கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 3

சூரியநெல்லி - கற்திட்டை -  கொளுக்குமலை - ஆனையிறங்கி - போடிமெட்டு - தேனி - திண்டுக்கல்

     உயர்ந்த மலையின் சரிவில், சுற்றிலும் நீண்ட பள்ளத்தாக்கு நிறைந்த இடத்தில் தான் இரவு தூங்கியிருக்கிறோம்.

     காலையில் கூடாரத்தில் இருத்து எழுந்து வெளியே வந்து பார்த்த போது எதிரே தூரத்தில் தொடர்ச்சியான மலை முகடுகளும், ஆங்காங்கே சில மலை கிராமங்களும், அம்மலை கிராமங்களை இடைவிடாது மோதிச்செல்லும் மேகங்களும், இருமலைகளுக்கும் இடையே நீண்ட பள்ளத்தாக்கும் என பார்க்கும் காட்சிகாள் யாவும் பிரம்மிக்க வைத்தது.

     ஓரளவு பாதுகாப்பாக மலைச்சரிவில் சற்றே கீழ் இறங்கி பார்த்த போது அருகே இருந்த புல்வெளிகள் மட்டுமே நிரம்பி இருந்த மற்றோரு மலையையும் பார்க்க முடிந்தது. அங்கிருந்து இவ்விடத்தை சுற்றி பார்க்கலாம் என அங்கே கிளம்பினோம்.
     தங்குமிடத்தில் காலையில் கொடுத்த சூடான தேனீரை குடித்துவிட்டு விரைவாக அந்த புல்வெளி மலையை நோக்கி நடக்க தொடங்கினோம். 10 நிமிட நடையிலேயே அவ்விடம் வந்து விட்டது.

     அம்மலைக்கு செல்லும் வழியில் சாலையோரம் பெரும் பாறைகளை அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கூடாரமும், அதன் எதிரே இரும்பால் ஆன சூலமும் இருந்தது. அங்கே தொடர்ச்சியாக பூசைகள் நடக்கிறது என்பதை பார்த்ததும் புரிந்தது. அக்கூடாரத்தை கூர்ந்து பார்த்த போது தான் புரிந்தது, அது பழங்காலத்திய கற்திட்டை.
     தமிழகத்தில் மலைப்பகுதிகளில் பழங்குடி மக்களால் வைக்கப்படும் இவ்வகையான கற்திட்டைகளை பரவலாக காண முடியும். உடுமலை-மூணார் சாலையில் உள்ள காந்தலூர் பகுதியிலும் இது போன்ற கற்திட்டைகள் இருப்பதாக கேள்விப்பட்டிருதேன்.

     அங்கிருந்த புல்வெளியின் ஊடாக நடந்து சென்று மலையின் முடிவை அடைந்த போது கீழே பள்ளத்தாக்கில் இருக்கும் ஆணையிறங்கி அணையை முழுமையாக பார்க்க முடிந்தது. நாங்கள் இருந்த அந்த புல்வெளி மலைக்கு பின்புறம் இருந்த உயர்ந்த மலையில் மூடுபனி இன்னும் விலகாமல் இருந்தது. சில புகைப்படங்களை எடுத்துவிட்டு விரைவாக தங்குமிடத்திற்கு கிளம்பினோம்.

     நாங்கள் தங்குமிடம் வந்து சேர்ந்த போது கொளுக்குமலைக்கு செல்ல நிறைய ஜீப்-கள் அங்கு வந்திருந்தன. எங்களை அழைத்துச் செல்லும் முனிராஜ் அண்ணனின் தொடர்பை பாஸ்கர் அண்ணா ஏற்கனவே அனுப்பி இருந்தார். அவருக்கு அழைத்த போது அவரும் ஏற்கனவே தங்குமிடத்திற்கு வந்து விட்டிருந்தார்.

     காலை உணவை வேகமாக முடித்துக்கொண்ட பின் சரியாக 10.15க்கு முனிராஜ் அண்ணனின் ஜீப்பில் கொளுக்குமலைக்கான பயணம் தொடங்கியது.
     சூரியநெல்லியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கொளுக்குமலை இருப்பதால், அங்கு ஜீப்கள் தவிர வேறு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

     பயணம் தொடங்கியதில் இருந்தே ஜீப் ஓட்டுநர் முனிராஜ் அண்ணா அழகான பாடல்களை போட்டுக்கொண்டே வந்தார்.

     சில நூறு மீட்டர் சென்றதுமே மலைச்சாலை முற்றுலும் மாறத் தொடங்கியது. இனி மேலே செல்லும் வரை முழுக்க கற்கள் பதிக்கப்பட்ட மலைச்சாலையாக தான் இருக்கும் என முனி அண்ணா சொல்லிக்கொண்டு வந்தார். ஒவ்வொரு மலை திருப்பமும் சவாலாக இருந்தது. ஏன் மற்ற வாகனங்களை அனுமதிப்பதில்லை என்று குறுகலான, கரடுமுரடான, சவால் நிறைந்த இந்த மலைப்பாதையை பார்த்த பிறகு தான் புரிந்தது. 

     மலைப்பாதையில் அனுபவம் வாய்ந்த ஜீப் ஓட்டுநர்கள் மட்டுமே இங்கு ஓட்ட முடியும். ஒரு சில கி.மீ கடந்ததும் மலைக்கு மேல் சில வீடுகளே இருந்த மலைகிராமம் வந்தது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணி செய்யும் தோட்ட தொழிலாளிகள் வாழும் இப்பகுதி வரை சூரியநெல்லி, மூணாரில் இருந்து ஆட்டோக்கள் வந்து செல்கின்றன.
     அக்கிராமத்தை கடந்த பின் எந்தவொரு வீட்டையும் நாங்கள் பார்க்கவில்லை. முழுக்க முழுக்க தேயிலை தோட்டம் மட்டும் தான்.

     அதிகாலையில் இங்கு பெய்த மழையால், மலைப்பாதை முழுக்க சேரால் நிரம்பி இருந்துள்ளது. ஆகையால் கொளுக்குமலையில் சூரிய உதயம் பார்க்க செல்ல வந்த எந்த ஜீப்பும் அனுமதிக்கப்படவில்லை.

     9 மணிக்கு மேல் தான் ஜீப்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜீப்கள் சென்று கொண்டிருப்பதாலும், மழை விட்டு விட்டு பெய்வதாலும் மலைப்பாதை சேறும் சகதியுமாக மாறிக்கொண்டே வந்தது. முனி அண்ணா எந்த சலனமும் இன்றி வாகனத்தை ஓட்டினார். ஆனால் எங்களால் தான் இறுகைகளில் அமரமுடியால் வண்டி குலுங்கும் குலுங்களுக்கு ஆடிக்கொண்டிருந்தோம்.

     ஆங்காங்கே மலைகளுக்கு மேல் இருக்கும் மிஞ்சிய சோலைகளில் இருந்து, நீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதை காண முடிந்தது. அரைமணி நேர பயணத்திற்கு பின் ஓய்வுக்காகவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினார் முனி அண்ணா.
      மிகச்சரியாக நாங்கள் சோலைக்காட்டு பகுதியிலும், எங்களுக்கு கீழுள்ள மலைப்பகுதிகள் அடிவாரம் வரை முழுவதுமாக தேயிலை தோட்டமாக நிரம்பி இருந்தது. மூடுபனியின் சாரல் எங்களை வருடிக்கொண்டே இருக்க அங்கிருந்து நகர மனமில்லாமல் வாகனத்தில் ஏறினோம்.

     அடுத்தடுத்த மலைத் திருப்பங்களில் வண்டி அதிகமாக குலுங்கியது. ஆனால் முனி அண்ணா அநாயாசமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். மேலே செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்தது. அப்போது முழுவதுமாக சோலைக்காட்டுக்குள் வாகனம் சென்று கொண்டிருந்தது. இறுதியாக நாங்கள் கனவு கண்ட கொளுக்குமலைக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது.

      எங்களை இறக்கிவிட்டு புலிப்பாறையும், புகைப்படங்களும் எடுக்கும் இடத்திற்கு வழிகாட்டிவிட்டு, நீங்கள் பார்த்துட்டு பொறுமையாக வாங்க நான் காத்திருக்கிறேன் என்றார் முனி அண்ணா.

     சூரியநெல்லியில் இருந்து கொளுக்குமலைக்கு 10கி.மீ தான் இருக்கும் ஆனால் சரியான சாலை வசதி இல்லாத கற்கள் மட்டுமே போடப்பட்ட மலைப்பாதையால் பயணம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஆனது.
     வாகனத்தில் இருந்து இறங்கியதுமே எங்கள் மீது மேகங்களின் சாரால் அடிப்பதை உணர முடிந்தது. மலைக்கு மேல் ஒற்றையடி பாதையில் சில அடிகள் எடுத்து வைத்த போது பொறுமையாக ஊர்ந்து சென்ற வித்தியாசமான பாம்பை பார்க்க முடிந்தது. அது மண்ணுளி பாம்பின் ஓர் வகையாக இருக்கலாம்.

      பாம்பை பார்த்துவிட்டு முன்னேறி சென்ற போது நாங்கள் சென்ற  ஒற்றையடி பாதைக்கு வலது பக்கம் வரும் போது பார்த்த தோட்ட தொழிலாளிகள் வாழும் அந்த மலைகிராமமும் (கேரளா) இடது பக்கம் போடி (தமிழ்நாடு). ஆனால் கடுமையான மேக மூட்டத்தால் தமிழ்நாட்டின் எந்த பகுதியையும் பார்க்கவே முடியவில்லை. பள்ளத்தை சுற்றிலும் வெண் போர்வை போர்த்தியது போன்று எல்லா இடமும் மேகங்களால் மூடி இருந்தது.

     காற்றின் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. மலைச்சரிவில் இருந்த புல்வெளிகளும், சோலையின் உயர்ந்த மரங்களும் அதீத காற்றுக்கு ஈடு கொடுத்து ஆடிக்கொண்டிருந்தன. பல்வேறு புகைப்படங்களில் கண்ட, கொளுக்குமலையின் அடையாளமான புலிப்பாறைக்கு வந்து சேர்ந்தோம். நிறைய பேர் அந்த புலிப்பாறையில் புகைப்படம் எடுக்க காத்திருந்தனர்.
     அந்த புலிப்பாறையில் புகைப்படங்கள் எடுக்கவும், சூரிய உதயத்தை காணவுமே ஏராளமானோர் கொளுக்குமலைக்கு வருகின்றனர். ஒவ்வொருத்தராக புகைப்படங்கள் எடுத்த பின் நாங்களும் அந்த புலிப்பாறையில் சில படங்களை எடுத்துவிட்டு அங்கிருந்து கீழேயுள்ள பாறையின் முடிவுக்கு சென்று போது மீண்டும் மூடுபனி. அருகில் இருக்கும் ஆட்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான மூடுபனி எங்களை மூடியது.

     மலை உச்சியில் அந்த ஒற்றையடிப் பாதையில் தான் அனைவரும் வந்து, போக வேண்டியிருந்ததால் கூட்ட நெரிசல் இருந்தது. நிறைய பேர் குடும்பமாக மழலைகளையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர்.

     நாங்கள் மலைக்கு மேலே வரும் போது எதிரெ வந்த ஜீப்பில் சில குழந்தைகள் இருத்தனர். மலைப்பாதையில் ஜீப் குலுங்குவதை எங்களாலே சமாளிக்க முடியவில்லை, பாவம் குழந்தைகள் எப்படி தான் போய்ட்டு வராங்க என பேசிக்கொண்டிருந்த போது, இது கூட பரவாயில்ல தம்பி, கை குழந்தையலாம் கூட்டிட்டு வருவாங்க என சொல்லி முனி அண்ணா ஆதங்கப்பட்டார்.
     அரை மணி நேரம் அவ்விடத்தை சுற்றிப்பார்த்துவிட்டு ஜீப் நின்றிருந்த இடத்திற்கு வந்த போது முனி அண்ணா எங்களுக்காக காத்திருந்தார். அப்போது நாங்கள் வரும் போது இருந்ததை விடவும் நிறைய ஜீப்-கள் இருந்தன.

     மலையில் இருந்து கீழ் இறங்கி வரும் போது, நானும் தம்பி காத்தவராயனும் ஜீப்பின் பின்புற இறுக்கையில் அமர்ந்துவிட்டோம். மலையேரும் போது இருந்ததை விடவும் மலையிறக்கத்தில் வண்டியின் குலுக்கல் அதிகமாகவே இருந்தது. நானும், தம்பியும் கீழே விழாத குறையாக ஆடிக்கொண்டு வந்தோம்.

     ஒரு குறுகலான திருப்பத்தில் வாகனம் திரும்பிய போது தூரத்தில் மலையடிவாரத்தில் தேயிலை தோட்டத்தின் நடுவே ஒற்றை யானை ஒன்று நடந்து சென்றுக் கொண்டிருந்ததை சில வினாடிகளே பார்க்க முடிந்தது. அந்த குறுகலான மலையிறக்கத்தில் வாகனத்தை நிறுத்த முடியாததால் யானையை நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

     இறுதியாக நாங்கள் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்திருந்த பின் ஜீப்புக்கான வாகன தொகையை GPay ல் அனுப்பும் போது போது சிக்னல் கிடைக்காததால் அனுப்ப முடியாமல் இருந்தது. சரிங்க தம்பி நீங்க கீழ போனதும் பாஸ்கர் அண்ணா கணக்கிற்கு அனுப்பிடுங்க என சொல்லி விட்டு முனி அண்ணா கிளம்பிட்டார்.
     கூடாரத்தில் வைத்திருந்த எங்கள் துணிகளை பைகளில் எடுத்து வைத்து ஊருக்கு கிளம்ப தயாரானோம். கிளம்பும் போது கூட எங்களுக்காக தேனீர் போட்டுக்கொடுத்தனர். தங்குமிடத்தில் எங்களை சிறப்பாக உபசரித்த அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வாகனத்தில் கிளம்பினோம்.

     சூரியநெல்லியில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஆனையிறங்கி அணை வழியாக போடிமெட்டு செல்லும் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த போது வழியில் நிறைய சோலைகளையும் இடையிடையே சில மலை கிராமங்களையும் பார்க்க முடிந்தது. இவை அனைத்தும் நாங்கள் இருந்த கூடாரப் பகுதியில் இருந்து பார்த்திருந்தோம்.

     போடிமெட்டு வந்து சேர்ந்த போது பலத்த காற்றும், காற்றோடு மழைச்சாரலும் இருந்தது. 
    மதிய உணவை 4மணிக்கு தேனி வந்து முடித்துக்கொண்டு திண்டுக்கல் செல்லும் வழியில் செம்பட்டி என்ற இடத்தில் தம்பி விஷ்ணு இறங்கி ஒட்டன்சத்திரத்திரம் சென்று ஊருக்கு செல்வதாக சொல்லியிருந்தான். செம்பட்டி அருகே தான் எங்களுக்கு ஒரு வாகனம் கொடுத்த தோழர் லஷ்மணின் ஊர். அவரை நேரில் சந்தித்து வாகனத்தை கொடுத்துவிட்டு நன்றியும் சொல்லிவிட்டு திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

     திண்டுக்கல் வந்து சேரும் முன்னமே ரெக்ககையா அண்ணாவுக்கும் அழைப்பு கொடுத்திருந்தேன், அவரும் பேருந்து நிலையமே வந்து நாங்கள் முன்பதிவு செய்திருந்த பேருந்தில் ஏறும் வரை உடன் இருந்து எங்களை வழியனுப்பிவிட்டு சென்றார்.
      நீண்ட நினைவுகளையும், அன்பு நிறைந்த நிறைய உள்ளங்களை கொடுத்த இப்பயணம் உண்மையில் மறக்க முடியாத பயண வரிசையில் சேர்ந்துவிட்டது. விரைவில் அடுத்த பயணத்தில் சந்திப்போம். அன்பும் நன்றியும்.

01.10.2023
பனை சதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்