மஞ்சு மலை காட்டுப்பயணம்


#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம்
#கிழக்கு_தொடர்ச்சி_மலை
#கானகனின்_கான்

     கடந்த ஆண்டு சத்தியமங்கலம் குன்றி மலையில் இருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற போது ஏற்பட்ட அதே திகில் நிறைந்த பயண அனுபவம் இம்முறை மஞ்சு மலைக்கு சென்ற போதும் நிகழ்ந்தது.

     பிறந்த நாளின் நினைவாக எப்போதும் நமக்கு நெருக்கமாக இருக்கும் காடு, மலைக்கு பயணம் செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.

     அதன்படி தேன்கனிக்கோட்டைக்கு அருகில் இருக்கும் அய்யூர் வனப்பகுதிக்குள் (காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம்) உள்ள தொழுவப்பெட்டா மலைக்கு செல்வது என்றும் பின் அங்கிருந்து ஏற்கனவே போக நினைத்த பெட்டமுகிலாம் சென்று பின் இறுதியாக பஞ்சபள்ளி அணையை பார்த்துவிட்டு வீடு திரும்பலாம் என்பது தான் பிறந்த நாளுக்கான பயண திட்டமாக இருந்தது.

     ஆனால், நாம் திட்டமிடாத பயணங்களே நமக்கான நிறைவான நினைவுகளை கொடுத்துவிடுகின்றன.

     அய்யூர் வனத்திற்குள் தனித்து இருக்கும் தொழுவப்பெட்டா மலை கிராமத்திற்கு செல்வதகான வழியை வழக்கம் போல் Google Map-ல் பார்த்த போது, அடர்ந்த காடுகளை, மலைகளை தாண்டி மஞ்சமலை என்ற மலை கிராமம் இருப்பதை பார்த்தேன்.

     அய்யூர் வனப்பகுதிக்கு முன்னதாகவே அம்மலைக்கு வழி செல்கிறது. ஆனால் கடந்த முறை இதே அய்யூர் வனப்பகுதியை தாண்டி மலைக்கு மேல் இருக்கும் கொடக்கரை மலை கிராமத்திற்கு சென்றதை விடவும் சற்றே தூரமாகவும், முழுவதும் அடர்ந்த வனமாகவும் இருந்தது.

     சரி, எவ்வளவு தூரம் இருந்தாலும் சென்று பார்த்துவிடலாம் என முடிவு செய்து மஞ்சுமலைக்கு செல்லும் மலையடிவார கிராமமான மேலூருக்கு வந்து சேர்ந்தேன். ஓசூரிலிருந்து, தேன்கனிக்கோட்டை, நம்மிரெலி, முனிசெட்டி வழியாக மேலூர் வரும் வரை தரமான தார் சாலை போட்டப்பட்டு இருப்பதால் நினைத்ததை விட விரைவாகவே அப்பகுதிக்கு வந்துவிட்டேன்.

     மேலூரில் சரியாக காடு ஆரம்பமாகும் இடத்திற்கு வந்திருந்தேன். இதுவரை வந்த தார் சாலை முடிந்து, கற்கள் நிறைந்த மணற்சாலை தொடங்கியது. காட்டிற்குள் இருந்த வந்த ஊர் பெண்கள் இருவரிடம் இந்த வழியே மேலே செல்ல முடியுமா என கேட்டதுமே, மேல காட்டுவழி சரி இருக்காதுப்பா, அதுவு இல்லாம ஆனைங்க மேய்யுற இடம், அதனால மேல போறது ரொம்ப சிரமம், நீங்க அஞ்சட்டி வழியா சுத்திட்டு மஞ்சுமலைக்கு போங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.

     மஞ்சுமலைக்கு போகனுன்னு முடிவு செய்த பின் அங்கு செல்ல வழியை பார்த்த போது, மஞ்சுமலைக்கு செல்ல தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்சட்டி, நாட்டறம்பாளையம் வழியாக போகும் வழியே பிரதானமாக காட்டியது.

     ஆனால், நான் நிச்சயம் அய்யூர் வனப்பகுதி வழியாக தான் மஞ்சுமலைக்கு போவது என முடிவாக இருந்தேன். காடு ஆரம்பமாகும் இடத்திற்கு அருகே இருந்த தேனீர் கடையில் தேனீர் வாங்கி குடித்துக்கொண்டே, மேலே செல்லும் வழியை பற்றி விசாரித்தேன். அங்கிருந்த கடைக்கார அம்மா, போலாம் தம்பி ஆனால் ரோடு ரொம்ப மோசமா இருக்கும் கொஞ்சம் கவனமா வண்டி ஓட்டிட்டு போங்க எனச் சொன்னது கொஞ்சம் மன நிறைவாக இருந்தது.

     அந்தம்மாவிடம், மஞ்சுமலைக்கு செல்லும் வழியையும், காட்டில் இந்நேரத்தில் யானைகள் ஏதும் இல்லை என்பதை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
     காட்டுப்பாதையில் உள் நுழைந்ததும், சில மீட்டர் தொலைவுக்குள் ஓரிரு நாட்களே ஆன யானையின் சாணம் இருந்தது. இப்பயணம் அடுத்தடுத்து பல திகில் நிறைந்த அனுபவங்களை கொடுக்கப் போகிறது என்பது அப்போது தெரியவில்லை. யானையின் சாணத்தை பார்த்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினேன்.

     பாதையின் தொடக்கத்திலேயே வலது பக்கமாக ஒரு மலைச்சாலை சென்றது, அம்மலைப்பாதையும் கொடக்கரை போன்றே தனித்துள்ள குலத்தி என்ற மலை கிராமத்திற்கு செல்லும் வழி என தேனீர் கடைகார அம்மா அப்போது சொல்லியிருந்தாங்க. தொடக்கத்தில் கார் போகும் படியாக அகலமாக இருந்த காட்டுச்சாலை மேலே போக, போக குறுகிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அடர்ந்த புதர் குகைக்குள் செல்வது போன்றே இருந்தது.

     கடந்த முறை கொடக்கரை மலைக்கு செல்லும் வழியில் அய்யூர் வனப்பகுதியில் பார்த்ததை விடவும் இந்த காப்புக்காட்டில் சில இடங்களில் மட்டுமே வனத்துறையால் பெரும் சுவர்களில் காட்டு விலங்குகளின் படங்கள் வரையப்பட்டிருந்தன.

     முழுவதுமான கரடுமுரடான சாலை, வாகனத்தை ஓட்டவே பெரும் சிரமமாக இருந்தது. இதற்கிடையில் அடுத்தடுத்து யானையின் சாணங்களை பார்க்க நேர்ந்தது. நிறைய இடங்களில் பல நாள் ஆன காய்ந்த சாணம் தான் என்றாலும் வழியில் யானையை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பதற்றம் மட்டும் மனதிற்குள் தொடர்ந்திருந்தது.

     அரைமணி நேரத்திற்கு மேல் மலைச்சாலையில் வந்த பின், எதிரே வழி இரண்டாக பிரிந்தது. கிளம்பும் முன்னமே அந்த தேனீர் கடைக்காரம்மா, மலைக்கு மேலே போனதும் இரண்டு வழி பிரியும் கிழக்கால போனா தொழுவபெட்டா மலைக்கு போகும், மேற்கால போனீங்கனா மஞ்சுமலைக்கு போகலாம் என தெளிவாக வழி சொல்லி அனுப்பியிருந்தாங்க. ஆனால் மேற்கே செல்லும் அந்த சாலை சற்று குறுகலாகவும் புதர் நிறைந்தும் இருந்ததால் கவனக்குறைவில் வாகனத்தை இடபுறமாக திருப்பி கிழக்கே மேலேறினேன்.
      இச்சாலையில் கூர்மையான சிறு சிறு கற்கள், பாதை முழுவதும் நிரம்பியிருந்தது. மலையின் திருப்பங்களில் சிரமப்பட்டடே வாகனத்தை மேலே செலுத்தினேன். மலைக்கு மேலே போகும் போதே உள்ளுணர்வு நாம் ஏதோ தவறான வழியில் போகிறோம் எனத் தோன்றியது. மேலே போனதும் அந்த அடர்ந்த காட்டில் திடீரென எதிரே ஒரு கோவில் தெரிந்தது. புணரமைப்பு பணிகள் நடக்கும் மாதேஸ்வரனின் கோவில்.

      காட்டிற்கு நடுவில் இருந்த அந்த கோவிலின் அருகே புற்களுக்குள் இருந்து சில கீரிகள் வாகன சத்ததால் வெளியே ஓடினதை பார்க்க முடிந்தது. கோவில் அருகே சில மேய்ந்து கொண்டிருந்த மாடுகளும் வாகனத்தை பார்த்ததும் மிரண்டு ஓடின. மாடுகள் அங்கிருந்ததால், நிச்சயம் மேய்பவர் யாரேனும் அருகில் இருப்பர் என உணர்ந்து சுற்றி பார்த்த போது, அங்கிருந்த ஒரு மரத்தடியில் வயதான முதியவர் ஒருவர் படுத்துக்கொண்டு மாடு மேய்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மஞ்சமலைக்கு வழிகேட்ட போது, இது தொழுவபெட்டாவுக்கு போற வழிப்பா, நீங்க வந்த வழியே கீழ இறங்கி மேற்கால நேரா போங்க என்றார்.

     அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து வந்த அதே மலை திருப்பங்களில் கீழிறங்கி, வரும் போது பார்த்த அந்த குறுகலான வலதுபுற காட்டுபாதையில் பயணிக்க தொடங்கினேன்.

     உண்மையில் இது வரை வந்த காட்டுப்பாதை எவ்வளவோ பரவாயில்லை என்ன சொல்லும் அளவுக்கு, இச்சாலை மிகவும் கடினமாக இருந்தது. இதற்கு முன்வந்த சாலையிலாவது ஆங்காங்கே சில இடங்களில் சூரிய வெளிச்சத்தை பார்க்க முடிந்த ஆனால் இப்பாதையில் மரங்கள், செடிகள், புதர்கள் சூழ்ந்து இருளடைந்த குகைப்போல் இருந்தது.

     அதுபோக ஒவ்வொரு 100மீட்டர் தொலைவுக்கும் யானைகள் புதிதாக இட்ட சாணங்களை தொடர்ச்சியாக பார்க்க முடிந்தது. மஞ்சுமலைக்கு மேலே செல்லும் வரை யானையின் சாணங்கள் பார்த்தது மேலும், மேலும் பதற்றமாக்கியது. சாலையின் வலது பக்கம் பல இடங்களில் யானைகள் படுத்துறங்கியும், தம்முடைய தந்தங்களில் சாலையோரம் இருக்கும் மண்மேட்டை குத்திக் களைத்துப்போட்டு விளையாடிச் சென்ற தடங்களையும் பார்க்க முடிந்தது.
     ஏற்கனவே சிலர் மேலே மஞ்சியம்மன் கோவிலுக்கு போய்ட்டு இருக்காங்க என மேலுரில் நான் தேனீர் கடையில் பார்த்தோர் சொல்லியிருந்தனர். ஆனால் நான் ஒரு மணி நேரமாக பயணித்தும் வழியில் கோவிலுக்கு செல்லும் யாரையும் பார்க்க முடியவில்லை.

      யானைகள், கரடிகள், காட்டு நாய்கள் நிறைந்த இந்த காட்டில் ஏதோவொரு அசட்டு தைரியத்தில் தனித்துப் பயணித்துக் கொண்டிருந்தேன்.

     மலைப்பாதையில் ஓரிடத்தை கடக்கும் போது, இடது பக்கமாக நீண்டு இருந்த சரிவுகளிலிருந்து தம்பி நிள்ளுபா எனக் குரல் கேட்டது. அது வரை நிசப்பதமாக இருந்த காட்டில் திடீரென ஒரு ஆணின் குரலை கேட்டதும் திடுக்கிட்டு வாகனத்தை நிறுத்தலாம வேணாம என யோசித்துக் கொண்டே சற்று முன் சென்று வாகனத்தை நிறுத்தி திரும்பி பார்த்தேன்.

     மெலிந்த தேகம் கொண்ட வயதான முதியவர் ஒருவர், அந்த அடர்ந்த காட்டின் மலைச்சரிவில் இருந்து மேலேறி வந்து தம்பி எங்க போறீங்க என்றார். மஞ்சுமலைக்கு செல்வதாக சொன்ன போது ஓஓ நீங்களும் கோயிலுக்கு தான் போறீங்களா, என்ன பா தேங்கா, பழம் ஏதும் வாங்காமா போற எனக் கேட்டார். இல்லைங்க ஐயா முன்னாடி ஆளுங்க வாங்கிட்டு போய்ட்டாங்க சொல்லிக்கொண்டே, இந்த நடுகாட்டுல என்னங்க ஐயா பண்ணுறீங்க என நான் திரும்ப கேட்ட போது, கீழிருந்த பள்ளத்தாக்கை காண்பித்து அந்த மலையடிவாரத்துல எங்க மாடுங்க மேய்ச்சிட்டு இருக்கு தம்பி அதுங்களுக்காக தான் இங்க இருக்கேன் எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

     மஞ்சமலையில் உள்ள மஞ்சியம்மன் கோவிலில் திருவிழா நடப்பதாக கீழே மேலூரில் இருந்த தேனீர் கடையில் சொல்லியிருந்தனர். இந்த ஐயாவும் அதையே தான் என்னிடம் கேட்டு இருந்தார், ஆனால் அப்படி ஒரு கோயில் இருப்பதும், அங்கு விழா நடப்பதும் இப்ப தான் எனக்கு தெரிகிறது.

     அவரிடம் என்னங்கயா இந்த காட்டுல ஆனைங்க சாணம்லாம் நிறைய இருக்கே, நீங்க ஆனைய பார்ப்பீங்களா என்ற போது, சிறு வயதில் கைக்கெட்டும் தொலைவுகளில் ஆனையை பார்த்த நினைவுகளை அவர் சொல்லத் தொடங்கினார். முன்னலாம் 100,150 ஆனைங்க இந்த பக்கமா போவும் தம்பி ஆனாலும் எங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. இப்பலாம் ஆனைங்க ரொம்ப குறைச்சி போச்சி, கீழ்நாட்ல இருக்குறவங்க வெடிய போட்டு அதுங்கள திக்கு தெரியாம அலையவிடுறாங்க எனச்சொல்லி ஆதங்கபட்டார். அவர் பேசும் போது யானைகளின் மீதிருந்த பெருங்கருணையை தெளிவாக உணர முடிந்தது.

     ஐயா, மஞ்சிமலைக்கு இன்னும் எவ்வளவு தொலைவுக்கு போகனும் எனக்கேட்ட போது இன்னும் 8-10கி.மீ போகனும் தம்பி பார்த்து பத்திரமா போங்க என வழியனுப்பினார்.
     அங்கிருந்து கிளம்பிய பின் வந்த அடுத்தடுத்த சில மலை திருப்பங்களில் அடிவார காட்டில் இருந்ததை விடவும் இங்கு தாவரங்களின் செழிப்பு அதிகமாக இருந்தது.

      சமீபத்தில் பெய்திருந்த மழையால் காட்டுச்சாலையில் சில இடங்களில் சேற்று மண் நிரம்பி பின் காய்ந்து இருந்தது. அந்த சேற்றுப்பகுதியில் யானைகள் மிதித்தற்கான தடங்கள் இருப்பதை தெளிவாக பார்க்க முடிந்தது. இன்னும் முன்னேறி சென்ற போது ஒரு மலையில் இருந்து அடுத்த மலைக்கு பாதை இறங்கி மேலேறியது. அப்பகுதியில் ஆங்காங்கே மூங்கில்கள் புதிதாக உடைக்கப்பட்டு சாலையில் கிடந்தது.

     தூரத்தில் மரக்கிளைகள், மூங்கில்கள் உடைபடும் சத்தத்தையும் கேட்க முடிந்தது. மிக நிச்சயமாக யானைகள் அருகில் தான் எங்கேயோ இருக்கிறது என்பதை மட்டும் உணர முடிந்தது. எனவே விரைந்து அவ்விடத்திலிருந்து சென்றுவிட வாகனத்தை கடினமான காட்டுப்பாதையையும் பொறுட்படுத்தாது வேகமாக முன்னேறினேன்.

     மேலே செல்ல, செல்ல பாதைகள் விரிய தொடங்கியது, தூரத்தில் கோயிலில் மணி அடிக்கும் ஓசை கேட்டது. வழியில் மழை காலத்தில் தண்ணீர் வந்து சேரும் சிறிய குட்டையை கடந்து மேலே சென்ற போது, சின்னச்சிறிய கூடாரமும் சில வாகனங்களும் அங்கு நின்றிருந்தன. இது தான் அவர்கள் சொன்ன மஞ்சியம்மன் கோவிலாக என நினைத்துக்கொண்டு அருகில் சென்ற போது, பெரிய சிவலிங்கமும், அருகே கற்கால வேட்டை ஆயுதங்களும் பூசை செய்து வைக்கப்பட்டிருந்தது.

    அந்த கோவிலுக்குள் சென்ற போது வேண்டுதலுக்காக ஒரு குடும்பமும், சில அரசியல் பிரமுகர்களும் இருந்தனர். நான் கீழிருந்து வாகனத்தில் வருவதை பார்த்த அந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவர் என்னை நிறுத்தி கீழே இவ்வழியில் செல்லலாமா எனக்கேட்டார்.

     அவர்கள் பெரிய நான்கு சக்கர வாகனத்தில் செல்லவிருப்பதால் நான் உறுதியாக வேண்டாம் அண்ணா, போகாதிங்க காட்டுச்சாலை ரொம்ப மோசமாக இருக்கு, அதுவும் இல்லாமல் யானைகளின் காட்டிற்குள் இவ்வளவு பெரிய வாகனத்தில் செல்வது பாதுகாப்பாக இருக்காது என எவ்வளவோ சொல்லியும். சரிங்க தம்பி, போக வழியிருக்கு தானே மிச்சத்த நாங்க பார்த்துக்கிறோம் என நான் சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
     சரி, நாம மேலே போவோம் என அங்கிருந்த ஊர் பூசாரியிடம் மஞ்சமலைக்கு இன்னும் எவ்வளவு தொலைவு போக வேண்டும் எனக்கேட்ட போது, அவரும் என்ன தம்பி மஞ்சியம்மன் கோவிலுக்கு போறீங்களா,  இன்னும் இரண்டு கி.மீ தான் இருக்கும் நேரா போங்க எனச்சொலியிருந்தார்.

     மேலே போக போக சுற்றியிருந்த மலைகளும் பள்ளத்தாக்குகளும் தெளிவாக தெரிந்தது. இறுதியாக கடுமையான சவால்களை கடந்து மஞ்சமலைக்கு வந்து சேர்ந்தாகிட்டது. அங்கிருந்த மலைகளில் சுற்றிலும் மிக நேர்த்தியாக வேளாண்மை செய்யப்பட்டு இருந்தது.

     வாழை, சோளம், கம்பு, சாமை என மலைக்கே மேலே பார்த்த எல்லா இடங்களும் வேளாண் பூமியாகவே இருந்தது. ஆங்காங்கே சில வீடுகளும், மலைகளின் சரிவில் சில மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த நிறைய மலைகளில் புல்வெளிகளே நிரம்பி இருந்தது. அப்புல்வெளிகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

     அந்த புல்வெளிகள் நிரம்பிய ஒரு மலையின் அருகே வானகத்தை நிறுத்திவிட்டு மலைக்கு மேலேறிச் சென்று பார்த்த போது சுற்றியிருந்த பள்ளத்தாக்குகள் அங்கிருந்த அடர்ந்த காடுகள், தூரத்தில் மலைக்கு மேலே இருக்கும் தொழுவபெட்டா மலைகிராமமும், அருகருகே சில வீடுகள், நீர் நிரம்பிய கிணறுகள், குட்டைகள் என அனைத்தும் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு மனநிறைவாக தெரிந்தன.

     தூரத்தில் சுற்றியிருந்த மலைகளுக்கு நடுவே, காடு தொடங்கும் இடத்தில் பெரிய கோவிலும் அதனைச்சுற்றி நிறைய வாகனங்களும் இருந்தன. நிச்சயம் அது தான் நாம் பார்க்க வேண்டிய மஞ்சியம்மன் கோவில் என புரிந்தது.

     மலைக்கு மேலே நல்ல தார்சாலை போடப்பட்டு இருந்தது. பல ஊர்களில் இருந்து நிறைய மக்கள் இக்கோவிலுக்கு வருவதால் நல்ல சாலைப் போடப்பட்டு இருக்கலாம். நாம் இருக்கும் மலையில் இருந்து சற்று கீழ் இறங்கி மஞ்சுமலை எனும் அழகான கிராமத்தை கடந்து சென்றதும் பெரிய வளாகத்திற்கு நடுவே மஞ்சியம்மன் கோவில் இருந்தது. அருகே நிறைய வாகனங்களில் மக்கள் கூட்டமாகவும், ஆங்காங்கே கிடாய்கள் வெட்டப்பட்டும், கறிச்சோறு பரிமாறிக்கொண்டும் இருந்தனர்.
     குலத்தி காப்புக்காட்டு பகுதியான மேலூரில் பயணத்தை தொடங்கியதில் இருந்து மஞ்சுமலைக்கு வருகிற காட்டுப்பாதையில் பார்த்திடாத அளவுக்கு நெகிழிக்குப்பைக மஞ்சியம்மன் கோவில் மலைப்பகுதியில் நிரம்பி இருந்தது. திரும்பும் திசையெங்கும் குப்பைகள், பக்தியின் பொறுட்டு கோவிலுக்கு வரும் மக்கள் குப்பைகளை சகட்டுமேனிக்கு வீசாமல் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொண்டால் நல்லது. மேலும் வனத்துறையின் எவ்வித கட்டுப்பாடுகளையும் அவ்விடத்தில் காணமுடியவில்லை.

     கோவிலை பார்த்த பின் அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் ஓய்வெடுத்த போது மழைத்தூரல் தொடங்கியது. நாம் வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் மழையை பார்த்தது மகிழ்வாக இருக்க அங்கிருந்து கிளம்பினேன்.

      மஞ்சுமலைக்கு வந்த அந்த காட்டுப்பாதை கடினமாக இருந்ததால் அவ்வழியே திரும்ப போக வேண்டாம், தூரமாக இருந்தாலும் நாட்டறம்பாளையம், அஞ்சட்டி வழியாகவே வீட்டிற்கு போகலாம் என கோவிலுக்கு வரும் போதே முடிவெடுத்திருந்தேன்.

     அதன் படி அங்கிருந்தவரிடம், நாட்டறம்பாளையம் செல்ல வழியை விசாரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். செல்லும் வழி நெடுக மலைச்சரிவுகளில் ஏராளமான வேளாண் நிலங்களை பார்க்க முடிந்தது. அதிலும் சரிவுகளில் அடுக்கடுக்கான வேளாண் முறை சிறப்பாக இருந்தது.

     அங்கிருந்த தொட்டமஞ்சி என்ற மலைகிராமத்தைக் கடந்ததும் மீண்டும் காட்டுப்பாதை தொடங்கியது. ஆனால் இப்பகுதியின் மலைச்சாலை நல்ல தார் சாலையாக இருந்ததால் விரைவாக வர முடிந்தது.

     ஒரு மலைத்திருப்பத்திற்கு வந்த போது மேற்கே பள்ளத்தாக்கில் நாட்டறம்பாளையம் கிராமத்தையும், ஒக்கேனக்கலுக்கு செல்லும் நெடுஞ்சாலையும், அடர்ந்த வனமும் தெளிவாக பார்க்க முடிந்தது.

     இறுதியாக நாட்டறம்பாளையம் மலை கிராமத்திற்கும், அங்கிருந்து வடக்கு காவிரி வன உயிரினச் சரணாலயம்lllllll அல்லது அஞ்சட்டி காடு எனும் பகுதி வந்தது (காவிரிக்கு வடக்கேயுள்ள இக்காட்டுப்பகுதிகள் அனைத்தும் 'வடக்கு காவிரி வன உயிரினச் சரணாலயத்திற்கு' உட்பட்ட பகுதிகள் தான்)

     பிறந்த நாளுக்கான இந்த பயணத்தில் சாவாலும், திகிலும் நிறைந்திருந்தாலும் இப்பயணமும் மனதிற்கு பெரும் நிறைவைக் கொடுத்தது.

அடுத்த பயணத்தில் சந்திப்போம், நன்றி

பனைசதிஷ்
29.10.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்