கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 1

திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - பழனி - உடுமலை - ஆனைமலை, சின்னார் வனப்பகுதி

     பருவ மழை காலத்தில் ஒரு முறையேனும் கேரளத்தின் சோலைக்காடுகள், புல்வெளிக்காடுகளை பார்த்திட வேண்டும், அக்காடுகளில் பயணித்திட வேண்டும் என்ற நீண்ட நாள் ஏக்கம் இப்பயணத்தில் ஓரளவு நிறைவேறியது.

     கடந்த மாத இறுதியில் வந்த தொடர் விடுமுறையில் மூணார் அடுத்த தமிழக, கேரள எல்லையில் தனியார் தேயிலை தோட்டப்பகுதிக்குள் இருக்கும் கொளுக்குமலைக்கு போகலாமா என தம்பிகளிடம் கேட்டிருந்தேன். அவர்களும் உடனே சரி எனச் சொல்ல கொளுக்குமலை செல்வது எனப்பயணம் உறுதியானது.

     மூணார் அடுத்த சூரியநெல்லி என்ற மலை கிராமப் பகுதியில் தான் கொளுக்கு மலை இருக்கிறது என்ற தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். அம்மலைக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, யாரை அணுகுவது என்ற எந்த தகவலும் அதுவரை எங்களுக்கு தெரியாது.

     கோவை சதாசிவம் ஐயாவோடு முன்னர் ஒருமுறை சின்னார் வனப்பகுதியில் கானுலா சென்றிருந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அண்ணன் மோகன்ராஜ் நினைவுக்கு வர அவரிடம் தகவலை சொல்லி உதவி கேட்டிருந்தேன்.

     அவர், மூணாரில் சூழல் சார்ந்த கானுலாக்களை ஒருங்கிணைக்கும் Bhasker Dev அண்ணனின் தொடர்பை அனுப்பி அவரிடம் பேச சொல்லியிருந்தார்.

     பாஸ்கர் அண்ணனை தொடர்பு கொண்டு நாங்கள் எத்தனை பேர், எவ்வளவு நாட்கள் தங்குகிறோம் என்ற தகவலை மட்டுமே சொல்லியிருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில் நாங்கள் தங்குவதற்கான கூடாரம் (Tent), அங்கு யாரை தொடர்பு கொள்வது அடுத்த நாள் கொளுக்குமலைக்கு செல்லும் பயணத்திற்கான Jeep தொடர்பு, உணவு என எல்லாவற்றையும் அழகாக திட்டமிட்டு அனுப்பியிருந்தார்.

     நாங்கள் சென்னையில் இருந்து பேருந்தில் திண்டுக்கல் அல்லது தேனி வந்திறங்கி அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தங்குமிடம் வந்துவிடுகிறோம் என சொன்ன போது, அப்படியானால் நீங்கள் தேனி, போடி வழியாக வராமல் உடுமலை, மறையூர், மூணார் வழியாக தங்குமிடத்திற்கு வந்தால் நீங்கள் வருகிற வழியில் நிறைய இடங்களை முதல் நாளே பார்த்துவிட்டலாம் என யோசனைச் சொல்லி, நாங்கள் பார்க்க வேண்டிய இடங்களையும் பட்டியலிட்டு அனுப்பியிருந்தார்.

     அவரிடம் தகவல் சொல்லும் வரையும் கூட மலைக்கு செல்ல இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை. ஆனாலும் பாஸ்கர் அண்ணனிடம் பயணத்தை உறுதி செய்துவிட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் சுற்றி இருக்கும் சில தெரிந்த நண்பர்களிடம் இருசக்கர வாகன உதவி கேட்டிருந்தோம்.

     இரண்டு நாட்களாக நண்பர்களிடம் வாகன உதவிக்கேட்டும் தனிப்பட்ட சிக்கலில் அவர்கள் யாராலும் உதவ முடியாத சூழல்.

     சரி, இனி பேருந்தில் தான் மூணாருக்கு செல்லப்போகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, சில ஆண்டுக்கு முன் பனை சார்ந்த பணிக்காக அறிமுகமான திண்டுக்கலை சேர்ந்த அண்ணன் Rengiah அவர்கள் நினைவுக்கு வர உடனே அண்ணனை தொடர்பு கொண்டு வாகன உதவிக்கேட்ட போது எவ்வித தயக்கமோ, யோசனையோ இன்றி தம்பி நீங்க காலையில் திண்டுக்கலில் இறங்கும் முன் வாகனம் உங்கள் கைக்கு வந்து சேரும் என சொல்லி எங்களை நிம்மதிப்படுத்தினார். (உண்மையில் அதுவரை அண்ணனை நேரில் சந்தித்தது கூட இல்லை)

     இன்னொரு வாகனம் நாதக சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த திண்டுக்கல் மண்டல பொறுப்பாளர் தோழர் லஷ்மன் தருவதாக தம்பி சந்தோஷ் சொல்லியிருந்தான். அவரும் எங்கே செல்லப்போகிறோம் என எந்த கேள்வியும், தயக்கமும் இன்றி கேட்டதும் வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

     உணவு, தங்குமிடம், வாகனம், பயணப்பாதை என எல்லாம் உறுதியான பின் பேருந்து முன்பதிவுக்கு பார்த்த போது நீண்ட வார விடுமுறை என்பதால் அரசு பேருந்துகளின் முன்பதிவுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்திருந்தது. பல தனியார் பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக இருந்தது. இறுதியில் தனியார் பேருந்து ஒன்றில் 29.09.23 இரவு 10.30மணிக்கு பயணத்தை உறுதி செய்தாகிவிட்டது.

(பாஸ்கர் அண்ணாவும், நீண்ட விடுமுறை வருவதால் நீங்கள் நினைத்த இடத்தை சென்று பார்ப்பது, உணவு கிடைப்பது என அனைத்தும் சிரமாக இருக்கும், எனவே விடுமுறை இல்லாத நாட்களில் வந்தால் ஓய்வாக அனைத்தையும் சுற்றிப்பார்கலாம் என்றார், ஆனால் நான் தான் விடாப்பிடியாய் இம்முறை தான் வருவேன் என அடம்பிடித்திருந்தேன்)

     ஒரு வழியாக எங்கள் பேருந்து அடுத்த நாள் (30.09.23) காலை 7 மணிக்குள் திண்டுக்கல் வந்துவிட்டது. நாங்கள் வருவதற்கு முன்னரே அண்ணன் ரெங்கையாவும் அவர் பள்ளி நண்பருமான பாண்டிய ராஜன் அண்ணாவும் எங்களுக்காக திண்டுக்கல் - பழனி சாலை சந்திப்பில் காத்திருந்தனர். திண்டுக்கல் வந்திறங்கிய அடுத்த சில நிமிடங்களுக்குள் தோழர் லஷ்மனனும் அவ்விடம் வந்து வாகனத்தை ஒப்படைத்தார்.

     நாங்கள் பயணத்தை தொடங்கும் முன்னமே திண்டுக்கலில் காலை உணவை எங்களோடு தான் முடித்துவிட்டு பயணத்தை தொடர வேண்டும் என ரெங்கையா அண்ணன் சொல்லிவிட,  காலை வந்திறங்கி அருகில் இருந்த உணவகத்தில்  அனைவரும் உணவை முடித்துக்கொண்டோம்.

     நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்ததால் ரெங்கையா அண்ணனிடம் அதிகம் உரையாட முடியாமல் போனது. அவர் வாகனத்தை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வாகனத்திற்கான எரிபொருளை முழுமையாக நிரப்பி கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

     திண்டுக்கலில் இருந்து பயணத்தை தொடங்கி ஒட்டன்சத்திரம் வந்த போது தம்பி விஷ்ணுவும் பயணத்தில் இணைந்து கொண்டான். அங்கேயே வாகனத்தை பழுது பார்த்துவிட்டு பின் பழனி வந்து சேர்ந்தோம். முதல் முறையாக பழனி முருகர் மலையை நேரில் பார்க்கிறேன்.

     பழனியில் இருந்து புதிதாக போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக உடுமலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தோம். போகிற வழி முழுக்க ஏராளமான காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்யும் அமைப்புகளை பார்க்க முடிந்தது.

     நெடுஞ்சாலையில் வாகனத்தை ஓட்ட முடியாத அளவுக்கு பலத்த காற்று வீசியது. அனைத்தையும் சமாளித்துக்கொண்டு உடுமலைக்கு வந்து சேர மதியம் 2.30 ஆகிவிட்டது.

     நாங்கள் மதிய உணவுக்குள் மூணார் சென்றிட வேண்டும் திட்டமிட்டிருந்தோம் ஆனால் வாகன பழுது, காற்றின் சீற்றம் என நேரம் விரயமாகியிருந்தது.

     உடுமலையில் உணவை முடித்துவிட்டு தம்பி விஷ்ணுவின் நண்பர்கள் கொடுத்த பழங்களையும் வாங்கிக் கொண்டு ஆனைமலை புலிகள் காப்பக காட்டுச்சாலையில் மூணார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம்.


     சில ஆண்டுகளுக்கு முன் இவ்வழியாக தான் சின்னார் காட்டிற்குள் கோவை சதாசிவம் ஐயாவோடு கானுலா சென்றிருந்த பயணத்தின் நினைவு வந்தது.

     காட்டின் எல்லை ஆரம்பமாகிறது என்பதை குறிக்கும் விதமாக தமிழக சோதனைச்சாவடி வந்தது. அதனை கடந்து சில கிமீ சென்ற போது காட்டின் சாலையோரம் பல வாகனங்கள் நிறுத்தப்படிருந்தது. எதிரே மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து கொண்டும், நீண்ட வரிசையில் நின்று கொண்டும் இருந்தனர்.

     காவலர்கள் மக்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு இருந்தனர். ஒரு காவலரிடம் ஏன் இங்கு இவ்வளவு கூட்டம் என கேட்ட போது, மேல ஏழுமலையான் கோவிலில் திருவிழா தம்பி அதான் இவ்வளவு கூட்டம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எதிரே உடுமையில் இருந்து ஏழுமலையான் கோவில் சிறப்பு பேருந்து என பதாகை தாங்கிய அரசு பேருந்து ஒன்று எங்களை கடந்து சென்றது.

     வனப்பகுதியில் எவ்வித ஒழுங்கும் இன்றி இவ்வளவு மக்கள் கூட்டம் அவர்களால் ஏற்படும் குப்பைகள், இரைச்சல்கள் தேவையற்றதாக இருந்தது. அங்கு மக்களால் எழுந்த கூச்சல் அடுத்தடுத்த சில மலை திருப்பங்களில், காட்டுப் பறவைகளின் ஓசையில் மறைந்து போனது.

     காட்டுச்சாலையின் இடது பக்கமாக அமராவதி அணை நீர் இருப்பை ஓரளவு பார்க்க முடிந்தது. தூரத்தில் அணையின் கரையோரம் கருமையான ஓர் உருவம் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. (அது யானையா அல்லது கரும்பாறையா என்பதை கவனிக்க முடியவில்லை)

     வறண்ட புதர் காடாக தொடங்கிய காட்டின் சாலை மெல்ல பச்சையம் நிரம்பிய அடர்ந்த காட்டுப்பகுதியாக மாறிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் என எழுதப்பட்டிருந்த சுவற்றருகே வாகனத்தை நிறுத்திவிட்டு பெரும் அமைதி சூழ்ந்திருந்த அக்காட்டினை, சில நிமிடங்கள் அமைதியாக பார்த்த பின் அங்கிருந்து நகர்ந்தோம்.

     தமிழக வனப்பகுதிக்குள் இருக்கும் தாவரங்களுக்கும், கேரள வனப்பகுதிக்குள் இருக்கும் தாவரங்களுக்கும் நிறைய மாற்றம் இருக்கும் அவற்றை கவனி என தம்பி சந்தோசிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காற்றில் வரும் குளிர் தன்மையை உணர முடிந்தது.


     வானத்தை கருமை மெல்ல சூழத்தொடங்கியிருந்தது.

     சரியாக சின்னார் வனப்பகுதியின் கேரள சோதனைச்சாவடிக்கு வந்த போது, உடன் வந்த தம்பி விஷ்ணு, காத்தவராயன் இருந்த வாகனத்தை விட்டுவிட்டு நான் ஓட்டி வந்த வாகனத்தை மட்டும் கேரள வனக் காவலர்கள் நிறுத்தினர். 

     அவர்களிடம் சில நிமிட வாக்குவாதங்களுக்கு பிறகே கவனித்தோம், எங்கள் வாகனத்தின் முகப்பில் அண்ணன் சீமானின் புகைப்படமும், தலைவரின் புகைப்படமும் இருந்துள்ளது. தவிர வாகனத்தின் பதிவு எண்ணும் தமிழில் எழுதப்பட்டுள்ளதால் தான் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம் என்பது புரிந்தது.

     நாங்கள் எவ்வளவோ சொல்லியும், அங்கிருந்த கடைநிலை வன காவலர்கள் எங்களை சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை போல பார்த்து எங்கள் உடமைகளை சோதித்தனர். எங்களை மேற்கொண்டு செல்லவும் அவர்கள் மறுத்துவிட்டனர்.

     வெளியில் நடக்கும் வாக்குவாதங்களை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த வனச்சோதனைச்சாவடியின் அதிகாரி ஒருவர் வெளியே வந்து எங்கள் வாகனத்தில் ஒட்டியிருந்த படங்களை பார்த்துவிட்டு, எங்களை நோக்கி வந்து இது அண்ணன் சீமான் தானே, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் எனச்சொல்லி பேசத்தொடங்கினார்.

      அண்ணனின் நடப்பு அரசியலை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு, பின் மலைப்பாதையில் கவனமாக வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தி, எங்கள் வாகனம் மேற்கொண்டு செல்ல அனுமதியளித்தார்.

     இதுவரை என் எந்த பயணத்திலும் நடந்திடாத இச்சம்பவத்தைப் பற்றி தம்பி சந்தோசும் நானும் பேசிக்கொண்டே மலையின் சில திருப்பங்களை கடந்து வந்த போது மலைச்சாலையின் இடது பக்கம் தொலை தூரத்தில் அடர்ந்த காட்டிற்குள் வெள்ளி உருகி ஊற்றுவது போல் பாம்பார் ஆற்றின் நீர் தூவானம் அருவியாக கொட்டிக்கொண்டிருந்தது.

     பல்வேறு காணொளிகளில் பார்த்த அருவி தூரத்தில் இருந்தாலும் கண்ணெதிரே பார்த்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. 

     அங்கிருந்து சில கி.மீ தூரம் வந்திருந்த போது கேரள வனத்துறையின் உதவியோடு பழங்குடி மக்களால் நடத்தப்படும் தேனீர் கடை ஒன்றிருந்தது. தூவானம் அருவிக்கு செல்ல இங்குள்ள வன அலுவகத்தில் தான் கட்டணம் செல்லுத்திவிட்டு செல்ல வேண்டும் என தம்பி விஷ்ணு சொல்லியிருந்தான்.

     அங்கிருந்த தேனீர் கடையில் நன்னாரி தேனீரை வாங்கி அனைவரும் குடித்துக் கொண்டிருந்தோம். உண்மையில் இதுவரை அப்படியோரு தேனீரை நான் குடித்தது இல்லை. இதற்கு முன் சத்தியமங்கலம் பயணத்தில் கடம்பூர் மலையில் புதினா, எலும்பிச்சை தேனீரை குடித்தது தான் மிகுந்த சுவை என நினைத்திருந்தேன், அதனை விஞ்சிவிட்டது இந்த நன்னாரி தேனீர்.

      தேனீரை குடித்துக் கொண்டிருக்கும் போது மழைத் தூரல் தொடங்கியது. மழையோடு தேனீரை சூடாக குடித்து முடித்து வாகனத்தை எடுத்த போது, மழையில் நனைந்த காட்டுத் தாவரங்கள் தங்களின் மீதிருந்த நீரை காற்று வீசிய போது தெரிக்க விட்டது. அந்நீர்துளிகள் அனைத்தும் எங்கள் முகத்தில் மோதி மேலும் சிலிர்ப்பூட்டியது.

     மலைக்கு மேலே செல்ல செல்ல சுற்றியிருக்கும் மரங்களில் தொடர் ஈரத்தால் பாசி நிரம்பியிருந்தது. ஆம், நாங்கள் முழுமையாக கேரளக் காட்டுப்பகுதிக்குள் வந்திருந்தோம்.

     தூரத்தில் புற்கள் மட்டுமே நிரம்பி இருந்த அந்த உயர்ந்த மலைகளை மேகங்கள் புகைப்போல் மறைக்க தொடங்கியிருந்தது. 

     வானம் மேலும் கருமையடைந்து காட்டின் இருளை மேலும் அதிகரித்தது.

பயணம் தொடரும்…
30.09.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்