ஜவ்வாதுமலை கானுலா - 14

ஜவ்வாதுமலையின் 3000 ஆண்டு அதிசயம்

     சில மாதங்களுக்கு முன் நானும் பங்காளி மதன் ஜவ்வாதுமலையில் கீழ்சிப்பிலி என்ற மலைகிராமத்தில் குள்ளர் குகை என அழைக்கப்படும் பெருங்கற்கால ஈமை சின்னங்களை பார்த்திருந்தோம்.

    அந்த பயண அனுபவத்தை பற்றி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் Bala  அண்ணனிடம் பேசும் போது, இந்த மலை முழுக்க இன்னும் நிறைய இடங்களில் இது போன்ற தொல் எச்சங்கள் நிறைந்து இருக்கு தம்பி என்று சொல்லியிருந்தார். 

     ஆம், அவர் கூறியது மிகச்சரி. எப்போதும் போல் அல்லாமல் இம்முறை தனியாக ஜவ்வாதுமலைக்கு சென்றிருந்தேன். சூரிய உதயத்தை ஜவ்வாதுமலையின் மீது இருந்து பார்த்துவிட வேண்டி விடியற் காலை 5.30மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பினேன்.
     மலைப்பாதை முழுக்க மூடுபனி அதிகமாக இருந்ததால் பொறுமையாகவே போக மூடிந்தது. மலைக்கு மேலே செல்வதற்குள் சூரிய ஒளிக்கதிர்கள் கிழக்கு திசை மலையின் உச்சியில் பட்டு பிரகாசிக்க தொடங்கி இருந்தது. ஆனால், அமிர்தி வனப்பகுதி அடுத்த ஆவாரன்வலசை பள்ளத்தாக்கு சூரிய வெளிச்சத்தை காண முடியாமல் இன்னுமும் பனியினுள் சூழ்ந்து இருந்தது. மெல்ல மெல்ல சூரிய ஒளி பள்ளத்தாக்கு முழுவதும் ஊடுறுவதை மலைமீது இருந்தது பார்த்தது பெரும் மகிழ்வு.

     அமிர்தியில் இருந்து மலைக்கு மேல் வந்தவுடன் முதலில் இருப்பது கீழ்சாரணங்குப்பம் மலைகிராமம் தான். அந்த கிராமத்தை நெருங்கும் முன் வலதுபக்கம் எதர்ச்சையாக திரும்பி பார்க்கையில் கண்ணில் பட்டது அந்த அதிசயம். வலதுபுறம் இருந்த பெரும் பாறையின் மீது #Dolmens எனப்படும் பெருங்கற்கால ஈமை சின்னம் ஒன்று இருந்தது. 

     அதை அருகில் சென்று பார்த்த போது அதே போன்று மற்றொரு ஈமைச்சின்னமும், சிதிலமடைந்த கல்வட்டமும் 50அடி தூரத்தில் வடக்கு பக்கம் இருந்தது. அது குறித்து அருகில் இருந்த ஊர்காரர்களிடம் விசாரித்த போது, அவர்கள் இதே போன்ற கற்கூடாரங்கள் மற்றொரு ஊரில் இருப்பதாக சொல்லியிருந்தனர். என்ன ஊர், எப்படி செல்வது என்ற தகவல்களை  திரட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

     அவர்கள் சொல்லி அனுப்பிய அடையாளங்கள் ஒவ்வொன்றையும்  பின் தொடர்ந்த பின் அவர்கள் சொன்ன மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.

     அதன் பின் நான் கண்ட காட்சிகளை படங்களாக கீழே இணைத்துள்ளேன்.

     ஒவ்வொரு முறையும் சொல்வது தான், ஜவ்வாதுமலைக்கு செல்லும் போதெல்லாம் இந்த காடும், மலையும் ஏதேனும் ஒரு புதிய செய்தியை என்னுள் சேர்த்துக்கொண்டே இருக்கிறது.

அமைவிடம்:- 

     வேலூர் மாவட்டம் அமிர்தியில் இருந்து ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் 25கி.மீ தொலைவில் நடுகாட்டில் இடது பக்கமாக திரும்பினால் மண்டபாறை என்ற  ஊர் வரும் அதை தொடர்ந்து நேராக சென்றால் கடைசியாக தார் சாலை முடியும் ஊர் கள்ளிப்பாறை அதுவரை புதிதாக போடப்பட்ட தார் சாலை இருக்கிறது. அதற்கடுத்து சில கிலோமீட்டர் மண் நிறைந்த மலை பாதை தான் ஆனாலும் வாகனத்தில் செல்ல முடியும், அதன் பின் மலைகொல்லை என்ற மிகச் சொர்ப்பமான வீடுகள் உள்ள ஊர் வந்து சேர்ந்ததும் அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, விசாரித்ததில் எதிரில் தெரியும் ஒரு குன்றின் மீது தான் அந்த கற்கூடாரங்கள் இருப்பதாக கூறினர். 500மீ நடைபயணத்தில் அந்த சிறிய குன்றை அடைந்து விடலாம். 

பெருங்கற்காலம்:-
   
      பெரிய, பெரிய கற்களைக் கொண்டு கூடாரம் போன்ற அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியை பெருங்கற்காலம் என்பர். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்களால், பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்த பெருங்கல் நினைவுச் சின்னங்களை அமைத்த காலம் புதிய கற்காலத்திலும், செம்புக்காலம், வெண்கலக்காலம் உள்ளிட்ட அதனை காலப் பகுதிகளிலும் இருந்த மக்களால் அமைப்பட்டது. இதனால் இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
      வரலாற்று தொன்மம் நிறைந்த இந்த மலைக்கொல்லை கிராமத்தை தொல்லியல் துறை பாதுகாத்து துறைரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்தின் அறிவு சொத்தான இந்த பழங்கால நினைவுச்சின்னங்களை பாதுகாக்கும் பொருட்டு அப்பகுதி மக்களிடம் விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் ஏற்கனவே அங்குள்ள பல கூடாரங்கள் சிதிலமடைந்துவிட்டது, சிலவற்றை மக்கள் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

குறிப்பு: தொல்லியல் ஆய்வில் பெரிய முன் அனுபவம் இல்லாததால் அவ்விடத்தை பற்றி ஆய்வு முறையில் விளக்க இயலவில்லை. எனவே ஆய்வியலில் அனுபவம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்க.

பனை சதிஷ்
24.01.21

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்