ஜவ்வாதுமலை கானுலா - 13

ஜவ்வாதுமலையின் மலையாளி பழங்குடி குழந்தைகளுடன் எப்போதாகினும் உரையாடும் வாய்ப்பு வரும், புதிதாக ஒரு அருவியை தேடிச்சென்ற எனக்கு அன்றைய நாள் குழந்தைகளுடனாக நாளாவே மாறிப்போனது.

சிறு பிராயத்தில் இருந்து தினமும் பார்த்து பழகிய மலைகள் தான் என்றாலும், கொரானா தொடங்கிய காலத்தில் எதற்சையாக நண்பனோடு ஜவ்வாது காட்டிற்கு சென்றதில் இருந்து இப்போது வரையிலும் ஒவ்வொரு முறை காட்டிற்குள் செல்லும் போது இந்த காட்டின் ஏதோவொரு புதிய வசீகரத்தை உணர்ந்த வண்ணமே இருக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் ஏற்பட்ட மிக நீண்ட தனிமையின் நேரங்களை இந்த மலையும், காடுகளுமே என்னுடன் பகிர்ந்துகொள்கின்றன.

சில மாதங்களுக்கு முன் ஜமுனாமரத்தூரில் உள்ள நம்ம குழந்தைகள் ஆசிரியர் மகாலட்சுமி அக்காவை அவரது வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அக்காவின் இணையர் அன்பு மாமா ஆசிரியராக பணி செய்யும் "அம்மட்டங்கொல்லை" மலைகிராமத்தின் அருகில் காட்டிற்குள் ஒரு குட்டி அருவி இருப்பதாக சொல்லிருந்தார்.

ஜவ்வாதுமலையின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ஓரளவுக்கு சுற்றித்திரிந்த எனக்கு அன்பு மாமா சொன்ன இடத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் அப்போதே தொற்றிக்கொண்டது. ஏனெனில் அவர் சொன்ன இடம் மிகச்சிரியாக மலையின் கிழக்கு பகுதியில் தான் இருக்கிறது. 

கடந்த மாதம் ஊருக்கு சென்ற போது அன்பு மாமா சொன்ன காட்டு அருவியின் நினைவு மீண்டும் வரவே, வண்டியை எடுத்துக்கொண்டு மலைக்கு சென்றேன். கிராமத்தின் பெயர் மட்டும் தான் தெரியும், வழியை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

சில வாரங்களாக மலையில் விட்டு விட்டு நல்ல மழை பெய்துள்ளதை செழித்து வளர்ந்திருந்த கோரை புற்களே சான்றாக காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது வரை நீர் வந்து பார்த்திடாத வறண்ட ஓடைகளிலும் நீர் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. 

சிரமமான மலைப்பாதையை கடந்து அம்மட்டங்கொல்லை மலைகிராமத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று. 15 அல்லது 20வீடுகளே இருக்கும் கொல்லை தான். கிராமத்தில் நுழைந்ததும் நம்மை வரவேற்கிறது அரசு துவக்கப்பள்ளி. பள்ளிக்கு அருகில் சென்றதும் அன்பு மாமா பார்த்துவிட்டு வெளியில் வந்து வரவேற்று வகுப்பறைக்குள் கூட்டிச்சென்றார்.

அன்பு மாமா ஜவ்வாதுமலை மலையாளி பழங்குடிகளை பற்றியும் இந்த மலை பற்றியும் விரிவாக சொல்லிட்டுயிருந்தாங்க. நான் செல்ல விரும்பிய அருவி பற்றியும் சொல்லிட்டு இருந்தாங்க. பிறகு மதிய உணவை பள்ளியில் முடித்துவிட்டு, அந்த மலைகிராமத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் என்னை வழிநடத்த அருவியை காண காட்டிற்குள் பயணமானோம். 

பள்ளியில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே காடு ஆரம்பித்துவிடுகிறது. மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் பாதையில் தான் நாங்கள் உள்ளே சென்று கொண்டிருந்தோம். காட்டிற்குள் நுழைந்ததும் கொஞ்ச நேரத்திற்குள் காட்டு ஓடையை வந்தது. இரண்டு காட்டு ஓடைகள் ஒன்றாக இணைந்து பெரிய ஓடையாகி அதுவே அருவியாக கொட்டுகிறது என உடன் வந்த பழங்குடி குழந்தைகள் சொல்லியிருந்தனர்.

முதல் ஓடைக்கு வந்ததும் இரண்டு குழந்தைகளும் ஓடையின் ஓரம் இருந்த பெரிய கற்களுக்கு அடியில் கை வைத்து அங்கிருந்த குட்டி குட்டி மீன்களை பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். பழங்குடிகளுக்கே உரிய வேட்டைத்திறனை கண் முன்னே பார்த்துக்கொண்டிருந்தேன்.
இந்த காட்டில் எங்கெல்லாம் போய்ருக்கீங்கனு அந்த குழந்தைகளிடம் கேட்டதுக்கு தூரத்தில் தெரிந்த மலையை காண்பித்து, அண்ணோ அந்த மலையை தெரியுதுல அதைய தாண்டி கீநாட்டுல (கீழ்நாடு) இருக்குற டாம் ( அணைக்கட்டு) போய்ருக்கோம்னு அவங்க சாதாராணமா சொல்லிடானுங்க. ஆனா காடுகளில், மலையேற்றங்களில் சென்றிடாத சமவெளி மக்களுக்கு நிச்சயம் அவர்கள் சொல்வது மலைப்பான தூரம் தான்.

காட்டிற்குள் சென்ற பின் ஒற்றையடி பாதையில் இருந்து ஓடையில் இறங்கி நடக்க தொடங்கினோம். ஓடையில் நீர் ஓரளவுக்கு இருகரையையும் தொட்டுக்கொண்டு சென்றது ஆனால் அதிக வேகமில்லாததால் ஓடையில் நடக்கமுடிந்தது. பல இடங்களில் ஓடையில் இருந்த கல் வழுக்கி தடுமாறினேன் அதை பார்க்கும் போதுலாம் சிரித்துக்கொண்டே அந்த குழந்தைகள் முன்னேறி நடந்துக்கொண்டிருந்தனர்.

 அமைதியான அந்த காட்டில் திடீரென பேரிரைச்சல் "காலான்குதிப்பு" என மலைமக்கள் சொல்லும் அருவிக்கு வந்து சேர்ந்தோம். 15 அல்லது 20 அடி உயரத்தில் இருந்து பெரும் இரைச்சலோடு நீர் பாறைகளை மேதிக்கொண்டிருந்தது. அருவியில் சில இடங்கள் ஆழமாக இருக்கும் பாதுகாப்பாக குளிங்க என அன்பு மாமா முன்னமே சொல்லியது நினைவுக்கு வர, மிக பாதுகாப்பாகவே மூவரும் ஆனந்த குளியல் போட்டோம்.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக குளித்து ஆட்டம் போட்ட பின் அங்கிருந்து மீண்டும் அதே ஒற்றையடிப் பாதையில் நடந்து பள்ளிக்கு வந்து சேர்ந்தபோது, பள்ளியில் இருந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அன்பு மாமாவோடு பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு ஆசிரியரும் உடன் இணைந்து கொண்டார். என்னுடைய பனையோலை சார்ந்து முன்னெடுக்கும் வேலைகளை பகிர்ந்து கொண்ட பின் உடன் எடுத்து சென்ற பனையில் இருந்து பறவையும் கிரீடமும் செய்து காண்பித்த போது குழந்தைகள் அனைவரும் பெரிதும் ஆர்வத்தோடு எனக்கு வேணும் எனக்கு வேணும் என கேட்டுக்கொண்டிருக்க. விரைவில் நிறைய ஓலைகளை கொண்டுவந்து எல்லாருக்கும் செய்து கொடுப்பதாக சமாதானம் சொல்லி சமாளித்துக்கொண்டேன்.

நான் பனையோலையில் கிரீடம், பறவை செய்து கொடுத்ததும், உடனே ஒரு சிறுமி என்னிடம் ஓலையை வாங்கி எனக்காக பனையோலையில் மோதிரம் செய்து அவங்களே போட்டும் விட்டது நான் எதிர்பார்த்திடாத நெகிழ்ச்சியான தருணம்.

பள்ளியின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டலாமா என மாமாவிடம் கேட்டு அதற்கான தன்னார்வலர்களை ஏற்பாடு செய்து விரைவில் பள்ளியில் நிகழ்வு ஒன்றை முன்னெடுத்து அப்போது சுவர்களில் வண்ண ஓவியங்களையும், குழந்தைகளுக்கு பனையோலை பொருட்களையும் செய்லாம் என மாமாவிடம் சொல்லிய பிறகு மலை கிராமத்தில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்துசேர்ந்தேன்.
ஜவ்வாதுமலையின் மலையாளி பழங்குடி குழந்தைகளுடன் எப்போதாகினும் உரையாடும் வாய்ப்பு வரும், அருவியை தேடிச்சென்ற எனக்கு அன்றைய நாள் குழந்தைகளுடனாக நாளாவே மாறிப்போனது.

காட்டின் வசீகரங்களை காணும் போது அதனுடைய பேரமைதியை நம்முள்ளும் கடத்திவிடுகிறது. இந்த ஜவ்வாதுமலையும் ஒவ்வொரு முறையும் ஆயிரம் ஆயிரமாயிரம் அமைதி எனக்குள் சொலுதிவிடுகிறது.

பனைசதிஷ்
19.12.2022

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்