நானும் எங்கள் பட்டு நெசவும்

     

     எங்கள் ஊரில் விவசாயமும், பட்டு நெசவும் தான் பிரதான தொழில்கள், அப்பா 8 வயது இருக்கும் போது கைத்தறி வேலை செய்யவும், விவசாயத்தை பார்த்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார். தறியின் கால்குழி உயரம் கூட முழுமையாக அவருக்கு எட்டவில்லை ஆனாலும் தறி நெய்தார்(நெசவு). அப்போது தாத்தா தறி நெய்யாமல் ஊதாரியாக ஊர் சுற்றியதால், (பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன்) குடும்ப பொறுப்போடு தன் இரு தம்பிகளையும் சேர்த்து வளர்க்கும் பொறுப்பும் அப்பாவிடமே வந்தது.

     அவர் தறி நெய்ய தொடங்கி தற்போது வரை தன் 50 ஆண்டு கால அனுபவத்தில் ஆரணி கைத்தறி பட்டு நெசவில் பலவிதமான பரிமாணங்களை பார்த்துவிட்டார். அப்பா, அம்மாவுக்கு திருமண ஆன போதும் சில வருடங்கள் கழித்து அக்கா பிறந்த பிறகு வரை அப்பா தறி நெசவு கூலிக்கு செய்வதில் இருந்து, சேலையை சொந்தமாக உற்பத்தி செய்யும் முதலாளியாக இருந்தார்.

     அக்கா பிறந்த அடுத்து வருடத்தில் அண்ணாவும் அதற்கடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நானும் பிறந்ததில் இருந்து அப்பாவுக்கு பட்டு சேலை தொழிலிலும், விவசாயத்திலும் தோய்வு ஏற்பட்டுள்ளது. இரு தொழில்கள் ஒரே நேரத்தில் வீழ்ச்சி அடைய பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அப்பா தள்ளப்பட்டு முதலாளி என்ற பிம்பத்தை இழந்து மீண்டும் கூலிக்கு தறி நெசவு செய்யும் தொழிலாளியாக மாறிப்போனார்.

      8 வயதில் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழலில் நெசவு செய்ய தொடங்கியவர், எங்களுக்கு 5 - 10 வயது இருக்கும் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் ஒரு போதும் எங்கள் மூவரின் படிப்பை நிறுத்தாது தொடர்ந்து படிக்க வைத்தார்.

     அக்கா +2 வரை படித்து முடித்தார், அண்ணா 10 படித்து முடித்து மேற்கொண்டு படிக்க இயலாத சூழலில் அப்பாவோடு தறி நெசவை தொடங்கினார். ஆனால் எனக்கோ 9வது முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் முன் பெரும் பயம் அப்போது பத்தாவது பொது தேர்வில் ஆங்கிலம் எழுதவேண்டுமே என்ற அச்ச உணர்வில் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல் (பயம்) நானும் அப்பாவோடு தறி நெசவை தொடங்கினேன். அப்பாவும், அம்மாவும் எவ்வளவோ அடித்து பார்த்தும் நான் அப்போது பள்ளியை தொடரும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்த பிறகு அண்ணாவுடன் சேர்த்து எனக்கும் தறி நெசவை அப்பா கற்றுக்கொடுக்க தொடங்கினார். 

     கைத்தறி பட்டு சேலை நெசவில் தனக்குள்ள 50ஆண்டுகால அனுபவத்தை மிக எளிமையாக எங்களுக்குள் கொண்டுவந்தார். முதலில் தறியில் சிறு சிறு உதவிகள் செய்து அடுத்து, தறியில் உடன் இருந்து கொண்டு பார்ப்பது பிறகு அப்பா இல்லாத நேரங்களில் தறி நெசவு செய்வது என படிப்படியாக தறி நெசவு கற்று தேர்ந்த பின் நாங்கள் இருவரும் தனித்தனியே தறி போட்டு நெசவு செய்யும் அளவிற்கு எங்களை பக்குவபடுத்தினார். நானும் அண்ணனும் போட்டி போட்டுக்கொண்டு தறி நெசவு செய்து விரைவாக எல்லா பட்டு சேலை உற்பத்தி முதலாளிகளிடமும் நன்மதிப்பை பெற்றது அப்பாவுக்கு மிகப்பெரிய பெருமையாக கொடுத்தது.

     மூன்றாண்டு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து நெசவு செய்து கொண்டிருந்தேன், ஒருகட்டத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் அனைவரும் மேல்படிப்புக்கு (+2) செல்வதை பார்த்த பிறகு தான் எனக்கும் மேற்கொண்டு படிக்க வேண்டும் என உரைத்தது. அதன் பின் அம்மா தான் அப்பாவிடம் பிடிவாதமாக சின்னவன் படிக்க போகட்டும் என என்னை மீண்டும் படிக்க வைத்தார். 

     அதன் பிறகு பள்ளி, கல்லூரி முடித்து சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை என கடந்த 10ஆண்டுக்கும் மேலாக தறி நெசவு பக்கமே போகாமல் இருந்துவிட்டேன். 

      என் திருமணத்திற்கு முன் என்னவள் என்னிடம் கேட்டது, எனக்கு ஒரு முறை நீங்க தனியாக தறி நெய்து காண்பிக்க வேணும் என்றாள். கடந்த வாரம் ஊருக்கு சென்ற போது அவள் மீண்டும் நினைவுபடுத்த பக்கத்து வீட்டில் இருக்கும் மாமாவின் தறியை நெய்து காட்ட கூட்டிச்சென்றேன். முதலில் பட்டு தறியில் உள்ள செய்முறை நுணுக்கங்களை அவளுக்கு சொல்லிக் கொண்டுத்தேன். அதாவது பட்டு பூச்சியில் இருந்து நூல் எடுப்பது முதல் பட்டு சேலை உற்பத்தி ஆகி கடைகளுக்கு வந்து சேரும் வரையான பரிமாணங்களை விரிவாக அவளுக்கு எடுத்துரைத்தேன்.
     ஆனாலும் கால்குழியில் இறங்கி தறியை பிடிக்கும் முன்பு வரை ஒரு நடுக்கம் இருந்தது, 10ஆண்டுகளாக தறி பக்கமே வராமல் இருந்தோமே நம்மாள் சரியாக செய்துவிட முடியுமா என்ற அச்சம் இருந்தது. ஆனால் கால்குழியில் இறங்கியதும் என் சிறு பிராயத்தில் என் நினைவுகளில் தங்கிவிட்ட தறி தொழிலில் நான் செய்த வேலைப்பாடுகளின் உள்ளுணர்வு என்னை  மீண்டும் மிகச்சரியாக நெசவு செய்ய வைத்து. அவளும் பிரம்மிப்பாக பார்த்துகக் கொண்டிருந்தாள்.

     இப்போது அப்பா 60 வயதை கடக்க இருக்கும் சூழலிலும் அவர் தொடர்ந்து தறி வேலையில் இருக்கிறார், நானோ தறியில் இருந்து வெகு தொலைவிற்கு வந்து நிற்கிறேன். ஆனால் நிச்சயம் மீண்டும் முழு நேரமாக தறி நெசவு செய்வேன் என்ற கனவுகளோடு தறியின் கால்குழியில் இருந்து ஏறி வெளியேறினேன், என்னவளோடு.

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்