தமிழர்களின் அடையாளம் பனை


     தமிழர்களின் வாழ்விலும், வரலாற்றிலும் நீண்ட நெடிய அருபடாத மரபைகொண்டது பனை மரம், இதன் உயரத்தைப் போன்றே இதன் வரலாறும் நெடியது. சங்க காலம்முதல் சமகாலம்வரை பனையின் வகிபாகம் பெறுமதியானது. பன்நெடுங்காலமாக இந்த மொழியோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் மரம் பனை மரம். தமிழ் சமூகத்திற்கு அளப்பறிய பங்களிப்பைக் கொடுத்துள்ளது. பனைமரத்தை இன்று செங்கல் சூலைகளுக்காக வெறும் 50,100 ரூபாய்க்கு வெட்டப்படுவது தமிழினத்திற்கு பெரும் இழிவு. ஒரு சமூகத்தின் பண்பாட்டை முதுகில் சுமந்த ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும் இழிநிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை.

 

     தமிழகத்தில் சந்தனமரத்திற்கு இணையாக அதிக அளவில் ஒரு மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது என்றால் அது பனைமரம்தான். பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் இருப்பதாக என்னளவில் நான் உணர்கிறேன்.

 

     முதல் காரணம் பண்பாட்டு ரீதியாக இம்மண்ணின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவது தான். இதை நாம் ஆழமாக அவதானிக்க வேண்டும், சூழலியல் குறித்த பறந்த பார்வை உள்ளவர்களால் நிச்சயம் இந்த வாதத்தை உணர முடியும். இதை இன்னும் விளக்கமாகச் சமகால உதாரணதங்களோடு நாம் பார்க்கலாம். ஈழத்துப் போர் உச்ச நிலையின் சூழலில் இராணுவ நடவடிக்கையின் போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் கிட்ட தட்ட 70 லட்ச பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. இது இலங்கையின் ஒட்டு மொத்த பனைமரங்களின் எண்ணிக்கையில் 40% க்கும் மேல் இருக்கும். இது ஏதோ போரினால் நடந்த நிகழ்வாக நாம் கடந்துவிட முடியாது, பனை மரங்களையும், பனை உணவுகளையும் புலிகள் அரணாக வைத்து இருந்தனர், அதனாலேயே பெருமளவு பனை அங்கு வெட்டப்பட்டது. ஈழ போர் முடிந்து 10ஆண்டு முடிவுற்ற சூழலில் இன்றும் யாழ்பாணம், மன்னார் பகுதிகளில் பனைமரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.

 

      இரண்டாவது காரணம் முக்கியமானது, உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழல் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியாவைத் தங்களின் நுகர்வுத் தளமாக மாற்றின. பின்னர் நம்முடைய மரபு வழி உணவுகள் மீதான மக்களின் பார்வையை உளவியலாக நம்மிடம் இருந்து ஒதுக்கி வைத்து மேற்கத்திய கலாச்சார உணவுகளைத் திணித்தனர். நமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நம்மோடு இருந்த பனை உணவுகள் நம் உணவுத் தட்டுகளில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது. ஒரு தலைமுறை மக்கள் முற்றிலுமாகப் பனை உணவுகளை மறந்தும் போயினர். என் அம்மா, அப்பா தலைமுறைகளில் பனை குறித்த அறிவு சேர்மானத்தை எங்களுக்கு கடத்தாமல் விட்டதன் நேரடி விளைவு தான் இன்று விவசாய நிலங்களிலும், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களிலும் ஏரிக் கரைகளிலும் அரணாக இருந்த பனை மரங்களை தேவையற்ற ஒன்று எனக் கருதி மக்கள் அவைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றனர். இயற்கையின் படைப்பில் எந்த ஒரு பொருளும் தேவையில்லாமல் படைக்கப்படுவது இல்லை என்ற புரிதலை மக்களுக்கு நாம் மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியத்தைக் காலம் நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.

 

      ஒரு பொருளின் பயன்பாட்டைப் பொருத்தே அந்தப் பொருளுக்கான மதிப்பு கூடிக்கொண்டே போகும். சுதந்திர இந்தியாவுக்கு முன் திருவிதாங்கூர் ஆட்சியில் பனை ஏறக்கூடிய நாடார் இன மக்கள் மீது, ஏட்டு வரி, ஓலை வரி, தாலவரி, கருப்புக்கட்டி வரி, நுங்கு வரி, பனங்கிழங்கு வரி, நீற்று வரி என பல்வேறு வரிகளைப் போட்டுள்ளனர். பல்வேறு பயன்பாடுகளின் அடிப்படையில் கற்பகத்தரு என்று பனையைக் குறிப்பிடுவர் . ஆனால் திருவிதாங்கூர் ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் பல்வேறு வரிகள் வாயிலாக வருவாய் வழங்கும் கற்பகத் தருவாகப் பனை மரம் இருந்துள்ளது .

 

      இந்தியாவில் கடந்த 200 ஆண்டுகளாக பனை மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டதன் காரணமாக இன்று பனையின் தாய் நிலமான தமிழகத்திலேயே கூட பனை அறிதான மரமாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்ச சூழல் வருவது தவிர்க்க இயலாதது. ஒரு பக்கம் தொடர்ந்து பனைமரங்கள் வெட்டுப்பட்டு வந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகப் பனை மரங்களையும், பனையேறிகளையும் பாதுகாக்க வேண்டும் என்கிற குரல்களை நாம் தொடர்ச்சியாகக் கேட்க முடிகிறது.

 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் - கொள்வார் பயன்தெரி வார். என்று வள்ளுவம் குறிப்பிடும் பனை மரம் கொடுக்கும் பலன்கள் எண்ணில் அடங்காதது. பனையின் பலன் குறித்த ஆய்வுகளும் பல ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள. 18ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெர்கூசன் என்ற ஆங்கிலேய மருத்துவர் யாழ்பாணத்தில் பணி செய்யும் போது அங்கு இருந்த பனைகளை ஆய்வு செய்து பனையில் 801வகையான பனைபடு பொருட்கள் இருப்பதாக அவர் தம் "The Palmyra Palm" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பனைமரமே பனைமரமே, பனைமரம் போன்ற நூல்களும் பனை குறித்த செரிவான தகவல்களை நமக்கு வழங்குகின்றன.

 

      பனையின் பயன்களை நாம் சுறுக்கமாகப் பார்ப்போம்.

 

     சில ஆண்டுக்கு முன் தமிழக டெல்டா பகுதிகளை நிலைகுலைய வைத்த கஜா புயலின் தாக்கம் நம் நினைவுகளில் இருந்து மறைந்து இருக்காது. புயலின் போது டெல்டா மாவட்டங்களில் இருந்த லட்ச கணக்கான தென்னை மரங்கள் வேரோடு பிடிங்கி வீசப்பட்டது. ஆனால் புயல் பாதிப்பிலும் அங்கு நிலையாக இருந்தது பனை போன்ற உறுதியான வேர் அமைப்பைக் கொண்ட இயல்பான மரங்கள்தான். உண்மையில் அந்தப் புயல் நமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றது. இந்த மண்ணின் மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும், தேவையையும்.

 

     கடற்கரை பகுதிகளில் மணல் அரிப்பைத் தடுக்கவும், புயல் பாதிப்பில் இருந்து மக்களைபாதுகாக்கவும், கடல் நீர் நிலத்தடி நீரோடு கலந்துவிடாமல் இருக்க பனையின் வேர்கள் மண்ணிற்குள் ஒரு தடுப்பு அரணாக வேலை செய்கிறது.

 

     வருடத்தின் பெரும்பான்மையான நாட்கள் வெயிலில் இருக்கும் நம் நிலத்திற்கு ஏற்ற உணவுகள் பனை போன்ற இயல் தாவரங்களின் உணவுகளே. கோடை காலத்தின் போது நம் உடலைக் குளிர்விக்க கள்ளும், பதனீரும், நுங்கும் கொடுக்கிறது. நுங்கு சாற்றை உடலில் தேய்த்துக் கொண்டால் வெயிலால் ஏற்படும் சரும நோய்கள் தடுக்கப்படுகிறது. தோலோடு நுங்கைச் சாப்பிடும் போது சீதைகழிதல் நீங்குகிறது. வயிற்று புண் ஆரவும், உடலிற்குக் குளிர்ச்சியையுமாகப் பதனீர், கள்ளு கொடுக்கிறது. பதனீர் சாறை எடுத்துக் காய்ச்சி கருப்பட்டியாக மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்யலாம்.

 

     கோடை முடிந்து மழைப்பருவம் ஆரம்பிக்கும் போது நமக்குச் சத்துக்கள் நிறைந்த பனம் பழம் கொடுக்கிறது. அந்தப் பனம் பழங்களை மண்ணில் ஊன்றினால் சில மாதங்களில் நமக்குப் பனங்கிழங்கு கிடைக்கிறது. நார் சத்துக்கள் அதிகம் உள்ள பனங்கிழங்கைகாயவைத்து அரைத்து பல்வேறு வகைகளில் ஆண்டு முழுவதும் நாம் பயன்படுத்தலாம். பனங்கிழங்கைக் காய வைத்து மாவாக அரைத்து அதை கூழ் செய்வர் ஈழ மக்களின் மிக முக்கியமான உணவு பனங்கிழங்கு ஒடில் மா.

 

      இப்படிப் பனை தரும் பலன்கள் ஏராளம் உண்டு. மக்கள் இனியாவது பனையைத் தேவையற்ற மரம் என்று ஒதுக்கி வைக்கும் சிந்தனைப் போக்கில் இருந்து மாற வேண்டுகிறேன். பனைபடு பொருட்களில் ஏதேனும் ஒன்றை நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்துவோம் என்ற உறுதியை ஏற்போம். குறிப்பாகப் பனையேறிகளை அடையாளம் கண்டு நேரடியாக அவர்களிடம் இருந்தே பனைபடு பொருட்களை நாம் வாங்க வேண்டும். பனையேறிகள் பாதுகாக்கப்பட்டால் தான் பனை மரமும் பாதுகாக்காப்படும்.

 

     மகாத்மா காந்தி சொன்னது போல் நாம் ஒவ்வொரு கிராமத்திலும் பனங்கருப்பட்டியை உற்பத்தி செய்திட வேண்டும். அதன் ஊடாகவே நம்முடைய சுதேசி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றார் மகாத்மா.

 

நம் வரலாற்றையும் நம் கிணறுகளையும் வற்றாமல் பாதுகாத்த பயன்மிகு மரமான பனைமரம் உண்மையில் நமக்கான அடையாளம் தான்.

 

பனை சதிஷ்

9994969088

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்