட்டை நெருங்கியவுடன் கோடையின் உக்கிரம் தெளிவாக தெரிந்தது, கோடையை சமாளிக்க இப்போதே பல காட்டு மரங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பித்துவிட்டது. காட்டு ஓடைகளிலும் மிக சிறிதளவே நீர் கசிந்து கொண்டிருந்தது. இம்முறை ஏப்ரல், மே மாத கோடை வெயில் கடினமாக தான் இருக்கப் போகிறது.

      அமிர்தி வனப்பகுதியில் இருந்து 1மணி நேர பயணத்தில் ஜவ்வாதுமலைக்கு மேல் உள்ள நம்மியபட்டு மலைகிராமத்தை கடந்தால் சாரணங்குப்பம் என்ற மலை கிராமம் வரும் அதற்கு முன் வலது பக்கம் சாலை சந்திப்பில் இருக்கும் பாறையில் உள்ள இரண்டு கற்திட்டைகளை பார்த்தோம்.
 
     அங்கிருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையிலேயே பயணப்பட்டால் மலைகிராமங்கள் முடிந்தும் காட்டுப்பகுதி தொடங்கும், நடுக்காடு வரை சென்ற பிறகு இடது பக்கம் செல்லும் சாலை மண்டப்பாறை, கள்ளிப்பாறை என்ற மலை கிராமங்களுக்கு செல்லும். அவ்வழியே சென்றால் கடைசியாக தார்சாலை முடிந்து மண் சாலை ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்தது வலது பக்கம் உள்ள மலை மீது ஏறினால் மலைக்கொல்லை என்ற கிராமம் வரும் அங்கிருந்து 500மீ நடை தூரத்தில் பெரும்பாறை மீது 15க்கும் மேற்பட்ட கற்திட்டைகளை காணலாம், இது குறித்து சென்ற பயண பதிவில் விரிவாக பார்த்தோம்.

     இம்முறை காரில் சென்றதால் கள்ளிப்பாறையில் தார் சாலை முடியும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்தே மலையேற ஆரம்பித்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு காலையிலேயே புத்துணர்ச்சியான மலையேற்றம்.

     மலையேறும் போது எதிரே இருந்த மலை வித்தியாசமாக தெரிந்தது. சில நிமிடம் நின்று அதை உற்று பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மலையின் சரிபாதி வரை காடு அழிக்கப்பட்டு நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்காக இப்படி செய்திருக்க வேண்டும். ஜவ்வாதுமலையில் உற்பத்தி ஆகும் ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இம்மரைகள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவது, ஆறுகளில் நீர்வரத்தை முற்றிலும் இழக்க செய்யும், இந்த பயணத்தின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட காட்டு ஓடை காய்ந்ததும் கூட இது போன்ற நீர் ஆதரங்களை அழித்ததன் விளைவு தான்.

     கற்திட்டைகளை பார்வை இட்ட பிறகு அங்கிருந்து விரைவாக கீழ் இறங்கி அமிர்தி வந்து சேர்ந்தோம், வழியில் அமிர்தி அடுத்த வேடகொல்லைமேடு கிராமத்தில் வேடப்பனார் என்ற நடுகல்லை பார்த்தோம், இவ்வழியியே பலமுறை வந்திருந்தாலும் இப்போது தான் இப்படி ஒரு நடுகல் இங்கு இருப்பதையே பார்க்கிறேன். அங்கிருந்து கண்ணமங்கலம் வந்து சுடசுட பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக பூசிமலைக்குப்பம் சமண கற்படுகையை பார்க்க சென்றோம்.
     பூசிமலைக்குப்பம் கிராமத்தில் ஒரே இடத்தில் ஒரு நடுகல்லும், ஒரு சதிக்கல்லும் இருக்கிது, அதனை பார்த்த பிறகு சமண கற்படுக்கை உள்ள மலைக்கு காட்டுப்பயணத்தை ஆரம்பித்தோம். ஏற்கனவே பலமுறை நான் இந்த காட்டிற்கு வந்து இருக்கிறேன். ஆனால் இம்முறை கடுமையான வெயில், காட்டில் முட்செடிகள் கூட காய்ந்து போய்ருந்தது அந்தளவிற்கு கடும் வெயில். கூடிய அளவு விரைவாக இருவரையும் சமணகற்படுக்கை இருக்கும் பாறைக்கு அழைத்து செல்ல வேண்டி இருந்தது. 

      கடந்த ஆண்டு முதல் முறை நானும் என் பங்காளி மதனும் வரும் போது இங்கிருந்த கற்படுக்கையின் மேல் பாறை ஓவியக்குறியீடு பற்றி ஆவணப்படுத்தி இருந்தோம். ஆனால் அதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. ஐயா மோகன் அதை பார்த்ததும் ஆம் இது பாறை ஓவியங்கள் தான் என்பதை உறுதி செய்தார். பின்னர் அவர்கள் தேவையானவற்றை ஆவணம் செய்த பிறகு கீழ் இறங்கி மலைப் பாதையை தொடர்ந்து காட்டில் இருந்து வெளியேறி ஊர் வந்து சேர்ந்தோம்.

      தொல்லியல் வரலாறுகள், நடுகற்கள், சமண கற்படுக்கைகள் சார்ந்த ஆர்வம் மட்டுமே இருந்த எனக்கு ஐயா மோகனுடனான இந்த சந்திப்பும் உரையாடலும் நிச்சயம் இன்னும் நிறைய நிறைய வரலாற்று தொன்மங்களை பார்க்க பயணப்பட வேண்டும் என்பதை சொல்லியது. வெகுநாள் கழித்து மீண்டுமொரு மனநிறைவான பயணம்.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்