ஜவ்வாதுமலை கானுலா - 12 (பகுதி 3)


#ஜவ்வாதுமலை
#கிழக்குதொடர்ச்சிமலை
#கர்நாடககிரி_கோட்டை

பகுதி 3:- மீண்டும் பழங்குடி குட்டி அண்ணா

     முக்குத்தி கல் மலையை கடந்த பின் அடுத்து தெரியும் அந்த நெட்டு மலையை கடந்துவிட்டால் பிறகு கோட்டை வரை சமதளமான பாதை தான் என்றார் சங்கர். எனக்கும் ஒரு கட்டத்தில் எப்போ தான் நெங்குத்தான மலையேற்றம் இல்லாத சமதள மலை பாதை வருமோ என்றாயிற்று. 

     சங்கர் கை காட்டிய அந்த நெட்டுமலையை அடைந்த பின் வந்த வழியை திரும்பி பார்த்த போது மூக்குத்திகல் மலை தூரத்தில் இருந்து. அடிக்கடி நாய் குரைக்கும் சத்தமும், யாரோ விசில் அடித்து தன் இருப்பதை சொல்லுகிற சத்தமும் நாங்கள் முக்குத்திகல் மலையில் இருக்கும் போதே கேட்டது. சங்கரிடம் விசாரித்த போது சிரித்துக் கொண்டே சொன்னார் குட்டி அண்ணா மேல வந்துட்டாங்க என்று. நாங்கள் நான்கு மணி நேரமாக மலை ஏறிக்கொண்டு இருக்கிறோம், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தால் தான் கோட்டைக்கு சென்று சேர முடியும். ஆனால் குட்டி அண்ணாவுக்கு நாங்கள் அழைப்பு கொடுத்து பேசும் போதே மணி மதியம் 12 ஆகியிருந்தது, கிட்ட தட்ட ஒன்னரை மணி நேரத்தில் அவர் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டார் அதுவும் சமையல் பாத்திரங்களையும், பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
     மலை மக்களின் உறுதியை கொல்லிமலை காட்டுக்குள் சென்று வந்த  பிறகு இப்போது மீண்டும் உணர்கிறேன்.

     நாய்களின் குரைப்பு சத்தம் வெகு அருகில் கேட்டது, சங்கர் என்னை திரும்பி பார்த்து அங்க பாருங்க என்றார், கோட்டையின் மதில் சுவரின் மீது படுத்துக் கொண்டு குட்டி அண்ணா எங்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். நானும் சங்கரும் குட்டி அண்ணாவிடம் பேசிக் கொண்டு இருந்த போது குழுவினர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர்.

கர்நாடககிரி கோட்டை:-
     கோட்டையின் வெளிப்புற மதில் சுவர்களை பார்த்ததும் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி, சுற்று சுவர்கள் முழுமையாக சிதிலமடைந்து இருந்தது, ஆனாலும் அது மலையின் இரு பக்கமும் தொடர்ச்சியாக சென்றது. மரங்களின் அடர்த்தியால் கோட்டையின் சுற்று சுவர்கள் எவ்வளவு தொலைவுக்கு செல்கிறது என்பதை காணமுடியவில்லை. கோட்டையின் வாயிலை கடந்து உள் நுழைந்தோம், இதற்கு முன் இங்கு கோட்டை தான் இருந்ததற்கான அடையாளம் அந்த சுற்று சுவர்கள் தான். வெளிப்புற மதிலை தாண்டி வந்தால் ஒரு பெரிய பரப்பில் மைதானம் இருந்துள்ளது ஆனால் இப்போது அது மரங்கள் அடர்ந்த காடாக காட்சி அளிக்கிறது.

     அந்த மைதானத்தில் இருக்கும் மூங்கில் மரங்களில் இருந்து குறுத்துக்களை சங்கர் வெட்டி எடுத்துவந்தார். குட்டி அண்ணாவிடம் கேட்ட போது உங்களுக்கு இன்றைய இரவு உணவு மூங்கில் குறுத்து கூட்டு தான் என்றார். இதுவரைக்கும் இப்படியான உணவை நான் சாப்பிட்டதே இல்லை, அவர் சொன்னதும் அது பற்றி ஆர்வம் தொடங்கிவிட்டது.

கோட்டையின் பள்ளி:-
     மைதானதில் இருந்த காட்டை கடந்து இடது பக்கமாக சென்றால் அழகிய வேலைப்பாடுகளோடு உள்ள பள்ளியை காணலாம். மலைக்கு மேல் இவ்வளவு பெரிய கோட்டை இருப்பதே பெரிய அதிசயம் அதிலும் இங்கு வாழ்ந்த குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை கட்டி பாடசாலை நடத்தியுள்ளனர் என்பது பெரும் ஆச்சரியமாக தான் இருந்தது.
     பள்ளியின் மேற்கூரைகள் முற்றிலும் சிதிலமடைந்து இருந்தது, மரங்களின் வேர்கள் பள்ளியின் சுற்று சுவர்களில் அதிகமாக ஊடுருவி இருந்தது. ஆனால் பெரிய பெரிய தூண்கள், வட்ட வடிவிலான மாணவர்கள் அமரும் அறைகள், என அனைத்தும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளோடு இருந்தது. அந்த பள்ளிக்கு வருவதற்கும் வெளியே செல்வதற்கும் என இரண்டு வாசல்கள் இருக்கிறது. மேற்கூரை சிதிலமடைந்தாலும் பள்ளியின் கருங்கல் சுற்று சுவர்கள் இன்னமும் உறுதியாக உள்ளது.

ராணி குளம்:-
     சிதிலமடைந்த அந்த பள்ளியை கடந்து மேட்டுப்பகுதியில் ஏறி கடந்து போனால் அடுத்து, ராணி குளம் என்ற இடம் வருகிறது. கோட்டைக்குள் பல இடங்களில் குளங்கள் செயற்கையாக ஏற்படுத்தி இருக்கின்றனர். அதில் ஓரளவுக்கு பெரியதாக உள்ள இரு குளங்களை ராஜ குளம், ராணி குளம் என்றழைக்கின்றனர். மலைக்கு மேல் விளிம்பின் ஓரம் பெரும் பாறைகளை அழகாக வெட்டி எடுத்து எப்போதும் நீர் தேங்கும் படியான குளமாக அமைத்து இருந்தனர்.

     ராணி குளத்திற்கு அடுத்து முன்னேறி சென்றால் இடது பக்கம் கோட்டையின் நல்ல விசாலமான மதில் சுவர்களை காணமுடிகிறது. நாம் முதலில் பார்த்த மதில் சுவர் வெளிப்புற சுவர், இப்போது பார்க்கும் மதில் இரண்டாம் அடுக்கில் உள்ளது, இந்த மதில் சுவர் முதல் சுவற்றை விடவும் அகலமாக, நிறைய வேலைப்பாடுகளோடு இருந்தது. ஓரிடத்தில் யாரே மதில் சுவரை உடைத்து எடுத்தார் போல் இருந்தது, குட்டி அண்ணாவிடம் விசாரித்ததில் அது புதையல் கிடைக்கும் என யாரோ தோண்டியது என கூறினார், இதே மேல் பல இடங்களில் புதையல் வேட்டைக்காக சுற்று சுவர்களையும் சில கட்டிடங்களையும் உடைத்து உள்ளனர்.

     இரண்டாம் அடுக்கில் இருக்கும் உடைக்கப்பட்ட அந்த மதில் சுவற்றின் ஓரம் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை வரை பரந்துவிரிந்த காட்சி காண அழகாக இருக்கும்.

கோட்டை:-
     ஒவ்வொரு பகுதியாக முன்னேறி கடைசியில் நாங்கள் கோட்டையின் மையப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கு தான் இரவு தங்க வேண்டும் என்றார் குட்டி. மாலை நெருங்கி கொண்ண்டிருந்தது, குட்டியும் சங்கரும் உடனே அடுப்பு மூட்டி சமையலுக்காக ஆயுத்தமானார்கள். எனக்கோ இரவு பணி முடித்து பகலில் தூங்காமல், மதியம் உணவு எடுக்காமல்  மலையேறியதால் கடுமையான தலைவலி. அதனால் சமையல் செய்யும் இடத்திற்கு அருகே இருந்த பாறையில் படுத்துவிட்டேன். உடன் வந்த நண்பர்கள் கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு வந்தனர். 

     நான் தூக்கத்தில் இருந்து எழுகையில் நேரம் மாலை 6 தான் கடந்து இருந்தது. ஆனால் அதற்குள் மலை பள்ளத்தாக்கு கிராமங்களில் (நாம் முதலில் சொன்ன பெரிய ஏரி, ஆத்துவாம்பாடி கிராமங்கள்) இருள் சூழ தொடங்கிவிட்டது. இரவு நெருங்க நெருங்க மலையில் குளிர் அதிகமாகி கொண்டே இருந்தது, மலையில் கடுமையான குளிர் இருக்கும் கோடை காலத்தில் கூட மேல குளிர் அதிகமாகவும் தங்குவற்கு சிரமமாகவும் இருக்கும். இப்போது மழை காலம் என்பதால் நிச்சயமாக மலையில் குளிர் கடுமையாக இருக்கும் என குட்டி அண்ணா மலையேறும் போதே எச்சரிக்கையாக சொன்னதை அலட்சியபடுத்தியது எவ்வளவு பெரிய தவறேன உணர்ந்தேன்.
    சமையலுக்காக மூட்டப்பட்ட நெருப்பு ஓரளவுக்கு இதமாக இருந்தது. காற்றின் வேகமும் குளிரும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் பாறையின் ஓரம் இருந்த மரங்களின் மறைவு காற்றின் வேகத்தை மட்டுபடுத்தும் இடத்தில் சிறிது நேரம் படுத்துக் கொண்டேன்.

     கோட்டையை சுற்றிவிட்டு குழுவினர் நெருப்பின் அணைப்பிற்கு வந்தனர். அப்போது அன்பு, ஓரிடத்தில் பெரும் அறை போன்ற ஒன்று இருப்பதை பார்த்ததை சொன்னார். ஆமாம் அது தான் மருந்து கூடாரம் எனவும் இரவு குளிர் அதிகமாக இருந்தால் அங்கு சென்று தான் தூங்க வேண்டும் என்றார்.

     ஒரு வழியாக மூங்கில் குறுத்து கூட்டும், சாப்பாடும் தயாரானது. அருகே இருந்த பாறையின் மீது சாப்பாட்டை கொட்டி வைத்தனர். சங்கர் பறித்துக்கொண்டு வந்தது செப்பங்கிழங்கு இலை என நினைக்கிறேன் சரியாக நினைவில்லை, எல்லாருக்கும் அந்த இலையிலேயே சோறு பரிமாரப்பட்டது. மூங்கில் குறுத்து கூட்டில் காரம் தூக்கலாக இருந்தாலும் கடும் பசியால் அனைவரும் நிறையவே சாப்பிட்டு முடித்தோம்.
      மணி இரவு 11யை நெருங்கி இருக்கும், அனைவரும் நெருப்பின் அருகே தான் படுத்துக்கொண்டு இருந்தோம் ஆனால் கடும் குளிரை தாங்க முடியாததால், அருகே இருந்த வெடிமருந்து கிடங்கு எனப்படும் அறைக்கு சென்றோம். வெளியில் இருக்கும் கடுமையான காற்றோ, குளிரோ இந்த அறையில் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் சுத்தம் செய்துவிட்டு பக்கத்தில் இருந்த மரங்களில் பச்சை இலைகளை பறித்து தரைக்கு விரிப்பாக போர்த்தி அதன் மீது அனைவரும் படுத்துக்கொண்டோம்.

     கடும் குளிரால் காலையில் 6மணிக்கே அனைவரும் எழுந்துவிட்டோம். இரவு படுத்து இருந்த அந்த பாறையை வந்து பார்த்த போது முழுமையாக நனைந்து போய் நீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது. கோட்டையின் உயரமான பகுதியாக ஒரு கண்காணிப்பு பகுதியும், அதற்கடுத்து வெடிமருந்து கிடங்கும் இருந்தது.

      எதிரிகள் வருவதை கண்காணிக்க கோட்டையின் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பர், அதே போன்ற கட்டிட அமைப்பு இன்றும் இந்த கோட்டையில் காண முடிகிறது. பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கோட்டையில் பாதிப்படையாத ஓரே இடமாக அந்த வெடிமருந்து கிடங்கு இருக்கிறது. இது தானிய கிடங்காக இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் சில இடங்களில் இரும்பு தாது சகடு கிடப்பதை பார்த்தால் நிச்சயம் வெடிமருந்து இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தலாம்.

     கண்காணிப்பு பகுதியில் ஏறி நின்று பார்த்த போது நம்மை கீழே தள்ளிவிடும் அளவிற்கு காற்றின் வேகம் கடுமையாக இருந்தது. சூரிய உதயத்திற்கு முன் கீழ் இறங்கிட தொடங்கினோம். முடிந்தளவு அனைத்தையும் பதிவு செய்து கொண்டு கோட்டையை விட்டு இறங்கினோம்.

மலை இறக்கம்:-
     வந்த வழியே இறங்கினால் நேரம் கூடுதலாக ஆகும், எனவே செங்குதாக இறங்கும் குறுக்கு வழியில் சீக்கிரமாக கீழ் இறங்கிவிடலாம் என குட்டி அண்ணா சொன்னதும், அனைவருக்கும் விரைவாக வீடு போய் சேர்ந்தா போதும் என்ற நிலையில் இருந்ததால் எல்லோரும் குட்டி அண்ணா பேச்சிக்கு மறுப்பு சொல்லாமல் அவரை பின் தொடர்ந்தோம்.

     முதலில் பார்த்த ராணி குளம், பள்ளி அவற்றை கடந்து ராஜா குளம் என்ற பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஆரம்பகட்ட மலை இறக்கம் எளிமையாக தான் இருந்தது. ஆனால் மணி இப்பவே 8ஆகி விட்டது. மலை இறக்கும் பாதைகள் அற்ற முட்புதர்களை கிழித்து கொண்டு கீழ் இறங்குவதாக இருந்தது.

ஜவ்வாது மலை காட்டு எருமை:-

     ஓர் இடத்தில் நாயின் குரைப்பு அதிகமாக இருந்தது. அங்க நிச்சயம் மாடு தான் குறுக்கே இருக்கு போல அதான் நாய் குரைக்குதுன்னு குட்டி அண்ணா சொன்னதும் ஆர்வம் தாளாமல் மலை சரிவுகளில் ஓடி சென்று பார்த்தேன். மிக பிரம்மாண்டமான உடல் தேகத்தை கொண்ட உயிரினம் மூங்கில் புதர்களுக்கிடையே அசைந்து கொண்டிருந்தது. உடன் வந்தவர்களின் பேச்சு சத்தத்தாலும் நாயின் தொடர் குரைப்பாலும் அந்த பிரம்மாண்ட உயிரினம் மலை சரிவுகளில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓடி மறைந்து விட்டது.

     ஆம் ஜவ்வாதுமலை காட்டு எருமையை பார்த்திட வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது.

     அடர்ந்த காட்டினை உட்புகுந்து வெளியேருவது மிகக்கடுமையாக இருந்தது. இந்த காட்டில் குட்டி மற்றும் சங்கரின் காலடி தடம் படாத இடமே இல்லை ஆனால் ஒரு கட்டத்தில் குட்டி அண்ணா கூட நாம் செல்ல வேண்டிய பாதையை தவற விட்டிருந்தார். பல மணி நேர கழித்து தூரத்தில் தண்ணிர் அருவியாய் கொட்டும் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. 
     அந்த அருவிக்கு சென்றுவிட்டால் நாம் மலையை விட்டு கீழ் இறங்கிவிடலாம் அதன் பின் சமதள தரைக்காடு தான் என்றார் குட்டி. மிக சிறிய அளவே தண்ணீர் வரும் அந்த காட்டு ஓடையின் கரையில் அமர்ந்து ஓய்வெடுத்தோம். நேற்று மீதமான சோற்றையும் மூங்கில் குருத்து கூட்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி கஞ்சி செய்து அனைவருக்கும் கொடுத்தார் சங்கர். ஓரளவு பசி தீர்ந்த பிறகு நடக்கத் தொடங்கினோம் கொஞ்ச தூரத்தில் தரைக்காடு ஆரம்பம் ஆனது. மலையை விட்டு முற்றிலும் கீழ் இறங்கிவிட்டோம் என சங்கர் சொன்னதும் தான் எல்லோருக்கும் மன நிறைவாக இருந்தது. ஒரு மணி நேர நடையில் நாங்கள் பயணத்தை ஆரம்பித்த சங்கர் வீட்டை வந்தடைந்தோம். காட்டு வழியில் வரும்போதே குட்டி அண்ணா அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் பிரியாவிடை கொடுத்து சென்றார்.

     இது வரை இருந்த என் காட்டு பயணங்களில் கற்றல் மிகுந்த, ஆச்சரியம் மிகுந்த, மகிழ்ச்சி நிறைந்த இந்த காட்டு பயணத்தின் அனுபவங்கள் என் நினைவுகளில் இருந்து அவ்வளவு எளிதாக சென்றுவிடாது. உண்மையில் ஜவ்வாதுமலை மலையாளிகள் காடுகள் குறித்தும், காட்டில் வாழ்வது குறித்தும் அதீதமான அறிவைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உடன் பயணித்ததில் ஓரளவுக்கு அவற்றை உணர்ந்து கொள்ள முடிந்ததே இந்த பயணத்தை எனக்கு நிறைவான பயணமாக கொடுத்துவிட்டது.

அடுத்து மற்றொரு காட்டில் சந்திப்போம்.
29.08.2021

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்