ஜவ்வாது மலை கானுலா - 12 (பகுதி 2)

#ஜவ்வாதுமலை
#கிழக்குதொடர்ச்சிமலை
#கர்நாடககிரி_கோட்டை

பகுதி 2:- மலையேற்றம் தொடங்கியது

      பழங்குடி நண்பர் குட்டி சொன்ன சுற்றிக்கொண்டு செல்லும் இரண்டாம் வழியில் மலை ஏற முடிவு செய்து, நடக்க தொடங்கினோம். சில தூரம் தரைகாட்டில் நடை பயணம் முடிந்து, முழுமையான மலையேற்றம் ஆரம்பம் ஆனது.

      பழங்குடி நண்பர் சங்கருடன் எல்லாரும் மலையேற தொடங்கும் போது மணி காலை 10ஆகியிருந்தது. குட்டியும் எங்களுடன் கொஞ்ச தூரம் வந்து எங்களை வழியனுப்பினார்.

    மலை ஏற்றம் தொடங்கிய 30 நிமிடத்திலேயே ஊகித்து கொண்டேன், நிச்சயம் இந்த மலையேற்றம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. உடன் மலையேறியோர் முகத்தில் அதற்குள் சோர்வு குடி கொண்டுவிட்டது, இத்தனைக்கும் நாங்கள் அடிவார மலையேற்றத்திலேயே தான் இருந்தோம். பிறகு சங்கர் எங்கள் ஆறு பேருக்கும் ஊன்றி நடக்க குச்சிகளை வெட்டி கொடுத்தார்.  மலையேற்றத்தில் முதல் அடையாளம் என்ற ஒரு பெரும் பாறை பரப்பிற்கு வந்து சேர்ந்தோம். இங்கு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு செல்வோம் என்றார்.
     சோர்வாக இருந்தாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம் பிறகு மலையேற்றம் இன்னும் கடினமாக மாறிவிடும் என அனைவரையும் கேட்டுக்கொண்டேன். மஞ்ச புற்கள், அடர்ந்த சிறு மரங்களின் ஊடே பயணம் தொடர்ந்தது அதாவது பாதையே இல்லாத மலையேற்றம். நிறைய முறை ஜவ்வாது மலை காட்டிற்கு வந்த எனக்குமே இந்த மலைப்பயணம் புதிதான ஒரு அனுபவமாக இருந்தது.

     நான் சங்கரின் நடைக்கு ஈடாக நடந்து கொண்டே அவரிடம், மலை மக்களின் பழக்க வழக்கம் பற்றியும், விவசாய முறைகள் பற்றியும் கேட்டுக்கொண்டே வந்தேன். ஏனைய பழங்குடிகளை போன்று சங்கரும் குறைவாகவே உரையாடினார். ஆனால் அதில் நிறைய தகவல் இருந்தது. இங்குள்ள காட்டு மரங்களை பற்றியும், விசக்கடிகளுக்கு பயன்படும் மூலிகை செடிகளை பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் நிறைய தகவல்களை சொன்னார், குறிப்பாக இந்த காட்டில் ஜவ்வாது காட்டு எருமைகளும், மான் இனத்திலேயே அரிதான சிறிய வகை மான் இனமும் (பழங்குடிகளின் மொழியில் கேளமான் அல்லது குப்பக்கால் மான்) இருப்பதாக சொன்ன செய்தி தான் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக ஜவ்வாதுமலை காட்டுக்கு வந்தும் அவற்றை காண முடியாத ஏக்கம் ஏனோ இம்முறை இந்த காட்டில் நிச்சயம் அவற்றை பார்த்திட முடியும் என நம்பினேன். ( என் நம்பிக்கை வீண் போகவில்லை)

முதல் மந்தை:-

     ஒரு மணி நேர மலையேற்றத்தில் அடுத்த அடையாளமான மந்தை எனப்படும் வட்ட வடிவமான ஓரளவு காலி இடம் வந்தது, பொருட்களோடு மலையேறும் பழங்குடி மக்களும், சில காட்டு விலங்குகளும் ஓய்வெடுக்கும் இடம் தான் இந்த மந்தை என்றார் சங்கர். இந்த மலை முழுக்க திரியும் மேலே குறிப்பிட்ட கேள மான்கள் இந்த மந்தையில் வந்து தான் கழிவுகளை இடுமாம். இரு தினங்களுக்கு முன் மான்கள் இட்ட கழிவுகளை அந்த மந்தையில் பார்க்க முடிந்தது. சிறிது ஓய்விற்கு பின் மலை ஏற்றம் தொடர்ந்தது ஆனால் மேலும் மேலும் செங்குத்தாகவே இருந்தது. மலை பயணத்தில் நாங்கள் பாதி தொலைவு கூட வந்து சேரவில்லை அதற்குள் சிலர் நிறையவே சோர்ந்திருந்தனர்.
     நானும் சங்கரும் ஒன்றாகவே மலையேறிக் கொண்டிருந்தோம், ஆனால் பின் வந்த ஐவரும் தூரத்தில் தான் பின் தொடர்ந்தனர். அவர்களுக்காக நிறைய இடங்களில் அடிக்கடி நாங்கள் ஓய்வெடுக்க வேண்டி இருந்தது. பகல் பொழுது உச்சியை அடைந்து விட்டது, ஆனால் இன்னமும் நாங்கள் செங்குத்தான மலையேற்றத்திலேயே இருந்தோம், சங்கர் எதிரே தூரத்தில் தெரியும் இரண்டு மலைகளை காண்பித்து, அவற்றை கடந்தால் தான் ஓரளவு சமதள பாதை வரும் என்றார்.

இரண்டாம் மந்தை:-

     மலையில் உயரே செல்ல செல்ல தாவர அமைப்புகள் மாறுவதை காண முடிந்தது. கீழே தரை காட்டில் பார்த்ததை விடவும் ஓரளவு உயரமான தடித்த மரங்களும், சில புதிய காட்டுக் கொடிகளையும் மேலே பார்க்க முடிந்தது. மலையேற்றத்தில் இப்போது நாம் பாதி தொலைவு வந்துவிட்டோம் என்பதற்கான அடையாளமாக இரண்டாம் மந்தை வந்தது. நானும் சங்கரும் மந்தைக்கு வந்த பிறகு வெகு நேரம் கழித்து கடுமையான சோர்வோடு குழுவினர் வந்து சேர்ந்தனர். அனைவரும் இங்கயே கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துவிட்டு கிளம்பலாம் என்றனர். கிடைத்த ஓய்வு நேரத்தில் சங்கரிடம் இரண்டாம் மந்தையில் பார்த்த சில வித்தியாசமான காட்டு மரங்களை காண்பித்து அவற்றை பற்றிய தகவல்களை கேட்டு கொண்டிருந்தேன். 

     அப்போது அனைவரும் பேசி ஒன்றாக ஒரு முடிவெடுத்தனர். இந்த மலை ஏற்றம் இவ்வளவு கடுமையாக இருக்குமென நமக்கு தெரியாது, மிக நிச்சயமாக நாம் இன்றே மலையில் இருந்து இறங்கிட முடியாது, ஆகையால் மலையில் தங்கியே ஆக வேண்டும். முதலில் நாம் சந்தித்த பழங்குடி நண்பர் குட்டிக்கு அழைப்பு கொடுத்து இரவு உணவுக்கு தேவையான அரிசியும் பிற சமையல் பொருட்களையும் எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் உறுதியாக கொண்டு வந்துவிடுவதாக நம்பிக்கை அளித்தார். நாம் கோட்டைக்கு போகும் முன்னமே பொருட்களை எடுத்துக்கொண்டு குட்டி வந்து சேர்ந்து விடுவார் என்றார் சங்கர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 
     அடுத்த ஆச்சரியம் இரண்டாம் மந்தையை கடந்து செல்கையில் வழியில் புதிதாக இடப்பட்ட காட்டு எருமைகளின் கழிவுகளும் அவை மிக சமீபத்தில் வந்தற்கான குளம்படிகளும் இருந்தது, ஆனால் எவற்றையும் அப்போது பார்க்க முடியவில்லை, எங்கள் உடன் வந்த வேட்டை நாய்களின் சத்தத்தில் அவை மறைந்து போயிருந்தன.

     நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு அழைப்பு கொடுத்து இரவு மலையில் தங்குவதை பற்றி தகவல் தெரிவித்துவிட்டோம். இரண்டாம் மந்தையை கடந்த பிறகு மலைப்பாதை ஓரளவு நடக்கும் படி இருந்தது. காற்றில் வேகமும், குளிரும் மெல்ல அதிகரித்ததில் இருந்து புரிந்து கொண்டேன் நாம் கிட்டத்தட்ட மலையின் உச்சிப்பகுதிக்கு மிக அருகில் வந்துவிட்டோம் என்று. நாங்கள் இருந்த மலைக்கு மேற்கே உள்ள மலையில் நீண்ட பெரும் பாறைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டு இருந்த இடத்தை மூக்குத்தி கல் எனவும், அந்த பகுதிக்கு சென்று விட்டால் நாம் மலையின் உச்சியை அடைந்து விடலாம் அதன் பிறகு மேற்கே உள்ள கோட்டை பகுதி வரை ஓரளவு நடக்கும் படியான சமமான பாதை தான் என்றார் சங்கர்.
     மூக்குத்தி கல் மலைக்கு செல்லும் பாதைக்கு முன் ஓரிடத்தில் மலைக்கு மேல் அடர்ந்த மரங்களுக்கு நடுவே குட்டை போன்ற இடம் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. சுற்றிலும் பச்சை போர்த்தியது போன்ற புல்வெளிகள். இவ்விடத்தில் மழை பெய்கையில் நீர் தேங்கி இங்கிருந்து கீழே ஓடையாக வருமாம், மலையில் திரியும் மாடுகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தற்காலிக தண்ணீர் தேக்கமாக இந்த குட்டை இருக்குமாம். நாங்கள் அங்கு செல்கையில் குட்டையில் தண்ணீர் ஓரளவுக்கு இருந்தது, ஆனால் விலங்குகளின் குளம்படிகள் ஏதும் இல்லை, சிறிது நேரம் அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு கிளம்பி முக்குத்தி கல் மலைக்கு வந்து சேர்ந்தோம்.

மூக்குத்தி கல் மலை:-
    தூரத்தில் இருந்து பார்த்ததற்கும் அருகில் இருந்து பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம். ஏனெனில் அடுக்கடுக்கான இந்த பாறை பல அடுக்குமாடி கட்டிடம் போன்று மிக பிரம்மாண்ட உயரமாக இருந்தது. அதன் அடியில் ஆண்டு முழுக்க வற்றாமல் இருக்கும் சுணைநீர் பகுதிக்கு கூட்டிச்சென்றார் சங்கர். ஒரு கை மட்டுமே உள்ளே செல்லும் அளவு கொண்ட ஆழமான பள்ளம் தான் அந்த சுணை. அதிலிருந்த நீர் குளிர்ச்சியாகவும், சுவையானதாக இருந்தது. முடிந்தளவு எல்லா பாட்டில்களிலும் சுணை நீரை பிடித்துக் கொண்டு, முக்குத்தி கல் மலையில் இருந்து அடுத்து கொஞ்சம் தொலைவு நடந்த பிறகு இடது, வலது பக்கமாக இருந்த பாறைகள் மீது எங்களை ஏறி பார்க்க சொன்னார் சங்கர். சுணை நீர் குடித்த தெம்பில் பாறை மீது ஏறி பார்த்தேன். அப்போது கண்ட காட்சிகளை வார்த்தைகளால் நிரப்பிவிட முடியாது.

     நாங்கள் இப்போது கடல் மட்டத்தில் கிட்டத்தட்ட 2500அடி உயரத்தில் இருந்தோம். அருகில் இருந்த பாறைகளின் மீது ஏறி பார்த்த போது வலது பக்கம் மூலக்காடு, செண்பக தோப்பு, படைவீடு வனப்பகுதியும் அதன் பள்ளத்தாக்குகளும் தெரிந்தது. இடது பக்கம் போளூர் நகரமும், அத்திமூர்  பெரியமலை, பர்வதமலையும் தாண்டி திருவண்ணாமலை கிரிவல மலை வரை நீண்ட பரப்பை பறவையின் கோணத்தில் இருந்து ரசித்துக்கொண்டே மலை பயணத்தை தொடர்ந்தோம்.
     இந்த உயரமான மலையின் உச்சியில் இருந்து அருகில் இருக்கும் பள்ளத்தாக்குகளையும், கிராமங்களையும் பார்த்த பிறகு அங்கிருந்து கடந்து போக மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தோம்.

-- பயணம் தொடரும் 

      கடந்த 5000 ஆண்டுகளாக மனித நாகரீக தொடர்ச்சியை கொண்ட இந்த ஜவ்வாதுமலையில் கிட்ட தட்ட ஐந்து நூற்றாண்டுக்கும் மேலாக அதிகாரத்தின் உச்சமாக இருந்த கோட்டையையும் அதன் மிச்ச எச்சங்களையும் அடுத்த பதிவில் காணலாம்.

28.08.2021

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்