ஜவ்வாது மலை கானுலா - 8

ஜவ்வாதுமலை காட்டுப்பயணம் அண்ணனோடு

     நான் கொல்லிமலைக்கு பயணம் செல்லும் போதே அரிதுல் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது, டேய் தம்பி அண்ணாக்கும் உங்கூட காட்டுக்கு போகனுன்னு ஆசையா இருக்கு கூட்டிட்டு போடான்னு சொன்னாங்க. சரிங்க அண்ணா நான் கொல்லிமலை பயணம் போய்ட்டு வந்ததும் ஜவ்வாது மலைக்கு போலாம் - ன்னு சொல்லிருந்தேன்.

     அண்ணா சொந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகில் கல்லூரி படித்தது சென்னையில் தான் ஆனாலும் சில காலம் மலேசியாவிலும், துபாயிலும் இருந்ததால் வடமாவட்ட ஊர்கள் அவருக்கு அவ்வளவு பரிட்சயம் கிடையாது. கொல்லிமலை பயணம் முடிச்சி ஊர் திரும்பும் போதே அண்ணாவுக்கு அழைப்பு கொடுத்து திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி, போளூர் வந்துருங்கவும் என சொல்லிட்டு, நானும் கொல்லிமலையில் இருந்து கிளம்பி அன்றே இரவே செங்கம் வந்து சேர்ந்தேன். அவரும் இரவு 11மணி திருச்சியில், வேலூருக்கான பேருந்தில் ஏறிவிட்டதாக சொல்லிருந்தார். 6மணி நேரம் பயணம் என்பதால் அடுத்த நாள் அதிகாலையில் வந்து சேர்ந்துடுவாங்க என்பதால் கொல்லிமலைக்கு என்னோடு வந்த தம்பியின் வீட்டில் (செங்கம்) இரவு தங்கிவிட்டேன்.

     காலை 4 மணிக்கு  அண்ணாகிட்ட இருந்து அழைப்பு தம்பி திருவண்ணாமலை வந்துட்டேன்டா என்றார். அடுத்து அரைமணி நேரத்தில் போளூருக்கு வந்துவிடுவார் என்பதால் நானும் தம்பி வீட்டில் இருந்து இருந்து அதிகாலை  4.20 மணிக்கு கிளம்பி போளூர் வந்து அண்ணாவுக்காக காத்திருந்தேன். நானும் அண்ணனும் கடைசியா சென்ற ஆண்டு அவர் துபாய்க்கு செல்லும் முன் பார்த்தது. ஓர் ஆண்டு கழித்து பார்ப்பதால் எங்களிடம் பேசவும், பகிரவும் நிறைய செய்திகள் இருந்தது. அவரை பார்த்து கட்டி தழுவிக்கொண்டு அங்கயே தேனீர் குடிச்சிட்டு நாட்டு நடப்பு, அரசியல் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். 

     வீட்டில் ஏற்கனவே தகவல் சொல்லி இருந்ததால் காலை உணவு தயாராக இருந்தது. வீட்டுக்கு போனதும் குளித்துவிட்டு, சாப்பிட்டு முடித்து காலை 8.30க்கு மேல் ஜவ்வாதுமலைக்கு கிளம்பினோம்.

    எனக்கோ ஏற்கனவே கொல்லிமலைக்கு வாகனத்தில் சென்று வந்த களைப்பால் உடல் சோர்வாக இருந்தது. ஆனாலும் அண்ணனோடு காட்டுக்கு போகனும்ன்னு ஒரு வருசமா (அதாவது அவர் எனக்கு வேள்பாரி நாவலை அறிமுகம் செய்து வைத்த நாளில் இருந்து) ஆசைபட்டு இப்பதான் போக முடிந்தது.

     அவரை எங்கிருந்து அழைத்து வந்தனோ அதே போளூர் வழியாக ஜமுனாமரத்தூருக்கு மலையில் ஏறி அங்குள்ள பீமன் அருவியில் குளிச்சிட்டு அமிர்தி வழியாக கீழ் இறங்கி ஊர் வந்து சேர்வது தான் திட்டம்.

     காடு ஆரம்பிக்கும் இடம் வரும் போதே அண்ணா பரவசமா இருந்தார், அதற்கு காரணமும் இருந்தது சோழ மண்டலத்தில் பெரிய, நீண்ட மலைகளோ, காடோ இல்லாததால் அவருக்கு இந்த ஜவ்வாது காடு பெரும் வியப்பை கொடுத்தது.

     சமீப காலமாக வாரத்திற்கு ஒரு முறையேனும் நான் இந்த காட்டிற்கு வந்துவிடுவதால் எவ்வித வியப்பும் இன்றி வாகனத்தை விரைவு படுத்தினேன். ஆனால் அண்ணா புதிதாக இந்த காட்டினுல் நுழைந்து இருக்கிறார். பார்க்கும் ஒவ்வொன்றும் அவருக்கு புதிராகவே இருந்தது. மலை பாதை ஆரம்பிச்சதும் அவர் சொன்ன முதல் வார்த்தை "தம்பி நீ நீலனாக என்னை காட்டுக்குள் அழைத்து போடா" (அதாவது வேள்பாரி நாவலில் வரும் நீலன் கதாபாத்திரமாக அவர் என்னை பார்ப்பார்).

     மலை பாதையின் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவை தாண்டியதும் ஒரு பார்வை கோபுரம் வரும் அதற்கு பின்புறம் அண்ணாவை கூட்டி சென்று நாம் வந்த மலை.பாதை இது தான் அண்ணா என அந்த நீண்ட பள்ளத்தாக்கை அவருக்கு காட்டினேன். 

     காடு ஒவ்வொரு இடத்திலும் அவருக்கு பிரம்பிப்பையும் அதிசயத்தையுமே கொடுத்தது. ஒரு காட்டு செடியை காண்பித்து அது நம் சதையில் குத்தினால் என்ன ஆகும் என காட்டும் போதும் சரி, தூரத்தில் தெரிந்த மலை கிராமத்தை காட்டும் போது சரி அவரிடம் இருந்த வந்த எதிர் சொற்கள் அனைத்தும் வேள்பாரி நாவலின் வசனங்கள் தான்.

    அப்போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, ஒரு நாவல் அதிலும் வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களை பற்றிய நாவல் தனிமனித சிந்தனைக்குள் எவ்வளவு தூரம் பயணமாகியுள்ளது. ஏனெனில் (வேள்) பாரி கொண்டாடப்பட வேண்டியவன்.

     மதியம் 12.30மணிக்குள் ஜவ்வாதுமலையின் முக்கிய பகுதியான ஜமுனாமரத்தூர் சென்று சேர்ந்திருப்போம். எப்போதும் போல் கடைவீதிகள் பரப்பாகவே இருந்தது, எப்போதும் போல் அங்குள்ள வானம் மேக மூட்டதோடே இருந்தது. அருகில் உள்ள பீமன் அருவியில் குளித்துவிட்டு சாப்பிடலாம் என சொன்னார். ஜமுனாமரத்தூரில் இருந்து வடமேற்கு திசையில் 3கி.மீ தொலைவில் உள்ள பீமன் அருவி.

     சமீபத்தில் பெய்த மழையால் அருவியில் தண்ணி நிறைய போய்ட்டு இருக்கு ஆனால் வனத்துறை யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் ஒரு இளைஞர் மது போதையில் அந்த அருவியின் விளிம்பு பாறையில் இருந்து சுயம்பி (செல்பி) எடுக்கும் போது கால் தவறி அருவியின் பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார். அதனால் அருவிக்கு கீழ் இறங்க யாரையும் வனத்துறை அனுமதிக்கவில்லை. ஆனாலும் அருவிக்கு மேல்பக்கம் குளிக்க அனுமதித்தனர், அதுவே அண்ணாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

     காட்டுக்குள் இருந்து ஓடிவரும் நீரை மறித்து சிறு தடுப்பணை கட்டி தேக்கி அதில் இருந்து வழியும் நீரே பெரும் பாறைகளை முட்டி மோதி பீமன் அருவில் குதிக்கிறது. அருவியில் குளிப்பது ஒரு சுகம் என்றால் அருவியின் மேற்புறத்தில் குளிப்பது மற்றொரு சுகம். முடிந்தளவு தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டு பசி வந்ததும் அங்கிருந்து கிளம்பி டவுனுக்கு வந்து சேர்ந்த போது மதிய நேரம் 2.30 கடந்து இருந்ததால் சாப்பாடு/பிரியாணி கடைகள் சொர்ப்பமாக தான் இருந்தது.

     ஒரு வழியாக சுமாராக கிடைத்த பிரியாணியை சாப்பிட்ட பின் அங்கிருந்து அமிர்தி வழியாக கீழ் இறங்கி கொண்டிருந்தோம். சொல்லும் வழி முழுமைக்கும் இருந்த மலை கிராமங்கள் பற்றியும் அங்கு விளையும் திணை பயிர்களை பற்றியும் அண்ணனிடம் விளக்கமாக சொல்ல சொல்ல ஒவ்வொன்றையும் மிரட்சியாக கேட்டுக்கொண்டு வந்தாங்க.

     மாலை 5மணிக்கு தான் மலையை விட்டு  கீழ் இறங்கினோம். அந்த மலைகள்  ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு வசீகரத்தை தன்னுள் வைத்திருப்பதை உணர்ந்தேன் அப்ப தான் அண்ணா சொன்னாங்க தம்பி இந்த காடு, கடல், யானை இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பதில்லை பார்த்தியாடா என்றார். ஆம் உண்ணையிலும் உண்மை.

     மலைவிட்டு கீழ் இறங்கி அமிர்தி, கண்ணமங்கலம் வழியாக ஆரணி செல்லும் வழியில் போகும் போது அவ்வழியே இருக்கும் ரெட்டிபாளையம் எனும் சிறு குன்றுக்கு அழைத்து சென்றேன், அங்கிருந்து பார்த்தால் ஜவ்வாதுமலையின் வடகிழக்கு பகுதியில் பாதிக்கும் மேல் நாம் பார்த்து ரசிக்க முடியும்.

     இரவு வீடு வந்து சேரும் வரை என் காதில் தொடர்ச்சியாக கேட்டுட்டு இருந்த இரண்டு வார்தைகள் "தம்பி"... "வேள்பாரி"... இவையே இந்த பயணத்தின் மொத்த அர்த்தத்தையும் சொல்லிவிடும். வீட்டில் எல்லோரிடமும் பலகாலம் பழகிய நபர் பேசிட்டே இருந்தது எல்லோர் மனதிலும் ஒரே நாளில் நிலைத்து நின்று விட்டாங்க.. அது தான் அண்ணன். இரவு ஓய்வெடுத்துட்டு மறுநாளே சென்னைக்கு கிளம்பினாங்க.

     சென்னை கிளம்பும் முன் பனங்கள் எங்க தம்பி கிடைக்கும் உன்னோடு இருந்து குடிக்கனும்ன்னு ஆசையா இருக்கு என கேட்க, வாங்க அண்ணே போவோன்னு நாம் எப்போதும் சென்று கள் குடிக்கும் பொன்னம்பலம் பனங்காட்டுக்கு கூட்டிட்டு போய் கள் குடிச்சோம். அங்கு என் பனையேறி அண்ணன் ராஜிவ்காந்தியை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். முதல் முறையாக பனங்கள் சுவையை அவரின் நா ருசித்தது.

     சென்ற ஆண்டு அவர் துபாய்க்கு போகும் போது முத்ததோடு வழியனுப்பி வைத்தது, இப்பவும் அதே முத்தங்களோடே வழியனுப்பி வைத்தேன்... காடும் அண்ணனும் தொடர்ந்து நமக்கு கற்றுக்கொடுத்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

28.12.20
பனைசதிஷ்

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்