நுரோந்துசாமி மலைப்பயணம்

#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம்
#கிழக்கு_தொடர்ச்சி_மலை
#கானகனின்_கான் #யானைக்காடு

ஜவலகிரி வனப்பகுதி  - நடுகல் - இளநீர் கோயில் - நுரோந்துசாமி மலை மடம்

      மஞ்சிமலை காட்டுப் பயணத்திற்கு பிறகு, காவிரியின் வடக்கு வன உயிரின சரணாயலத்தின் மலைப்பகுதிகளில் இருக்கும் தனித்த மலை கிராமங்கள் குறித்து வழக்கம் போல் Google Satellite Map-ல் தேட ஆரம்பித்தேன். அப்போது ஓசூர், தளி அடுத்த ஜவலகிரி வனப்பகுதியின் மலைகளில் நிறைய சிறிய சிறிய மலை கிராமங்கள் இருப்பதை பார்த்தேன்.

     ஜவலகிரியில் இருந்து இன்னும் தொலைவில் உள்ள மலை கிராமங்களை தேடிப்பார்த்த போது, ஜவலகிரி காட்டுப்பகுதியில் இருந்து தெற்கே 50கி.மீ தொலைவில் நுரோந்து சாமி மலை என்ற மலை கிராமம் தனித்து இருப்பது தெரிந்தது. கிராமத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் அங்கு சென்று பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

     ஓசூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17.11.23) காலை நுரோந்து சாமி மலைக்கான பயணம் ஆரம்பமானது. மிதமான வெயிலும், வானம் ஓரளவு கறுத்தும் இருந்தன. தளி பகுதியை கடந்து ஜவலகிரி வரும் வரை சாலையோரங்களில் ஏராளமான பனை மரங்களை காண முடிந்தது. ஆனால் இங்கு சாலை விரிவாக்க பணி நடப்பதால் சாலையில் இருந்த பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டு இருந்தன. வெகு விரைவில் இப்பனைகளும் அங்கிருந்து காணாமல் போகலாம்.

      கர்நாடகத்திற்குள் செல்லும் இச்சாலையில் கனரக வாகனங்கள் நிறைய சென்று கொண்டிருந்தன. தளி தாண்டி ஜவலகிரி செல்லும் வழியில் தான் ஓரளவு அமைதியான கிராமங்களை காண முடிந்தது. ஜவலகிரியில் இருக்கும் "வடக்கு காவிரி வன உயிரின சரணாலத்தின்" சோதனைச் சாவடியில் இருந்து தான் காடு ஆரம்பமாகிறது.
     கர்நாடத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் பெரும்பாலான யானைகள் இச்சரணாலயம் வழியாக செல்வதால் மிக கவனமாக வாகனம் ஓட்ட வேண்டியிருந்தது. ஆனால் சாலை நேர்த்தியாகவும், எவ்வித வேகத்தடையும் இல்லாததாலும் நிறைய வாகனங்கள் அதிவேகமாக பயணிப்பதை பார்க்க முடிந்தது.

      திடீரென சாலையின் குறுக்கே மரங்கள், செடிகளை அகற்றி வாகனம் செல்லும் அளவுக்கு வழி போட்டது இருந்தது. காட்டில் அந்த வழி தான் தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியை குறிக்கும் வழி என அங்கிருந்த எல்லைக்கோடு பலகையை பார்த்த பிறகே புரிந்தது.

     அடர்ந்த வனப்பகுதியில் இருந்து சற்றே மரங்கள் அற்ற புதர்காடுகள் நிறைந்த பகுதிக்கு வந்த போது அங்கு வனத்துறையின் பார்வை கோபுரம் ஒன்றிருந்தது. அதன் மீது ஏறி பார்த்த போது தொலைவில் இருக்கும் மலை, காடுகளும், யானைகளின் சில வறண்டு போன நீர்நிலைகளும் தெரிந்தன.

     அங்கிருந்து கிளம்பிய சிறிது தூரத்தில் காட்டுப்பகுதி முடிந்து, கர்நாடகத்தின் கிராமங்கள் ஆரம்பித்தது. ஆம், ஜவலகிரி வனப்பகுதியில் இருந்து அடுத்த 20 - 30 கி.மீ முழுக்க கர்நாடக கிராமங்கள் ஊடாகதான் பயணப்பட வேண்டி இருக்கும். அங்கு பார்த்த கிராமங்கள் அனைத்தும் ஓரளவு அடிப்படை வசதிகள் கொண்ட கிராமங்களாக இருந்தன.

     மிகச்சிறிய கிராமங்களே ஆனாலும் பேருந்து வசதிகள் இருக்கிறது என்பது எதிரே அஞ்சட்டியில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்து மூலம் அறிய முடிந்தது. கர்நாடகத்தில் பார்த்த கிராமங்களின் பெயர்களை நம்மால் சரிவர உச்சரிக்கவோ, நினைவில் வைத்துக்கொள்ளவோ முடியவில்லை.

     காட்டுப்பகுதியை அடுத்து வந்த முதல் கிராமத்தை கடந்து அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது ஒரு வீட்டின் வாசலில் பெரிய அளவில் நடுகல் ஒன்று இருந்தது. அதில் இருந்த வீரன் ஒரு கையில் வாலும் மற்றோரு கையில் வில்லும் தலைக்கு மேலே சில உருவங்களும், பக்கவாட்டில் மாடு போன்ற உருங்களும் இருந்தது. வீட்டிலும் அந்த சாலையிலும் ஆட்கள் யாரும் இல்லாததால் அந்த நடுகல் குறித்து விசாரிக்க முடியவில்லை.

     இந்நடுகல் படத்தை பார்த்த பின் இது குறித்து விவரங்கள் தெரிந்தால் சொல்லவும். மேலும் அந்நடுகலின் மேலே அங்கிருந்த வீட்டார் சில பூச்செடிகளை வளர்த்திருந்தனர். 
     அந்த நடுகல் இருக்கும் ஊருக்கு வடக்கேயுள்ள மலைகள் தான் தமிழக - கர்நாடக எல்லைகளாக இருக்கிறது. நீண்ட பயணத்திற்கு பின் ஒரு வழியாக கர்நாடக எல்லை முடிந்து தமிழகப் பகுதிக்குள் நுழைந்திருந்தேன்.

     தமிழக எல்லைக்குள் இருக்கும் விவசாய முறைக்கும், கர்நாடகத்திற்குள் இருக்கும் விவசாய முறைக்கும் சில வித்தியாசங்களை காண முடிந்தது.

     கர்நாடக பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் செல்லும் சாலை நேராக அஞ்சட்டியை தான் சென்று சேர்கிறது. அஞ்சட்டிக்கு முன்னர் வரும் டக்கட்டி என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து தான் நுரோந்து சாமி மலைக்கு செல்லும் பிரதான சாலைப் பிரிகிறது. அஞ்சட்டியில் இருந்து நுரோந்து மலைக்கு செல்லும் ShareAuto-க்களும் டக்கட்டி வழியாக தான் போக வேண்டும். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் அதிகளவு மக்கள் நுரோந்து சாமி மலைக்கு செல்வதாக மலையில் நான் பார்த்த பழங்குடி நண்பர் சொல்லியிருந்தார்.

     டக்கட்டியில் இருந்து மலைப்பாதை தொடங்கியது. இந்த மலையிலும் ஒவ்வொரு திருப்பங்களிலும் யானையின் காய்ந்த சாணங்களை பார்க்க முடிந்தது. டக்கட்டி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்திலும் அதற்கும் மேல் 3000 - 3200 அடி உயரத்தில் நுரோந்து சாமி மலை கிராமமும் இருக்கிறது. இத்தனை உயரத்திலும் உணவு தேடி யானைகள் சாதாரணமாக மலையேறி, இறங்குகின்றன.

     மலையில் தார்சாலை போடப்பட்டு இருந்ததால் விரைவாக உரிகம், உடுபரானி, நுரோந்து சாமி மலை கிராமங்களுக்கு செல்லும் சந்திப்புக்கு வந்திருந்தேன். நான் வந்த சாலையில் நேராக சென்றால் உரிகம் கிராமத்திற்கும் இடது பக்கமாக சென்றால் நுரோந்து மலைக்கும் வழி செல்கிறது. இதுவரையிலான மலைப்பாதை ஏற்றமாகவே இருந்தது. உரிகம் சந்திப்பில் இருந்து முழுவதுமாக மலைக்கு மேலே வந்திருந்ததால் பாதை சமமாகவும் வாகனம் ஓட்டு இலகுவாகவும் இருந்தது.

     இப்போது பயணிக்கும் மலையில் இருக்கும் கடைசி மலைகிராமம் தான் நுரோந்துசாமி மலை. டக்கட்டி கிராமத்தை விட இந்த மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து உயரத்தில் இருப்பதால் தாவரங்களின் அடர்த்தியும், காற்றில் ஈரமும் அதிகமாக இருந்தது. சில இடங்களில் யானையின் காய்ந்த சாணங்களும், யானைகள் புதிதாக உடைத்துப் போடப்பட்ட மரக்கிளைகளும் சாலையில் கிடந்தது.
     ஆங்காங்கே நுரோந்துசாமி மலைக்கு செல்லும் வழி என பாறைகளில் அம்பு குறியிட்டு எழுதி இருந்ததால் மலை கிராமத்திற்கு அருகில் வந்துவிட்டோம் என நினைத்தேன். ஆனாலும் நீண்ட பயணத்திற்கு பிறகே காட்டுப்பகுதி முடிந்து மலை கிராமம் ஆரம்பமானது. முதலில் சில வீடுகளே கொண்ட பகுதி வந்தது. ஆனால் அங்கேயும் நுரோந்து சாமி மலைக்கு செல்லும் வழி என்ற பதாகையில் அம்பு குறி இன்னும் சற்று மேலேயுள்ள மலைப்பகுதியை காட்டியது.

      நான் பார்த்த அந்த மலைகிராமம் சரியாக காட்டுப்பகுதி முடியும் இடத்தில் இருப்பதால், முன்பு நான் சத்தியமங்கலத்தின், குன்றி மலையில் பார்த்தது போன்றே இங்கும் யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஒவ்வொருவரும் தங்கள் விவசாய நிலத்தில் உள்ள உயரமான பெரிய மரத்தில் மூங்கில் கொண்டு பரண் அமைத்திருந்தனர்.

      இங்கு அறுவடை காலம் முடிந்திருந்ததால் பெரும்பாலான வயல்கள் காலியாகவே இருந்தது. விவசாய நிலங்களில் பெரும்பாலும் இயற்கை உயிர்வேலியே அமைத்திருந்தனர். ஆனாலும் ஒரு சிலரின் நிலத்தில் மட்டும் மின்வேலி போடப்பட்ட இருந்தது. அவையும் பல இடங்களில் யானைகளால் மிதிப்பட்டு இருந்தது.

     மலைக்கு மேலே யானைகள் நீர் அருந்த அகலமாக குட்டை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து முன் சென்றதும் மலைச்சாலை இரண்டாக பிரிந்தது. நுரோந்து சாமி மலைக்கு நேராகவும் இடது பக்கமாக இளநீர் கோவிலுக்கு செல்லும் எனவும் பதாகை இருந்தது. இளநீர் கோவில் என்பதை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன்.

     மலைக்கு மேல் இதுவரையிலான பகுதியில் தார்ச்சாலைப் போடப்பட்டு இருந்தது. நுரோந்துசாமி மலைக்கு செல்லும் மலைப்பாதை மட்டும் முழுக்க முழுக்க மண்சாலையாக இருந்தது. தொடர்ந்து  நிறைய வாகனங்கள் சென்று வந்ததால் சாலை மோசமாக இருந்தது.

     ஏற்கனவே டக்கட்டியில் இருந்து மலைக்கு மேல் தான் வந்திருந்தேன். ஆனால் இங்கிருந்து இன்னொரு மலைக்கு வழி செல்கிறது. முழுக்க மண்பாதையாக இருப்பினும் பெரிய தடுமாற்றம் இல்லாமல் வாகனத்தை மேலே ஓட்டிக்கொண்டு மேலே வந்தாகிவிட்டது.
     நுரோந்து சாமி மலை கிராமத்தில் சில வீடுகளே இருந்தன. ஆனாலும் தமிழ்நாடு அரசின் தொடக்கப்பள்ளியும் அங்கே ஆசிரியர்களும் இருப்பதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஊருக்குள் வந்த பின்பும் கோவில் இருப்பதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. அங்கிருந்த பழங்குடி அண்ணா ஒருவரிடம் கேட்ட போது நான் நின்றிருந்த இடத்திற்கு வலது பக்கம் இருந்த வீட்டை காண்பித்து இது தான் தம்பி நுரோந்து சாமி மடம் என்றார்.

     அவர் கை காண்பித்த மடம் வெளிப்புற தோற்றத்திற்கு சாதாரண வீடு போலவே இருந்தது. வீட்டின் முகப்பில் லிங்க உருவமும் அதற்கு மேலே நந்தி சிலையும் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 11 சிவலிங்கம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது.

     சிவலிங்களுக்கு அருகே ஒரு சிறு அறையும் இருந்தது. அது தான் நாம் பார்க்க வந்த நுரோந்து சாமியின் ஜீவசமாதி என்பதும் புரிந்தது. உள்ளிருந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவ்வூரைச் சேர்ந்த இருவர் யாருங்க எனக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்து விசாரித்தனர்.

     நான் நுரோந்து சாமி மலைக்கு இன்ன காரணங்களுக்காக வந்திருக்கிறேன் என சொன்ன பிறகு அங்கு வந்த தம்பி தங்கள் குடும்பம் தான் இம்மடத்தை நிர்வகிப்பதாகவும், இம்மடத்தின் வரலாறு குறித்தும் தகவல் சொன்னார். (லிங்காய் சமூக மக்கள் தான் நுரோந்து சாமி மடத்தையும், இளநீர் கோவிலையும் பார்த்துக் கொள்கின்றனர்)

     கி.பி 10 - 12ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து வந்த முனிவரால் தான் இவ்வூருக்கு நுரோந்து சாமி மலை எனப்பெயர் வந்ததாக கூறினார். (கன்னடத்தில் நுரோந்து என்றால் நூற்றி ஒன்று எனப்பொருள்) அம்முனிவரின் இயற்பெயர் தெரியவில்லை. ஆனால் ஒரு புராணிய கதையின் அடிப்படையிலேயே இம்மலைக்கு நுரோந்து சாமி எனப்பெயர் வந்துள்ளது.

     அவரின் ஜீவசமாதிக்கு அருகே இருந்த லிங்கம் ஒவ்வொன்றும் நுரோந்து சாமியின் ஒவ்வொரு சீடர்கள் எனவும் அவர்கள் ஜீவசமாதி ஆனதும் அங்கு லிங்கம் வைக்கப்படும் என சொல்லியிருந்தார்.
     நான் அங்கு சென்று, அந்த தம்பியை பார்த்து பேச தொடங்கியதில் இருந்து வாங்க அண்ணா சாப்பிட்டுங்க என கேட்டுக்கொண்டே இருந்தார். இருக்கட்டும் எனச்சொல்லியும் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தார். ஏன் என்ன கேட்ட போது தான் அவர் சொன்னார், பல தலைமுறைகளாக இந்த மடத்தை தேடிவரும் எல்லோருக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பது எங்க பரம்பரையின் வாக்கு. அதன் படி இந்த மடத்தை தேடி வரும் அனைவருக்கும் எங்களால் முடிந்தளவு உணவு கொடுக்கிறோம் என்றார்.

     மடத்திற்கு பக்கத்தில் இருந்த பழமையான வீட்டில் தான் உணவு பரிமாறினார். பல நூறு ஆண்டு பழமையான அந்த வீட்டு இன்றும் அழகிய உயிர்ப்போடு இருந்தது. உண்மையில் மதிய நேரத்தின் பசியை போக்கியது அவர் கொடுத்த உணவு. சாப்பிட்டு முடித்த பின் அந்த வீட்டில் இருக்கும் பூசை அறைக்கு கூட்டிச்சென்று காட்டினார். அங்கு பழமையான போர் வால் இருந்ததை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் பார்ப்பதை அந்த தம்பியும் பார்த்திருக்கிறார். அண்ணா இந்த போர் வால் மைசூர் மகாராஜா எங்க பாட்டனாருக்கு கொடுத்ததாக கன்னடம் கலந்த தமிழில் நான் கேட்கும் முன்னமே சொன்னார். 

     இம்மடத்திற்கு வருவோர், அவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும் ரசிது போட்டு கொடுக்கிறார். என்னால் ஆன தொகையை கொடுத்து ரசிதை பெற்றுக்கொண்டு வெளியே வந்த பின், இங்க காட்டுக்குள்ள அருவி இருக்கா தம்பி என கேட்ட போது, அருவி ஏதும் இங்க இல்லைங்க அண்ணா, ஆனா கொஞ்சம் மேலே போனீங்கனா நல்ல வீவ் பாய்ண்ட் இருக்கும் போய்ட்டு பாருங்க என மடத்திற்கு பின்புறம் வந்து மேலே செல்லும் வழியை காட்டினார்.

     மடத்தில் இருந்து சற்று மேலேறி வந்த போது பெரும் பள்ளத்தாக்கில் உரிகம், கோட்டையூர் மலைகிராமங்கள் தெளிவாக தெரிந்தது. அங்கிருந்து தெற்கே தொலை தூரத்தில் மலைகளுக்கு கீழே காவிரி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் வெகு தூரத்தில் இருந்ததால் நம்மால் பார்க்க முடியவில்லை. சற்று நேரம் அங்கு ஓய்வெடுத்துவிட்டு கீழே வந்த போது அந்த தம்பி மீண்டும் எதிர்பட்டார்.

     அண்ணா, கீழுள்ள இளநீர் கோவிலுக்கு போனீங்களா எனக்கேட்டார், நான் இல்லை என்றதும், அண்ணா போகும் போது அவசியம் அங்க போய்ட்டு போங்க, திரும்ப வரும் போது, குடும்பத்தோடவும், நண்பர்களையும் அழைச்சிட்டு வாங்க. எனச்சொல்லி அவரின் தொடர்பு எண்ணையும் கொடுத்து வழியனுப்பி வைத்தார். (அங்கு செல்லும் முன் அவரிடம் தகவல் சொன்னால் உணவு முன்கூட்டியே ஏற்பாடு செய்ய அவருக்கு உதவியாக இருக்குமாம்)

     அவர் என்னிடம் பேச ஆரம்பித்த போதே, இங்கு யானைங்க வருமா என விளையாட்டாக கேட்டேன். உடனே அவர் அண்ணா இங்க யானைங்க ரொம்ப சாதாரணமா வரும், போன வாரம் நானே  ஆனையிடம் சிக்க நேர்ந்திருக்கும் எனவும், அவர் அன்று பார்த்த ஒற்றை ஆண் யானையின் புகைப்படத்தையும் காண்பித்து, கவனமாக போங்க என்றார்.

     இளநீர் கோவிலை பற்றி அவர் சொன்னது ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அக்கோவிலில் மக்கள் கொண்டு வரும் இளநீர் மூலம் தான் விளக்கு ஏற்றப்படுவதாக சொன்னது வியப்பாக இருந்தது. இதுவரை எந்த ஊரிலும் இளநீரில் விளக்கு ஏற்றுவது குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை. 
     நுரோந்து சாமி மலையை விட்டு கீழ் இறங்கி, நான் முதலில் பார்த்த இளநீர் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு வந்தேன். அங்கிருந்து ஒரு கி.மீ க்கும் குறைவான தொலைவு தான் ஆனாலும் முழுக்க, முழுக்க கற்கள் நிறைந்த மண் சாலையாக இருந்தது. நுரோந்து சாமி மலைக்கு மேலே செல்கையில் இளநீர் கோவிலுக்கு செல்லும் சாலையில் இருந்து காவி உடை உடுத்திய வயதானோர் சிலர் கோவிலில் இருந்து அச்சாலையில் வருவதை பார்த்திருந்தேன். ஆனால் இப்போது இளநீர் கோவிலில் யாரும் இல்லை. சுற்றிலும் அடர்ந்த காடு. சற்றே இறக்கத்தில் இயற்கையாக அமைந்த பெரும் பாறை குகைகளுக்குள் இளநீர் கோவில் அமைந்திருந்தது.

     நான் சென்ற நேரம் இளநீர் கோவில் மூடப்பட்டு இருந்தது. தம்பி சொன்னது போல் அடுத்த முறை வரும் போது இளநீர் வாங்கிக்கொண்டு வந்து விளக்கு திரி போட்டு பார்க்க வேண்டும்.

     இளநீர் கோவில் பற்றிய செய்திகள் ஒரு பக்கம் ஆச்சிரியமாக இருந்தாலும், அந்த தம்பி சொன்ன ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் இன்னொரு பக்கம் பதற்றத்தை அதிகரித்தது. 

     இளநீர் கோவிலுக்கு செல்லும் போது நான்கு, ஐந்து நாய்கள் எதிரே வந்தது. அதில் ஒரு நாய் மட்டும் என்னை பின்தொடர்ந்து கோவில் வரை வந்து பிறகு அங்கிருந்து நான் கிளம்பும் வரை என்னுடனே இருந்தது. மலையில் இருள் சூழ தொடங்கியிருந்ததால் சூரிய மறைவுக்குள் மலையைவிட்டு கீழ் இறங்கிட வேண்டிய கட்டாயத்தில் வேக வேகமாக அங்கிருந்து கிளம்பினேன்.
      நுரோந்து சாமி மலையும், இளநீர் கோவிலும், புதிய நடுகல்லை பார்த்த அனுபவம் என இப்பயணம் கொடுத்த நினைவுகளை அசை போட்டுக்கொண்டே அங்கிருந்து அடர்ந்த காட்டின் ஊடாக அஞ்சட்டி வந்து பின் ஓசூர் வந்தடைந்தேன். 

காட்டில் மீண்டும் யானையை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இப்போதும் தொடர்கிறது, அடுத்த பயணத்தில் சந்திப்போம். நன்றி

பனை சதிஷ்
17.11.23

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்