துர்கம் கோட்டை


பொங்கல் திருநாளில் புதிய  பயணம்.

நீண்ட நாட்களுக்கு முன், அண்ணா எனக்கு பனையோலையில் அம்பேத்கர் படம் செய்து கொடுங்க என தம்பி காத்து ஆசையோடு கேட்டிருந்தான். அவன் கேட்டு சில மாதங்கள் ஆகிவிட்டது, தொடர் வேலையில் அவன் கேட்டதை மறந்தே போனேன். கடந்த வாரம் தம்பி அழைப்பு கொடுத்து அண்ணா பொங்கல் திருநாளுக்கு ஊருக்கு போகிறேன் நீங்க அவசியம் இம்முறை எங்க ஊருக்கு வர வேணும் என கூப்பிட்டிருந்தான். அப்போது தான் அவன் பனையோலையில் அம்பேத்கர் படத்தை கேட்டது நினைவுக்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன் அவனது ஊரில் அவன் முன்னெடுத்து வந்த குழந்தைகளுக்கான பாடசாலையில் சூழலியல் சார்ந்த உரையாடல் ஒன்றை செய்ய வேண்டும் என்று எனக்கும், அவனுக்கும் நீண்ட நாள் ஆசை இருந்தது. ஆனால் சில புல்லுருவிகளால் அவனது பாடசாலை சிதைக்கப்பட்டே விட்டது. ஆயினும் இந்தாண்டு தம்பியின் ஊரில் பொங்கலை கொண்டாடுவோம் என்று முடிவெடுத்து தம்பி ஆசையோடு கேட்ட பனையோலையில் புரட்சியாளர் படத்தை செய்து எடுத்துக்கொண்டு அவனது ஊருக்கு சென்றிருந்தேன்.

எங்கள் ஊரில் இருந்து 40 அல்லது 45கி.மீ தொலைவில் அவனது ஆர்பாக்கம் கிராமம் இருக்கும். தம்பியின் ஊருக்கு போகிற வழியில் மன்சுரபாத் கிராமத்திற்கு அடுத்த துர்கம் என்ற சிற்றூருக்கு அருகில் இருந்த குன்றின் மீது கோட்டை போன்ற அமைப்பு இருந்ததை பார்த்து வியந்து போனேன்.

எங்களது மாவட்டத்தில் இது வரை இப்படி ஒரு கோட்டை இருப்பதை நான் கேள்விப்பட்டதே இல்லை. அதை தூரத்தில் இருந்து பார்த்ததும் உறுதியாக இன்றே இந்த குன்றியில் ஏறி கோட்டையை பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தேன்.

தம்பியை பார்த்து அவனிடம் புரட்சியாளரை கொடுத்த போது அவன் வெளி சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். முதல் முறையாக புரட்சியாளர் அவனது வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்றான். அவனது புன்னகையும், மகிழ்ச்சியும் எனக்குள் பெரும் இன்பத்தை கொடுத்திருந்தது. வீட்டில் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் வழியில் பார்த்த கோட்டையை பற்றி கேட்டதும், ஆமாங்க அண்ணா துர்கம் கோட்டை தான் அது. வாங்க அண்ணா போய் பார்க்கலாம் என சொல்லிக்கொண்டே இளநீர் வெட்டி குடிக்க கொடுத்திருந்தான். இளநீர் குடித்துவிட்டு இருவருமாக துர்கம் கோட்டைக்கு கிளம்பினோம்.

ஓரளவு புதர்காடுகளும், ஆள் உயர புற்களும் நிறைந்த காட்டுப்பகுதி. வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு கோட்டைக்கு சொல்லும் பாதையை நோக்கி நடக்க தொடங்கினோம். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு சிறிய குன்றாகவே தெரிந்தது. ஆனால் நாங்களோ பாதையே இல்லாத பகுதியில் மலையேற்றத்தை செய்து கொண்டிருந்தோம். மிகச்சரியாக உச்சி வெயில் நேரம் கையில் தண்ணீரும் எடுத்து வரவில்லை. செங்குத்தான மலையேற்றம் மிகுந்த சவாலாக இருந்தது. 

குன்றில் பாதி தொலைவு வந்த பிறகு ஒரு வேப்பம் மரத்திற்கு அடியில் ஊர்மக்கள் வழிபடும் அம்மன் சிலைகள் இருந்தது. அருகில் தகரத்தால் ஆன கூரையும் போடப்பட்டு இருந்தது. ஆடி மாதங்களில் வெகு விமர்சையாக விழாக்கள் நடக்கும் என தம்பி சொல்லியிருந்தான். அந்த கோயிலில் இருந்து கருங்கற்களால் ஆன கோட்டையின் மதில் சுவர்கள் தெளிவாக தெரிந்தது. ஆனால் இன்னமும் முழுமையாக பெரிய பெரிய பாறைகளில் ஏற வேண்டி இருந்தது.

குன்றில் இருக்கும் அம்மன் கோயில் வரை டிராக்டர் வரும்படியாக பாதையை புதிதாக போட்டுவருகின்றனர். மதிய உச்சி வெயிலில், பாதைகள் அற்ற, செங்குத்தான மலையேற்றத்தால் நாக்கு முற்றிலும் வரண்டு போனது, நல்வாய்ப்பாக ஒருவர் தன் குழந்தைகளோடு கோட்டையை சுற்றிபார்க்க வந்திருந்தார். அவர்கள் புதிதாக போடப்படும் பாதையில் வந்ததால் பெரிதாக சோர்வு இல்லாமல் இருந்தனர். அவரிடம் தண்ணிர் வாங்கி குடித்துவிட்டு, பாறைகளில் ஏற தொடங்கினோம். 20நிமிட மலையேற்றத்தில் கோட்டையின் ஆழமான சுனை கிணற்றை வந்தடைந்தோம். இதுவரையிலும் இந்த சுணை வற்றியது இல்லை என தம்பி சொல்லியிருந்தான். தீவிரமாக தண்ணீர் தாகம் இருப்பினும் சுணை நீரை குடிக்கவில்லை அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன்.

சுணையில் இருந்து கோட்டையின் மதில் சுவர் வரை கடுமையாக புதர் மண்டி கிடந்தது. ஓர் இடத்தில் பெரும் பாறையை இரண்டாக பிளந்து வழி அமைத்தது போல இருந்தது. பல சிரமங்களுக்கு பின் கோட்டையின் நுழைவு வாயிலை வந்தடைந்தோம். 

ஒரே அளவில் சரியாக வெட்டப்பட்ட பெரிய பெரிய கருங்கற்களை வைத்து பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருந்த கோட்டையின் மதில் சுவற்றில் அங்காங்கே நீளமான துளைகள்இருந்தது. பாதுகாவலர்கள் சுவற்றின் உட்பக்கமாக அமர்ந்து ஈட்டியை அல்லது துப்பாக்கியை சுவற்றில் உள்ள துளையினுள் வைத்து, கோட்டைக்குள் நுழைய முற்படும் எதிரிகளை தாக்கும் அளவுக்கு சரியாக இருந்தது. ஆகையால் இந்த கோட்டை ஒரு வெடிமருந்து சேமிப்பு கிடங்காக இருக்கவே வாய்ப்பு அதிகம் என ஊகித்தேன்.

நுழைவு வாயிலில் இருந்து உள்ளே செல்ல செல்ல பரந்து விரிந்த விசாலமான மைதானம் இருந்துள்ளதை காண முடிகிறது. தற்சமயம் அங்கே முழுவதுமாக புதர் மூடிக்கிறது. சில இடங்களை தவிர்த்து கோட்டை சுற்றிலும் பெரும்பாலான மதில் சுவர்கள் இப்போதும் உறுதியாக நிற்கின்றன. 

கோட்டையின் உள்ளே சென்ற போது பெரிய கிடங்கு போன்ற கட்டிடம் இருப்பதை பார்க்க முடிந்தது. கட்டிடத்தின் பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே நுழைந்து செல்லும்படியான இரண்டு வழிகள் இருந்தது. அதன் மேற்கூரைக்கு செல்ல மிகச்சிறிய அளவில் அழகான படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலே சென்ற பின் அனைத்து பகுதிகளையும் கழுகு பார்வையில் பார்க்கலாம்.

கிடங்கின் மேற்கூரை அரைவட்ட வடிவில், இரும்பு தூண்கள் ஏதும் இல்லாமல் செங்கற்களை மட்டுமே வைத்து கட்டப்பட்டிருந்தது வியப்பாக இருந்தது. மேலும் கூரையின் மீது மூன்று இடங்களில் குண்டு துளைத்தது போல் பெரிய பெரிய துளைகள் இருந்தது. தம்பியிடம் கேட்ட போது ஆமாங்க அண்ணா, இந்த கூரைமீது குண்டு போட்டதாக ஊர்காரர்கள் சொல்லுவாங்க என சொல்லியிருந்தான். கிடங்கின் மேற்கு சுவர் அடியில் சிதைக்கப்பட்டு உள்ளே செல்ல வழியும் அமைக்கப்பட்டு இருந்தது.

கிடங்கின் சுவர்களில் விளக்கேற்றும் மாடம் போன்றும் செய்யப்பட்டு இருந்தது. கிடங்கிற்கு தென்மேற்கு திசையில் செங்கற்களால் ஆன மற்றொரு கட்டிடமும் இருந்தது. இப்படியாக கோட்டையின் ஒவ்வொரு பகுதியும் ஆச்சரியமும், பிரம்மாண்டமும் நிறைந்ததாகவே இருந்தது. கோட்டையில் வேகமாக வீசிய குளிர்ந்த காற்றால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்க தொடங்கி, சுணையின் அருகில் வந்த போது மீண்டும் ஓய்வெடுத்தோம்.

மதியம் மணி 3 கடந்து இருக்கும் கடுமையான பசியால் தலைவலி ஆரம்பித்து இருந்தது. சுணையில் இருந்த நீர் கலங்கலாக தூசி படிந்து நீரின் நிறமே மாறி இருந்தது. அங்கு மேய்ச்சலில் இருந்த ஆடுகளும் அந்த சுணை நீரை அருந்தவில்லை. எனவே நாங்களும் பாதுகாப்பு கருதி அதை குடிக்கவில்லை. சுணை பகுதியை கடந்து கீழ் இறங்கும் போது குன்றின் பாதி வழியில் எலந்தபழ மரம் இருந்தது, எலந்தம் பழம் காய்க்கும் பருவம் என்பதால், என் கைக்கு எட்டிய வரை கிடைத்த பழங்களை பறித்து இருவரும் சாப்பிட்டு ஓரளவு பசியாற்றிக்கொண்டு கிளம்பினோம். "காடு நம்மை வெறும் கைகளோடு திரும்ப அனுப்பாது" என எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

அமைவிடம்: துர்கம் கோட்டை திருவண்ணாமலை நகரில் இருந்து வடகிழக்கே 31 கி.மீ தொலைவிலும், போளூர் நகரில் இருந்து தென்கிழக்கே 17கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் சென்று துர்கம் கோட்டையை பார்க்கலாம்.

இந்த கோட்டை யாருடைய காலத்தில், யாரால், எதற்கு கட்டப்பட்டது என்ற முழுவிபரம் தெரிந்தவர்கள் தகவலை பகிர்ந்து கொள்ளவும்.

பொங்கல் திருநாளில் இப்படி புதிய பயணத்தில் என்னை வழிநடத்திய தம்பி காத்தவராயனுக்கு அன்பும் முத்தங்களும்.

பனைசதிஷ்
15.01.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்