கொல்லிமலை பயணம் - பகுதி 1



கொல்லிமலை பயணம் முதல் நாள்

      2020 டிசம்பர் மாத கடைசி வார நாட்களில் கொல்லி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பயணத்தின் அனுபவ பகிர்வு. நெடும்பயணம் செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தின் தொடக்கம்.

      கொரானா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணி செய்ததால் கடந்த 8 மாத காலமாக அலுவலக விடுப்பு எடுக்காமல் இருந்தேன். ஆகையால் டிசம்பர் 25 (2020) கிருத்துமஸ் தொடங்கி அடுத்த பத்து நாட்கள் அலுவலக விடுப்ப எடுப்பது என முன்கூட்டியே திட்டமிட்டு அலுவகத்திலும் சொல்லியாகி விட்டது.

     அடுத்து எங்கே செல்வது, எந்த காட்டுக்கு, எந்த மலைக்கு போவது குறித்த சிந்தனையில் இருந்த போது நெருங்கிய தோழி ஒருங்க வெள்ளையங்கிரி, சதுரகிரி, சத்தியமங்கலம் மலைகளுக்கு செல்ல யோசனை சொல்லிருந்தாங்க. ஆனால் எனக்கோ மாஞ்சோலைக்கு செல்ல வேண்டும் என விருப்பம் இருந்தது.

      ஆனால் அப்போதைய பொருளாதார சிக்கலால் மேற்கூறிய எந்த இடத்திற்கும் செல்ல வாய்ப்பில்லை என புரிந்தது. எனவே அருகில் இருக்கும், இரண்டு, மூன்று நாட்கள் மட்டும் தங்குவது போன்று ஏதுவான மலைப்பகுதியை தேடினேன்.

     அப்போது தான் வெகு நாள் யோசனையில் இருந்த கொல்லிமலை நினைவுக்கு வந்தது. பிறகு வேறு எந்த இடத்தை பற்றியும் யோசிக்காமல் கொல்லி மலைக்கு தான் செல்வது என உறுதியான பின், அவ்வளவு தொலைவு எப்படி போவது என்ற அடுத்த கேள்வி எழுந்தது.

     ஏனெனில் எங்கள் ஊரில் இருந்து கொல்லிமலை எப்படியும் 250கி.மீ மேல் இருக்கும். ஆனால் நான் திடமாக இருந்தேன் நிச்சயம் இந்த பயணம் இரு சக்கர வாகன பயணமாக தான் இருக்க வேண்டும் என்று. அதற்காகவே என் காட்டுப்பயண பங்காளி மதனின் இருசக்கர வாகனத்தை முன்கூட்டியே கேட்டு வாங்கி வைத்தாகிவிட்டது. அடுத்து ஒரு சில மாற்று உடை மற்றும் சில புத்தகங்களை எடுத்து கட்டி வைத்தேன்.

     விட்டில் இருந்து கிளம்பும் முன் எந்த காட்டுக்கு போறன்னு கேட்டதும் கொல்லிமலைக்கு போய்ட்டு அங்குள்ள சித்தர்களை பார்க்க போறேன்னு சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் ஆனால் இந்த பயணமே நான் விளையாட்டுக்கு கூறிய அந்த சொற்களில் தான் முடிந்தது.

     கொல்லிமலைக்கு தனியாக தான் செல்ல நினைத்தேன் பிறகு செங்கத்தை சேர்ந்த தம்பி யோகேஸ் மற்றும் நீண்ட நாளாக என்னோடு காட்டு பயணம் வர வேண்டும் என ஆசைப்பட்ட ராசிபுரம் நண்பர் பிரபுவும் இணைந்து கொண்டனர்.

     25.12.20 வெள்ளி காலை சரியாக 6.15க்கு வீட்டில் இருந்து கிளம்பினேன் (முந்தைய நாள் இரவு பணி முடித்த உடன்) சாலையில் முன் செல்வோர் தெரியாத படி கடுமையான மூடுபனி இங்கேயே இப்படி என்றால் மலையில் நிச்சயம் கடுமையான குளிர் இருக்கும் என நினைத்துக் கொண்டே சாலையோரக் கடையில் தேனீர் குடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன், செங்கத்திற்கு போகவே காலை 8மணிக்கு மேல் ஆகிவிட்டது.

     தம்பி யோகேசு வீட்டில் காலை உணவு முடித்துவிட்டு தம்பியின் நண்பர்களோடு பேசிட்டு இருக்கும் போது எதற்சையாக செங்கத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அண்ணன் ஆனந்த் அவர்களை சந்திக்க முடிந்தது. கொல்லிமலைக்கு பயண திட்டத்தை பற்றி அண்ணாவோடு பகிர்ந்தேன் அவரும் அங்கு பார்க்க வேண்டிய சில இடங்களை பற்றிய குறிப்புகளை சொல்லினார். மேலும் சவ்வாது மலை பகுதியில் நாம் இன்னும் என்ன மாதிரியான ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் சிலர் செய்யும் அறிவு திருட்டுகளை சொல்லியும் ஆதங்கப்பட்டார். அங்கிருந்து சிறிது நேரம் கழித்து பயணம் தொடர்ந்தது. 

     செங்கத்தில் இருந்து ஊத்தங்கரை, அருர் வழியாக செல்வதாக தான் திட்டம் இருந்தது. ஆனால் தம்பி யோகேசு செங்கம், நீப்பதுறை வழியாக தீர்த்தமலை சென்று அரூர் போகலாம் வழிநெடுக உள்ள காட்டையும், மலைகளையும் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்றான்.

     காலை மணி 9ஐ கடந்து இருக்கும் இருப்பினும் மூடுபனி கலையாமல் இருந்தது. நீப்பதுறை காடு முழுக்க முதர்களும், உயரம் குறைவான மரங்களை உடைய வறட்சி நிறைந்த காடாக தான் இருந்தது. காட்டுப்பகுதி பத்து கி.மீ மேல் இருக்கும், போக்குவரத்தும் குறைவு தான்.

     நீப்பதுறை காட்டின் அமைதி பகலிலேயே அச்சத்தை கொடுப்பதாக இருந்தது. ஒரு இடத்தில் மட்டும் வாகனத்தை நிறுத்தினோம் காட்டின் அமைதியை ரசிக்கவும் எங்களுக்கான ஓய்வை எடுக்கவும்.

     காட்டுப்பகுதி முடிந்து அடுத்த வந்த கிராமத்தில் சாலை ஓரம் இருந்த குழந்தைகள் அனைவரும் எங்கள் வானத்தை பார்த்தும் ஒரே குரல் சந்தோசமாக கத்தி வழியனுப்பினர்.

     அடுத்த சில கி.மீ தூரம் கடந்ததும் தீர்த்தமலை என்னும் காட்டுப்பகுதி ஆரம்பமானது, அங்குள்ள உயரமான மலையின் மீது பழமையான சிவாலயம் உள்ளதாக தம்பி சொல்லியிருந்தார். அதை கடந்ததும் அகண்ட ஆற்றில் சிறு கால்வாய் போல் ஓடிக்கொடிருந்தது தென்பெண்ணை ஆறு. ஆற்றின் மறுகரையில் உள்ள சென்னி அம்மன் கோயில் தான் தங்களின் குலதெய்வம் என தம்பி சொல்லிருந்தான்.

      அருர் செல்லும் சாலை புதிதாக போடப்படுவதால் 10கி.மீ மேல் கடுமையான தூசி நிறைந்த குண்டும் குழியுமான சாலையாக இருந்தது. அந்த 10 கி.மீ சாலையை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். இதுவரை நான் பயணப்படாத புதிய வழி என்பதால் சில இடங்களில் நின்று சரியான பாதையில் தான் போகிறோமா என சரிபார்த்து கொண்டே தொடர்ந்தோம்.

     ஓரிடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த மலைக்குன்றுகளை பார்க்க முடிந்தது. மரங்கள் அடர்ந்தும், பசுமையாகவும் இருந்தது என்ன மலை என பார்க்கையில் அது தான் ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படும் ஏற்காடு மலை என பெயர் பலகை இருந்தது. இதுவரை YOUTUBE மட்டுமே பார்த்த மலையை நேரில் பார்ப்பது நிறைவான மகிழ்ச்சியை கொடுத்தது. வரும் போது நிச்சயம் ஏற்காடு செல்வோம் என தம்பியிடம் சொல்லிருந்தேன்.

       நாங்கள் சேலம் புறவழிச்சாலையை கடக்கும் போதே நேரம் மதியம் 1 மேல் இருக்கும், ராசிபுரத்தில் எங்களோடு இணையவரும் தோழன் பிரபுவோடு சேர்ந்து சாப்பிட வேண்டி வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்தோம். 

     ராசிபுரத்தில் வாகனத்திற்கான எரிபொருளை நிரப்பிக் கொண்டு இருக்கையில் நண்பன் பிரபு வந்து இணைந்து கொண்டான். அவன் வந்ததும் முதலில் சாப்பிட கிளம்பினோம், நேரம் 2.30 கடந்து இருந்ததால் ஒரு சில கடைகளில் தான் சாப்பாடு இருந்தது.

     ராசிபுரத்தில் சாப்பிட்டு முடித்து கிளம்பும் முன் கொல்லிமலைக்கு  போவதை பற்றிய முகநூல் பதிவை பார்த்து என்னுடைய பழைய அலுவலக தோழன் விஜி அழைப்பு கொடுத்து தான் கொல்லி மலை அடிவாரத்தில் தான் இருப்பதாகவும், மலைக்கு போகிற போது நிச்சயம் வீட்டிற்கு வரவேண்டும் என்றும் சொல்லி இருந்தான். எனவே ராசிபுரத்தில் சாப்பிட்டு முடித்த உடன் அவனுக்கு அழைப்பு கொடுத்து எங்கு வர வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டு கிளம்பினோம்.


     கொல்லிமலையின் சாரலுக்கு கொஞ்சம் தள்ளி இருந்தது நண்பனின் அழகிய பண்ணை வீடு. நாட்டு நாய், நாட்டு மாடு இயற்கை விவசாயம் என ஆள் மொத்தமாக மாறியிருந்தான். ஐந்து ஆண்டுகள் இருக்கும் அவனை கடைசியாக பார்த்து ஆனாலும் பார்த்ததும் நாங்கள் வேலையின் போது செய்த சேட்டைகள் நினைவுகளுக்குள் வந்து அவற்றைச் சொல்லி சிரித்து கொண்டு இருக்கும் போதே இளம் தென்னை மரத்தில் இருந்து தெங்காய்களை பறித்துக்கொண்டு இருந்தான். சிறிய செவ்விளநீர் தான் ஆனாலும் ஒன்றை குடிக்கவே முடியாமல் இருந்தது அவ்வளவு அதிகமான நீர்.

     இருட்டுவதற்குள் மேலே செல்ல வேண்டும் என்பதால் அவனுடனான உரையாடலை சீக்கரம் முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

     மலையை நெருங்க நெருங்க குளிரை உணர முடிந்தது. சோதனைச் சாவடி வெறுமனே பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது என்பதை முதல் கொண்டை ஊசி வளைவு வருவதற்குள்  தெரிந்துவிட்டது. சாலையில், ஓடையின் ஓரம் என மதுபான பாட்டில்கள் எங்கும் நிறைந்து இருந்தது. உடன் வந்த பிரபு இங்கு தான் இவ்வாறு செய்கின்றனர் ஆனால் கேரளவில் இப்படி செய்ய முடியாது என்றும் அந்த வனத்துறையின் கட்டுப்பாடுகள் பற்றியும் ஆதங்கத்தோடு பதிவு செய்தான்.


     மொத்தமாக 70கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது கொல்லிமலையின் மலைறேற்றப் பாதை. சில இடங்களில் உள்ள காட்சிமுனையம் பகுதி கூட குடிகாரர்களின் கூடாரமாக தான் இருந்தது. பிரபு சொன்னது உண்மை தான், கேரள வனத்துறைக்குள் இப்படி மதுபாட்டில்களை எளிதாக கொண்டு செல்ல முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

     கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக தான் இந்த கொல்லிமலை இருந்துள்ளது என்பதை சில வளைவு திருப்பங்களில் எழுதி வைத்துள்ளனர். ஓரி பற்றிய சங்க பாடல்களையும் வரலாற்று குறிப்புகளையும் படித்துக்கொண்டே மேலேறினோம்.


     வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவையும் கடப்பது சவாலாக இருந்தது. மேலே செல்ல செல்ல மரங்களின் தன்மையும் மாறி இருப்பதை பார்க்க முடிந்தது.

     ஒரு வழியாக மாலை 4.20க்கு 70வது கொண்டை ஊசி வளைவை கடந்தோம். அதற்கடுத்து முதலில் நம்மை வரவேற்கிறது செம்மேடு எனும் மலை கிராமம் கொல்லிமலையில் அதிகளவு தங்கும் விடுதிகளை கொண்ட ஊர் இது தான். அதற்கேற்ப திரும்பும் திசை எங்கும் விடுதிகள் தான் நிரம்பி இருந்தது. ஆனால் ஒரு மணி நேரமாக அலைந்தும் எங்களுக்கு விடுதியில் அறை கிடைக்கவில்லை. தொடர் விடுமுறை என்பதால் அனைத்து விடுதிகளும் ஏற்கனவே நிரம்பி இருந்தது.

     மலைச்சாலையில் திருவிழாவை போல் கூட்டம், ஒரு கடையில் தேனிர் அருந்திக்கொண்டு விடுதி பற்றி விசாரித்துட்டு இருக்கும் போது செம்மேட்டில் மலைவீடு என்ற விடுதியில் கேட்டு பாருங்க கிடைக்க வாய்ப்பிருக்கு என்று சொல்ல உடனே தம்பி யோகேசையும் பிரபுவையும் அங்கு சென்று விசாரிக்க சொன்னேன்.

     அவர்கள் இருவரை அனுப்பியதற்கு காரணம் இருந்தது. அவர்கள் சென்ற 15நிமிடம் கழித்து தம்பியிடம் இருந்து அழைப்பு வந்தது அண்ணா இங்கே அறை கிடைச்சிடுச்சி வாங்க என்றான். மலையில் அறைகள் ஏதும் கிடைக்கவில்லை என்றால் கீழே இறங்கி நண்பன் விஜியின் பண்ணை வீட்டிற்கு போய்விடலாம் என்று நினைத்து கொண்டுருந்தேன்.


     மலைவீடு விடுதிக்கு சென்று அங்கிருந்த விடுதி பொறுப்பாளரிடம் தங்கும் அறைக்கான தொகையை கொடுத்து அறையின் சாவியை வாங்கும் போது அவர் சொன்னது, எல்லா அறைளும் நிரம்பி விட்டது இந்த அறைக்கு கூட உங்களை விட கூடுதல் பணம் தர தயாராக இருக்காங்க ஆனா தம்பி ஐயப்ப மாலை போட்டு இருக்கார் அதனால் அறையில் தேவையற்ற செயல் ஏதும் செய்ய மாட்டிங்க என்பதை நம்பி கொடுக்கிறேன் என்றார். ஆமாம் தம்பியும், பிரபுவையும் தனியாக அனுப்பியதற்கு இது தான் காரணம்.

     அறையை திறந்து துணி பைகளை வைத்து விட்டு சிறிது நேர ஓய்வுக்கு பின் இரவு உணவிற்கு சென்றோம். அதற்குள் மணி இரவு 10 நெருங்கியது. இரவில் மலைப்பாதையில் பயண போலாமா என தம்பி கேட்க வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

     இந்த சாலை எங்கு போகிறது என்பது கூட எங்களுக்கு தெரியாது. காட்டுப்பாதையில் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இரவில் நடக்க தொடங்கினோம். காட்டின் இரவு சத்தமும், பள்ளத்தாக்கு பகுதியில் சலசலத்து ஓடும் ஓடையின் சத்தமும் மட்டுமே எங்களை பின் தொடர்ந்தன.

     கொஞ்ச தூரத்தில் எங்கள் முன் வந்த முதல் இடம் சீக்கப்பாறை காட்சி முனையம். அங்கிருந்து பார்க்கையில் பகலை விட இரவில் மலை அடிவார கிராமங்கள் அழகாக தெரிந்தது. அடுத்து எங்க போகலாம் என யோசிக்கும் போது 10கி.மீ தள்ளி இருக்கும் அரபலீஸ்வரர் கோயில் பகுதிக்கு கிளம்பினோம். அங்கு செல்லவும் வழி தெரியாது ஆனாலும் வாகனத்தை எடுத்துக்கொண்டு இரவின் பனிப்பொழிவை உறசிக்கொண்டே கிளம்பினோம்.



     ஆட்கள் யாரும் இன்றி வளைந்து நெளிந்து செல்லும் குளிர் நிறைந்த மலை பாதையில் பயணிப்பது இது தான் முதல் முறை. அதனாலேயே ஒரு வித அச்சமும், ஆனந்தமும் இருந்தது. இரவு கடுமையான குளிர் இருப்பினும் சில இடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டின் தனித்த இசையை கேட்டுக் கொண்டிருந்தோம்.


     அரபலீஸ்வரர் கோயில் வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்த மலையில் இருக்கும் கடைசி ஊரும் இந்த பகுதி தான். கோயிலுக்கு அருகில் சிற்றருவியும், அதையடுத்து ஆகாயகங்கை என்னும் பேரழகு கொண்ட அருவியும் உள்ளது.

     கோயிலுக்கு அருகே இருந்த ஒரு கடையில் தேனீர் வாங்கி குடித்துக்கொண்டே அந்த கடையில் வேலை செய்யும் நபரிடம் இந்த மலையை பற்றி விசாரித்து கொண்டிருந்தோம். அவரிடம் பேசும் முன் நாங்கள் அடுத்த நாள் காலையில் ஆகாய கங்கை அருவிக்கு தான் செல்வதாக இருந்தது.

     ஆனால் அவரிடம் பேசிய பிறகு எங்களின் திட்டம் வேறாக மாறியது. நாங்கள் எதிர்பார்த்திடாத ஓர் இடத்திற்கு நாங்கள் வழிநடத்தப்பட்டோம். அப்படி என்ன இடம்…? காத்திருங்கள் நாளை காட்டுக்குள் செல்வோம்.

பனைசதிஷ்
25.12.20

Comments

Popular posts from this blog

அழியும் பேருயிர்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

பெருங்கற்கால சின்னங்கள் - மல்லசத்திரம்