ஜவ்வாதுமலை கானுலா - 12


#ஜவ்வாதுமலை
#கிழக்குதொடர்ச்சிமலை
#கர்நாடககிரி_கோட்டை

பகுதி 1 : முதல் நாள் மலையேற்றம்

    ஜவ்வாதுமலையின் 3000 அடி உயரத்தில் கிட்டதட்ட 15கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மிக பிரம்மாண்டமான கோட்டையை தேடிய பயணம்.

     ஓராண்டுக்கு முன் ஜவ்வாதுமலையின் படைவீடு வனப்பகுதிக்கு மேற்கே 15கி.மீ தொலைவில் இருக்கும் கோட்டைமலை கோவிலுக்கு சென்ற போது அறிமுகமானார் நண்பர் Anbarasan நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து ஊர் என பேசும்போது தெரிந்தது, அன்றில் இருந்து ஜவ்வாதுமலை அல்லது பெரும்பாலும் எந்த மலைபயணமாக இருந்தாலும் அவர் எனக்கும் நான் அவருக்கும் தகவலை முன்கூட்டியே சொல்லி உடன் செல்வோம்.

     கடந்த ஆண்டு எங்கள் ஊருக்கு வடக்கே 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூசிமலைகுப்பம் காட்டில் உள்ள சமணர் கற்படுககைகளை பார்க்க ஒன்றாக சென்றிருந்தோம், அதன் பின் தொடர் வேலைகளால் இருவரும் ஒருங்கே சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை (28.08.21) அவரின் பயண நண்பர்களோடு ஜவ்வாதுமலையில் இருக்கும் ஒரு பழங்கால கோட்டையை பார்க்க போகிறோம் நேரம் இருந்தால் உடன் இணைந்து கொள்ளுங்க என சொல்லிருந்தார். நானும் வழக்கம் போல் வெள்ளி இரவு பணி முடித்தவுடன் சனிக்கிழமை காலையில் கிளம்பிடலாம் என உறுதிபடுத்தி இருந்தேன்.

     சனிக்கிழமை காலை ஆறு மணிக்கே எல்லோரும் எங்கள் ஊர் நெடுஞ்சாலை சந்திப்பில் ஒன்று கூடி, மலையேற்றத்திற்கு தேவையான உணவுகளை மட்டும் வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

    அந்த மலைக்கோட்டை எந்த ஊரில் இருக்கிறது, அது எப்படி இருக்கும், எந்த வழியில் எவ்வளவு தொலைவுக்கு மலை ஏற வேண்டும், ஒரே நாளில் மலை ஏறி திரும்பிட முடியுமா என எந்த கேள்விக்கும் எங்களிடம் பதில் இல்லை ஏனெனில் நாங்கள் யாரும் இதுவரை அந்த மலை கோட்டைக்கு சென்றது இல்லை. எங்களுக்கு தெரிந்த ஒரே தகவல் போளூர் அடுத்த பொத்தரை - அத்திமுர் என்ற ஊர்களின் அருகே உள்ள ஏதோவொரு மலையில் அந்த கோட்டை உள்ளது என்பது மட்டும் தான்.
பயணம் தொடங்கியது:-

     முன்னிரவு பெய்த மழையால் வானில் சூரிய கதிர்கள் கருமேகத்தை ஊடுருவி மண்ணை சேர முடியாமல் இருந்தது, மெல்ல வீசிய காற்றும் குளிர்ந்தே இருந்தது.

     ஆரணியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் வடமாதிமங்கலம் சந்திப்பில் இருந்து சில மேற்கே கிலோமீட்டர் பயணத்தில் கேளூர் என்ற கிராமத்தில் காலை உணவை முடித்துக் கொண்டோம், உடன் வந்த ஆசிரியர் ஜோதியின் பள்ளி இங்கு தான் இருப்பதாக சொன்னார், நண்பர் ராஜசேகர் என்பவரின் பூர்விக ஊரும் பக்கத்தில் தான், அந்த கோட்டை இருக்கும் மலை நண்பர் ராஜசேகரின் தாத்தா , பாட்டி இருக்கும் ஊரான பெரிய ஏரி என்ற கிராமத்திற்கு அருகில் தான் இருக்கிறது என்பதை நாங்கள் காலை உணவு சாப்பிட்ட கடையில் விசாரித்து தெரிந்து கொண்டோம்.

     காலை உணவு முடித்தவுடன் ஆத்துவாம்பாடியை கடந்து பெரிய ஏரி கிராமத்தில் இருக்கும் நண்பரின் பாட்டி விட்டிற்கு வந்து சேர்ந்து அவர்களிடம் கோட்டைக்கு போகும் வழியை விசாரித்ததும், அவர்கள் முதலில் சொன்ன பதில் அந்த கோட்டை இருக்கும் மலையை உங்களால் ஏற முடியாது நீங்க திரும்ப போய்டுங்க என்பது தான். இதை கேட்ட எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி, ஆனாலும் உடன் இருந்த சிலர் மலையாத்துகாரங்களை (மலையாளி பழங்குடிகள்) கூட்டிட்டு போங்கன்னு சொல்லிருந்தாங்க, அங்கிருந்து கிளம்பும் முன் கொய்யா பழங்களையும், புதிதாக கன்று ஈன்ற மாட்டின் சீம்பாலையும் கொடுத்து இருந்தாங்க, எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்து முடிந்தளவு கொய்யா பழங்களை எடுத்துக் கொண்டு பெரியஏரி கிராத்தில் காடு முடியும் இடம் வரைக்கும் வந்து சேர்ந்தோம்.

     எங்கள் எதிரே U வடிவில் சுற்றிலும் மலையும் காடும் மட்டுமே இருந்தது, அரிதாக அங்காங்கே சில வீடுகள், காட்டுபாதை கடைசியாக முடிந்த இடத்தில் இருந்த வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தவரிடம் (பெயர்: குட்டி, மலையாளி பழங்குடி) கோட்டைக்கு எப்படி போவது என விசாரித்து கொண்டிருந்தேன். புன்சிரிப்போடு வெளிய வந்து அவர் வீட்டின் பின்பக்கமாக இருந்த காட்டுக்குள் சிறிது தூரம் அழைத்து சென்று எதிரே தெரிந்த ஒரு பெரும் மலையை காண்பித்து தூரத்தில் இருக்கும் உச்சியில் தான் கோட்டை இருப்பதாக சொன்னார். அந்த கோட்டை இருக்கும் மலைக்கு ஏற நேர் செங்குத்தாக 2மணி நேரத்தில் செல்ல ஒரு வழியும், ஓரளவுக்கு நடக்கும் படியாக சுற்றி 3மணி நேரத்தில் மேலே ஏறும் ஒரு வழியும் இருப்பதாக சொன்னார்.

     அவர் சொல்லி முடிக்கும் முன் முடிவு செய்துவிட்டேன், மிக நிச்சயமாக ஊர் மக்கள் துணையில்லாமல் தனியே காட்டிற்குள் சென்று மலை ஏறுவது இயலாது என்று. ஏனெனில் அவர் கூறிய வழிகள் இரண்டும் அடர்ந்த காட்டுப்பாதை அதிலும் கடந்த மழையில் பாதைகள் தெரியாதவாரு புற்கள் ஆள் உயரம் வளர்ந்து இருந்தது. அவரிடம் கோட்டை அழைத்து செல்ல கேட்ட போது தனக்கு வேலையிருப்பதால் இப்போது தன்னால் வர இயலாது ஆனால் துணைக்கு செல்ல இன்னொவருக்கு (பெயர்: சங்கர், மலையாளி பழங்குடி) அழைப்பு கொடுத்து பேசி எங்களை மலைக்கு கூட்டிச்செல்ல ஏற்பாடு செய்திருந்தார். அவரை அழைத்துக்கொண்டு எல்லாரும் மலைக்கு கூட்டிச் செல்பவரின் வீட்டுக்கு சென்றோம்.(போகும் முன் குட்டியின் குழந்தைக்கு தென்னை ஓலையில் கிரீடம் செய்து கொடுத்தேன், அதை தலையில் வைத்ததும் அவளது முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி)
     குட்டி மற்றும் சங்கர் போன்ற 50க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் குடும்பமாக மலையில் இருந்து (பதிமலை, கள்ளாத்தூர் பட்டறைக்காடு மலை கிராமங்களில் இருந்து) சமவெளி பகுதியில் குடியேறி இருந்தனர், பெரும்பாலும் அவர்கள் சொன்ன பொதுவான காரணம் தம் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைப்பதாகவே இருந்தது. (அவர்கள் தங்கிருந்த காட்டுப்பகுதியில் 100ஏக்கர் நிலத்தை சுற்றி வெளி போட்டு வைத்து இருந்தனர் அது மன்னார்குடி பெண் அரசியல் பிரமுகருக்கு சொந்தமானது என சொல்லிருந்தார் சங்கர்)

மலையேற்றம் தொடங்கியது:-

      பழங்குடி நண்பர் குட்டி சொன்ன சுற்றிக்கொண்டு செல்லும் இரண்டாம் வழியில் மலை ஏற முடிவு செய்து, நடக்க தொடங்கினோம். சில தூரம் தரைகாட்டில் நடை பயணம் முடிந்து, முழுமையான மலையேற்றம் ஆரம்பம் ஆனது.

      பழங்குடி நண்பர் சங்கருடன் எல்லாரும் மலையேற தொடங்கும் போது மணி காலை 10ஆகியிருந்தது. குட்டியும் எங்களுடன் கொஞ்ச தூரம் வந்து எங்களை வழியனுப்பினார்.

28.08.2021

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்