கிளை(த்த)ப்பனை, பண்ணந்தூர்

     பல பேர் பதிவுகளிலும், பல முறை செய்திகளில் இப்பனைகளை பார்த்திருந்தாலும், இப்போது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

     நூற்றாண்டு வரலாறு கொண்டுள்ள இப்பனைகள், இன்று இறையின் வடிவாக மக்களால் பூசிக்கப்படுகிறது. இப்பனைகளின் காய்ந்த மட்டைகளும் கூட மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு உணவு சமைக்க எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

     முதிர்ந்த இரண்டு கிளைப்பனைகள் ஓரிடத்திலும், அதற்கு எதிரே ஓரளவு இளம் இரண்டு கிளைப் பனைகளையும் நாம் காண முடிகிறது. இயல்பான பனை மரங்களில் இருப்பதை விட இவற்றில் ஓலையும், மட்டையும், கருக்குகளும் கூட சற்று வித்தியாசமாக இருக்கிறது.

     ஓலைகள், மட்டைகள் இயல்பை விட அளவில் சிறிதாகவும் மட்டைகளின் கருக்குகள் இயல்பை விட பெரியதாகவும் இருக்கிறது.

     இதற்கு முன்னர், வேலூர் மாவட்டத்தின் செதுவலை கிராமத்தில் பார்த்த ஆறு கிளைகள் கொண்ட பனையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் அருகில்  பார்த்த நான்கு கிளைகள் கொண்ட பனைகளின் பனங்காயும், பனபழமும் இயல்பான பனையை போலத்தான் இருந்தது.
     ஆனால் இங்குள்ள கிளைப் பனைகளின் அமைப்பே சற்று வித்தியாசமாக, பிரம்மாண்டமாக ஏனைய மரங்களை போன்று பல கிளைகளை கொண்டிருக்கிறது.

     அங்கிருந்த வயதான பாட்டியிடம் இப்பனை குறித்து விசாலித்த போது, தான் பிறப்பதற்கு முன்பிருந்தே இப்பனைகள் இருங்கிருப்பதாகவும், இவ்வூரில் இருந்து காசிக்கு சென்றவர்கள் கொண்டு வந்து இங்கு வைத்த விதைகள் தான் இப்படி ஆகியதாகவும், இதிலிருந்து கிடைக்கும் எந்த ஒரு விதையும் மரமாக வளர்வதில்லை எனவும் அந்த பாட்டி சொல்லியிருந்தார்.

     தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பனைகளை பார்க்க முடிந்தாலும் இது போன்ற கிளை(த்த)ப்பனைகள் அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் காண முடிகிறது.

     பனையின் குடும்ப இனத்தில் ஓர் வகையாக இருக்கும் இப்பனைகள் பல்வேறு நபர்களால், பல காரணிகளால் தமிழத்திற்கு கொண்டு வரப்பட்டு நாட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் பனையின் வளர்ச்சி குறைப்பாட்டாலும் இப்படியான பனைகளை காண முடியும்.

     பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் சென்று இது போன்ற பனைகளை காட்டுவதன் மூலம், பனை பல்வேறு வகைகளை நேரில் பார்த்து புரிந்து கொள்ள அவர்கள்களுக்கு ஏதுவாக இருக்கும்.

பனை சதிஷ்
03.11.2023

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்