அழியும் பேருயிர்


அழியும் பேருயுர்

     சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஈஷா யோக மையம் யானைகளின் வழிதடத்தை, வாழ்விடத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசின் முரணான பதில் பெரும் விமர்சனத்துக்கும், பேசு பொருளாகவும் ஆகியிருப்பதை நாம் அறிவோம்.

    கோவை மாவட்ட வன அலுவலர் அளித்த பதிலில், ” ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. வனப் பகுதியில் ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்தால் கட்டிடங்கள் கட்டப்படவில்லை. யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யவில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட யானைகளின் வழித்தடமோ, வாழ்விட பகுதியோ இல்லை எனவும் பதில் கொடுத்துள்ளனர்.

     ஆனால் 17.8.2012-ல் கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு எழுதிய கடிதம் தான் ஈஷா யோக மைத்திற்கு எதிராக எழுதப்பட்ட முதல் புகார். அதில், ஈஷா யோக மையம் அமைந்துள்ள பகுதி யானைகளின் வழித்தட பகுதி என்றும், இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியதால் யானைகள் மனிதர்கள் இடையேயான முரண்பாடு அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மலைசார்ந்த பகுதியில் அமைக்கப்படும் எந்த கட்டிடங்களுக்கும் HACA-விடம் முன் அனுமதி வாங்கிய பிறகே கட்டப்பட வேண்டும். ஈஷாவின் எந்த கட்டிடத்திற்கும் HACA கமிட்டி உடைய எந்த அனுமதியும் வாங்கவில்லை எனவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

     தற்போது வந்துள்ள வனத்துறையின் பதில் ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என அம்மையம் நினைக்க கூடும். ஆனால்  ஆர்.டி.ஐ தகவலில் அறிவிக்கப்பட்ட யானை வழித்தடமோ, வாழ்விடமோ தான் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆகையால் கோவை மண்டலத்திலோ அல்லது ஈஷா யோக மையமோ யானை வழித்தடத்தில் இல்லை என்றாகிடாது. இது குறித்து தெரிந்து கொள்ள நாம் சில தரவுகளை ஆராய வேண்டியுள்ளது.

(இதில் குறிப்பிட்டுள்ள தரவுகள் அனைத்தும் 'தி இந்து' வெளியீட்டில் கா.சு.வேலாயுதன் எழுதிய "யானைகளின் வருகை" நூலில் இருந்து கிடைக்கப்பெற்றவை)

HACA அதாவது Hill Area Conservation Authority மலை பகுதிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பணிகள் குறித்தும், கோவை மண்டலத்தில் யானைகளின் வழித்தட பகுதி குறித்தும் அவ்வழித்தடங்களில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள் குறித்தும் விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் [ Hill Area Conservation Authority ( HACA ) ] G.O.Ms. எண் .44 , திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ( TCil ) நாள் 22.4.1990 இன் படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழக அரசினால் குறிப்பிட்ட பணியை ( Ad - hoc Authority ) மட்டும் தொடர அமைக்கப்பட்டதே தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் ஆகும் . இதில் பல்வேறு அரசுத் துறையின் செயலர்கள் ( ஐஏஎஸ் அதிகாரிகள் ) உறுப்பினராக்கப்பட்டனர். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலர், தலைவர் ஆவார். உறுப்பினர் - செயலராக, நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் ஆவார். உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறும் விண்ணப்பங்களை ஆணையம் ஆய்ந்து அனுமதி அளிக்கும். அரசாணை நிலை எண்.49 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 24.03.2003 - இல் இணைப்பு - இல் கொடுக்கப்பட்டுள்ள மலைப் பகுதிகளாக…

கோவை மாவட்டத்தில் கீழ்கண்ட வட்டத்தில் உள்ள ஊராட்சிகள் வருகின்றன.

மேட்டுப்பாளையம் வட்டத்தில்
1. தோலம்பாளையம்
2. வெள்ளியங்காடு
3. தேக்கம்பட்டி
4. ஓடந்துறை
5. நெல்லித்துறை
6. சிக்கதாசம்பாளையம்
7. சிறுமுகை

பொள்ளாச்சி வட்டத்தில்
1. பெரியபோது
2. வேட்டைக்காரன்புதூர்
3. கலியபுரம்
4. காட்டூர்
5. அங்கால குறிச்சி
6. தொறையூர்
7. ஜல்லிப்பட்டி
8. அர்த்தநாரிபாளையம்

வால்பாறை வட்டத்தில்
1. வால்பாறை
2. ஆனைமலை

கோவை தெற்கு வட்டத்தில்
1. நரசிபுரம்
2. வெள்ளிமலைப்பட்டினம்
3. தேவராயபுரம்
4. கள்ளிநாயக்கன்பாளையம்
5. இக்கரைப் போலுவாம்பட்டி 
6. மத்வராயபுரம்
7. ஆலாந்துறை
8. பூலுவப்பட்டி
9. தென்கரை
10. மாதம்பட்டி
11 , தீத்திபாளையம்
12 , பேரூர்செட்டிபாளையம்
13 கண்டக்காமுத்தூர்
14. எட்டிமடை
15. மாவுத்தம்பதி
16. தொண்டாமுத்தூர்

கோவை வடக்கு வட்டத்தில்
1. நாயக்கன்பாளையம்
2. கூடலூர்
3. நரசிம்மநாயக்கன்பாளையம்
4. நஞ்சுண்டாபுரம்
5. சின்னதடாகம்
6. வீரபாண்டி 
7. சோமையம்பாளையம்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் 
1. வலையபாளையம்
2. தளி
3. ஜல்லிப்பட்டி
4. லிங்கமாவூர்
5. வெங்கிடாபுரம்
6.மானுப்பட்டி
7. கல்லாபுரம் .

நீலகிரி மாவட்டத்தில் 
கூடலூர் , உதகை , குன்னூர் , கோத்தகிரி என வரும் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்தக் கிராமங்களில் எப்படிப்பட்ட, எந்த ஒரு கட்டுமானப்பணியை மேற்கொள்வது என்றாலும் வனத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அரசுத் துறை ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ள இந்த மலையிடப் பாதுகாப்பு குழுவிடமிருந்து (HACA) தடையில்லாச் சான்று பெறவேண்டும். இங்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவுக்கே அனுமதி கொடுப்பார்கள் அதிகாரிகள். அது யானைகள் வழித்தடம், நீர்நிலை பாதிப்புகள் ஏற்படும் என்றால் 'HACA'வில் உறுப்பினராக உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒப்புதல் கிடைக்கவில்லையென்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த அனுமதி கிடைக்காமல் புதியதொரு கட்டுமானப் பணியோ, மனையிடங்கள் பிரிக்கும் பணிகளோ மேற்கொள்ள முடியாது.

       கோவை மாவட்டத்தின் தென் மேற்குப்பகுதியில் கேரள மாநில எல்லை தொடங்கி வடமேற்கு பகுதியில் உள்ள சத்தியமங்கலம் காடுகள் வரை அறிவிக்கப்படாத யானைகள் வலசை மற்றும் வாழ்விட பகுதிகள் தான். இந்த இடங்களில் பெரும் நிறுவனங்கள், ஆசிரமங்கள், ஜபக்கூடங்கள், கல்லூரிகள், குடியிருப்புகள் என விதவிதமான கட்டுமானங்கள் நிறைந்துள்ளது. இவையனைத்தும் 90களின் பிற்பகுதியில் தான் அசுர வேகமெடுத்துள்ளது. அதே வேலையில் 90களின் பிற்பகுதியில் தான் மனித - யானை மோதல்களும் அதிகரித்துள்ளது. ஏனெனில் 90களின் முற்பகுதி வரை கோவை மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதாகவோ, மனித யானை மோதல் நடப்பதாகவோ செய்திகள் இல்லை. இப்போது அதிகரித்துள்ள மனித யானை மோதல்களுக்கு மேற்கூறிய யானை வழித்தட ஆக்கிரமிப்பே பெரும் காரணம். 

     90 களின் பிற்பகுதியில் மனித - யானை மோதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதை தினசரி செய்களில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு யானை இறப்பு சம்பவங்கள் கோவை மண்டலத்தில் நடந்துவிடுகிறது. யானைகள் இயற்கையாக மரணமடைவதை விட தொடர்வண்டியில் அடிபட்டு, மின்சார வேலியில் சிக்குண்டு மரணிக்கும் யானைகளே அதிகம்.

     மேலும் கோவை மண்டலத்தின் அரணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலைகள், கோவை குற்றாலம் மலைகள், மருதமலை, மாங்கரை ஆனைகட்டி மலைகள், குருடி மலைகள் அனைத்தும் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளே, இந்த இடங்கள் அனைத்தும் 90க்கு பிறகே வரமுறையில்லாமல் ஆக்கிரமிப்பாளர்களால் சூரையாடப்பட்டு வருகிறது.

      குறிப்பாக கோவைக்குற்றாலம் - சாடிவயல் பகுதியில் காருண்யா பல்கலைக்கழகம், ஈஷா யோக மையம் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள்.

இக்கரை போளுவாம்பட்டியில் மலையை உடைக்கும் சிமெண்ட் கம்பெனி

எட்டிமடை, வாளையாறு பகுதியில் தொடர்வண்டி பாதையும், தனியார் பல்கலைக்கழகம் (அமிர்தா பல்கலைக்கழகம்) மேலும் 30க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள்.

மேட்டுப்பாளையத்தில் (ப்ளாக் ஃதொண்டர்) கேளிக்கை விடுதி

தூவைப்பதியில் பால் கம்பெனி

இவை தவிர கோவைப்புதூர், பச்சாபள்ளி, காரமடை, அட்டப்பாடி, ஆனைக்கட்டி, போத்தனூர், தூமனூர்,சேம்புக்கரை, மதுக்கரை, சிறுமுகை, ஓடன்துறை, குரும்பபாளையம் என யானைகள் வழிதடமாக, வாழ்விடமாக இருக்கும் (அறிவிக்கப்படாத யானைகள் வழித்தடம்) பகுதிகள் அனைத்தும் ஆக்கரமிப்புகளால் நிரம்பி வழிகிறது. மேலும் நொய்யல் ஆறு உற்பத்தி ஆகும் சிறுவானி மலைகளிலும் சொகுசு விடுதிகளும், ஆக்கரமிப்புகளும் பெருகி வருவதால் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகள் இறுக்கபட்டுவருகிறது.

     யானைகள் பெரும்பாலும் உணவுக்காகவும், நீருக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் என இடபெயர்வு அடையும் உயிரினம். நிலத்தில் வாழும் உயிரினங்களில் பெரிய உயிரியான யானை இடபெயர்வு அடையும் போது அதற்கு தேவையான உணவும், நீரும் இருப்பது அவசியம், ஆனால் அவை அனைத்தும் ஆக்கிரமிக்கபட்டுவிட்ட சூழலில் தான் அவை உணவை தேடி ஊருக்குள் வந்துவிடுகிற சம்பவங்களும் அதனால் யானை மனித மோதல் நிகழ்வுகளும் நடைபெற்றுவிடுகின்றன.

     ஒருபுறம் ஆக்கிரபிப்புகளால் யானைகளுக்கு தொல்லை என்றால் மற்றொரு புறம் தொடர் வண்டி பாதைகள் யானைகளுக்கு மரண குழிகளாகிவிடுகின்றன.

     வனத்தையும், வனவிலங்குகளையும், மலைகளையும் பாதுகாக்க எவ்வளவு விதிமுறைகள், சட்டங்கள் இருந்தாலும், அவையெல்லாம் அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் , அரசியல் செல்வாக்கு மிக்க ஆன்மிகவாதிகள் , கல்வியாளர்களுக்கு பொறுந்துவதில்லை போலும். அந்தக் கடும் விதிமுறைகளை, சட்டதிட்டங்களை தங்களுக்குள்ள செல்வாக்கை வைத்து வளைத்து கொள்கிறார்கள். அரசு அதிகாரிகள் அதற்குத் துணை போகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில ஐஏஎஸ் அதிகாரிகளே ஒன்று சேர்ந்து ஒரு கட்டுமானக் கம்பெனியாகி, அவர்களே குடியிருப்புகளை அடுக்கினார்கள். கோடி கோடியாய் விலைக்கும் விற்றார்கள். அதுதான், அந்தப் பிரம்மாண்ட கட்டிடங்கள்தான் இங்குள்ள (கோவை மண்டலத்தில்) நீர்நிலைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும், வனவிலங்குகளுக்கும் சோதனையாக வந்து முடிந்துள்ளது.

      இவை எல்லாம் விடவும் அரசின் வனதுறையாலேயே வனவிலங்குகள் சூழலியல் அகதிகளாக மாற்றப்படுகின்றன. கோவை குற்றாலம் காடுகளில் யானைகளுக்கு பிடித்த உணவான மூங்கில் மரங்களே நிறைந்து இருந்தன, கூடவே புளியன், தாளி, ஈட்டி மலைவேம்பு, கொய்யா, நெல்லி போன்ற மரங்களும் நிறைந்து காணப்பட்டது. ஆனால் அவையெல்லாம் இன்று வெகு சொர்ப்பமான மரமாகிவிட்டன. அடர்ந்த காடுகளில் இன்று திரும்பிய பக்கமெல்லாம் தைல மரங்களும், தேக்கு மரங்களுமே காணக்கிடைக்கிறது. (தமிழகத்தின் பல்வேறு மலை, காடுகளிலும் இதே தான் நிலை)

     தைலமரங்களையும், தேக்கு மரங்களையும் மட்டுமல்ல, அதன் இலைகளைக் கூட யானைகள் முகர்ந்து பார்க்காது என்பதே யதார்த்த உண்மை . நம் நாட்டு வகை காடுகள் அழிப்பும், தேக்கு, தைல மரக் காடுகள் உருவாக்கமும் பிரிட்டீஷார் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது என்பதுதான் வேதனை. 

     இனியாவது அரசு விழித்துக்கொண்டு நம் நாட்டுக்காடுகளையும், யானைகளையும் அதன் சுதந்திர வழிதடத்தில், வாழ்விடத்தில் வாழ வகை செய்ய வேண்டும்.

பனை சதிஷ்
14.12.21

Comments

Popular posts from this blog

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்