ஒடுக்கப்படும் பனையேறிகள்

தமிழக அரசின் காவல் துறையால் ஒடுக்கப்படும் பனையேறிகளும், பனை தொழிலாளர்களும்

      ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்ற சொல்லை மெய்ப்பிக்கும் படியான சம்பவம் தான் சமீபத்தில் எங்கள் பகுதி பனையேறிகளுக்கு நடந்துள்ளது.

     வட தமிழ்நாட்டில் பனையேறிகள் மிகுதியாக இருக்கும் கிராமம். ஒவ்வொரு ஆண்டும் 'கள்' இறக்க பனையேறிகள் காவல்துறையோடு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. காவல்துறையின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல் 'கள்' இறக்கும் பனையேறிகளின் மீது இன்று வரை விசச்சாராயம் இறக்கியதாகவே பொய் வழக்கு பதியப்படுகிறது. (தமிழகத்தின் பிற பகுதி பனையேறிகளுக்கும் இதே நிலை தான்). அரசு காவல் துறை மூலம் கடுமையான நெருக்கடிகளை கொடுத்தாலும், தங்களின் மரபு வழிப்பட்ட பனை தொழில் அவர்களால் நசுக்கப்பட்டாலும் பனையேறிகள் தத்தம் பனை சார்ந்த பணிகளை (கள் இறக்குவது உட்பட) அறத்தோடே செய்து வருகின்றனர்.

      இவ்வளவு அடக்குமுறைகளுக்கு பின்னும் பறையேறிகள் மீண்டும் மீண்டும் பனைமரம் ஏறி கள் இறக்குவதாலும், பனை தொழிலை தொடர்வதாலும் இம்முறை நூதனமான முறையில் பனை மக்களை காவல் துறை ஒடுக்க ஆரம்பித்துள்ளது.

     பனையேறிகள் வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே பயன்படுத்தும் "பாளை அரிவாள்" (பனைமரத்தில் 'கள்' கிடைக்கும் பருவங்களில் பாளைகளை மட்டும் சீவ பாளை அரிவாள் பயன்படுத்துவர். ஓலை மற்றும் பச்சை மட்டைகளை வெட்ட தனியாக மட்டை அரிவாளை பயன்படுத்துவர்) செய்யும் ஆச்சாரி மக்களை காவல்துறை மிரட்டி சென்றுள்ளது. யாருக்கும் அரிவாள் அடித்துக் கொடுக்க கூடாது எனவும், ஆச்சாரிகள் அரிவாள் அடிக்கும் இடத்தில் CCTV Camera வைத்து யார் யார் அரிவாள் அடிக்க வருகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். காவல் துறையின் மிரட்டல்களால் பயந்து போன ஆச்சாரி மக்கள் இனி யாருக்கும் அரிவாள் அடிப்பதில்லை என சொல்லிவிட்டனர். 

      பனையேறிகளை தடுத்தால் அவர்கள் மீண்டும் பனை தொழிலை செய்யவும், கள் இறக்கவும் செய்கிறார்கள் என்பதால் இம்முறை பனை தொழிலுக்கு உதவும் பிற பனை தொழில் சார்ந்த மக்கள் மீதும் அரசின் காவல் துறை தன் அடக்குமுறைகளை செலுத்த தொடங்கிவிட்டது.

     "பாளை அரிவாள்" இல்லாமல் பனை மரம் ஏறி கள்ளிற்கான பாளையை சீவ முடியாது. இதனால் எதிர் வரும் பனை பருவ காலங்களில் பனைமரமே ஏறமுடியாமல் ஆகிவிடுமோ என அச்சத்தில் அப்பகுதி பனையேறிகள் உள்ளனர்.

காவல்துறையின் இச்செயல்கள் அனைத்தும், தமிழகத்தில் பனையேறிகளையும், பனை தொழிலையும் முற்றிலுமாக அழிக்க நினைப்பதாகவே உள்ளது இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் சில மாதங்கள் பனைமர பாளைகளில் கள் சுரக்க ஆரம்பித்துவிடும் என்பதால் அரசு விரைந்து இந்த சிக்கலுக்கான தீர்வை கொடுக்க வேண்டும்.

     பனையேறிகள் இல்லாமல் பனை தொழிலை மேம்படுத்துவதோ, பனைமரம் வளர்ப்பதோ சாத்தியமே இல்லை என்பதை அரசு உணர்ந்தே ஆக வேண்டும்.

மேலும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில நடவெடிக்கைகளை நாம் கோரிக்கைகளாக முன் வைக்கிறோம்.

* தமிழகத்தில் கள் மீதிருக்கும் தடையை அரசு எவ்வித நிபந்தனையும் இன்றி நீக்க வேண்டும்.

* கள் மீதான முழு உரிமையை பனையேறிகளிடமே வழங்கிட வேண்டும்.

* பனையேறிகளையோ அல்லது பனை தொழில் சார்ந்த இன்ன பிற தொழிலாளர் மக்களையோ அச்சுருத்தும் வகையில் காவல் துறை கொண்டு மிரட்டுவது உடனடியாக நிறுத்த வேண்டும்.
 
பனை சதிஷ்
29.11.21

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்