கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 2

மறையூர் - சந்தனக்காடு - ஆனைமுடி - மூணார் - சூரியநெல்லி

     தூவானம் அருவியை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு பயணத்தை தொடர்ந்த போது மழை தூரல் அதிகரித்திருந்தது. காட்டு தாவரங்களில் இருந்து வரும் குளிர்காற்று மெல்ல உடலை ஊடுறுவத் தொடங்கியது.

      மாலை 4மணி இருக்கும் நாங்கள் மறையூர் - காந்தலூர் சாலை சந்திப்புக்கு வந்திருந்தோம். காந்தலூரில் இரைச்சல் அருவியும், கற்கால ஈமச்சின்னங்களும், நிறைய  பார்க்க வேண்டிய இடங்களும் இருந்தன. ஆனால், ஏற்கனவே நேரமாகி இருந்ததால் அங்கே செல்ல முடியாமல் பயணத்தை தொடர்ந்தோம்.

     மறையூர் அடுத்து வரும் சந்தனக்காட்டு பகுதியும் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் குறிப்பிட்டிருந்தார் பாஸ்கர் அண்ணா.

     மறையூரில் இருந்து சில கி.மீ தொலைவுகளில் முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே நிரம்பிய சந்தன மரக்காடு தொடங்கிவிடுகிறது.

     சந்தனமரத்திற்கு ஊடு பயிராக மற்ற மரங்களை வளர்த்தால் தான் நல்ல மகசூல் வரும் எனச்சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பகுதியில் பல நூறு ஏக்கரில் முழுக்க முழுக்க சந்தன மரங்கள் மட்டுமே  நிறைந்த தோப்பாக இருந்தது. ஆங்காங்கே சந்தன மரக்கன்றுகள் விற்பனை என்ற பதாகையையும் பார்க்க முடிந்தது.

     மறையூர் சந்தனக் காட்டுப்பகுதியை தாண்டியதும், இடதுபுற பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்த உயர்ந்த மலைகளில் இருக்கும் சோலைகளைக் கடந்து நீண்ட வெள்ளியை போல் ஓர் அருவி ஊற்றிக் கொண்டிருந்தது.
     அங்கிருந்த ஒரு சில மலைகளில் சோலைகளின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் காட்டு ஓடைகள் பாறைகளில் மோதும் சத்தத்தை அடிக்கடி கேட்க முடிந்தது.

     சந்தனக்காட்டு பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவுகளிலேயே மேற்கு தொடர்ச்சி மலையின் பச்சைப் பாலைவனமான தேயிலை தோட்டங்கள் தொடங்கிவிடுகிறது. ஆங்காங்கே நிறைய மலைகளில் சோலைகள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்களாகவும், சில உயரமான மலைகளில் ஊச்சிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் சோலைகள் அழிக்கப்பட்டும் இருந்தது.

     மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடையாளமே இங்குள்ள சோலைக்காடுகளும், புல்வெளிக்காடுகளும் தான் ஆனால் கடந்த 200ஆண்டுகளாக வல்லரசு நாடுகளின் வள வேட்டைக்காக இக்காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவது சூழல் சார்ந்து இயங்கும் அனைவரும் அறிந்த செய்தி.

     தொழிலாளர் நலம் பேசும் கட்சியும் மற்றும் தேசிய நீரோட்டத்தில் உள்ள கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் கணக்கில் காடுகள் அழிக்கப்பட்டு, மலைகள் மொட்டை அடிக்கப்பட்டு தொடர்ந்து தேயிலை தோட்டமாகவும், நவீன தங்கும் விடுதிகளாகவும், சொகுசு பங்களாகவும் மாற்றப்படுகிறது.

     விளைவு மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பருவ காலங்களில் மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதாக ஆய்வுகள் சொல்கிறது.

     மலைப்பாதையின் திருப்பங்களை கடக்கும் போது மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
     உடுமலையில் இருந்து மூணார் செல்லும் சாலையில் உள்ள முக்கிய அருவியான லக்கம் அருவிக்கு வந்து சேர்ந்தோம். ஓரளவு சீரான தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. மாலை நெருங்கிக் கொண்டிருந்ததால் சாலையிலேயே நின்று அருவியை பார்த்துவிட்டு கிளம்பினோம்.

     சில மலைகளை தாண்டிய போது தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரமான ஆனைமுடியின் சிகரத்தை தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. புல்வெளிக்காடுகளும், சோலைக்காடுகளும் நிரம்பிய ஆனைமுடியின் உயர்ந்த சிகரங்களில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகளவில் செழிப்பாக வாழ்கின்றன.

     மலைக்கு மேலே செல்ல செல்ல மூடுபனி அதிகரிக்க தொடங்கியது. எர்விக்குளம் தேசிய பூங்கா பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தோம். வால்பாறையின் கவர்கல் பகுதியை போன்றே இந்த எர்விக்குளம் பகுதியும் வருடத்தின் பல நாட்கள் அதிக மூடுபனியில் மறைந்திருக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் ஏர்விக்குளம் பகுதியை கடக்கும் போதும் அதிகளவு மூடுபனி இருந்தது.

     எர்விக்குளம் அடுத்து மூணார் செல்லும் சாலையின் குறுக்கே கடந்து சென்ற ஓர் ஆற்றின் கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்றே இளைப்பாறினோம். 360' கோணத்தில் பார்த்த போது சுற்றிலும் தேயிலை தோட்டங்களை மட்டுமே காண முடிந்தது.

     நாங்கள் கொண்டு வந்த இரு வாகனங்கள் வெவ்வேறு நிறுவத்துடையது என்றாலும், இரு வாகனத்தின் சாவியும் இரண்டிலும் வேலை செய்தது. தூவானம் அருவியை பார்க்க வாகனத்தை நிறுத்திய போது தவறுதலாக நான் வைத்திருந்த வாகனத்தின் சாவியை தம்பி விஷ்ணுயிடமும் அவனுடைய வாகன சாவியை நானும் வாகனத்தில் போட்டு வந்திருக்கிறோம்.

      சரியாக மாலை 5.30க்கு நாங்கள் மூணார் வந்திருந்தோம். மூணாரில் வாகனத்தை நிறுத்தும் போது தான் கவனித்தோம் தம்பி விஷ்ணு ஓட்டி வந்த வாகனத்தில் சாவியை காணவில்லை. சாவியில்லாமலும் வாகனம் வேலை செய்கிறது ஆனால் சாவியில்லாமல் வாகனத்தை எப்படி ஒப்படைப்பது என்ற குழப்பம்.
     மூணாருக்கு 8 கி.மீ முன்னர் நாங்கள் ஓர் ஆற்றின் கரையோரம் வாகனத்தை நிறுத்திய போது தான் கடைசியாக சாவியை பார்த்ததாக தம்பி சொல்லியிருந்தான். சரி சாவி கிடைக்குமான பார்க்கலாம் என நானும், தம்பியும் இருள் அடைய காத்திருக்கும் மலைப்பாதைகளில் சாவியை தேடிக்கொண்டே சென்றோம்.

     இறுதியாக அந்த ஆற்றங்கரைக்கு வந்து தேடிய போது நாங்கள் வாகனத்தை நிறுத்தியிருந்த அதே இடத்தில் தான் சாவி விழுந்திருந்தது. சாவி கிடைத்த மகிழ்வில் மீண்டும் விரைவாக  மூணார் வந்து சேர்ந்தோம்.

     மூணாரில் மிதமான சாரல் தூறிக்கொண்டிருந்தது, உடுமலையில் மலைப்பாதை தொடங்கியதில் இருந்து மூணாருக்கு சில கி.மீ முன்னர் வரை பெரிய வாகன நெரிசல் இல்லை. ஆனால் மூணார் நகரத்தில் இருசக்கர வாகனம் கூட நகர முடியாத அளவுக்கு வாகன நெரிசல். காட்டின் அமைதியும், மழைக்காற்றின் ஓசையும் சற்றெ மாறி வாகனங்களின் தொடர் இரைச்சலை கேட்க முடிந்தது.

     மூணாரில் இருந்த ஒரு தேனீர் கடையில் முடிந்தளவு வடைகளை திண்று, தேனீர் குடித்துவிட்டு, தங்குமிடம் செல்லும் வழியை பார்த்த போது அங்கிருந்து இன்னும் ஒரு மணி நேரம் பயணப்பட வேண்டியிருந்தது. (பாஸ்கர் அண்ணன் ஏற்கனவே தங்குமிடத்தின் G-Map location மற்றும் தொடர்பு எண்ணை அனுப்பியிருந்தார்)

     கூடுமான வரை விரைவாக மூணாரில் இருந்து கிளம்பினோம். சாலையில் ஆங்காங்கே தங்குமிடம் வேண்டுமா என சிலர் சுற்றுலா பயணிகளை கேட்டுக்கொணண்டிருந்தனர். எல்லா கடைகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது. வழிநெடுக நிறைய வானக இரைச்சல்.
     மூணாரில் இருந்து போடிமெட்டு வழியே செல்லும் கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை புதிதாக இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு இருந்தது. புதிய சாலையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. மூணாரில் இருந்து சூரியநெல்லி பிறகு அங்கிருந்து சில கி.மீ தொலைவில் தங்குமிடம் வந்துவிடும்.

     எங்கும் நிற்காமல் சென்றால் ஒரு மணிநேர பயணத்தில் அங்கு சென்றுவிடலாம். ஆனால் மழையால் ஏற்பட்ட மூடுபனியால் வாகனத்தை பொறுமையாகவே ஓட்ட முடிந்தது. சில இடங்களில் குளிர் அதிகமாக இருந்தது.

     மூணாரில் இருந்து கிளம்பும் போதே மலைச்சாலையில் இருள் அடர்ந்திருந்தது. ஆனால் வானின் மெல்லிய ஒளிச் சுற்றியிருக்கும் உயர்ந்த மலைகளில் பிரகாசித்தன.

     மலைப்பாதையை இருள் முற்றிலும் மூடிவிட்டிருந்ததால் ஒவ்வொரு பகுதியையும் கவனமாக கடக்க வேண்டியிருந்தது. நின்று பார்க்க வேண்டிய நிறைய இடங்களை நேரமின்மையால் பார்க்க முடியாமல் போனது. ஒரேயோரு இடத்தில் மட்டும் வாகனத்தை நிறுத்தி தேனீரும், சோளக்கதிரும் வாங்கி சாப்பிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

     போடி - மூணார் சாலையில் இருக்கும் பிரதான அருவியான சின்னக்கனால் அருவியில் இருந்து சூரியநெல்லிக்கு செல்ல இடது பக்கமாக திரும்ப வேண்டியிருந்தது. சின்னக்கனால் அருவியில் நீர் ஆற்பரித்துக் கொண்டிருந்தது. ஆனால் முற்றிலுமாக இருள் சூழ்ந்துவிட்டதால் அவ்விடத்தையும் பார்க்க முடியவில்லை.

     இதுவரை வந்த பிரதான சாலை முடிந்து மலைச்சாலை ஆரம்பித்தது. சூரியநெல்லி வரை மழையால் சேதமடைந்த சாலையாகவே இருந்தது.

     இறுதியாக சூரியநெல்லியில் இருந்து சில கி.மீ மலைக்கே மேலே வந்த போது, நாங்கள் தங்க வேண்டிய Kollukumalai Lake View Tent Stay இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
     தங்குமிடம் அமைதியான சூழலில் ஏலக்காய் தோட்டத்திற்கு நடுவே அமைந்திருந்தது. அங்கு சென்றதும் எங்கள் வருகையை பதிவு செய்த பின் சூடான தேனீர் கொடுத்தனர்.

     நான்கு நபர்கள் தங்கக்கூடிய கூடாரம் எங்களுக்காக ஒதுக்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து பலர் ஜோடியாகவும், குடும்பமாகவும், நண்பர்களாகவும் வந்திருந்தனர். அனைவருக்கும் உணவு இருந்தது. அவரவர் தேவைக்கு ஏற்ப உணவு கிடைத்தது. நீண்ட பயணத்திற்கு பின் கிடைத்த சுகமான உணவு மனதை ஆசுவாசப்படுத்திவிட்டது.

      நிறைவான உணவை முடித்த பின் நீண்ட நேரம் அங்கு வைக்கப்பட்டிருந்த நெருப்பில் உடலை வாட்டிக்கொண்டு உரையாட தொங்கியிருந்தோம்.

     நாளைக் காலை கொளுக்குமலைக்கு எங்களை அழைத்துச்செல்ல ஏற்கனவே தகவல் சொல்லியிருந்த ஜீப் தங்குமிடத்திற்கே வந்து அழைத்துச்செல்லும். புதியதொரு பயண அனுபவத்தை கொடுத்த கொளுக்குமலை ஜீப் பயணம் குறித்து நாளைப் பார்ப்போம்.

பனை சதிஷ்
30.09.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்